ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும் கட்டுரையின் தொடர்ச்சி …..

கேள்வி: ஆன்மிக சாதனைகளுக்கும், இயற்கைப் பாதுகாப்பிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் என்னென்ன?

அம்மா: “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்“. அனைத்திலும் ஈசனின் சைதன்யமே நிறைந்துள்ளது என்றே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே, நம்மைப் பொறுத்தவரை, இயற்கைப் பாதுகாப்பு என்பது இறை ஆராதனையே ஆகும். பாம்பைக்கூட வணங்கும் பண்பாடே நம்மிடம் உள்ளது. அனைத்திலும் இறைவனைக் கண்டு, அனைத்தையும் இறைவனாக வணங்கும்படியே மதம் கூறுகிறது. இந்த உணர்வு இயற்கைமீது அன்பு செலுத்த நமக்குக் கற்பிக்கிறது. நாம் யாரும் வேண்டுமென்றே நமது கையையோ, காலையோ காயப்படுத்த மாட்டோம். ஏனென்றால்,அவ்வாறு செய்தால் நமக்கு வலிக்கும் என்பது தெரியும். இதுபோல் சராசரம் முழுவதும் ஒரே ஜீவ சைதன்யமே உள்ளது என்று உணரும்போது, பிறருடைய வேதனையும், தனது வேதனையாகத் தோன்றும். அவரைக் காப்பதற்கு மனம் வரும். நாம்  விரைவோம்.அவசியமின்றி ஒரு உயிருக்கும் துன்பம் விளைவிக்கத் தோன்றாது. ஒரு பூ மலர்ந்த   பிறகு பத்துத் தினங்கள் செடியில் வாடாமல் இருக்குமெனில், பத்தாவது தினம் மட்டுமே நமது முன்னோர் அதைப் பறிப்பர்.

பழங்கால வீடுகளில் எல்லாம் பூஜையறை இருக்கும். ஒரே அறையுள்ள குடிசையில் வாழ்பவர்கள் கூட ஒரு மூலையில் இறைவனின் படத்தை வைத்து விளக்கு ஏற்றி வழிபடுவர். தினசரி பூஜைக்காக வீட்டில் பூச்செடிகளை வளர்ப்பர். அவற்றைப் பக்தியுடன் பாதுகாப்பர். தானே நட்டு வளர்த்த செடிகளில் உள்ள பூக்களால் அர்ச்சனை செய்யும்போது பக்திபாவம் அதிகரிக்கும். மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் அர்ச்சனையின் பலனாக எண்ணங்களின் எண்ணிக்கை குறையும். அது மனத்தூய்மைக்குக் காரணமாகிறது. அதுமட்டுமல்ல. ஆயுளும், ஆரோக்கியமும் வளர்கிறது. மாறாக,, எல்லாநேரமும் உலக விஷயங்களில் மூழ்கினால் மனதில் அமைதியின்மை அதிகரிக்கும். எண்ணங்கள் அதிகரிக்கும்போது மனதில் போராட்டமும் அதிகரிக்கும். அது இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் வரக் காரணமாகும். ஒரு வீட்டு  உபயோகச் சாதனம் கடையிலேயே இருக்கும்போது அதன் உத்தரவாதகாலம் குறையாது. அதை வாங்கி, உபயோகிக்க ஆரம்பிக்கும் நாள் முதல்தான் அதன் உத்தரவாத காலத்தைக் கணக்கிடுகிறோம். அதுபோல் எண்ணங்கள் இல்லாத மனதின் சக்தி நஷ்டமாவதில்லை.

பழங்காலத்தில் தோப்புகளில் திருவிழாச் சமயங்களில் கீர்த்தனங்கள் பாடுவது ஆசாரத்தின் ஒரு பாகமாக இருந்தது. குடும்பத்தில் பாடத் தெரிந்தவர்கள் இல்லை என்றால் நன்றாகப் பாடுபவரை அழைத்து வந்து பாடச்செய்வர். பக்தியும், ஞானமும் நிறைந்து வழியும் பாடல்கள், கேட்பவர் மனதில், அவரை அறியாமலே ஒரு ஆன்மிகப் பதிவை உருவாக்கும். இது மரம், செடி, கொடிகளுக்கும் நன்மை பயக்கும். இன்றைய அறிவியல், சங்கீதம் செடிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றும், செடிகளின் மீது அன்பு காட்டினால் அவற்றிலிருந்து விளைச்சல் அதிகம் கிடைக்கும் என்றும் கூறுகிறது. நமது ரிஷிகள் எத்தனையோ காலத்திற்கு முன்பே இவற்றை அறிந்தது மட்டுமல்ல; மனித வாழ்வின் அங்கமாக இவற்றை ஆக்கியும்  இருந்தனர்.

இயற்கையைப் பார்க்கும்போது  நமது திறமையின் குறுகிய எல்லை நமக்குப் புலப்படும். அது இறைவன்மீது பக்தி வளரவும், சரணாகதி ஏற்படவும் உதவும். உண்மையில் ஐம்புலன்களின் மூலம் காண இயலும் இறைவடிவமாக இயற்கை திகழ்கிறது. அதன்மீது அன்பு செலுத்துவதன் மூலமும், அதற்குச் சேவை செய்வதன் மூலமும் நாம் இறைவனையே வணங்குகிறோம்.

தேங்காயைத் தென்னை மரமாக ஆக்குவது போல், விதையை மரமாக்குவது போல் ஜீவன் பரமாத்ம நிலையை அடைவதற்கான வழியை ஏற்படுத்தித் தருவது இயற்கையாகும்.

(தொடரும்)

இறைநம்பிக்கையும் நவீன அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி …..

கேள்வி: பழங்கால யக்ஞங்கள் போன்றவை இக்காலத்தில் கடைபிடிக்கக் கூடியவையா?

அம்மா: யக்ஞம் என்பது எந்தத் தேசத்திலும், எந்தக் காலத்திலும், எல்லா மக்களும் பரஸ்பரம் அன்புடனும், ஒற்றுமையுடனும், இயற்கை நியதிகளுக்கேற்ப வாழக் கற்றுத் தருகின்ற தத்துவமாகும். இயற்கையிடமிருந்து பெறுவதில் ஒரு அம்சத்தையாவது இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்க நாம் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்திலிருந்தே பஞ்ச யக்ஞங்கள் தோன்றின. ரிஷி யக்ஞம் (ஆன்மிக சாஸ்திரக் கல்வி), தேவ யக்ஞம் (பூஜை, ஹோமம் போன்ற வழிபாட்டு முறைகள்), நரயக்ஞம் (அதிதி உபசாரம்), பித்ரு யக்ஞம் (பெற்றோரைப் பேணுதல்,மூதாதையரை வழிபடுதல்),  பூத யக்ஞம் (பறவை-மிருகங்களைப் பேணுதல்) போன்றவையே  கிரகஸ்தாஸ்ரமிகள் (இல்லறத்தார்) அனுஷ்டிக்க வேண்டிய பஞ்ச யக்ஞங்களாகும்.

வாழ்க்கையை நன்றாக வாழ்வது எவ்வாறு என்றும், உலகத்தின் இயல்பு என்ன என்றும், நமக்கு எதிரான சூழ்நிலைகளில் மனம் தளராமல் அவற்றைக் கடந்து செல்வது எவ்வாறு என்பதையும் ஆன்மிக சாஸ்திர நூல்கள் கற்றுத் தருகின்றன. விவசாயக் கல்வி படித்த ஒருவன் செடிக்கு நோய் வருவதற்கு முன் அதற்குத் தேவையான பரிகாரம் செய்திருப்பான். எந்தச் செடிக்கு எந்த மண் ஏற்றது, என்ன உரம் தேவை என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். இவற்றில் எதுவும் தெரியாமல் விவசாயம் செய்ய முனைந்தால் சில சமயம் விளைச்சல் முழுவதும் நாசமாகக் கூடும். இதுபோல் வாழ்க்கை என்றால் என்ன என்று சரியாகப் புரிந்துகொள்ள நல்ல நூல்களைப் படிப்பது நமக்கு உதவுகிறது. நாம் அறியாதிருக்கையில் திடீரென வெடி வெடிக்கும் சப்தத்தைக் கேட்டு நாம் திடுக்கிடலாம். அதே சமயம், வெடி வெடிக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொண்டு கேட்கும்போது அவ்வளவாகப் பயம் தோன்றுவதில்லை. நீந்தத் தெரியாத ஒருவன் கடல்அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுத்  தளர்ந்து போகும்போது, நீச்சலறிந்தவன் அந்த அலைகளில் ஆனந்தமாக நீந்தி மகிழ்கிறான். இதுதான் சாஸ்திரம் படிப்பதால் ஏற்படும் நன்மையாகும். ஒரு இயந்திரத்தை உபயோகிக்கும் முறையை அறியாமல் அதை உபயோகித்தால் இயந்திரம் பழுதாகிவிடும். ஆசைகளை வென்ற நமது ரிஷிகள் உபதேசித்த வாழ்க்கைத் தத்துவங்களையே ஆன்மிக நூல்கள் நமக்குப் புகட்டுகின்றன. அவற்றைத் தினந்தோறும் படிக்கவும், வாழ்வில் பின்பற்றவும் செய்வதன் மூலம் ரிஷிகளுக்கு நாம் பட்டுள்ள கடனைத் தீர்க்கிறோம். படிப்பது மட்டும் போதாது; அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும். சமையல்கலைப் புத்தகத்தைப் படித்து யாராவது பசியைத் தீர்த்துக்கொள்ள முடியுமா? ரிஷிகள் கூறியுள்ள ஆன்மிகத் தத்துவங்களை நமது வாழ்வின் அங்கமாக மாற்றக் கற்றுத் தருவதே தேவ யக்ஞமாகும். பூஜை, ஜபம், தியானம், விரத அனுஷ்டானங்கள் இவை அனைத்தும் தேவயக்ஞத்தில் அடங்கும். மன ஒருமைப்பாடு, புத்திக் கூர்மை, மனமலர்ச்சி, சத்துவகுணம் இவற்றைப் பெறுதலே இவற்றின் லட்சியம். மந்திர ஜபத்தின் மூலம் மனதில் பல்வேறு சிந்தனைகள் வராது தடுத்து நிறுத்த முடியும். தியானத்தின் மூலம் அறிவில் தெளிவும், கூர்மையும் வருவதுடன், மனதின் சலனங்கள் அடங்கி அமைதியும், நிம்மதியும் ஏற்படுகின்றன.

பூஜையையும், ஹோமத்தையும் தத்துவமறிந்து செய்வது மிக நல்லது. ஹோமத் தீயில் பொருட்களை ஆஹூதியாக அளிக்கும்போது விருப்பமுள்ள பொருட்கள்மீது நமக்கு இருக்கும் விருப்பத்தையே அக்னியில் அர்ப்பிப்பதாகப்  பாவனை செய்யவேண்டும். பூஜை சமயத்தில் ஊதுவத்தி ஏற்றுகையில், அதுபோல், தான் எரிந்து உலகிற்கு நறுமணம் அளிப்பதாக தனது வாழ்வு அமையவேண்டும் என்று சங்கல்பிக்க வேண்டும். ஆரதிக்குக் கற்பூரம் ஏற்றும்போது, தனது அகந்தை ஒரு துளியும் மீதமின்றி முற்றும் ஞான அக்னியில் எரிந்துபோவதாகப் பாவனை செய்ய வேண்டும். மந்திர உச்சரிப்பும், ஹோமப்புகையும் அதைச் செய்பவருக்கு மனத்தூய்மை அளிப்பதுடன், சுற்றுப்புறத் தூய்மைக்கும் உதவுகிறது. ஒவ்வொரு பொருளையும் இறைவடிவமாகக் கருதுகிற காரணத்தால், எந்தப் பொருளை எடுக்கும்போதும் சிரத்தையும், பக்தியும் தோன்றும். ஏற்றிவைத்த குத்துவிளக்கைக் காணும்போது, யாராயிருந்தாலும் தம்மை அறியாது கைகூப்பி வணங்குவது, அதில் இறைசாந்நித்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கை பரம்பரையாக இருந்து வருவதால்தான்.

அதேபோல், உண்ணாவிரதமும், மற்ற விரதங்களும் மனக்கட்டுப்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுபவை ஆகும். பெரும்பாலான விரத நாட்கள் அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் வருவதைக் காணலாம். சந்திரனின் வளர்ச்சியும், தேய்வும் மனதைப் பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மன நோயாளிகளின் நோய் அதிகரிக்கும்; கோபம் கூடும்; மன உணர்ச்சிகள் அதிகரிக்கும். அவ்வேளையில் பிரார்த்தனை மற்றும் பிற ஆன்மிக சாதனைகளின் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவதாலும், உணவைக் குறைத்து, பழவகைகளை அருந்துவதாலும்  மனதின் சஞ்சலம் குறையும்; ஆயுளும், ஆரோக்கியமும் கூடும். விரத அனுஷ்டானங்களை ஒரு சமுதாயம் முழுவதும் பின்பற்றுவதால் அது இயற்கையிலும் அனுகூலமான அலைகளை உருவாக்கும். பருவம் தவறாது தேவையான மழையும், வெயிலும் கிடைக்கும். இதுதான் யக்ஞத்தின் மூலம் தேவதைகளைத் திருப்திப்படுத்தி மழை பெய்யச்செய்வது என்று கூறுவதன் பின்னே உள்ள தத்துவம்.

பித்ரு யக்ஞம் என்றால் தர்ப்பணம் போன்ற கர்மங்கள் மட்டுமல்ல; பெற்றோர்மீது  நமக்குள்ள அன்பையும், மரியாதையையும் அவர்களுக்குத் தொண்டு செய்வதன்மூலம் வெளிப்படுத்துவதே சரியான பித்ரு யக்ஞமாகும். வயதாகி, தளர்ந்திருப்பவர்களை நாம் சரியான முறையில் கவனிக்கவில்லை என்றால் அவர்களது மனதின் சாபம் சுற்றுப்புறத்தில் தங்கி இருக்கும்; இயற்கையில் பதிவாகி இருக்கும் அவர்களின் உள்ளப் புலம்பல் என்றாவது நம்மைத் திருப்பித் தாக்கும். பெற்றோருக்கு முழு மனதுடன் சேவை செய்யும் ஒருவன் வேறு எந்த இறைவழிபாடும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றே கூறப்படுகிறது.

அதிதிகளை  (விருந்தினர்களை) இறைவனாகக் கருதி மரியாதை செலுத்துமாறு நமது பண்பாடு வலியுறுத்துகிறது. குடும்ப அங்கத்தினரிடம் நாம் காட்டும் அன்பானது, பற்றால் வருவதாகும். நம்மைப் பரந்த மனமுடையவராக ஆக்க இது உதவாது. ஆனால், அதிதி பூஜை, பிரதிபலனை எதிர்பாராத அன்பிலிருந்து உருவாவதாகும். உலகையே ஒரு குடும்பமாகக் கருதி அன்பு செய்ய அது நம்மைத் தகுதியுள்ளவர் ஆக்குகிறது.

மரம், செடி-கொடிகளுக்கும், பறவை-மிருகங்களுக்கும் தெய்வங்கள் மற்றும் இறை வாகனங்களின் இடத்தை நாம் அளித்திருக்கிறோம். வளர்ப்பு மிருகங்களுக்குத் தீனி கொடுத்த பிறகும், துளசி, ஆல், வில்வம் போன்ற மரம்-செடிகளுக்கு நீர்விட்ட பிறகும் தான் பழங்காலக் குடும்பத்தினர் உணவு உண்டனர். பூஜை மலர்களுக்காகப் பூச்செடி நடும்போதும், அதைக் கவனித்து வளர்க்கும்போதும், அதில் பூ மலர்வதைக் காணும்போதும், பூப்பறித்து மாலை கட்டும்போதும் என எப்போதும் நமது மனம் நாம் செய்யும் செயலைச் சிந்திக்காமல், இறைவனிடமே நிலைத்துள்ளது. நாம் நண்பனுக்குக் கடிதம் எழுத நினைக்கிறோம். காகிதத்தையும், பேனாவையும் எடுக்கும்போதெல்லாம், ‘இன்னாருக்குக் கடிதம் எழுதப் போகிறேன்‘ என்ற உணர்வு மனதில் இருக்கும். பேனா, தாள் இவை எல்லாம் வேறு வேறு என்ற போதும் அவையனைத்திலும் ஒன்றை, அதாவது நண்பனையே நாம் காண்கிறோம். அதுபோல், எச்செயல் புரியும்போதும் இறைவனை மட்டும் தரிசிக்கவேண்டும். எச்செயலையும், ‘இது இறைவனுக்காக‘ என்ற நினைவுடன் செய்யுங்கள். இதன்மூலம் பல செயல்கள் மூலமாகவும், விஷயங்கள் மூலமாகவும் ஒருமையைத் தரிசிக்கிறோம். அத்வைதம் பற்றிப் பலரும் பேசுகின்றனர். யாரும் அதைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. ஆனால், சரியான பக்தன் பூதயக்ஞத்தின் மூலம் சகல சராசரங்களிலும் ஒரே மெய்ப்பொருளையே தரிசிக்கிறான். தன்னை அறியாமல் அவன் அத்வைதத் தத்துவத்தில் வாழ்கின்றான்.

ஆன்மிகம் என்பது நம் வாழ்விலிருந்து வேறுபட்ட ஒரு பொருளல்ல. ஒவ்வொருவரிடமும் உள்ளதே ஆகும். அதை உணர்வுநிலைக்குக் கொண்டுவர ஆசார அனுஷ்டானங்கள் உதவுகின்றன; அவ்வளவே. தினமும் பல் தேய்ப்பதும், குளிப்பதும் நமக்கு எவ்வளவு இயல்பாக உள்ளதோ, அதுபோல் இந்தச் சாதனை முறைகள் நமது இயல்பாக மாற வேண்டும். இந்த மதத் தத்துவங்களைப் புரிந்துகொள்ள மனிதனுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தால், பெரும்பாலான மக்களின் வாழ்வு இயந்திர மனிதனுடைய இயக்கத்தைப்போல ஆகியிருக்கும். மதமின்றியும் வாழலாம். ஆனால், அது பிணத்திற்கு அலங்காரம் செய்து பார்ப்பது போலாகும்.

(தொடரும்)

நவராத்திரி பாரதம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். “நவராத்திரி” என்று சொல்லும்போதே ஒன்பது இரவுகள் என்பது தெளிவாகிறது. நாம் இப்போது இரவில்தான் வாழ்கிறோம்; அதாவது, அறியாமை இருளில் இருக்கிறோம் . அறியாமை இருளை நீக்கி ஞான ஒளியை உள்ளத்தில் பரவச் செய்வதுதான் நவராத்திரி பூஜையாகும். இவ்வாறு ஒன்பது இரவுகள் முடிந்து பத்தாவது நாளான விஜயதசமி வருகிறது. இங்கே விஜயம் என்பது சாதாரண விஜயம் (வெற்றி) அல்ல. அதாவது மனதின் பலவீனங்கள் மற்றும் எல்லைகளின் சங்கிலியை உடைத்து, பரிபூரண சுதந்திரம் பெறும்போது ஏற்படும் விஜயமாகும்.

“நவம்” என்ற வார்த்தைக்குப் புதியது என்றும் பொருளுண்டு. பாபங்கள் எல்லாவற்றையும் கழுவிச் சுத்தம் செய்யும் போது தான் புதிய பிறவி கிடைக்கிறது. அதாவது நாம் துவிஜன் (இரு பிறப்பாளன்) ஆகிறோம். இந்த உடல் பராசக்தியின் வாசஸ்தலமாகும் என்பதை அறிகிறோம். பின்னர் ஆத்மாவின் புதுமையை மட்டும் எங்கும் தரிசிக்க முடிகிறது. நவராத்திரி பூஜையின் முதல் மூன்று தினங்கள் சிம்மவாகினியான துர்க்கையை வழிபடுகிறோம். துர்க்கை என்பவள் சக்தியே வடிவானவள். உக்கிர மூர்த்தி ஆவாள். துர்க்கையை வழிபடுவது நம்முடைய உள்ளத்திலுள்ள விருப்பு-வெறுப்புகள், ஆசை மற்றும் கோபம் முதலியவை அழிந்து போவதற்காகவே ஆகும். சக்தி இருந்தால் தான் மனம் உறுதி பெறும். அப்போதுதான் நமது உள்ளத்தில் உள்ள எதிரிகளை அழிக்க முடியும்.மனம் சலனமற்று இருக்கும்போது பிறக்கும் சக்தியே துர்க்கை. தேவியின் வாள் வைராக்கியத்தின் சின்னமாகும். அது ஞானவாள். இறைவனை அறிவதற்கான தீவிரமான தாகமே வைராக்கியமாகும். அந்த வாளால்தான் மனதின் அசுரகுணங்களை அழிக்க முடியும். மகிஷாசுரனை தேவி அழிப்பதன் தத்துவம் இதுவே ஆகும். உண்மையில் துர்க்காதேவியை வழிபடுவதன் மூலம் நம்முடைய அகத்தில் உள்ள சக்தியையே விழிப்படையச் செய்கிறோம். அந்த சக்தி விழிப்படைந்தால் தான் மனதின் பலவீனங்களுடன் போர் செய்து தோல்வியுறச் செய்ய முடியும்.

இவ்விதம் ஆத்மசக்தியால் தீயவாசனைகளை அகற்றிவிட்டால் அடுத்தபடியாக நற்குணங்கள் மனதில் நிறையும். அதற்காகவே அடுத்த மூன்று தினங்கள் ஐஸ்வர்யத்தின் தேவியான இலட்சுமியை (திருமகளை) வழிபடுகிறோம். இலட்சுமி பூஜையின் மூலம் அன்பு, கருணை, இரக்கம், தானம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற தெய்விகச் செல்வத்தைப் பெறவேண்டும். மன மாசுகளை அகற்றி, அங்கே நற்குணங்கள் தோன்றி விட்டால் ஞானம் உதயமாகும். அதனால் தான் கடைசி மூன்று நாட்களில் வித்யா வடிவமான சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.

பத்தாவது நாள் விஜயதசமி.இதைத் தசரா என்றும் கூறுவர். “தச பாப ஹர” என்பதே இதன் பொருள். பத்து பாபங்களை அழித்தல்; அதாவது ஐந்து ஞானேந்திரியங்களின் மூலமும், ஐந்து கர்மேந்திரியங்களின் மூலமும் மனம் உலக சுகங்களை அனுபவிக்கிறது.    அதனால்தான் எங்கும் நிறைந்துள்ள இறைவடிவை நம்மால் உணர முடியவில்லை. வெளிமுகமாக நிற்கும் இந்த பத்து இந்திரியங்களே தசபாபங்களைச் (பத்து பாபங்களை) செய்கின்றன. அவற்றை அழித்து, ஞானத்தின் வெற்றியைப் பெறும் நாளே விஜயதசமியாகும்.

நவராத்திரியின் கடைசி மூன்று தினங்கள் தொழிலாளியும், முதலாளியும், பண்டிதரும், பாமரரும், ஏழையும் பணக்காரரும், பிராமணரும் அல்லாதாரும் மாணவமணிகளும், ஆசிரியர்களும் தாங்கள் வேலைசெய்ய உபயோகிக்கும் ஆயுதங்களைப் பூஜைக்கு வைக்கிறார்கள். ஜப, தியானங்களுடன் இந்த நாட்களைச் செலவிடுகிறார்கள். அனைத்தையும்  ( உயிருள்ள. உயிரற்ற பொருட்களை) இந்நாட்களில் வழிபடுகிறார்கள்.அறிவின் ஆதாரமான அக்ஷரத்தையும், அழிவற்ற பராசக்தியையும் அனைவரும் வணங்குகின்றனர். முதல் அக்ஷரங்களான “ஹரி:ஸ்ரீ” என்பதை எழுதி, குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் எல்லையற்ற அறிவின் முன்னர் சிறுகுழந்தைகள் ஆகிவிடுகின் றனர். இதை எப்போதும் நினைவுகூர முடிந்தால் வாழ்க்கை பொருளுள்ளதாகும். பின்னர் சக்தி வடிவான தேவி நமக்கு என்றும் வெற்றியை வழங்குவாள்.

மூன்றிற்கும் அவற்றின் பெருக்குத் தொகைக்கும் இந்து மதத்தில் சிறப்பான இடம் உண்டு. குறிப்பாக 18க்குத் தனி இடமுண்டு. நம்முடைய சாஸ்திரத்தின்படி (எண்ஜோதிடம்) 18க்கு ஜயம்,விஜயம் என்ற பொருள் உண்டு. மகாபாரதத்தின் மற்றொரு பெயர் ஜய என்பதாகும். பகவத்கீதைக்கு 18 அத்தியாயங்கள் உள்ளன. 18 அக்ஷரோணி படைகள் மகாபாரதப் போரில் பங்கெடுத்தன.குருக்ஷேத்திரப் போர் 18 தினங்கள் நடைபெற்றன. பகவான் 18 லட்சணங்களின் (இயல்புகள்) மூலம் ஸ்திதப் பிரக்ஞனை விவரிக்கிறார். நம்முடைய புராணங்களும், உபபுராணங்களும் 18 ஆகும். நவராத்திரியிலும் 9 உண்டு. 18-ன் பாதியே 9 ஆகும். சுருங்கக்கூறின், அனாத்மாவைத் தோல்வியுறச் செய்து ஆத்மஞானம் பெறுவதே நவராத்திரியின் தத்துவமாகும்.

(அம்மா மஹாநவமி அன்று (2007 ) வழங்கிய அருளுரை )

கொலுவிருக்கிறாள் அம்மா கொலுவிருக்கிறாள்
கோமள வல்லியெனக் கொலுவிருக்கிறாள்
அமிர்தமயி தேவியெனக் கொலுவிருக்கிறாள்
ஆனந்த ஒளிசிந்தக் கொலுவிருக்கிறாள்

மலர்ந்த முகம் வாடாமல் கொலுவிருக்கிறாள்
மக்கள் தனை மடிசாய்த்துக் கொலுவிருக்கிறாள்
நிலவுமுகச் சிரிப்புடனே கொலுவிருக்கிறாள்
நித்தமவள் பௌர்ணமியாய் கொலுவிருக்கிறாள்

அங்கயற்கண்ணி அவள் கொலுவிருக்கிறாள்
எங்கும் நிறைஜோதியாய்க் கொலுவிருக்கிறாள்
இன்பமெல்லாம் பொங்கப் பொங்கக் கொலுவிருக்கிறாள்
இனிமையெல்லாம் தங்கத்தங்கக் கொலுவிருக்கிறாள்

தினம் தினம் தேவியவள் கொலுவிருக்கிறாள்
திக்கெட்டும் காவலாய்க் கொலுவிருக்கிறாள்
மனமகிழ மணங்கமழ கொலுவிருக்கிறாள்
மாதவர்கள் போற்றி நிற்கக் கொலுவிருக்கிறாள்

-திருமதி. மீனாட்சி பழனியப்பன்

இயற்கையும் மனிதனும் கட்டுரையின் தொடர்ச்சி

கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட, இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியலல்லவா சிறந்தது?

அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும், சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்குக் கிடைப்பதுபோல், மதத்திலிருந்து நமக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.

மதம் என்பது குருட்டு நம்பிக்கை என்று கூறி, சிலர் கேலியாகச் சிரிப்பதைக் காணலாம். ஆனால் இப்படிக் கூறுபவர்களின் செயல்களே இயற்கைக்கு மிகவும் கெடுதலாக மாறுகின்றன. இந்தப் பொய்யான பகுத்தறிவுவாதிகளை விட இயற்கையின் மீது அன்பு செலுத்துவதும், அதைப் பாதுகாப்பதும் மத உணர்வைப் பெற்றுள்ள சாதாரண மக்களே ஆவர். மதத்தில் கூறப்படும் சில விஷயங்கள் தவறென்று நிரூபிக்க அறிவியலை உதாரணம் காட்டச் சிலர் முயல்வதைக் காணலாம். ஆனால், பௌதிக அறிவியலை சரியாகத் தெரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன என்பதை அவர்கள் மறக்கின்றனர்.

மதம் வெறும் குருட்டுநம்பிக்கை என்று கூறுபவர்கள் அதன் ஆசாரங்களின் பின்னே உள்ள சாஸ்திர தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மதத் தத்துவங்கள் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்தவருக்காக மட்டும் கூறப்படுபவை அல்ல. எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் தேவையானது அவற்றில் உண்டு. சிறு குழந்தைக்குத் தேவையானதும், பத்து வயதுச் சிறுவனுக்கு வேண்டியதும், இளைஞனுக்குப் பொருந்துவதும், நூறு வயதுள்ள கிழவருக்குத் தேவையானதும், பைத்தியக்கா ரர்களுக்கும், அறிவாளிகளுக்கும் தேவையானவையும் சாஸ்திரங்களில் உள்ளன. ஒவ்வொருவரின் இயல்பிற்கும் பொருந்தும் ரீதியிலுள்ள தத்துவங்களே மதத்தில் உள்ளன. ராணுவத்திலும் காவல்துறையிலும், அலுவலகத்திலும் வேலை செய்வதற்குத் தேவையான தகுதிகளில் வித்தியாசமுண்டு. அதுபோல், மாறுபட்ட இயல்புள்ளவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட பல தத்துவங்கள் மதத்தில் உள்ளன. அனைத்தும் ஒன்றே எனும்போது, சில நேரங்களில், சில தத்துவங்கள் நமக்குப் பொருந்தாதவையாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொன்றும் ஒவ்வொருவரைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். மதத் தத்துவங்களை அறிய முற்படுகையில் இந்தத் தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.

நம்பிக்கையின்றி யாரால் வாழ முடியும்? எத்தனையோ பேர் விபத்துகளிலும், வேறு விதங்களிலும் இறக்கின்றனர். பேசிக்கொண்டு நிற்கும்போதே இறந்து விடுகின்றனர். இருந்தபோதும் ‘நாம் இப்போது சாகமாட்டோம்‘ என்ற குருட்டு நம்பிக்கையே நமக்கு இருக்கிறது. இதுபோல் எந்த ஒரு செயலிலும் – அவ்வளவு ஏன்! – ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். இங்கே குண்டு விழாது என்ற நம்பிக்கையால்தான் இப்போது நாம் இங்கே இருக்கிறோம். எத்தனையோ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன; நேரில் கண்டிருக்கிறோம். இருந்தபோதும் வாகனங்களில் பயணம் செய்வது, நாம் பயணம் செய்யும் வாகனம் விபத்துக்குள்ளாகாது என்ற நம்பிக்கையால் தான். தனது மகளைக் கண்கலங்காமல் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்தான் ஒருவர் தன் மகளை ஒரு ஆடவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். நாம் குடிக்கும் தண்ணீரில் விஷமில்லை என்ற நம்பிக்கையே நாம் அதைக் குடிக்கக் காரணமாகிறது. இப்படிப் பார்க்கும்போது வாழ்க்கையின் எந்த நிலையிலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். எதையும் நம்பிக்கையுடன் பார்க்கும் போதுதான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். தான் விரும்பும் பெண் தருகின்ற கசப்பையும், இனிப்பாக எண்ணி அருந்த முடியும்; அதேசமயம் நாம் விரும்பாத ஒருவர் தரும் இனிப்பும் நமக்குக் கசப்பாகத் தோன்றும். எதையும் விரும்ப முடிந்தால் மட்டுமே வாழ்வில் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். அதற்குத் தடையாக நிற்பது நமது சுயநலமாகும். அதைத் துறக்க வேண்டும் என்றே மதம் கூறுகிறது.

மேகங்களில் ஏதோ உப்பைத் (சில்வர் அயோடைடு) தூவி மழை பெய்யச் செய்யலாம் என அறிவியல் கூறுகிறது. ஆனால், அவ்வாறு கிடைக்கும் மழைநீர் சுத்தமானது என்று கூற முடியாது. அதேசமயம், சில குறிப்பிட்ட செடிகள் மற்றும் பிறவற்றை முறையான மந்திர ஜபத்துடன் அக்னியில் ஆஹூதியாக அளிக்கும்போது இயற்கையில் அதற்கேற்ப நல்ல மாற்றம் ஏற்படுகிறது. ஹோமப்புகை மேலே செல்லும்போது அது மழை பெய்விக்க உதவுகிறது. செயற்கை மழையால் கிடைக்கும் மழைநீரை விட யாகங்கள், ஹோமங்களால் பெய்யும் மழைநீர் சுத்தமானதென்று அனுபவித்து அறிந்தவர்கள் கூறுகின்றனர். இயற்கை இழந்துவிட்ட
சமநிலையை ஹோமங்கள், யக்ஞங்கள் போன்றவை மீண்டும் உருவாக்குகின்றன. மூலிகை மருந்துகள் உடலின் நோயைப் போக்குவது போல், தூப, தீப, நைவேத்தியங்களும், ஹோமங்களும் பிறவும் சுற்றுச்சூழலில் தூய்மை ஏற்படச் செய்கின்றன.

கிருமிகளைக் கொல்வதற்குக் கிருமிநாசினிகளையும், நீரைத் தூய்மைப்படுத்த குளோரினையும் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. மாறாக, நஸ்யம் (ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் ஒன்று) செய்யும்போது சளித்தொல்லை நீங்கி, நுரையீரல் சுத்தமடைவதுபோல் அத்தி, இத்தி, அரசு, தர்ப்பைப்புல் போன்றவற்றை உபயோகித்துச் செய்யும் ஹோமத்தில் எழும் புகையானது சுற்றுப்புறத்திலுள்ள மாசுகளை அகற்றுகிறது. கிரகண சமயத்தில் சூரியனை நேரடியாகப் பார்த்தால் கண்ணிற்குக் கெடுதல் என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. கிரகண சமயத்தில் சாண நீரில் தெரியும் சூரியனின் பிரதிபிம்பத்தை மட்டுமே பார்க்கலாம் என்ற மத ஆசாரத்தைப் பின்பற்றுவதன் மூலம், இந்த அறிவியல் கூற்றின் பயன்தான் நமக்குக் கிடைக்கிறது.

இயற்கை மற்றும் சமூகத்துடன் அன்புடனும், பரஸ்பர ஒற்றுமையுடனும் வாழவே மதம் கூறுகின்றது. இயற்கை அன்னைக்குத் தான் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிப் புரிந்துகொள்வதன் மூலம் மனிதனின் அகந்தை நீங்குகிறது. தன்னையே இயற்கையின் அங்கமாகக் காண்பதன் மூலம் எல்லாம் ஒரு ஆத்மாவே என்பதை அவன் அறிகிறான். உண்மையில் மதம் என்றால் நூறு சதவிகிதம் இயற்கைப் பாதுகாப்பாகும். இயற்கைப் பாதுகாப்பு இருந்தால்தான் நம்மால் வாழ முடியும்.

(தொடரும்)

காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதற்குப் பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.

சரியாக 9 மணி அளவில் அமிர்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் அம்மாவை மோகினி ஆட்டத்துடன் மேடைக்கு வரவேற்றனர். அப்போது அமிர்த விஸ்வ வித்யா பீடத்தின் அமிர்தபுரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் அமைந்த பிறந்த நாள் விழாத் திடல் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது.


சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் அம்மாவுக்குப் பாத பூஜை செய்தார்.அதன் பின்னர் குரு ஸ்தோத்ர பாராயணம் மற்றும் அம்மாவின் அஷ்டோத்தர அர்ச்சனையும் நடைபெற்றது. அதன்பின் அம்மாவின் மூத்த துறவிச் சீடர்கள் அம்மாவுக்கு மாலை அணிவித்தனர். அம்மாவின் அருளுரையின் முடிவில் சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அப்போது சுவாமி,” இன்று உலகம் முழுவதும் அம்மாவை உற்று நோக்குகிறது. அம்மா என்ன செய்கிறார்?அம்மா நமது கண்ணோட்டத்தை ஏழை எளியோர்,துன்பப்படுவோர், சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளோர், நோயாளிகள் மற்றும் கதியற்றோர் இவர்களை நோக்கித் திரும்புமாறு செய்கிறார்.மேலும் நமது பார்வையை விதவைகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோரிடம் இரக்கம் காட்டும்படி மாற்றுகிறார். உண்மையில், இதுதான் அம்மாவின் பிறந்தநாள் செய்தியின் ஒரு பகுதியாகும். பிறப்பு — உண்மையான பிறப்பு என்பது நமது நலனை விட மற்றவர்களது நலத்தையே பெரிதாகக் கருதி அவர்களை முன்னேற்றுவதாகும். உலகம் முழுவதையும் உன் இதயத்தில் நிறைத்து விட்டு நீ சுதந்திரமாக இரு . இதுதான் அம்மாவின் உபதேசமாகும்” என்றார். . அதன் பின் அம்மாவின் அருளுரை நடைபெற்றது. அதை சுவாமிஜி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

நமது மடத்தின் பல புதிய நலத் திட்டங்கள் அன்று தொடங்கி வைக்கப் பட்டன. அமிர்த ஸ்ரீ காப்பீட்டுத் திட்டம் என்பது மடத்தின் சுய தொழில் உதவிக்குழு அமைப்பும் (அமிர்த ஸ்ரீ ) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும் ( LIC ) இணைந்து செயல்படும் ஒரு திட்டமாகும். மத்திய அமைச்சர் உயர்திரு.குருதாஸ் காமத் அவர்கள், எல்.ஐ.சி கோட்ட மேலாளர் திரு. துரைசாமி அவர்களிடமிருந்து காப்பீட்டுத் திட்டத்திற்கான பாலிசிப் பத்திரத்தைப் பெற்று அமிர்த ஸ்ரீ ஒருங்கிணைப்பாளர் திரு.ரெங்கநாதன் அவர்களிடம் ஒப்படைத்தார். இத்திட்டத்தால் (விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ) மடத்தின் கீழ் இயங்கி வரும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அமிர்தா சுய உதவிக்குழு உறுப்பினர்களும் அவர்களது குடும்பமும் பயன்பெறும்.

அமிர்த நிதித் திட்டத்திற்கான புதிய பயனாளிகளுக்கு மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ் மற்றும் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு. உம்மன் சாண்டி அவர்களும் காசோலைகளை வழங்கினர். தற்போது மடம் அமிர்த நிதி உதவித் தொகையை உயர்த்தியுள்ளது.

500 புதிய மாணவர்களுக்கு வித்யாமிர்தம் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைகான காசோலைகளைக் கேரள அமைச்சர் திரு. திவாகரன் மற்றும் ஹரிப்பாடு தொகுதி எம்.எல்.ஏ. பாபு பிரசாத் அவர்கள் வழங்கினர்.

அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஜூடித் கார்னல் எழுதிய அம்மாவின் வாழ்க்கை வரலாற்றின் மலையாள மொழிபெயர்ப்புப் பதிப்பை ( AMMA) மாத்ருபூமி புத்தகப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் முதல் பிரதியை ஜாக்கோபைட் சிரியன் ஆர்த்தோடாக்ஸ் கிறித்தவ சபையைச் சேர்ந்த அருட்தந்தை. மார் ஜீவர்கீஸ் கூர்லஸ் அவர்கள் வெளியிட்டார்.

அமிர்தா பல்கலைக் கழக மாணவர்கள், அமிர்த வித்யாலய மாணவர்கள் மற்றும் அமிர்தா யுவதர்மதாரா உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் இந்தியாவைத் தூய்மையாகப் பேணிக்காக்கவும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மற்றும் உள்ளூர் இளைஞர்கள் மது,புகையிலை மற்றும் போதைப் பொருள் இவற்றிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதை சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

மாத்ருவாணி இதழின் பிறந்தநாள் சிறப்புப் பதிப்பின் முதல் பிரதியை சிவகிரி ஸ்ரீ நாராயண குரு மடத்தின் தலைவர் சுவாமி பிரகாசானந்தா அவர்கள் வெளியிட பன்மனா சட்டம்பி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரணவானந்த தீர்த்த பாதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நமது ஆசிரம இணைய தளம் முதன் முறையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி,பெங்காலி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 9 மொழிகளில் வெளியிடப் பட்டது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். புதிய இணையதளத்தின் முகவரி www.amrita.in என்பதாகும். இதில் அம்மாவின் வாழ்வு, உபதேசங்கள், மற்றும் ,ஆசிரமத்தைக் குறித்த விவரங்கள் ஆகியவற்றைத்  தங்களது தாய்மொழியில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதை மார்த்தோமா கிறித்துவ திருச்சபையின் அருட்தந்தை.மார் கிறிஸ்டோட்டம் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்.

அம்மா 54 ஏழை ஜோடிகளுக்கு  இலவசத் திருமணம் நடத்தி வைத்தார். இவர்களுக்கான முழுத்  திருமணச் செலவையும் மடமே ஏற்றுக் கொண்டது. திருமணம் முடிந்ததும் நண்பகல் சுமார் 1 மணி அளவில் அம்மா தரிசனம் தரத் துவங்கினார். விழாவில் கலந்து கொண்ட  எல்லாப் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தரிசனத்துக்கு இடையில் அம்மா அதிக எண்ணிக்கையில் மாத்ரு வாணி சந்தாதாரர்களைச் சேர்த்த பிரசாரகர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அமிர்தா பல்கலைக் கழகம் மற்றும் அமிர்த வித்யாலய மாணவ-மாணவிகளின், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று இரவு ஊட்டியைச் சார்ந்த படுகர் இன பக்தர்களின்  பாரம்பரிய நடனம் நடைபெற்றது. அவர்கள் ஆடிய ஆட்டத்தில் மற்ற பக்தர்களும் வெளிநாட்டவரும் கலந்து கொண்டு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அம்மாவின் நீண்ட தரிசனம் மறுநாள் காலை சுமார் 9 மணி அளவில் நிறைவடைந்தது.

அமிர்தபுரி,செப்டம்பர் 22,

மாநில அரசுகள் மற்றும் பிறதொண்டு நிறுவனங்களின் உதவியும்
ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்குமானால் பாரதத்தில் உள்ள எல்லா பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் தூய்மைப் படுத்தும் பொறுப்பை நமது மடம் ஏற்கத் தயாராக இருப்பதாக அம்மா கூறினார். “பாரதம் வளரும் நாடாகும்.அதன் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது ” என்று கூறுகின்றனர். “ஆனால் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். நமது நாட்டில் உள்ள தூய்மை அற்ற சாலைகளும் அசுத்தமான  பொதுக் கழிவறைகளும் இதை நிரூபிக்கின்றன” என்று அம்மா கூறினார்.

“வெளிநாடுகளில் பெரும்பாலும் சாலைகள்,பொதுக் கழிப்பறை மற்றும் குளியலறைகள் முதலியவற்றை அங்குள்ள மக்கள் தூய்மையாகப் பராமரிக்கின்றனர். அதை அம்மா காணும்போது இங்கு உள்ள சுற்றுப்புறத் தூய்மைக்குறைபாட்டை எண்ணி மனம் வருந்துவது உண்டு. தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பதும் பொது இடங்களிலும் நடைபாதைகளிலும் எச்சில் துப்புவதும் இன்றும் நம் மக்களின் பழக்கமாக இருந்து வருகிறது. சாலை ஓரங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும் குப்பை கூளங்களை யும் உணவுக் கழிவுகளையும் அதில் இடும் பழக்கம் நமக்கு இல்லை. குப்பையை வழியிலோ அல்லது நடுரோட்டிலோ வீசி எறிவோம். சுற்றுப்புறச் சுத்தமும் சுகாதாரமும் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டின் அம்சங்களாகும். இதை நடைமுறைப்படுத்து வதற்கு மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு தரும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். பொது இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் சாலை ஓரங்களிலும் சுற்றுப்புறத் தூய்மையைக் குறித்த அறிவிப்புப் பலகைகளைத் தேவையான அளவு வைக்க வேண்டும். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் மனமுவந்த ஒத்துழைப்பும் உதவியும் இதனது வெற்றிக்கு அவசியமாகும்” என்று அம்மா கூறினார். மாநில அரசுகளும் பள்ளி நிர்வாகங்களும் பொதுமக்களும் இணைந்து ஒத்துழைத்தால் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் பொதுக் கழிவறைகள் கட்ட மாதா அமிர்தானந்தமயி மடம் தயார் என அம்மாஅறிவித்தார். இத்திட்டத்திற்கான வரைபடம், செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும். முதலில் இத்திட்டம் கேரளாவில் தொடங்கப்படும். பின்னர் அது படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

இதைக்குறித்து விரிவாக அறிய Amala Bharatam எனும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அமலபாரதத் திட்டத்தின் ( Amala Bharatham Campaign — ABC) சேவைப்பணிகள் தொடங்கி விட்டன. அதைப் பற்றிய விரிவான விளக்கங்கள்,செய்திகள் மற்றும் புகைப்படங்கள் காணுவதற்கு……..

பயபக்தியும் அறிவியலும் கட்டுரையின் தொடர்ச்சி….

கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியல் அல்லவா சிறந்தது?

அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும் சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்கு கிடைப்பதுபோல், மதத்திலிருந்து நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.
மதத்தில் கூறப்படும் பயபக்தி என்பது நம்மைப் பயமுறுத்துவதற்காக அல்ல; நம்மிடம் சிரத்தையை வளர்ப்பதற்காக ஏற்பட்டதாகும். எச்செயலும் சரியான பலனைத் தரவேண்டுமெனில் அதில் சிரத்தை இருக்கவேண்டும். சிரத்தை இருந்தால்தான் பொறுமை இருக்கும். பொறுமையுள்ளவர் செய்யும் செயலே சரியான செயலாக இருக்கும். இறைவனிடம் பயபக்தி என்பதைக் கொண்டு நீங்கள் பாவனை செய்வது என்ன? இறைவனிடம் காட்டும் பயபக்தி என்பது, ஒரு ஆசிரியரிடம் காட்டும் மரியாதை, தனது தாயுடன் உள்ள நெருங்கிய உறவு என இரண்டும் ஒருங்கே இணைந்ததாகும். இந்த மனோபாவம் தான் பரமாத்மாவின் மீது நமக்கு இருக்க வேண்டும். அது வெறும் பயமல்ல; மாறாக, நம்மிடம் விவேகத்தை வளர்க்க உதவும் தத்துவமாகும்.

தீயசெயல்கள் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரும் என்று கூறுவது, நமது விவேக சக்தியை விழிப்புறச் செய்வதற் காகவே ஆகும்; அல்லாது, நமது கையை வெட்டுவதற்கு, எங்கோ ஆகாயத்தில் ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இறைவன் வாள், கதையுடன் வருவார் என்பதல்ல அதன் பொருள். அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும்தான் இறைவன் உறைகிறார். இயற்கையில் ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாத்து, பராமரிப்பதன்  மூலம் நாம் இறைவனையே வணங்குகிறோம்.

“உன்னிடம் வைரக்கல் இருக்கிற்து. அது அறியாமை என்ற எண்ணெ யில் விழுந்து கிடப்பதால் அதன் ஒளி மங்கியிருக்கிறது. அதன் ஒளியை மீண்டும் பெறு. நீ உன்னைப் பார்; நீ யாரென்பதைப் அறிந்து கொள்; அகந்தையைத் துறந்து உன் உள்ளுணர்வை விழிப்புறச்செய். உனது தர்மம் என்ன என்பதைப் புரிந்துகொள். நீ ஐந்து அல்லது ஆறடி உயரத்தில் அடங்கும் ஒரு மனிதனல்ல; அழிவற்ற இறை தத்துவமா வாய். அதைப் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்து“ என்றே மதம் சொல்கிறது. பூனையைக் கண்டால் பயந்து ஓடுகின்ற எலிக்குஞ்சைப் போல் ஆகாமல், விலங்குகளின் தலைவனான சிங்கத்தைப் போல் ஆகவே நாம் முயல வேண்டும். இதைத்தான் மதம் கற்பிக்கிறது. மதம் என்பது சக்தியின் மந்திரமா கும். மதம் என்பது மனிதனிடம் உள்ள மதத்தை (அகந்தையை) நீக்குவதற்குரிய தத்துவமாகும்.

இறைவன் மீதுள்ள பயபக்தி நமது பலவீனத்தைக் கடந்துசெல்ல நமக்கு உதவுகிறது. ஒரு நோயாளியின்  முன்னால் அவன் சாப்பிடக் கூடாத உணவுப்பொருள் இருந்தால், ஆசையை அடக்க முடியாமல் அவன் அதை எடுத்துச் சாப்பிட்டுவிடுவான். இதுதான் நமது மனோ வாசனை. அந்தச் சமயத்தில், அதைச் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியோ, மரணத்தைப் பற்றியோ கூட அவன் சிந்திப்பதில்லை. நாம் நம்மைவிட நமது மனோ வாசனைகளுக்குத் தான்  அடிமையாகி இருக்கிறோம். இந்தப் பலவீனங்களிலிருந்து விடுபட இறைவன்மீது உள்ள பயபக்தி உதவுகிறது. வெகுநாட்களாகப் புகைபிடித்துப் பழகிய ஒருவன், “இனி புகைபிடிக்க மாட்டேன்“ என்று கூறும்போதே அவனது உதடுகளில் சிகரெட் இருப்பதைக் காணலாம். காரணம், புகைபிடிப்பது என்ற மனோ வாசனைக்கு அவன் அடிமை யாகி விட்டான். அதிலிருந்து விடுபட வேண்டுமெனில், சிகரெட்மீது வெறுப்பு வராமல் முடியாது. புகைபிடிப்பதால் ஏற்படும் பின் விளைவு களை நினைவுகூர்ந்து மனதிற்கு அந்த வாசனையை வெறுக்கக்கூடிய ஆற்றலை அளிக்கவேண்டும். இதேபோல், இறைவன்மீது கொள்ளும் பயபக்தி மனதிற்கு ஆற்றல் அளிப்பதற்காகவே ஆகும்.

மத தத்துவங்கள் மிகக் கடுமையாகத் தோன்றலாம். “இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டுமா?“ என்று நாம் சிந்திக்கலாம். ஆனால், தளர்வில்லாத இந்தக் கடுமைக்குக் காரணம் நம்மீது உள்ள உண்மை யான அன்பாகும். அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு சிறுவனிடம் மருத்துவர், “அன்புக் குழந்தாய்! அறுவை சிகிச்சை செய்தால் உனக்கு வலிக்கும்; அதனால் நீ போய்விடு“ என்று கூறினால், அது அந்தச் சிறுவன் மீது கருணையா அல்லது துரோகமா?  அதுபோல், தர்மத்தின் பாதையிலிருந்து நாம் விலகும்போது தெய்வத்தின் மீது உள்ள பயபக்தி நம்மை நேர்வழிக்குத்  திருப்பி விடு கிறது. அது நம்மிடமுள்ள மாசை அகற்று கிறது. இறைவன் தண்டிப்பார் என்ற பயமே நம்மிடம் சிரத்தையை ஏற்படுத்துகிறது. இறைவனின் தண்டனையும் உண்மையில் நமக்குப் பாதுகாப்பே ஆகும். சொல்வதைக் கேட்காமல் தவறு செய்யும் பிள்ளையைத் தாய் தண்டிப்பது, பிள்ளை மீது அன்பு குறைவாக உள்ளதால் அல்ல; அப்போது அனுபவிக்கும் வேதனை பின்னர் அவனைப் பெரிய ஆபத்துகளில் அகப்படாமல் காப்பாற்றும்.

இறைவன் மீதுள்ள பயபக்தியைக் குறித்துப் பலர் தவறான கருத்து கொண்டுள்ளனர். தவறு செய்யாத மனிதர் யாருமில்லை. “தவறு செய்தால் இறைவன் தண்டிப்பார்; எனவே, அதிலிருந்து தப்பிப்பதற் காகக் கோயிலில் பத்து ரூபாய்க்கு விளக்கு வழிபாடு செய்தால் போதும்.“ என்பதுதான் பலரின் எண்ணம். “எனது விளக்கின் வெளிச்சத்தில் அவர் இரண்டு கிலோமீட்டர் நடந்தபின் இறைவனுக்கு என்மீது அன்பு தோன்றும்“ என நினைப்பது சரியான இறை நம்பிக்கை யல்ல. இருக்கும் நம்பிக்கையையும் அழிக்கும் சிந்தனை ஆகும். பின் எதற்காக ஆலயங்களும் வழிபாடுகளும் என்று கேட்டால், நம் மனதில் தர்ம சிந்தனையை வளர்ப்பதற்காகவும், நமது மனதைப் பரந்ததாக மாற்றுவதற்காகவுமே ஆகும். மாறாக, இறைவனுக்குப் பாதை தெரிவதற்கு நாம் விளக்கேற்றத் தேவையில்லை. இது சூரியனுக்கு வழிகாட்டுவதற்காக, மெழுகுவத்தி வெளிச்சம் தருவது போன்றதாகும்.

மாலைநேரத்தில் நல்ல எண்ணெய் விளக்கு ஏற்றுவது இயற்கைக்கும் நலன் செய்யும். அதிலிருந்து வரும் புகை, சுற்றுப்புறத்தில் காணப் படும்  தீய கிருமிகளை அழிக்கும். இந்த ஆசாரங்களின் மூலம், மறைமுகமாக இயற்கைப் பாதுகாப்பையே நமது முன்னோர் கருத்தில் கொண்டிருந்தனர்.

பெரிய புலமையோ, கல்வித்தகுதியோ இல்லாவிடினும் நமது முன்னோர் காட்டித்தந்த அத்தகு பயனுள்ள ஆசாரங்களுக்குத் தடைவராமல் இருக்க மத உணர்வே நமக்கு வழிவழியாக உதவி வருகிறது. வீட்டில் பட்டினி என்றாலும், பத்துப் பைசா கிடைத்தால் எண்ணெய் வாங்கிவந்து மாலைநேர விளக்கு ஏற்றுவர்; மாலையில் தீபம் ஏற்றுவதை நிறுத்துவதில்லை. இறைவன்மீது கொண்ட பயபக்தியே இதன் காரணமாகும்.

(தொடரும்…)