பயபக்தியும் அறிவியலும்

நமது எல்லாச் செயல்களிலும் பயபக்தியைக் காணலாம். பயம் இருப்பதால்தான் நாம் எதையும் கவனமாகச் செய்கிறோம். இல்லாவிடில், நமக்குச் சிரத்தை வருவது கடினம். நடக்கும்போது கவனமாக இருப்பது, விழுந்துவிடுவோம் என்ற பயத்தால் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் இயல்புக்கேற்ப மனதில் தோன்றியதைப் பேச ஆரம்பித்தால், அனாவசியமான பலவற்றைப் பேசநேரிடும். அது பின்னர் வழக்கானால் சிறைக்குச் செல்ல நேரிடும். அந்தப் பயத்தால் பேச்சிலும், செயலிலும் கவனம் செலுத்துகிறோம். சிரத்தையுடன் படிப்பது தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால்தான். இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு நிமிடமும் நாம் பயந்துதான் வாழ்கிறோம்.

விதை விதைத்தால் சரியான நேரத்தில் நீரும், உரமும் இட வேண்டும். இல்லையெனில், விதை அழிந்துவிடும்; நாம் பட்டினி கிடக்க நேரிடும். பட்டினியைக் குறித்து நினைத்தபோது, மனிதனிடம் சிரத்தை வந்தது; விவேகமும், வைராக்கியமும் விழிப்படைந்தன. இவ்வாறு ஒரு விதை, ஆயிரக்கணக்கில் பழங்களும், விதைகளும் தரும் பெரிய மரமாக மாறியது. பட்டினியைக் குறித்து இருந்த பயமானது, சிரத்தையுடன் வேலை செய்யத் தூண்டுதல் அளித்தது. இறைவன்மீதுள்ள பயபக்தியும் இதுபோன்றதே. அது விவேகத்துடன் வேலை செய்ய மனிதனுக்குத் தூண்டுதல் அளிக்கிறது. அந்தப் பயம் நம்மைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அதேசமயம், வேறு எல்லா பயங்களும் மனதின் அமைதியைக் குலைக்கும்போது, இறைவன்மீதுள்ள பயபக்தி அமைதியை அளிக்கிறது. இதுவே மற்ற பயங்களுக்கும், இறைபக்திக்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடாகும். இறைபக்தி உள்ளவன் அம்மாவின் மடியில் இருக்கும் குழந்தையைப் போல் கவலையின்றியும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறான். அதனால், அவன் தவறை நோக்கிச் செல்வதில்லை. அவனுடைய செயல் தனக்காக உரியதல்ல; இறைவனுக்கு உரியதாகும். அத்தகு செயல்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நலன்புரிவதாக இருக்கும். சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், வேலை இருக்குமிடத்தில் இருப்பதாக அம்மா கூறுவேன். உழைப்பு எங்கே இருக்கிறதோ அங்கே சொர்க்கம் இருக்கிறது. உழைப்பு இல்லாத இடம் நரகமாகும். ஆனால், செய்யும் செயல் தர்மத்தோடு கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு, தர்மத்தோடு கூடிய செயல் செய்யுமாறு மதம் தூண்டுகிறது.

இறைவன் எப்போதும் கருணை பொழிந்து கொண்டிருக்கிறார். அதை முறையாகப் பயன்படுத்துமாறு மதம் கூறுகிறது. பகல்வேளையில் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு, அறைக்கு உள்ளே இருந்துகொண்டு, இருளாக இருப்பதாகக் கூறி, சூரியனைப் பழிசொல்வதால் பயனேதுமில்லை. கதவைத் திறந்து, நாம் ஒளி உலகிற்கு வரவேண்டும். அதற்கு இறைவன் தந்த ஆரோக்கியமும் இருக்கிறது. சிலர், நமது மனோவாசனைகளை அடக்குவது தவறு; மனவாசனைகளுக்கேற்றவாறு செயல்படவேண்டும்“ என்று கூறுவர். ஒருவன் அடுத்த வீட்டுக்காரனைக் கொல்ல விரும்பக்கூடும். அந்த மனோவாசனைகளுக்கேற்ப நடக்க அவன் தீர்மானித்தால், அதன் பலன் என்னவாக இருக்கும்? எனவே, மனோவாசனைகளைச் சரியான பாதையில் திருப்பிவிட முயல வேண்டும். இறைவன்மீது பயபக்தி வேண்டும் என்று கூறுவது அதற்குத்தான்.

இன்று இயற்கைப் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றி எத்தனையோ விஷயங்களை அறிவியல் சொல்லிக் கொடுத்தாலும், அவற்றில் ஒன்றையாவது நடைமுறையில் கொண்டுவர நாம் முயல்கிறோமா? இருக்கும் சோலைகளையும், காட்டையும் வெட்டி அழிக்கவல்லவா செய்கிறோம்? அதற்கு பதில் விவசாயத்திற்கு ஏற்ற, லாபம் தரும் சில மரங்களை நடுகிறோம். அவை வளர்வதற்குச் செயற்கை உரங்களும், கிருமிநாசினிகளும் தேவை. நாட்டு மரங்களுக்குள்ள கிருமிகளை எதிர்க்கும் சக்தி அவற்றிற்கில்லை. மாலையில் இறைபூஜையை நினைவுபடுத்தும் நறுமணம் கமழும் முல்லை, மல்லிகை இவற்றிற்குப் பதிலாக இன்று வீட்டு முற்றத்தைக் கள்ளி, முள் செடிகள் அலங்கரிக்கின்றன. மனிதனின் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே அவன் வளர்க்கும் செடிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறது.

துளசி, வில்வம், அருகு போன்ற இலைகள் இட்ட நீரை, காலையில் பிரசாதமாக அருந்திய நம் முன்னோர்களுக்கு வேறு டானிக் தேவைப்படவில்லை. இவற்றின் மருத்துவ குணங்களைப் பரிசோதனை நடத்தி இன்று நிரூபித்துள்ளபோதும், முன்னோர் தினசரி வாழ்க்கையில் அவற்றிற்குக் கொடுத்திருந்த இடத்தை இன்று யாராவது கொடுக்கிறார்களா? எந்த வீட்டிற்கு விருந்தினர் சென்றாலும், முன்பெல்லாம் முதலில் நீர்மோரோ, இளநீரோ கொடுப்பார்கள். இன்றோ, காபி, தேநீர் அல்லது செயற்கை பானங்களில் ஏதாவது ஒன்றைக் கொடுக்கிறார்கள். சிறிதுகாலம் முன்புவரை எலுமிச்சம்பழ சர்பத் கிடைக்காத பெட்டிக்கடை இல்லை. இன்று அதற்குப் பதிலாக, பல நிறமும், சுவையுமுள்ள செயற்கை யான குளிர்பானங்கள் கிடைக்கின்றன. பலமடங்கு அதிகவிலை கொடுத்து, உடல்நலத்திற்குக் கெடுதல் என்பது தெரிந்தும் அதை வாங்கிக் குடிக்க நாம் தயங்குவதில்லை. தென்னை, எலுமிச்சை மரங்கள் இருந்த இடங்களில் இன்று ரப்பர் போன்ற மரங்கள் பயிரிடப்படுகின்றன. எதனால்? லாப நோக்கத்துடனா அல்லது இயற்கை மீது கொண்ட அன்பாலா?

சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூட பயபக்தியால் வயதில் பெரியவர்களுக்கு முன்னால் புகைபிடித்ததில்லை. இன்று புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்கைப் பற்றி அறியாதவர் யாருமில்லை. புகைபிடிக்கக்கூடாது என்று கூறும் மருத்துவர் உதட்டிலும் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். சிகரெட் பெட்டியின் மேல் “இது உடல்நலத்திற்குத் தீங்கானது“ என்று எழுதியிருந்தபோதும், யாராவது அதைப் பொருட்படுத்துகிறார்களா?
புகைபிடிப்பவர் தனக்கு ஏற்படுத்திக் கொள்வதைவிட, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அதிகத் தீங்கை ஏற்படுத்துகிறார் என்று அறிவியல் கூறுகிறது. மனிதனை நேர்வழியில் செல்ல உதவியதும், இயற்கைக்கு நன்மை தருவதாக அமைந்ததும், பயபக்தியுடன் கூடிய ஆசாரங்களா அல்லது வெறும் அறிவா? அறிவு வேண்டாம் என்று கூறவில்லை. அறிவைப் போலவே ஆசாரமும், அனுஷ்டானமும் வேண்டும்; அவ்வளவுதான். நமக்கு அறிவு இருக்கிறது. ஆனால், விவேக புத்தியில்லை. இந்த இடத்தில்தான் பயபக்தியின் முக்கியத்துவம் வருகிறது. அறிவு புத்தியோடு மட்டும் நின்றுவிட்டால் போதாது; இதயத்திலும் நிறைய வேண்டும்; வாழ்க்கையில் செயலாக வெளிப்படவேண்டும். அதற்கு மதம் அவசியம்.

இயற்கையை இறைவனின் அம்சமாகக் காணவும், அன்பு செலுத்தவும், வழிபடவும், அதனுடன் இணைந்து வாழவும் நமக்குப் பாதை வகுத்துத் தருவது மதமாகும். தான் இயற்கையின் பிரிக்க முடியாத அங்கமென்ற உணர்வை மனிதனிடம் ஏற்படுத்தவும், அத்துடன் இயற்கையைக் கடந்து நிற்கும் பரம தத்துவத்தை அனுபூதியில் அறியவும் கூடிய சக்தியை மனிதனிடம் விழிப்புறச் செய்யவும் மதம் உதவுகிறது.

மத உணர்வின்மூலம் மனிதனுக்குக் கிடைத்த பயபக்தி அவனுக்கும், இயற்கைக்கும் நன்மையையே செய்துள்ளது. அதன்மூலம் இயற்கை யின் மீது அன்பு செலுத்தவும், அதைப் பாதுகாக்கவும் அவன் கற்றுக்கொண்டான். ஒரு இடத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர் இருந்தால், காவலர் மீதுள்ள பயத்தால் அங்கு திருட்டு மிகவும் குறையும்; பாதுகாப்பு உணர்வு ஏற்படும். அதுபோல் இறைவனிடம் உள்ள பயபக்தி சமூகத்தில் தர்மத்தை நிலைநிறுத்த உதவும். சரியான மத உணர்வைப் பெறுவதன்மூலமும், ஆசாரங்களைப் பின்பற்றுவதன் மூலமும் மனிதனால் தவறுகளிலிருந்து விலகிநிற்க முடிகிறது.

(தொடரும்)