ஞான யக்ஞங்கள்
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அம்மாவின் தலைமையில் ஞான யக்ஞங்கள், பஜனை, ஆத்மபூஜை, சத்சங்கம்,தியானம் போன்றவை நடைபெறுகின்றன. இது போலவே அம்மாவின் சீடர்களும் அந்தர்யோகம், சர்வ ஐஸ்வர்ய பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக முகாம்களும் நடத்தி மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
பிரம்மஸ்தான ஆலயம்
இது அம்மாவின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இங்கு ஒரே சிலையில் சிவன், தேவி, கணபதி, முருகன் ( ராகு) ஆகிய தெய்வங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயம் மக்களிடம் தெய்விக உணர்வை ஊட்டுவதுடன் அவர்களுடைய வாழ்வில் துன்பங்களை நீக்கி குடும்பத்தில் அமைதி நிலவச் செய்கிறது. இங்கு கிரகதோஷ நிவாரண பூஜைகள் குறிப்பிட்ட தினங்களில் நடத்தப் பெறுகின்றன. இப்பூஜைகளை பக்தர்களே செய்வது இதன் தனிச்சிறப்பாகும். 2008 வரை நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் மொரீஷியஸிலுமாக 20 பிரம்மஸ்தான ஆலயங்கள் கட்டப்பட்டு அம்மாவால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் பிரம்மஸ்தான ஆலயங்கள் உள்ளன.
ஒருங்கிணைந்த அமிர்த தியானம் ( Integrated Amrita Meditation )
இத்தியானப் பயிற்சி வாழ்வின் உண்மையான லட்சியத்தை அடைவதற் கான திறவுகோலாகத் திகழ்கிறது. இது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கற்பிக்கப்படுகிறது. இந்திய ராணுவப் பிரிவினருக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினருக்கும் இத்தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அமிர்த யோகா (Amrita Yoga )
அமிர்தபுரி ஆசிரமத்தில் ஹடயோக வகுப்புகள் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் ஆசனங்களும் எளிய மூச்சுப்பயிற்சியும் இடம்பெறும். இது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வும் புத்துணர்வும் அளிப்பதாகும்.
அமிர்த குடும்பம்
பக்தர்களின் குடும்ப நன்மைக்காக மடம் நடத்தி வரும் இயக்கமே அமிர்த குடும்பம். வாரந்தோறும் இதன் உறுப்பினர்களின் வீடுகளில் ஒன்றாகக் கூடி குரு பூஜை, மானஸபூஜை, லலிதா ஸஹஸ்ர நாமம்,தியானம், ஆன்மிக நூல் வாசித்தல், பஜனை போன்றவைகளை நடத்துவதுதான் அமிர்த குடும்பத்தின் செயல்முறையாகும். அமிர்த குடும்ப வழிபாட்டை நடத்த விரும்பும் பக்தர்கள் மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயலாளர், அமிர்த குடும்பம், மாதா அமிர்தானந்தமயி மடம்
132, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம்,சென்னை – 600092 தொலைபேசி: 23764063, 23764867
அமிர்த கீர்த்தி விருது
பாரதீய கலாசாரத்தின் உயர்வுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ஆன்மிக தத்துவசிந்தனைத் துறையிலும், சமூக சேவைத் துறையிலும் ஆன்மிக நோக்குடன் இயற்றப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் பிறந்த நாள் விழாவின் போது அம்மாவின் திருக்கரங்களால் இது வழங்கப்படுகிறது.