உலகம் முழுமையுமே பாதிக்கப்பட்டு வலியில் அழுவதைக் காண்கையில் என் இதயம் வேதனயால் துடிக்கிறது” என்று அம்மா, இன்று மடத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ” இந்நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மன அமைதி பெறவும், உலகம் சாந்தி பெறவும் நாமெல்லாம் இறைவனின் அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.”
கடந்த சில பத்தாண்டுகளாகவே அம்மா மனிதகுலம் தான் வாழும் வாழ்கக்கை முறைமையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி வற்புறுத்தி வந்திருக்கிறார். இயற்கையோடு இயைந்த விதத்தில் வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதோடு, அத்தகைய மாற்றம் நிகழாமற் போனால் இயற்கைப் பேரழிவுகளும், நோய்ப்பரவல்களும் அதிகமாகும் என்று எச்சரிக்கையும் விடுத்துக்கொண்டே தான் இருந்தார் அம்மா.
“தன் சுய நலத்திற்காக மனிதன் இயற்கையை அழித்துவந்ததன் எதிர்வினை இப்போது இத்தகைய கொள்ளை நோய்த் தாக்கத்தின் மூலம் வெளி வந்திருக்கிறது” என்றார் அம்மா. “நாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல என்கிற மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொண்டாக வேண்டும். அடக்கம், மரியாதை, சேவக மனப்பான்மை இவற்றை நாம் பயின்றே ஆகவேண்டும். குறைந்த பட்சம், இயற்கையின் முகத்திற்கெதிரான நமது பணிவற்ற நடவடிக்கைகளை இப்போதாவது நிறுத்துவோம். இயற்கைச் சக்திகளின் முன்பு நாம் பணிந்து வணங்கும் நேரம் வந்துவிட்டது; நமது அத்துமீறல்களுக்காக இயற்கையன்னையிடம் மன்னிப்பை வேண்டிக் கேட்கும் நேரம் வந்துவிட்டது. இயற்கையன்னைக்கு எதிரே நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் அவமரியாதைகளையும் தாங்கிக்கொள்வாள், பொறுத்துக்கொள்வாள், நம்மை மன்னிப்பாள் என்று இத்தனை காலம் நாம் அலட்சியமாய் இருந்த மெத்தனப்போக்கை உதறித் தள்ளும் நேரம் வந்துவிட்டது. இப்போது இயற்கை நம்மை எழுப்பிவிட்டு சுற்றிலும் பார்க்கும்படி கட்டளையிட்டுவிட்டது. மனித் குலத்தை உலுக்கி எழுப்புவதற்காகவே இயற்கை கோவிட்-19 இன் மூலம் ஓர் எச்சரிக்கை மணியாகப் பேரொலியை எழுப்பியிருக்கிறது.” என்கிறார் அம்மா.