பக்தை: அம்மா, எனக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களையும் வணங்கினேன். சிவனையும், தேவியையும், மற்ற பல மந்திரங்கள் மூலம் பல தெய்வங்களையும் வழிபட்டேன். ஆனால், அவற்றால் ஒரு நன்மையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அம்மா: மகளே, ஒரு மனிதன் தாகத்தால் வருந்தினான். அருகில் எங்கும் குடிநீர் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர், இந்த இடத்தில் தோண்டினால் விரைவில் நீர் கிடைக்கும் என்று கூறினார். உடனே அவன் அங்கு சிறிய குழி தோண்டினான். தண்ணீர் கிடைக்கவில்லை சிறிது தூரத்தில் மற்றொகு குழி தோண்டினான். தண்ணீர் இல்லை இவ்வாறு பல இடங்களில் முயற்சி செய்து பார்த்தும் பலனில்லை இறுதியில் அவன் தளர்ந்து விழுந்தான். அந்த வழியாக வந்த ஒருவர் அவனிடம் விழுந்து கிடப்பதன் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு அவன் “நான் தண்ணீருக்காகக் குழி தோண்டித் தோண்டித் தளர்ந்துவிட்டேன் முதலில் தாகம் தீர தண்ணீர் இல்லை என்ற துன்பம். இப்போதோ குழி வெட்டியதால் உடலின் சக்தியும் போக துன்பம் இருமடங்கானதுதான் மிச்சம்” என வருத்தத்துடன் கூறினான். வந்தவர், “நீ ஒரே இடத்தில் ஆழமாகத் தோண்டியிருந்தால் எளிதாகத் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், நீயோ பல இடங்களில் சிறிய சிறிய குழிகளைத் தோண்டியிருக்கிறாய். அதனால்தான் ஏமாற்றம் அடைய நேர்ந்தது” என்றார். மகளே, நீ பல தெய்வங்களை வழிபட்டதும் இதுபோல்தான். பலன் கிடைக்கவில்லை. எல்லா தெய்வங்களும் ஒன்றே என நீ நினைத்திருந்தால் தவறேதுமில்லை.மாறாக, வேறு வேறு வடிவங்கள் என வித்தியாசமாக நினைத்தது தான் தவறாகும். ஒருவன் ஒரு மூவாண்டன் (3 ஆண்டுகளில் பலனளிப்பது) மாஞ்செடியை நட்டான். அதற்குத் தேவையான உரமிட்டு நல்லமுறையில் வளர்த்தான். பூக்கவேண்டிய சமயம் வந்தபோது அந்த செடியை வேரோடு பிடுங்கிவிட்டு அந்த இடத்தில் வேறொரு செடியை நட்டான். மூன்று வருடங்கள் ஆக இரண்டு நாட்களே தேவை. அத்தனை பொறுமை அவனுக்கில்லை. எப்படிப் பலன் கிடைக்கும்? சமயம் வரும்வரை காத்திருக்கும் பொறுமை அந்த மனிதனைப் போலவே உனக்குமில்லை. பல இடங்களுக்குச் சென்று, பல மந்திரங்களை ஜபித்து, பல தெய்வங்களை வழிபட்டாய். அதனால் பலன் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி நீ இறைவனை வணங்கியது உலக சுகத்தினை அடைவதற்காகவேயன்றி இறைவனைக் காணவேண்டும் என்ற ஆசையால் அல்ல. உலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல. நீ தியானித்தது உனக்கு விருப்பமான பொருள்களையே அன்றி இறைவனை அல்ல. அதனால்தான் நீ பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தாய். ஒரு மந்திரம் ஜபித்தபோது பலன் கிடைக்கவில்லை என நினைத்து வேறொரு மந்திரம்; அதிலும் தோல்வியே என்றபோது மற்றொரு மந்திரம். என மாறி மாறி ஜபித்தாய்; இதனால் காலம் விரயமானதுதான் மிச்சம். நீ அரண்மனையிலுள்ள தங்கத்தைப் பெற ஆசைப்பட்டாய், ராஜாவை விரும்பவில்லை. ராஜாவிடம் அன்பு காட்டியிருந்தால் தங்கமும் கிடைத்திருக்கும், ராஜாவும் கிடைத்திருப்பார். அதுபோல் நீ இறைவனை மட்டும் நினைத்திருந்தால் எல்லா செல்வமும் உன்னைத் தேடி வந்திருக்கும். ஆனால், செல்வத்தை விரும்பிய நீ இறைவனை விரும்வில்லை. ஆசைகளைத் துறந்து அனைத்தையும் இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து சாதனை செய்திருந்தால் நீ இன்று மூவுலகிற்கும் அதிபதியாக ஆகியிருப்பாய். ஆனால், நீ ஆசைப்பட்டது செல்வத்தை அல்லவா? அதனால் துரியோதனனைப்போல் ஆனாய்.

துரியோதனன் குடிமக்களையும், நாட்டையும் விரும்பினான். பலன் அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் எல்லாவற்றையும் இழந்தனர். ஆனால், பாண்டவர்கள் பகவானின் நட்பை விரும்பினர். அந்த ஒரு நினைவு மட்டுமே அவர்கள் மனதில் நிறைந்திருந்தது. அதனால் அவர்களுக்கும் பகவானும் கிடைத்தார். நாடும் கிடைத்தது. அதனால் மகளே, நீ உலகப் பொருள்களிடமுள்ள ஆசைகளை விட்டுவிடு. இறைவனைப் பெற்றுவிட்டால் எல்லா செல்வமும் உன்னை வந்தடையும். எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பொறுமையோடு சாதனை செய். பலன் கிடைக்கும்; நிச்சயம் கிடைக்கும். சொத்து சுகங்களும் உண்டாகும். நிறைய மந்திரம் ஐபித்து விட்டு உடனே பலன் கிடைக்கவேண்டும் என்று நினைப்பது சரியல்ல அர்ப்பண மனப்பான்மையும் பொறுமையும் வேண்டும்.