பக்தை: அம்மா, சாதனை செய்வதால் மன அமைதி கிடைக்குமா ?

அம்மா: மகளே, சாதனை செய்வதால் மட்டும் மன அமைதி.கிடைப்பதில்லை. அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் சாதனையால் வரும் நன்மையை அனுபவிக்க முடியும்; அமைதியையும், நிம்மதியையும் பெற முடியும்.

கடவுளை வணங்குபவர்கள் எல்லோரும் நிம்மதியாகஇருக்கிறார்களா என்று சிலர் கேட்பதுண்டு. தனது லட்சியம் என்ன என்பதைப் பரிந்துகொண்டு வணங்கினால் அல்லவா தனது பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும், அவற்றை நீக்கி மனதூய்மை பெறவும் முடியும். சாஸ்திரங்களைப் புரிந்துகொண்டு, சத்சங்கம் கேட்டு அதன்படி வாழ்பவர்கள் சாதனை செய்தால்தான் பலன் கிடைக்கும்.

தனது தவத்திற்குத் தடையாக வந்த காரணத்தால் .பறவையைச் சுட்டெரித்த சன்னியாசியின் கதையைக் கேட்டதில்லையா? அந்த சன்னியாசி தவம் செய்தார். ஆனால், ஒரு நிமிடத்தில் கோபம்வந்துவிட்டது. சத்சங்கங்கள் கேட்காமல், அவற்றைப் புரிந்துகொள்ளாமல், ஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்.