சிவராத்திரி என்றவுடன் நாம், அது பகவான் சிவனின் இரவு என்றும், சிவனுக்கு வேண்டிய இரவு என்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் பகவான் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு இரவும் இல்லை பகலும் இல்லை. அவர் உறங்குவதும் இல்லை. எல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவ பகவான் ஆகும்.

சிவராத்திரி, விரதங்கள், விழாக்கள், ஆச்சார அனுஷ்டானங்கள் போன்றவை எல்லாம் நமக்கு வேண்டியேயன்றி, அது கடவுளுக்கு அல்ல. நாம் இதிலிருந்தெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய படிப்பினை என்னவெனில் “நீ உன்னை அறிவாயாக” எனும் செய்தியேயாகும்.

சிவன் என்றால் தியாகம் மற்றும் வைராக்கியத்தின் வடிவமாகும். நமக்கு நமது அகங்காரத்தின் பாரமே மிகப்பெரிய பாரமாகும். அந்த பாரத்தை நாம் விடும் பொழுது மட்டுமே சிவப்பதத்திற்கு நாம் உயர்வோம்.

நானே தியாகம் மற்றும் வைராக்கியத்தின் வடிவமான அந்த பரிபூரணமான சிவன் என்று அறிவதே சிவராத்திரி ஆகும்.

மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்பது மூன்று வெவ்வேறு சக்திகள் அல்ல. ஒரே ஒரு சக்தியின் மூன்று வடிவங்கள் ஆகும் மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி இம்மூன்றும் ஒரேயொரு மின்சாரத்தின் மூலமே இயங்குகிறது.ஆனாலும் மூன்றும் மூன்று வகையில் செயல்படுகிறது.

நம்முடைய ரிஷிகள் அனைவரும் ஈசாவாஸ்யம் இதம் சர்வம் என்று கூறியிருக்கின்றனர் இந்தப் பிரபஞ்சம் கடவுள் அணிந்திருக்கும் ஆடை ஆகும் அதில் வசிப்பதும் கடவுளே ஆகும் இவ்விதத்தில் காணும் பொழுது மட்டுமே கடவுளும் இந்த உலகமும் இரண்டல்ல ஒன்றே என்று புரியும். அதனால்தான் “வசுதைவ குடும்பகம்” “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்பதுபோன்ற மந்திரங்களும் உபதேசங்களும் பிரார்த்தனைகளும் ரிஷிகள் நமக்கு கூறியிருக்கின்றனர்.

பிப்ரவரி 21 2020 அமிர்தபுரி அம்மாவின் சிவராத்திரி உபதேசம்