மகான்களையும் ஆலயங்களிலுள்ள மூர்த்திகளையும் சென்று காண்பதைத் தரிசனம் என்கிறோம். அம்மாவை நாடி வருபவர்களுக்கு அவர் அளித்து வரும் தரிசனம் அலாதியான மகிமை மிக்கது. அம்பிகையின் தாய்மைப் பண்பின் திருவுருவாகத் திகழும் அம்மா, வருபவர் எவராக இருந்தாலும், எவ்விதமான பேதமும் இல்லாமல் அரவணைத்துத் தரிசனம் அளிக்கிறார். வந்தவர் ஏதாவது பிரச்னை அல்லது துயரத்தைப் பற்றிச் சொன்னால், அதைக் கேட்டு, ஆறுதல் கூறி, நல்ல வழியைக் காட்டி அருள்கிறார். இதனால் வந்தவரின் துன்பம் நீங்குகிறது; அவர் புத்துணர்ச்சியைப் பெறுகிறார். அதே சமயம், துன்பம் சிலருக்கு நீங்குவதில்லை. இதற்கு, அவர்கள் அதை அனுபவிப்பதன் மூலமாக, அவர்களுடைய தீவினைப் பயன் தீர்ந்து, ஆன்மிக முன்னேற்றம் பெறுவார்கள் என்பதை அம்மா உணர்வது தான் காரணமாகும். இத்தகையவர்களுக்குத் துன்பத்தைத் தாங்கும் மனவலிமையை அம்மா தந்தருள்கிறார்.

அம்மா தற்போது வெளிநாடுகளில்  யாத்திரை செய்யும் போது, ஒரு சில நிகழ்ச்சிகளில்  மட்டும்  அம்பிகையோடு ஐக்கியமாக இருக்கும் தமது ஆன்மிக நிலையை வெளிப்படுத்தி, தரிசனம் தருகிறார். இது தேவிபாவ தரிசனம் எனப் பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது.

பாவம் என்கிற வடமொழிச் சொல்லானது பேருணர்வு எனப் பொருள்படும். கோயில்களில் உள்ள மூர்த்திகளையோ, மகான்களையோ நாம் காண்பது தரிசனம் எனப்படும். பகவான் கண்ணனின் பேருணர்வை நாம், நமது பக்குவத்திற்கேற்ப ஓரளவாவது புரிந்து கொள்ளுமாறு அம்மா தந்து வந்தது கிருஷ்ணபாவ தரிசனமாகும். இது தேவிபாவ தரிசனத்திற்கும் பொருந்தும்.

பாவதரிசனத்தின் உட்பொருளையும், சிறப்பையும் பற்றிக் கேட்டபோது அம்மா,” இந்து மதத்தில் கூறப்படும் எல்லாத் தெய்வங்களும் ஒரே பரம்பொருளின் எண்ணற்ற மகிமைகளைப் பல்வேறு வடிவில் உணர்த்துகின்றனர். இவர்கள் அனைவரும் நமக்குள்ளே இருக்கிறார்கள். அனுபூதி பெற்று, தெய்விக நிலையில் சதா தோய்ந்திருப்பவரால், அவர் விரும்பிய மாத்திரத்தில், உலக நன்மைக்காக, எந்தத் தெய்வத்தின் மகிமையையும் வெளிப்படுத்த முடியும். அம்மா ஆரம்பகாலங்களில் கிருஷ்ண பாவதரிசனம் அளித்து வந்தேன். கிருஷ்ண பாவம் பரம்பொருளின் மேலான தூய மகிமையாகும். தேவிபாவம் குணம் குறியற்ற பிரம்மத்தின் கிரியாசக்தியாகும். தேவி, படைக்கும் ஆற்றல் நிறைந்த, அழிவில்லா உலக அன்னை ஆவார். இங்கே எல்லாப் பெயர்களும், வடிவங்களும் (நாம ரூபங்களும்) நமது மனதின் வெளிப்பாடுகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வக்கீல் கருப்புக் கோட்டும், காவல்துறையினர் சீருடையும் எதற்காக அணிகிறார்கள்? குறிப்பிட்டதொரு பணியின் சின்னமாகவும், காண்பவரின் மனதில் தக்கதொரு உணர்வை ஊட்டுவதாகவும் இத்தகைய உடைகள் உள்ளன. இதற்கு நிகராக,  தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் மனதில் இருக்கும் பக்தி உணர்வைப் பலப்படுத்துவதற்காக அம்மா தேவியின் தோற்றத்தில் தரிசனம் தருகிறேன். பாவதரிசனத்தின் போது அம்மா மாயையின் இரண்டு, மூன்று திரைகளை மட்டும் நீக்குகிறேன். இதனால் பக்தர்கள் பரம்பொருளை ஓரளவு உணர முடியும். மக்களுக்கிடையில் நம்பிக்கை வெவ்வேறு விதமாக இருக்கிறது. அவரவருக்குரிய வழியில் எப்படியாவது மக்கள் இறைவனை அணுக வேண்டும் என்பதே அம்மாவின் நோக்கம்.  பக்தர்கள் மெய்ப்பொருளை அடைவதற்குத் துணைபுரிய வேண்டும் என்பதே அம்மாவின் எண்ணமாகும். அம்மாவிடம் இருக்கும் அதே ஆத்மாதான் உங்கள் எல்லோரிடமும் இருக்கிறது. அந்த அகண்ட பரம்பொருள் உங்கள் உள்ளத்தில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. அதை அனுபூதியில் உணர்ந்தால் நீங்களும் அந்தப் பரம்பொருள் மயமாவீர்கள்” என்று தெளிவுபடுத்தினார்.

அம்மா இது வரை கடந்த 37 ஆண்டுகளாக சாதி, இனம், மதம்,மொழி வேறுபாடுகளின்றி சுமார் 3 கோடிக்கும் அதிகமான பேருக்குத்  தரிசனம் அளித்துள்ளார். அம்மாவின் தரிசனம் அவரது அளவற்ற கருணையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சில நாட்களில் சுமார் 22 மணி நேரம் கூடத்  தரிசனம் நீடித்ததுண்டு. உலகம் முழுவதையும் கவர்ந்து இழுத்து, அனைவரது கவனத்தையும் திசைதிருப்பி வருவது அம்மாவின் திவ்விய தரிசனமே எனலாம். அம்மா இவ்வாறு அன்புடன் அணைத்துத் தரிசனம் அளிப்பதால் அம்மா வெளிநாடுகளில் அரவணைக்கும் அருளாளர் (Hugging Saint) என்று புகழப்படுகிறார்.

அம்மா தரிசனம் அளிக்கும் வேளையில் பக்தர்களது வாழ்க்கைப் பிரச்னைகளிலும் ஆன்மிக சாதனைகளிலும் வழிகாட்டுகிறார். ஆசிரமத்தின் பல்வேறு அலுவல்களிலும் மற்றும் ஆசிரமவாசி களுக்கு அறிவுரை வழங்குவதிலும் ஈடுபடவேண்டி இருப்பதால் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் அமிர்தபுரியில் அம்மா தரிசனம் அளிப்பதில்லை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அம்மாவின் தலைமையில் நடைபெறும் ஞான யக்ஞங்கள், பஜனை, ஆத்மபூஜை, சத்சங்கம், தியானம்  போன்றவற்றை அடுத்து அம்மாவை நேரில் ஒவ்வொருவரும்    தனித்தனியாகத் தரிசிக்கலாம்.