அம்மா கேரளத்தின் கடற்கரையிலுள்ள பறயக்கடவு எனும் கிராமத்தில் சுகுணானந்தன்- தமயந்தி அவர்களின் மகளாக 27-09-1953 அன்று சிறிய மீனவக் குடும்பத்தில் அவதரித்தார். எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் நாம ரூபங்களால் ஆன இவ்வுலகுக்கு அப்பால் உன்னதமான பொருள் இருப்பதைப் பிறந்ததிலிருந்தே உணர்ந்திருப்பதாக அம்மா கூறியுள்ளார். அவர் குழந்தையாக இருந்தபோதே எல்லோர் மீதும் அன்பும் இரக்கமும் கொண்டிருந்தார். “இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் அம்மாவின் அன்பு இடைவிடாமல் பெருகிச் செல்கிறது. இது அம்மாவின் பிறவிக்குணமாகும் என்று அம்மா கூறுகிறார்.

அவருடைய சிறுவயது பற்றி் அம்மா கூறுவதாவது: குழந்தைப் பருவத்திலிருந்தே,“உலகில் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்? ஏன் பட்டினியால் வாடுகிறார்கள்? என அம்மா சிந்திப்பேன். இது மீனவர்கள் வாழும் கடலோர கிராமமாகும். மீனவர்களுக்கு சில நாட்களில் மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் சில சமயங்களில் பட்டினியால் வருந்துகிறார்கள். இந்நிலை சில தினங்கள் நீடிப்பதுண்டு.கிராம மக்களுடன் அம்மா நெருங்கிப் பழகுவேன். அவர்களது துன்பங்களையும் வாழ்வையும் பார்த்து உலகின் இயல்பைக் குறித்து அறிய வாய்ப்புக் கிடைத்தது.

“ வீட்டு வேலைகளை எல்லாம் அம்மா செய்தேன். வீட்டிலிருந்த பல ஆடு, மாடுகளுக்குத் தீவனம் கொடுப்பதும் அவற்றில் ஒன்றாகும். இதற்காகத் தினந்தோறும் சுமார் 30,40 வீடுகளுக்குச் சென்று கழுநீரைச் சேகரித்து வருவேன். சிலநாட்களில் இதற்காக 60 வீடுகளுக்குக்கூடச் சென்று வந்ததுண்டு. இந்த வீடுகளில் முதுமையாலும், ஏழ்மையாலும் நோயாலும் மக்கள் துன்புறுவதைக் கண்டேன். அம்மா அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுடைய நலனுக்காகப் பிரார்த்திப்பேன். நேரமிருந்தால் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று, வெந்நீரில் நீராட்டி, உணவளித்துத் தேவைப்பட்டால் வீட்டிலிருந்து அவர்களுக்குத் தேவையான உணவைக் கொண்டு கொடுப்பேன்.
“குழந்தைகள் சிறுவயதில் பெற்றோரைச் சார்ந்து இருக்கிறார்கள். எனவே அப்பொழுது அவர்கள் பெற்றோர் நோயின்றி நீண்ட காலம் வாழ வேண்டு மென்று பிரார்த்திக்கிறார்கள். ஆனால் இதே குழந்தைகள் வளர்ந்து வாலிப வயதான பிறகு அதே பெற்றோரைச் சுமையாகக் கருதுகிறார்கள். ஏனெனில் முதுமையால் பெற்றோர் தளர்ந்து விடுகின்றனர். ஆகையால் அவர்கள்,” நான் ஏன் பெற்றோருக்காக இந்த வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும்” என்று நினைக்கிறார்கள்.

பெற்றோர் நெடிது வாழ வேண்டுமென்று பிரார்த்தித்த குழந்தைகளுக்கு இப்போது அவர்களுக்கு உணவளிப் பதும் அவர்களுடைய துணிகளைத் துவைப்பதும் அவர்களைப் பராமரிப்பதும் சுமையாகி விடுகின்றன. இதைக் கவனித்த அம்மா, “இந்த உலகில் ஏன் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன? ஏன் உண்மையான அன்பு இல்லை? மக்களது துன்பங்களுக்கு நிஜமான காரணம் என்ன?” என ஆழ்ந்து சிந்திப்பேன்.

“சிறு குழந்தையாக இருந்தபோதே அம்மாவுக்கு, இறைவன், அதாவது ஆத்மா தான்மெய்ப்பொருள் என்பதும், இவ்வுலகம் நிலையான மெய்ப்பொருள் அல்ல என்பதும் தெரியும். ஆகவே, அம்மா நீண்ட நேரம் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி இருப்பேன். இதை அம்மாவின் பெற்றோராலும் உறவினர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அறியாமையினால் அவர்கள் அம்மாவைக் கண்டித்தனர். அம்மா ஆத்ம சாதனைகளில் ஈடுபடுவதை எதிர்த்தனர்.

ஆனால் குடும்பத்தினரின் எதிர்ப்புகளையும், தண்டனைகளையும் பொருட்படுத்தாமல், சாதனையில் மூழ்கி இருந்தார். இக்காலத்தில் பல மாதங்களுக்கு அம்மா வெட்டவெளியில் உணவும் உறக்கமும் இன்றி வாழ நேர்ந்தது. இச்சமயத்தில் சில பறவைகளும் விலங்குகளும் அம்மாவுக்கு உணவளி்த்தன; அவர் ஆழ்ந்த சமாதியில் அதிக நேரம் மூழ்கிவிட்டால் உலக உணர்வை ஊட்டின.

அம்மா கூறியதாவது: எல்லா ,துன்ப துயரங்களுக்கும் மூலகாரணம் எது என்பதை அம்மா ஆழ்ந்து சிந்தித்தேன். அவரவரது வி்னைப்பயன்களே இதற்குக் காரணம் என்பதை அறிந்தேன். இதில் அம்மாவுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. எனவே தொடர்ந்து இந்த விசாரத்தில் ஈடுபட்டேன். அதன் பலனாக,” மக்களது துன்ப துயரங்களுக்கு அவரவரது கர்மபலன்கள் காரணமானால், அவற்றைத் துடைப்பது உனது தர்மம் அல்லவா?” என்ற வி்டை கிடைத்தது. ஒருவர் பெரிய பள்ளத்தில் விழுந்து தவிக்கிறார். அதைப் பார்த்துவிட்டு, “அது அவரது கர்மபலன் என்று பேசுவது கூடாது. அவரைக் காப்பாற்றுவது நமது தர்மமாகும்.

“அம்மா படைப்பு முழுவதுடன் ஒன்றிவிட்டதை அனுபூதியில் உணர்ந்தேன். இதனால் அம்மாவின் வாழ்வின் நோக்கம் துன்பத்தில் வாடும் மனித குலத்திற்குச் சேவை செய்வதே என்பதையும் புரிந்து கொண்டேன். இதன் பின்னர் இந்த ஆசிரமத்தை நிறுவி , எல்லோரையும் அரவணைத்து, மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தையும்,அன்பையும் கருணையும் புகட்டிவருகிறேன்.”

இன்றும் அம்மா வருடத்தில் பல மாதங்கள் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்து வருகிறார். தம்மிடம் வருபவரை எல்லாம் அரவணைத்து, ஆறுதல் கூறி அவர்களது துன்பத்தைத் துடைத்து வருகிறார். அம்மாவின் ஆசிரமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாரதத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆசிரமத்திற்கு வருகிறார்கள். ஆசிரமவாசிகளும், பக்தர்களும் அம்மா வாழ்ந்து வரும் முறையைக் கண்டு, உலகிற்கு சேவை செய்ய தங்களது வாழ்வை அர்ப்பணிக்கிறார்கள். அம்மாவைப் பின்பற்றி, உற்சாகத்துடன் அவர்கள் பலவிதமான சேவைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த சேவைக்ளுக்காக உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் நிதியுதவி செய்து வருகிறார்கள். சமீபத்தில் அம்மா நம் நாட்டில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி பகுதிகளிலும், அந்தமான் நிகோபார் தீவுகளிலும், இலங்கையிலும் சுனாமியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாகவும் நிரந்தரமான உதவியாகவும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் உதவியுள்ளார்.

அம்மா, “அன்பே உலகின் காயங்களைக் குணப்படுத்தும் ஒரே மருந்தாகும். இவ்வுலகில் அன்புதான் அனைத்தையும் இணைக்கிறது. இவ்வுணர்வு நம்முள்ளே உதயமாகும்போது எல்லா வேறுபாடுகளும் மறைந்துவிடும். நிரந்தரமான அமைதி மட்டுமே ஆட்சி புரியும்“ என்கிறார்.