பக்தை : அம்மா, வாழ்வில் அமைதியும், நிம்மதியும் இல்லை துன்பமே நிறைந்துள்ளது. இதனால் இப்படி ஒரு வாழ்வு எதற்கு எனத்தோன்றுகிறது.

அம்மா: மகளே, உன்னிடமுள்ள அகங்காரத்தான் உனது துன்பத்திற்குக் காரணம். அமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறார். ஆனால், அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் அதை அறிய முடியும். குடையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு இனி வெயிலில் ஒரு அடி வைக்கக்கூட என்னால் முடியாது, நான் தளர்ந்துபோய்விட்டேன் என்று கூறுவது போலிருக்கிறது உனது பேச்சு. குடையை விரித்துப் பிடித்திருந்தால் வெயிலில் கஷ்டப்பட நேர்ந்திருக்காது. ஆன்மிக குணங்கள் உன்னிடம் இருக்கின்றன. அகம்பாவத்தை நீக்கி அங்கு இறைவனை எழுந்தருளச் செய்தால்போதும்; அமைதியையும், நிம்மதியையும் தேடி எங்கும் அலையவேண்டாம். மகளே,சரியான இலட்சியமும்,தத்துவமுமே கடவுள்.ஆனால், அகம்பாவமுள்ள மனதில் இலட்சியத்திற்கு இடமில்லை .எனவே, அகம்பாவத்தைப் பணிவின் மூலம் நீக்க வேண்டும். அப்போது நம்மிடமுள்ள சக்தியால் நமக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

தங்கத்தைத் தீயில் இடுவதன் விளைவாக விதத்தில் நாம் விரும்புகின்ற வடிவத்தில் அதை வார்த்தெடுக்க முடிகிறது.இரும்பைத் தீவில் காய்ச்சுவதன்மூலம் வேண்டிய விதத்தில் அதை  வடிவமைக்க இயலுகிறது. அதேபோல் நம்முடைய அகங்காரத்தை கடவுளாகின்ற அக்கினியில் ஹோமித்துவிட்டால் நம்முடைய உண்மையான சொரூபமாக ஆகிவிட இயலும்.

அம்மாவின் அருளுரை