அம்மா- சத்குரு ஸ்ரீ மாதாஅமிர்தானந்த மயிதேவி அவர்கள் அவதரித்த புண்ணிய பூமியே அமிர்தபுரி ஆகும். இது உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடையே அமைந்த ஒரு தீவுப்பகுதி ஆகும். இதுவே மாதா அமிர்தானந்தமயி மடத்தின் தலைமை இடமாகும். இது அம்மா குழந்தையாக இருந்த போது அந்த பிஞ்சுத் திருவடிகள் பதிந்த புனித இடமாகும். அம்மாவைக் குறித்து காலத்தால் அழியாத ஆயிரம் கதைகள் சொல்லும் இடமாகும். அம்மாவின் பிறந்த வீடே ஆசிரமமாக உருவெடுத்தது பாரத ஆன்மிக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகும். அதுவும் அவர்கள் வாழும் காலத்தில்.
1978 முதல் அம்மாவின் சீடர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர்.அம்மா முதன் முதலில் தரிசனம் கொடுக்கத் தொடங்கிய வீட்டுத் தொழுவமே ஆசிரமத்தின் முதல் கட்டிடமாகும். 1981 ல் ஆசிரமம் முறையாகப் பதிவு செய்யப்பட்டது. இப்போது ஆசிரமத்தில் சுமார் 3000க்கு மேற்பட்ட ஆசிரமவாசிகள் வசித்து வருகின்றனர். இதில் பிரம்மச்சாரிகள், பிரம்மச்சாரிணிகள் மட்டுமல்லாது இல்லறத்தாரும் மற்றும் வெளிநாட்டவரும் அடங்குவர். ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடுகள் இவை எதுவும் இன்றி எல்லோரும் அம்மாவின் குழந்தைகளாக ஒன்று கூடி வாழும் இடமாகும்.
இங்கு அதிகாலை லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையில் தொடங்கும். அதன்பின் சாஸ்திர வகுப்பு, ஹடயோகம்,ஜபம், தியானம், பஜனை, ஆன்மிகக் கலந்துரையாடல், ஆன்மிகநூல் வாசித்தல், சேவைசெய்தல் போன்றவையே அன்றாட நிகழ்வுகளாகும்.
அம்மாவின் மனிதநேயத் தொண்டுகள் ( சேவைத்திட்டங்கள் ) அனைத்தும் இங்கே இருந்துதான் அம்மாவின் நேரடி மேற்பார்வையில் தொடங்கப்படுகின்றன. அம்மாவின் சாந்நித்யம் தான் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் ஆதாரத் தூணாகும். அம்மாவின் ஆன்மிகப் பயணங்கள் இல்லாத போது அமிர்தபுரியில் அம்மாவின் தரிசனம் நடைபெறும். ஆசிரமத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் அம்மாவின் சாந்நித்யத்துடன் நடைபெறும் தியானம், மற்றும் சாதகர்களின் கேள்விகளுக்கு அம்மாவின் பதில்கள் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். ஆசிரமத்தில் குருபூர்ணிமா, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, புத்தாண்டு போன்ற எல்லா ஆன்மிக விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.