கேள்வி: அம்மா, மனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா?

அம்மா: ஆன்மிக சிந்தனையாக இருந்தால் சக்தி கிடைக்கும். உறுதியான மனதை நாம் பெறலாம். இறைவன் தியாகம், அன்பு கருணை இவற்றின் உறைவிடமாவார். இறைவனைப்பற்றி நினைக்கும் அளவுக்கு நம்மிடமும் அந்த நல்ல குணங்கள் வளருகின்றன. மனம் விரிவடைகிறது. ஆனால், உலகியல் விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் மனம் உலகப் பொருள்களால் நிறைகிறது. தொடர்ந்து பலப்பல சிந்தனைகள் மனதில் மாறிமாறித் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கேற்பு பலன்கள் செயல்படுகின்றன. தீய குணங்கள் அதிகரிக்கின்றன. மனம் குறுகியதாகிறது. நாம் விரும்பியது கிடைக்காத போது மனம் தளர்கிறது. கோபம் வருகிறது. சக்தி நஷ்டமாகிறது. டார்ச் லைட்டை ஒவ்வொருமுறை போட்டு அணைக்கும் போதும் அதன் சக்தி குறைகிறது. அதுபோல் பொருள்களின் மீதுள்ள விருப்பத்தை அதிகரிக்கச்செய்யும் விஷயங்களைப் பற்றிப்பேகம் போது நம் மனம் பலவீனமடைகிறது. ஆன்மீக விஷயங்களைப் பேசுவதும், சிந்திப்பதும் பாட்டரியை சார்ஜ் செய்வது போன்றது. இதனால் சக்தி அதிகரிக்கும்.