கொரோனா வைரஸ் பற்றி அம்மாவின்  அறிவுரை

அம்மாவின் குழந்தைகள் கொரானா வைரஸ் பற்றிய அச்சத்தில் வாழ்கிறீர்கள் என்பதை அம்மா அறிவேன். அமமா உங்கள் எல்லாரையும் பற்றி நினைக்கிறேன்; உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கவேண்டிய நேரம் இது. இந்த சவாலை துணிச்சலோடும், சுய கட்டுப்பாடோடும் ஒற்றுமையாகவும் எதிர்கொள்ளவேண்டிய நேரம் இது. நீங்களெல்லாம் அச்சத்துடன் இருக்கிறீர்கள் என்று அம்மாவுக்குத் தெரிகிறதென்றாலும், அச்சம் எவ்விதத்திலும் நமக்கு உதவப் போவதில்லை.  வேண்டியது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் மட்டுமே. இப்போது துணிச்சல் தான் அத்தியாவசியம். துணிச்சல் இருந்தால் எதையுமே நாம் வெற்றிகொள்ள முடியும். அதனால் பயத்தை விட்டொழித்து துணிச்சலை வரவழைத்துக்கொள்ளுங்கள்.  இந்த வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே.  தைரியமே நம் மனதின் எதிர்-வைரஸ்.  நீங்கள் தைரிய லட்சுமியை நட்பாக்கிக்கொண்டால், எந்தச் சவாலையும் வெல்லும் துணிச்சலையும் பலத்தையும் பெறுவீர்கள்.

அரசாங்கமும், சட்ட ஒழுங்கு நிர்வாகமும் தந்துள்ள எல்லா அறிவுறைகளையும் கட்டுப்பாடுகளையும் என் குழந்தைகள் எல்லாரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயம் தீவிரமாக உள்ளம் உருகப் பிரார்த்தனையையும் செய்யுங்கள். நமது பாட்டிமார்கள் சொல்வார்கள் அல்லவா, “மருந்தையும் குடியுங்கள், மந்திரத்தையும் சொல்லுங்கள்” என்று? அது போல, இந்தச் சூழலில் நபது சிரத்தையான முயற்சிகளோடு கூடவே கடவுளின் அருளும் மிக அவசியம்.  ஒரு போர்க்களத்தில் போராடும் வீரன் எத்தனை சிரத்தையுடனும் கவனத்துடனும் இருப்பானோ அதுபோன்ற மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனும் மேற்கொள்ளவேண்டும். குழந்தைகளே,  இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களை இழந்த குடும்பங்களுக்கு மன அமைதி கிட்டவும் பிரார்த்ததை செய்யுங்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் 2020இல் இவ்வுலகம் சந்திக்கவிருக்கும் ஓர் பேரழிவினைப் பற்றி அம்மா உள்ளுணர்வில் கண்டேன். இதன் பாதிப்பைத் தணிப்பதற்கென, இரண்டு வருடங்களுக்கு முன் அம்மா ‘வெள்ளை மலர்ப்பொழிவு தியானத்தை’  உலக அமைதிக்காகவும், இறையருளைப் பிரார்ததிப்பதற்காகவும் உருவாக்கினேன்.  வரும் ஆபத்திலிருந்து முற்றிலும் தப்பிக்க இயலாது, ஒரளவேனும் அதன் தாக்குதலை அனுபவித்துத் தான் ஆகவேண்டும் என்பதும் அத்  தியானத்தின் சூசகமான கருத்து. உலக நன்மைக்காக, அம்மா இந்த தியான முறையை விளக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இதனை அம்மாவின் குழந்தைகளிடையே பரவலாக்கியும் வந்தேன். குழந்தைகளே, இந்த தியான முறையை நீங்களெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு முறையோ இரு முறையோ கடைப்பிடித்து முழு உலகிற்கும் நலன் பேணவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரபஞ்சத்தில் எல்லாமே அலைகள் போன்றும், அதிர்வுகளாகவுமே செயல்படுகின்றன. சென்ற நூற்றாண்டில் பிரஞ்சுக்காரர்கள் ‘கன்கார்டு’ எனும் ஒலிவேகத்தைக் கடந்த வேகத்தில் பயணிக்கும் விமானத்தைக் கண்டு பிடித்தனர். அது உண்டாக்கும்  ‘சோனிக் பூம்’ எனப்படும் ஒலி அலை, கட்டடங்களையே அதிரச்செய்தும் உலுக்கியும் சேதத்தை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்தது. அதே போல செவிக்கினிய ஓர் பாட்டும் காற்றில் ஒலியலைகளாகவும் அதிர்வுகளாகவும் பரவுகிறது. இப்படி எல்லாமே அலைகளாகவும் அதிர்வுகளாகவுமே உள்ளன. கோபத்தினால் உண்டாகும் அதிர்வுகள் ஒரு விதம்; அது, ஒரு தாய் தன் குழந்தைக் கொஞ்சும் அதிர்வுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அந்தத் தாயன்பும் கூடக் காதல் எனும் உணர்வு உண்டாக்கும் அதிர்வுகளிலிருந்தும்,  காமம் எனும் உணர்வு உண்டாக்கும் அதிர்வுகளிருந்தும் வேறுபட்டது. அதே போல, நமது பிரார்த்தனை எனும் செயல் உண்டாக்கும் அதிர்வுகள் மூலமும், கவனத்துடன் செய்யப்படும் செயல்பாடுகள் மூலமும் நம்மால் வைரஸையும் தடுக்க முடியும்.  தூய சங்கல்பத்தோடு கூடிய பிரார்த்தனைக்கு அத்தகைய சக்தி உண்டு.
படைப்பிலுள்ள எல்லாவற்றிலும் ஓர் தாள லயம் உண்டு. அதில் பூரணப் பிரபஞ்சத்துக்கும் அதில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இடையே மறுக்க முடியாத உறவு உண்டு. இந்தப் பிரபஞ்சமே ஒன்றோடு ஒன்றோடு பின்னிப்பிணைந்த ஓர் மாபெரும் வலை போன்றது. ஒரு வலையின் நான்கு மூலைகளை நான்கு பேர் பிடித்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் ஒரு மூலையில் அசைவை உண்டாக்கினால், அது வலையின் எல்லாப் பகுதிகளிலும் உணரப் படும் அல்லவா? அதே போல, நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் நம் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் அதிர்வுகளை ஏற்படுத்தத்தான் செய்கின்றன — நாம் தனி மனிதராய்ச் செய்தாலும் சரி, இல்லை ஓர் குழுவாய்ச் செய்தாலும் சரி. அதனால் தான் அம்மா அடிக்கடி சொல்கிறேன், ‘நாம் எவரும் தனித்தனித் தீவு அல்ல; நாமெல்லாம் ஒரு சங்கிலியின் பல கண்ணிகள் போல’ என்று. அதனால் ‘அடுத்தவர்கள் மாறட்டும் நானும் மாறுகிறேன்’ என்று நீங்கள் இருக்காதீர்கள். அடுத்தவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, நீங்கள் செய்யுங்கள்; உங்கள் உள்ளில் நீங்கள் உண்டாக்கும் மாற்றத்திலிருந்து வெளியுலகிலும் மாற்றம் உண்டாகும்.

ஒரு அடுக்கத்தின் பத்தாவது மாடியில் வசிக்கும் ஒருவர், தரை தளத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் தீப்பிடிப்பதைக் காண்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கீழே வசிப்பவர் உதவி கேட்டுக் கூக்குரல் எழுப்புவது இவருக்குக் காதில் விழுகிறது. இவர், “தரைத் தளத்தில் தானே நெருப்புப் பிடித்திருக்கிறது? அது உங்கள் பிரச்சனை; நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும்?” என்று இருந்தாரேயானால் அது முற்றிலும் முட்டாள்த்தனமானது. தரை நிலையில் பிடித்த தீ கண்டிப்பாக மேல் தளங்களுக்குப்  பரவிவிடும். அதே போல, வேறொருவரின் இன்றைய பிரச்சனை நமக்கே நாளைக்கு வரும்.

இதே போலத்தான் சீனாவில் இந்த கொரானா வைரஸ் தலையெடுத்த போது, நாமெல்லாமே ‘இது சைனாவின் பிரச்சனை; நமது பிரச்சனை அல்ல’ என்று நினைத்திருந்தோம்! கடைசியில் இது நமது பிரச்சனையாகவும் இப்போது ஆகிவிட்டதல்லவா?  அவர்கள் ஏன் இந்த நோயைக் கட்டுப்படுத்தவில்லை என்பது கேள்வியல்ல; நாம் எப்படி இதனை சமாளிக்கப் போகிறோம் என்பது தான் நம்முன் உள்ள கேள்வி. நாம் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும்,விடாமுயற்சியுடனும்  நடந்துகொண்டால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதோடு, பிறருக்குப் பரவாமலும் தடுத்துக்கொள்ள முடியும். 
என் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும்? நாம் விழுந்து காலை உடைத்துக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நாம் அறைக்குள்ளேயே  இரண்டு மாதம் முதல் ஆறு மாத காலம் வரையில் முடங்கித்தானே இருப்போம்? முறிந்த எலும்பு சேர்ந்து, கால் முற்றிலும் குணமாவதற்கு அத்தனை கால அளவு அவசியமாதலால், அதனைப் பெரும் சுமையாகக் கருதமாட்டோமல்லவா? அதேபோல, கொரோனா வைரஸிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் நம்மைத் தற்காத்துக்கொள்ள நம்மைத் தனிமைப் படுத்திக்கொள்தல், தூய்மை பரிபாலித்தல் போன்ற நியமங்களை மேற்கொண்டே ஆகவேண்டும்.  

இந்த வைரஸால் பீடிக்கப் பட்டவர்கள் அச்சப்படக்கூடாது, தனிமையை கண்டிப்பாகக் கடைபிடித்து அடுத்தவர்களுக்குப் பரவிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல், பாதிப்பின் முன் அறிகுறிகளை உணர்ந்தால் பொறுப்பான அலுவலர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து உதவியை நாடவேண்டும்.

அமிர்தபுரி ஆசிரமத்தில் தற்போது சுமார் 3000 பேர் வசிக்கிறார்கள். இந்தியர்களைத் தவிர பிற தேசத்தும் மக்களும் இங்கே வசிக்கிறார்கள்.  ஆசிரமத்தில் அரசாங்கம் விதித்துள்ள நியமங்களைப் பொறுப்புடன் கடைபிடித்து வருகிறோம்.  வெளியாட்களை உள்ளே அனுமதிப்பதில்லை. இங்கு வசிப்பவர்கள் ஒரு வேளை வெளியூர் செல்ல நேர்ந்தால் பல நாட்களுக்கு அவர்களைத் திரும்பி உள்ளே வர அனுமதிப்பதில்லை.  இவையெல்லாம் அரசாங்கம் விதித்த நியமங்கள்; அவற்றைக் கடைப் பிடித்து வருகிறோம். இங்குள்ள 3000 பேர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. அதனால் தான் சட்டதிட்டங்களைப் பரிபாலிக்கிறோம்.

இந்த சமயத்தில் அம்மா, ஆசிரமத்தை விட்டுப் போகாமல் உள்ளேயே வசிக்கும் ஆசிரமவாசிகளைத் நேரிட்டுச் சந்திக்கிறேன். இது வருடத்துக்கொருமுறை நிகழும் ஓர் வழக்கமான சந்திப்பு ஆகும். இந்த சமயத்தில் தான் ஆசிரமவாசிகளுக்கு அம்மாவைத் தனிமையில்  சந்தித்துத் தம் பிரச்சனைகளை அம்மாவிடம் நேரில் பகிரும் வாய்ப்பு கிடைக்கிறது.  வருடா வருடம் சுமார் 25 நாட்கள் அம்மா இதற்கெனவே ஒதுக்குகிறேன். அரசாங்க நியமங்களை அனுசரித்து,  அம்மா தினசரி தியானத்திற்கும் பஜனைக்கும் என ஒரு முறை வெளியே வருகிறேன். (இப்போது இதுவும் நிறுத்தப்பட்டு விட்டது). மற்ற நேரங்களை ஆசிரம வாசிகளின் சந்திப்புக்கும் அவர்கள் பிரச்சனைகளைக் கேட்பதற்கும் ஒதுக்குகிறேன்.

நமது மத்திய அரசும், கேரள மாநில அரசும் மிகச் சிறப்பான விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையுடனும் இந்த நோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனால்தான் இந்தியாவில் இந்த அளவாவது இந்த நோய்ப் பரவலலை கட்டுக்குள் வைக்க முடிந்திருக்கிறது. நாம் மிகுந்த கவனத்துடனும் முன்னெச்செரிக்கையுடனும் கூடவே பிராத்தனைகளுடனும் இந்த நோய் பரவாமல் கட்டுக்குள் வரச் செயல்படுவோம். நமது பாதைக்கு ஒளி காட்டுபவர்களும் அல்லது இருள் உண்டாக்குபவர்களும் நாமே. நமது பாதையில் முள்ளாகவோ அன்றி மலராகவோ இருப்பதும் நாமே. 
மனித முயற்சிக்கு எப்போதும் ஓர் எல்லை உண்டு. நாம் சாலையில் எத்தனை கவனமாக வண்டி ஓட்டிச் சென்றாலும் வேறு ஒரு ஓட்டுனர் கவனக்குறைவாய்த் தம் வண்டியை ஓட்டி நம் மீது இடித்து விபத்து உண்டாக்கலாம். எந்த செயலும் தக்க பலனை நல்க இறையருள் எனும் அம்சம் அவசியம். முதலில் வேண்டியது சரியான முயற்சி. ஆனால் வெற்றி பெற அருள் இன்றியமையாதது. அந்த அருள் வர, பிரார்த்தனை அவசியம்.
தற்போதுள்ள இந்தக் கணத்தில் தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை என் குழந்தைகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து விடும் மூச்சு கூட நம் வசத்தில் இல்லை.  நாம் நிகழ்காலத்தை  எவ்வளவு நன்றாய் உபயோகிக்கிறோம் என்பதே  நம் வாழ்வின் நீளத்தைத்  தீர்மானிக்கிறது. காரணம் அதில் தான் நம் ஜீவன் நிலை கொண்டுள்ளது. என் குழந்தைகள் தம்மை அறிதல் வேண்டும் என்றே அம்மா எப்போதும் சொல்லி வருகிறேன்.  நீங்கள் உங்களை அறிந்து கொள்ளுங்கள்; விழிப்புடனும், உற்சாகத்துடனும், அமைதியுடனும் உலகத்திற்காகப் பிரார்த்தியுங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்கள் அறையில் சிறிது நேரம் அமர்ந்து,   “ஓம் லோகா சமஸ்தா சுகினோ பவந்து” எனும் மந்திரத்தை ஜபியுங்கள். இந்த கடினமான கால கட்டத்தில் செய்யும் ஓர் நல்ல பழக்கவழக்கம் ஆகும் அது.

   “ஓம் லோகா சமஸ்தா சுகினோ பவந்து; ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி”