இந்த உலகமே என்னவோ தனக்காக மட்டும்தான் என்கிற தவறான கண்ணோட்டத்தில் இத்தனை காலம் உலா வந்துகொண்டிருந்தான் மனிதன். அந்த மனப்பாங்கிலேயே பற்பல நூற்றாண்டுகளாய் மனித இனம் இயற்கையையும், அவளது செல்வங்களையும் அவளது பற்பல பிற ஜீவராசிகளையும் தமது சுயநலத்துக்காகச் சுரண்டி அழித்துக்கொண்டே வந்திருக்கிறது. தான் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையையே ஒருவன் வெட்டுவதுபோல ஓர் காரியத்தை செய்து வந்திருக்கிறோம் என்று நாம் உணரவே இல்லை. இப்போது பூமியின் நிலப்பரப்பில் சுமார் 30%தான் காடுகள் எஞ்சியிருக்கின்றன. நாம் இதே போக்கில் போய்க்கொண்டிருந்தால் இன்னும் சில வருடங்களில் பூமியில் உள்ள கடைசி மரமும் வெட்டப்பட்டு காணாது போய்விடும்!
கடலின் நிலைமையும் கிட்டத்தட்ட இதே கதைதான். கடல் வாழ் சிறிய உயிரினங்களைக் கொன்று அழிப்பது ஷார்க்குகளோ திமிங்கலங்களோ அல்ல; மனிதன் உண்டாக்கிய பிளாஸ்டிக் கழிவுகள் தாம்! வளி மண்டல ஆகாயம், மனிதன் உண்டாக்கிய தொழிற்சாலைகள் வெளிவிடும் புகைகள், வாயுக் கழிவுகளால் அசுத்தப் பட்டு இருளோடிக்கொண்டே இருப்பதும் தெரிந்ததே. வளி மண்டலத்துக்கு அப்பால் உள்ள ஆகாயம் கூட இப்போது சுத்தமாய் இல்லை; மனிதன் அனுப்பிய செயற்கைக் கோள்களின் உதிரிகள், வேலை செய்யாது காலம் கடந்து போன பழைய செயற்கைக் கோள்கள் இவற்றால் மாசு பட்டிருக்கிறது.
பல ஆறுகளின் தண்ணீரிலும் மனிதர்களும் தொழிற்சாலைகளும் வெளியிட்ட கழிவு நீர் கலந்து மாசுற்று ஓடிக்கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களோ விளைச்சலைக் கூட்ட என்று மனிதன் இட்ட செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால் மாசுற்றும், வீரியமிழந்தும் நலிவுற்றுக்கொண்டிருக்கின்றன. மாமிசத்துக்காகவே வளர்க்கப்படும் மிருகங்களை அதி வேகமாகக் கொழுக்க வைக்க ஹார்மோன் ஊசிகளைக் குத்தி, அந்த மாமிசங்களும் மாசுற்று இருப்பதால் அவற்றை உண்ணும் மனிதன் பல்வேறு நோய்களால் பாதிக்கப் படுகிறான். இப்படியாக, மனிதனுக்கு இயற்கையாய் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பெரிதும் பாதிக்கப் பட்டுவிட்டது. இயற்கைக்கும் அதே நிலை தான். அதனால் தான் மனித இனம் வெகு எளிதாகப் புதிய புதிய நோய்களால் தாக்கப்பட்டு அவற்றோடு போராடி வெல்லும் சக்தியை இழந்து வருகிறான்.
முழு உலகத்தையுமே வெறும் வியாபாரத் தலமாகக் காணும் கண்ணோட்டம் நமக்கு வந்தாயிற்று. அதனால், எந்த ஒரு பொருளாதாரச் செயல்பாடோ, வியாபாரமோ கட்டுக்கடங்காத வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வந்துவிட்டது. ஆனால் அப்படிப்பட்ட ஓர் வளர்ச்சி நன்மை பயக்கும் வளர்ச்சிதான் என்று சொல்ல முடியாது. உடம்பில் புற்று நோய் வந்தால் அந்த புற்று நோய் செல்கள் கட்டுக்கடங்காது வளர்ந்து கடைசியில் மனிதனின் உயிரையே குடித்துவிடுகின்றன
. இப்போது நாம் “இன்னும் எடு, எடு, ” என்றே சதா செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஆளுக்கு ஒரு கார் என்று ஆகிவிட்டது. நாலு பேர் உள்ள வீட்டில் எட்டுக் கார்கள் உள்ள ஆடம்பரங்களையும் நாம் காண்கிறோம். வேகம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. 10 மணி நேரம் சாலையில் பயணிப்பதற்கு பதில் 1 மணி நேரத்தில் விமானப் பயணத்தில் போய்விடலாம் எங்கிற மனப்பாங்கு கூடிவிட்டது.
இப்படி வாழ்க்கையே அதி வேகமாகிவிட்டதாலோ என்னவோ, இப்போதெல்லாம் சாவும் அதி வேகமாக வர ஆரம்பித்து விட்டது!
மக்கள் தொகை ஒரு பக்கம் பெருகப் பெருக, அத்தனை பேருக்கும் பசிப்பிணியும் அதனால் சாவும் வராது உணவு தர வேண்டும் என்று வரும்போது, மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக உணவு உற்பத்திப் பெருக்கமும் மற்ற பல புதிய கண்டுபிடிப்புகளும் வந்தன. காய் கறி பழங்கள் எல்லாம் பெரிது பெரிதாய்க் காய்க்கும் விதத்தில் கண்டுபிடிப்புகள். தக்காளி, மா போன்ற செடிகளும் மரங்களும் இயற்கைக்கு மாறாக மூன்றே மாதங்களில் பூப்பூக்கும் விதத்தில் கண்டு பிடிப்புகள் என்றெல்லாம் வந்தது பட்டினிச் சாவுகள் வராமல் பார்த்துக்கொள்ளவே. அதைப் போலவே மாமிச உணவுகள் கூடுதல் கிடைப்பதற்காக, மிருகங்கள் விரைவில் கொழுத்து வளர்வதற்கான மருந்துகள், ஹார்மோன்களின் கண்டு பிடிப்புகள்.
ஆனால் இவற்றின் பின் விளைவாக, மனிதன் உண்ணும் உணவில் நச்சுத் தன்மை கூடிக் கூடிக்கொண்டே போகும் அவலம் வந்துவிட்டது. மனிதனின் தேவைக்காக மரங்கள் மிக அதிக அளவில் வெட்டப்பட்டுக்கொண்டே வருவதால் காற்றில் மாசு கூடிக்கொண்டே போகும் அவலம். செயற்கை உரங்களால் நிலத்தின் இயற்கை சக்தி நஷ்டப் பட்டுக்கொண்டே போகும் அவலம். அதனால் எத்தனை உரமிட்டாலும் போதவில்லை என்கிற நிலை. தொழிற்சாலைகள் வெளியிடும் புகையினால் மாசுபட்டிருக்கும் காற்றை நாம் சுவாசிப்பதால் வரும் நோய்கள். ஆற்று நீர் மாசு பட்டிருப்பதால், அவற்றைக் குடி நீராக மாற்றுகையில் கூடுதலாய் குளோரின் சேர்த்து வினியோகிக்கிறார்கள். அந்தக் குளோரினும் உடம்புக்குப் பிரச்சனை ஆகிறது. அதிகப்படி குளோரின் வயிற்றில் அமிலத்தைக் கூட்டுகிறது; புற்று நோய் வருவதற்கு ஒரு காரணி ஆகிறது.
இப்படி நாம் சுவாசிக்கும் காற்றும், உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் எல்லாமே மாசு பட்டிருப்பதால் மனித உடம்பின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு சாதாரணக் காய்ச்சல் வந்தால் துளசி மற்றும் வேறு சில மூலிகைகள் சேர்த்த கஷாயம் வீட்டிலேயே செய்து தருவார்கள். நீராவியை முகர வைப்பார்கள். அவற்றிலேயே குணமாகிவிடும்; ஆனல் இன்றோ கூடுதல் அதிகம் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் கொடுத்தாலே குணமாகும் நிலை. இதெல்லாம் கடந்த சில வருடங்களில் நேர்ந்தவை. இப்போது எல்லாவற்றிற்கும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு மனித உடம்பு பலவீனப் பட்டுப் போயிருக்கிறது.
கலப்பினப் பயிர்களையே எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளுக்கு அடிக்கடி உரம் போட வேண்டியிருக்கிறது; பூச்சி மருந்து அடிக்க வேண்டியிருக்கிறது. அடிக்கடி மருந்து அடிக்காவிட்டால் நுண்ணிய புழுக்கள் வந்து தாக்கிப் பயிர்களை அழித்துவிடுகின்றன. இந்தப் புழுக்களைத் தன் இயற்கை சக்தி கொண்டு எதிர்க்க அப்பயிர்களுக்குத் தெம்பில்லை. கலப்பினப் பசுக்களோ, கலப்பினக் கோழிகளோ சாதகமான சில கால நிலைச் சூழல்கள் உள்ள இடங்களில் மட்டுமே வளர்கின்றன. அவை வளரும் இடங்களில் தட்ப வெப்ப நிலையை சரியான அளவில் எப்போதும் நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. அவைகளுக்கென சிறப்பாக உருவாக்கப் பட்ட உணவுகளையே கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பாரம்பரிய நாட்டு மாடுகளுக்கோ கோழிகளுக்கோ இந்தமாதிரி கட்டுப்பாடுகளெல்லாம் தேவையில்லை.
இப்போது மனிதர்களும் இந்தக் கலப்பின மிருகங்கள், பயிர்கள் போல ஆகிவிட்டார்கள்! போகிற போக்கைப் பார்த்தால் கூடிய விரைவில், நிலாவில் இறங்கி ஆராய்ச்சி செய்த மனிதர்கள் போலவே பூமியில் வாழும் மனிதர்களும் ஆளுக்கு ஒரு பிராணவாயு சிலிண்டரை முதுகில் சுமந்து கொண்டு அதிலிருந்து சுவாசிக்கும் நிலைக்கு வந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது! ( தொடரும்)