அம்மா தனது பிறந்த வீட்டையே ஆசிரமமாக மாற்றினார். அதைப் படிப்படியாக மாதாஅமிர்தானந்தமயி மடத்தின் தலைமை இடமாகவும் மாற்றினார்.அம்மாவின் குரல் ஐக்கிய நாடுகள் சபை வரை ஒலித்தது.அது மட்டுமல்ல;அம்மா ஐ.நா.சபையில்  தனது
தாய்மொழியான மலையாளத்தில் உரையாற்றினார் என்பது  குறிப்பிடத்தக்கது.

பாரதத்தின் பழம்பெரும் ஆன்மிகக் கலாசாரத்தை உலகெங்கும் பரப்ப 1987 முதல்  அம்மா எல்லா வருடமும் உலகப் பயணம் செய்து வருகிறார். பல நாடுகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கான ஞான யக்ஞங்களை நடத்தி வருகிறார். அம்மாவின் உலகப் பயணங்கள் உலகியல் சுகங்களில் தங்களை மறந்து வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஆன்மிக விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறது.

1993 -சிகாகோ நகரில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது உலக சர்வசமயப் பேரவையில் அம்மா உரையாற்றினார்.  இந்தப் பேரவை அம்மாவை இந்து மதத் தலைவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. “ஹிந்துயிசம் டுடே” அம்மாவை “ஹிந்து ஆஃப் த இயர்” ஆகத் தேர்ந்தெடுத்தது.  மேலும் அது அம்மாவுக்கு ஹிந்து மறுமலர்ச்சி விருதை வழங்கியது.

1995- அம்மா ஐக்கிய நாடுகள் சபையின் பொன் விழாவை ஒட்டி நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்.

2000-  நியூயார்க்கிலுள்ள ஐ.நா பொதுச்சபையில் கூடிய புத்தாயிரமாண்டு உலக சமாதான உச்சி மாநாட்டில்    ” உலக அமைதிக்கான உற்ற வழி” எனும் தலைப்பில் அம்மா உரையாற்றினார்.

2002- ஜெனிவாவிலுள்ள  ஐ.நா அரங்கில் கூடிய மத மற்றும் ஆன்மிகத் தலைவியரின் உலக சமாதான முயற்சி மாநாட்டில்
“தாய்மையே விழித்தெழு” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அவ்விழாவில் அம்மாவுக்கு உலக சமாதானத்திற்கான காந்தி-கிங் அஹிம்சைக்கான விருது வழங்கப் பட்டது.

2003- அம்மாவின் 50வது ஜயந்தி கொச்சியில் சர்வதேச சமாதானம் மற்றும் மதநல்லிணக்கத்திற்கான விழாவாகக் கொண்டாடப் பட்டது.
இதில் 191 நாடுகளைச் சேர்ந்த சுமார்  5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

2004 — ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனா நகரில் நடந்த உலக மதங்களின் பேரவையில்  அமைதியின் வழி எனும் தலைப்பில் உரை வழங்கினார்.

2006- நியூயார்க் ஜேம்ஸ் பார்க் மார்ட்டன் மதநல்லிணக்க மையத்தின் விழாவில் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்தைக் குறித்து   அருளுரை வழங்கினார்.  இவ்விழாவில் அம்மாவுக்கு ஜேம்ஸ் பார்க் மார்ட்டன்  சர்வசமய விருது வழங்கப்பட்டது.

2007 – பிரான்ஸ் நாட்டின் “சினிமா வெரிட்டே” அமைப்பு நடத்திய விழாவில் அம்மா கலந்துகொண்டு  இன்றைய உலக நிலவரம் குறித்தும் அதைச் சமாளிக்க எவ்வாறு செயலாற்ற வேண்டும்  என்பதைப் பற்றியும் உரையாற்றினார்.

2008-  வரலாற்றுப் பெருமை நிறைந்த ஜெய்ப்பூரில் 2008ல்  “அகில உலக அமைதியின் தொடக்கத்திற்கான பெண்கள் மாநாடு” நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு  அம்மா “பெருமைநிறை பெண்மை” எனும் தலைப்பில் உரையாற்றினார். இம்மாநாட்டில் மனித குல முன்னேற்றத்தில் பெண்மையின் ஆற்றலுக்கு இடமளித்தல் என்பதே மையக்கருத்தாக விவாதிக்கப்பட்டது.

2009-புதுதில்லி, சாணக்கிய புரியில் அமைந்துள்ள விவேகானந்த சர்வேதேச நிலையத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அம்மா “.இளைய பாரதமே விழித்தெழு. ” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

2010 -.அம்மாவின் உலகம் தழுவிய சேவையைப் போற்றும் வகையில் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணப் பல்கலைக்கழகம் மார்ச் 25-ஆம் நாள் அமிர்த விஸ்வ வித்யாபீடத்தின்  தலைமை வேந்தரான அம்மாவுக்கு கௌரவ டாக்டர் விருது வழங்கி கௌரவித்தது. இது 4,40,000  மாணவர்கள் படிக்கும் 64 கல்வி மையங்கள் அடங்கிய  மிகச் சிறந்த பல்கலைக்கழகமாகும். இதன் 164 வருட வரலாற்றில்
இரு உலகத் தலைவர்களுக்கே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அதில்
ஒருவர் அம்மா. மற்றொருவர் தலாய்லாமா ஆவார்.