கொரானா வைரஸின் தாக்கத்தினால் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பல நாட்களாக நாமெல்லாம் நம் வீடுகளுக்குள்ளோ அடுக்ககங்களுக்குள்ளோ அடைபட்டு இருக்கிறோம். உங்களில் பெரும்பான்மையான பேர்களுக்கு இது வெறுத்துப் போயிருக்கும்; துன்பமாயும் கூட இருக்கும். செய்யவேண்டிய காரியங்களுக்காகப் போட்ட திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போயிருக்கும். ஆனாலும் என் குழந்தைகள் முடிந்தவரை மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருக்க முயலவேண்டும்.


வைரஸின் பாதிப்பு இந்த அளவிலாவது கட்டுக் கோப்பில் இருக்கிறது என்றால் அதற்கு நீங்களெல்லாம் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்ததே காரணம். இப்போது நமது சிரத்தை சிறிதளவு சுணங்கிப் போய்விட்டாலும் கூட இத்தனை நாட்கள் நாம் செய்த முயற்சிகள் வீணாகிவிடும். ஆகவே என் குழந்தைகள் தொடர்ந்து எச்சரிக்கையோடு கூடிய விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.


அரசாங்கம் இந்தக் கொரானா எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்து கொண்டு, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, இந்தக் கடினமான நாட்களில் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு மிகவும் உகந்த ஆலோசனைகளைத் தந்து கொண்டிருக்கிறது. அதனால், அரசாங்கம் சொல்லும் வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவது மிகமிக அவசியமாகும்.

என் குழந்தைகள் தொடர்ந்து பொறுமையுடன் இருக்கவேண்டும். உலகமே இப்போது மிகவும் பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறது. உலகளாவிய, இந்த வைரஸின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டி விட்டது. சில நாடுகள் மற்ற நாடுகளை விடக் கூடுதல் பாதிப்பு அடைந்திருக்கின்றன. நம் நாட்டிலும் சில மாநிலங்களில் பாதிப்பு கூடியிருக்கிறது. நம் நாட்டில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம். ஆதலால் நாம் கூடுதலாகவே எச்சரிக்கையாய் இருக்கவேண்டியிருக்கிறது.

அம்மா முன்பே சொல்லியிருப்பது போல, அம்மா இந்த உலகத்தை ஓர் மலர் போலக் காண்கிறேன். அம்மலரில் உள்ள ஒவ்வொரு இதழ் போலத்தான் ஒவ்வொரு நாடும். மலரின் ஒரு இதழை ஒரு புழு தாக்கினாலும் விரைவில் முழு மலரும் பாதிக்கப் பட்டுவிடும். அதே போன்ற ஓர் நிலைமையைத்தான் நாம் இப்போது கண்டு வருகிறோம். இந்த உலகமாகிய மலர் ஆரோக்கியமாகவும் அழகாகவும் தொடர்ந்து இருக்கவேண்டுமென்றால் உலகின் ஒவ்வொரு நாட்டு மக்களிடையிலும் நேர்மையான முயற்சிகளும் ஆக்கப் பூர்வமான எண்ணங்களும் அவசியம். எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒரு தாய்– பிள்ளைகள் போல உலக மக்கள் யாவரும் ஒற்றுமையுடன் கை கோர்க்கவேண்டிய தருணம் இது. உலகளாவிய சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, பழைய தவறுகளைத் திருத்தி முன்னோக்கிப் போக வேண்டிய தருணம் இது. அம்மாவின் பல குழந்தைகளும் இந்த சமயத்தில் பல விதங்களில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சிலருக்கு பொருளாதார ரீதியில் கஷ்டம்; சிலருக்குத் தம் நெருங்கிய உறவினர்களை, நண்பர்களை சந்திக்க முடியாமல் இருப்பது குறித்த வருத்தம். குழந்தைகளே, உங்களிடையே இந்த வருத்தம் இருப்பவர்கள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எத்தனை சிறந்த நண்பர்கள் ஆனாலும் கூட எல்லாரும் எல்லா சமயத்திலும் சந்தித்துக்கொண்டே இருப்பதில்லையே? மக்கள் பலரும் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து பல்வேறு இடங்களுக்குப் பயணித்தபடிதானே இருந்தார்கள்? குறிப்பாக வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.


அவரவர் வேலைகள் வெவ்வேறு ஊர்களில் இருப்பதாக அமையும் போது கணவன்-மனைவி கூட நீண்ட நாட்கள் பிரிந்து வாழவேண்டிய நிலைமைகள் உண்டே? அப்படி நேரும்போது அதனை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப அனுசரித்துக்கொண்டு போவது சகஜம் தானே! அதே கண்ணோட்டத்தில் தற்போது கொரானாவின் பாதிப்பால் வந்துள்ள பிரிவுகளையும் பாருங்கள். வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் இந்தியா வந்து ஒரு சில நாட்களே தம் உறவினரோடு வந்து சேர்ந்திருக்க முடிகிறது. ஆக, அவசியம் ஏற்படும்போது இத்தகைய பிரிவுகளை ஏற்றுப் பழகிக்கொள்ள முடியும். என் குழந்தைகளுக்கு மனதில் வருத்தம் வரும்போது இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து ஆக்கப் பூர்வமான மனநிலையையும் மனவலிமையும் வளர்த்துக் கொண்டு முன்னே போகவேண்டும். எது நடந்தாலும் துணிவைக் கைவிடக் கூடாது. மனோ தைரியத்தை விடாது இருந்தால்தான் நம்மால் சரியாய்ச் சிந்திக்கவும் செயல்படவும் முடியும்.

குழந்தைகளே, உங்கள் வசம் இப்போது இருக்கும் நேரத்தை எவ்வாறு சிறப்பாக உபயோகப் படுத்திக்கொள்ள முடியும் என்று சிந்தியுங்கள். ஆக்கப் பூர்வமாயும், உற்சாகம் தரும் விதத்திலும் உள்ள செய்திகளையே அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாரிடமும் கை பேசி இருக்கிற காலம் இது. நம்பிக்கை ஊட்டும் செய்திகளையும் உத்வேகம் தரும் தகவல்களையும் மட்டுமே அனுப்புங்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாய்ப் பேசிக்கொள்ளுங்கள். இந்த விதத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள முடியும். நீங்களெல்லாம் ஏற்கனவே இவ்வாறு தான் செய்து கொண்டிருப்பீர்கள் என்றே அம்மா நம்புகிறேன். இப்படிச் செயல்படுவது தான் நல்லது. எல்லாருமே அதிக பட்ச ஒத்துழைப்பு, பொறுமை, அன்பு, ஒற்றுமை இவற்றை வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியிலும் செயல் படுத்த வேண்டிய தருணம் இது. பிரார்த்தனையுடன் கூடிய மனத்தோடு சரியான முயற்சிகளையும் நாம் மேற்கொண்டால் நாம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.


மற்ற எல்லா தீர்மானங்களைப் போலவே மகிழ்ச்சியாக இருப்பதும் ஒரு தீர்மானம்தான் என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. ‘சூழ்நிலை எப்படி இருந்தபோதிலும் நான் மகிழ்ச்சியுடனும் தைரியத்துடனும் இருப்பேன்’ என்ற தீர்மானத்தை நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். நாம் அழுதாலும் சரி, சிரித்தாலும் சரி, காலம் போகும். ஆகவே, குழந்தைகளே, நீங்கள் சிரித்துக்கொண்டு இருக்கப் போகிறீர்களா அல்லது சோகமாக இருக்கப் போகிறீர்களா? தீர்மானியுங்கள். என்ன விளைவு நிகழ்ந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியுடன் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என்கிற உறுதியான தீர்மானத்தை எடுத்துவிட்டீர்கள் என்றால் அப்போது உங்களைச் சுற்றி ஓர் மகிழ்ச்சியான சூழல் தானாகவே உருவாவதை நீங்கள் பார்க்கலாம். அந்த சூழலில் அங்குள்ள மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் எழுவதைக் காண முடியும்.

சந்தோஷமான மனிதனே உறுதிமிக்க மனிதன். அப்படிப்பட்ட ஒருவன், சோகமயமான ஒருவனை எதிர்கொண்டால், அவனது சோகத்தை மாற்றிவிடக் கூடிய மனப்பாங்கும் சக்தியும் முன்னவனுக்கு இருக்கும். அடுத்தவர் சோகத்தை மாற்றுவதே கூட ஓர் பெரும் செயலாகும்.

ஓரு மன நோயாளி, உளவியல் மருத்துவரோடு செலவழிக்கும் நேரத்தில், அந்தக் குறைந்த கால அளவிலாவது மன நிம்மதியை அனுபவிப்பான். மனச்சோர்வு,, கவலை இவற்றால் அவதியுறுபவர்கள், மன நல மருத்துவரோடு பேசிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் மருத்துவரிடம் இருக்கும் ஆக்கப் பூர்வமான சக்தியிலிருந்து தாங்களும் சிறிது பெற்றுக்கொண்டு திரும்புகிறார்கள். அதே போல, நாமெல்லாம் குழந்தைகள் கூடிச் சிரித்து விளையாடும் ஓர் இடத்தில் இருந்து வேடிக்கை பார்க்கையில், நம்மை அறியாமல் புன்னகைக்கிறோம். சிறு குழந்தைகள் பலரும் உள்ள ஓர் அறையில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தால், அடுத்தடுத்துப் பல குழந்தைகளும் அழுவதைப் பார்க்கலாம்.

உதாரணமாக, அம்மாவிடம் வித்யாரம்பத்திற்காகக் குழந்தைகளைப் பெற்றோர் அழைத்து வரும்போது, ஒரு குழந்தை அழ ஆரம்பித்தால் அடுத்தடுத்து மற்ற குழந்தைகளும் அழ ஆரம்பிப்பார்கள். விரைவிலேயே 10-15 குழந்தைகள் பெரிய குரலெடுத்து அழுவதைப் பார்க்க முடியும்! மாறாக, ஓரிரு குழந்தைகள் சிரித்துக்கொண்டிருந்தால், மற்ற எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியாய் இருப்பதையும் காண முடியும்.


இத்தகைய உணர்வுகளெல்லாம் ஓர் அதிர்வுபோலவும் அலைகள் போலவும் பரவும் தன்மை உள்ளவை. ஆக, ஒரு மனிதனால் அடுத்தவர்கள் உணர்வுகளைப் பாதிக்க முடியும் என்பது உண்மை. அதனால், என் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் தற்காலிகமாவது அடுத்தவரிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும், துன்பங்களைக் குறைக்கவும் இயலும். ஆகவே, குழந்தைகளே, அடுத்தவர்களுக்குள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் எழுப்பிவிட உங்களால் முடிந்தவரை செயலாற்றுங்கள்.
எப்படியானாலும் துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கையில் வரவே செய்யும். அவை பலவும் நம்மை மேலும் உறுதிவாய்ந்தவர்களாக ஆக்கவே உதவும். நாம் ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கையில் காலில் ஒரு முள் தைத்துவிட்டால், நின்று அந்த முள்ளை எடுப்போம். அது மட்டுமல்ல, இனி ஓடவேண்டிய பாதைமீது அதிக கவனமும் வைப்போம். வழியில் வேறு எங்காவதும் முட்கள் இருக்கின்றனவா என்று கவனமாகப் பார்த்தவாறே நின்று நிதானித்தே முன்னோக்கிச் செல்வோம். முன்பை விட அமைதியாகவும், மெதுவாகவும், எச்சரிக்கையாகவுமே பயணிப்போம். இப்படிப் போகையில் நமக்கு இதுவரை கண்ணில் படாத ஆபத்துகள் வழியில் புலப்படலாம். உதாரணமாக வழியில் ஒரு பாம்பு இருந்தால், முன்பு அதனைக் கவனிக்காது போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது இப்போது கண்டிப்பாக நம் கண்ணில் படும். அப்போது தெரியும், வழியில் காலில் குத்திய முள், உண்மையில் விஷப் பாம்பை மிதித்துக்கொண்டு போகும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறது என்பது! இப்படி நினைப்பது தான் ஆக்கப் பூர்வமான சிந்தனை. அத்தகைய சிந்தனை, நிகழ்காலத்தை சரியான முறையில் எதிர்கொள்ள உதவுகிறது.

நிகழ்காலத்தில் நமக்கு வருகின்ற பிரச்சனைகள், நமக்கு கூடுதல் கவனத்தைத் தந்து இனி வரப்போகும் பிரச்சனைகளைத் துணிவோடு எதிர்கொண்டு வெல்வதற்காகவே வந்திருக்கின்றன என்று நினைக்கவேண்டும். ஆக காலில் ஒரு முள் குத்துவதை ஏற்றுக்கொள்ளுங்கள்; பொறுமையாய் இருங்கள்; இதைத் தாண்டியும் நாம் வாழ்வோம். இந்தக் கண்ணோட்டத்தில் தான் நாம் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் நோக்க வேண்டும். சில பேர்க்கு வாழ்க்கையில் வரும் அற்பமான பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ளும் திறன் இருக்காது. வேறு சிலரோ, மலை போல வரும் பிரச்சனைகளையும் சிரித்தமுகத்துடன் எதிர்கொள்வார்கள்; தம்முடன் இருப்பவர்களுக்கும் உற்சாகத்தைத் தருவார்கள். நாம் எப்போதும் இந்த இரண்டாம் வகை மனிதர்கள் போல ஆகவே முயலவேண்டும்.


வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சனைகளும் எப்போதும் இருக்கத் தான் செய்யும். அவை பெரும்பாலும் நம்மை மேலும் உறுதியாக்கவே செய்யும். ஒரு பென்சிலுக்குள் ‘லெட்’ எனும் எழுதுபொருள் மரத்தாலான தண்டுப் பகுதிக்குள்ளே இருக்கிறது. அந்த மரப் பகுதியைச் சீவினால் தான் லெட் வெளியே தெரியும்; அப்போது தான் அதை வைத்து எழுத முடியும். பென்சிலைச் சீவச் சீவ, முனை கூராகிறது. அதே போலத்தான் நம்முள் மறைந்திருக்கும் சக்தியும் பிரச்சனைகள் வர வரத் தான் கூர்மை பெறுகிறது. நம்மால் சிறப்பாகச் செயலாற்ற முடிகிறது.


பின் பென்சில் கொண்டு எழுதக் காகிதம் இருக்கிறது. அதன் தரம் மாறுபடலாம்; அது மெலிதாகவோ, தடியாகவோ, சொரசொரப்பாகவோ, அல்லது வழுவழுப்பாகவோ இருக்கலாம். ஆனால் கிடைத்துள்ள காகிதத்தில் நாம் பென்சிலை வைத்துக்கொண்டு எத்தனை அழகான கவிதையை எத்தனை சிறப்பாக எழுதுகிறோம் என்பதில் தான் நம் திறமை இருக்கிறது. அது மட்டும் தான் நம் கையில் இருக்கிறது. இறைவனின் கையில் ஒரு பென்சிலாகவோ பேனாவாகவோ நம் ஆக முயலுவோம்.


நாம் பென்சிலை வைத்து எழுதுகையில் பிழை ஏற்படலாம். பென்சிலின் அடியில் அழிக்க ஓர் ரப்பரும் இருக்கும். அதைக்கொண்டு, தவறாய் எழுதியதை அழித்து விட்டு, மீண்டும் சரியாக எழுத முடியும். முழுவதும் எழுதி முடித்த பின்னர் நாம் எழுதியதைத் தொடக்கத்திலிருந்து ஒரு முறை மீண்டும் படித்துப் பார்ப்போம். எங்கேனும் சொற்பிரயோகங்கள் தவறாக இருப்பது தெரிந்தால் அதனை அழித்துவிட்டு மேலும் சிறப்பான சொற்களை உபயோகித்துத் திருத்தி எழுத முடியும். அதற்குப் பொறுமை அவசியம். நாம் செய்த தவறுகளைச் சரி செய்ய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்.

இன்றைய அவசர யுகத்தில், மக்கள் தங்கள் எண்ணங்களை செயலில் கொண்டு வருவதற்கு முன் யோசிப்பதற்காக நேரத்தை வீணடிப்பதில்லை. அந்தப் பொறுமை இல்லாததால்தான் பலருக்கும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்கோப்பில் வைக்க முடிவதில்லை. எண்ணத்துக்கும் செயலுக்கும் இடையே சிறிது நேரம் தந்தால் அங்கே ஓர் இடைவெளி உருவாகிறது. அந்த இடைவெளி வழியாகத்தான் விவேகத்தின் ஒளி அங்கே பாய முடியும். எங்கே விவேகம் ஒளிர்கிறதோ அங்கே நமக்கு எதையும் சரியாக நோக்கி எடை போடும் திறன் வரும். அப்போது நம்மால் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.


சூரியனுக்கு நேரே கிடக்கும் ஒரு வித்து முளைக்காது. ஆனால் மண்ணுக்குள் பொதிந்த வித்துதான் முளைக்கும். நாம் சிந்திக்காமல் பேசிவிடும் வார்த்தைகள் அடுத்தவர்களைப் புண்படுத்திவிடக் கூடியவை. தீயினால் சுட்ட வடு ஆறிவிடும்; ஆனால் வாயினால் சுட்ட வடு ஆறாது. ஆகவே நாம் அடுத்தவருக்கு ஒரு செய்தியை அனுப்பும் போதோ அல்லது வாய் வார்த்தையில் பேசும்போதோ நாம் கவனமாய் சிந்தித்தே செயல்பட வேண்டும். ஆனால் இன்றோ, சிந்திக்காமல் செயலாற்றுவது, செயலாற்றி விட்டு சிந்திப்பது என்பதே கொள்கையாக ஆகிவிட்டது போலத் தோன்றுகிறது!

இன்று கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோயாய் பரவியுள்ளதே உலகில் ஓர் மாபெரும் நிகழ்வாக ஆகியிருக்கிறது; அது நமது வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது; வாழ்க்கையை நாம் எப்படிக் கண்டு, எப்படிக் கையாள்வது என்கிற கண்ணோட்டத்தையே முற்றிலும் மாற்றிவிட்டது. நம் குழந்தைகளின் வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், அது எத்தனை பரபரப்பான ஒன்றாக இருந்தது! பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களையே சரியாகக் கண்ணால் பார்க்க முடியாத ஒரு நிலை இருந்தது. குழந்தைகள் படுக்கையிலிருந்து எழும் முன்பே பெற்றோர் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போயிருப்பர்; தந்தை இரவு அலுவலகத்திலிருந்து திரும்பும் நேரத்திலோ பிள்ளைகள் உறங்கி இருப்பர். விடுமுறை நாட்களில் கூட பெற்றோர் தம் மடியில் மடிக் கணினிகளை வைத்துக்கொண்டு மும்முரமாயிருப்பார்கள். அந்த மடியில் தம் குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிப் பேச இடமே இல்லையே?
பெற்றோரிடம் இருந்து அன்போ அரவணைப்போ அதிகம் கிடைக்காமலேயே குழந்தைகள் வளர்ந்தார்கள். கொரோனா வருவதற்கு முன் இதுதான் நிலைமை. ஆனால் இப்போதோ, குழந்தைகளுக்குத் தம் பெற்றோரோடு செலவழிக்க நேரம் கிடைத்திருக்கிறது.


பல தந்தைமார்க்கும் தாய்மாருக்கும் மற்றவரது வாழ்வில் ஒரு நாளில் என்னென்ன காரியங்களெல்லாம் இருக்கின்றன, பிரச்சனைகள் இருக்கின்றன என்றெல்லாம் புரிந்து கொள்ள நேரம் கிடைத்திருக்கிறது. அதனால் ஒருவரோடு ஒருவர் அனுசரித்துப் போகும் மனப்பாங்கும் கூடியிருக்கிறது.


நம் நாட்டில் இன்னும் பல பெண்கள் (வேலைக்குப் போகாத) இல்லத்தரசிகளாய் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். அப்படி வீட்டிலேயே அடைந்து கொண்டு வீட்டை நிர்வகிப்பதில் அவர்களுக்கு உள்ள கஷ்டங்களையும் பொறுப்புகளையும் பல கணவன்மார்கள் இப்போது அன்றாடம் நேரில் கண்டு புரிந்துகொண்டு, ஆதரவாய் இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அந்தக் காலத்திலெல்லாம் வெளியே போய் வேலை பார்த்தவர்கள் எப்போதடா வீட்டுக்கு வந்து சேருவோம் என்று ஆவலாய் இருப்பார்கள். அவர்களுக்கு வீடு தான் பாதுகாப்பான, மனதுக்கு நிம்மதி தரும் இடமாக இருந்தது. ஆனால் (கொரோனா வருவதற்கு முன்பான) நிகழ் காலத்திலோ, வீட்டுக்குத் திரும்பி வந்தால், எப்போதடா வீட்டிலிருந்து தப்பித்து மீண்டும் வெளியே போகலாம் என்று மாறிவிட்டது. இருவரும் வீட்டுக்குள் சேர்ந்து இருந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தாலே சண்டைதான் என்பதாக நிலைமை ஆகிவிட்டிருந்தது!


அம்மா ஒரு நகைச்சுவைத் துணுக்கு கேள்விப்பட்டேன். வீட்டில் இருந்த கணவன், மனைவியிடம் “நீ ஏன் பாதுகாப்பு முகக் கவசம் அணியாமல் இருக்கிறாய்?” என்று கேட்டானாம். அதற்கு மனைவி, “நாம் வீட்டுக்குளே தானே இருக்கிறோம்? அதற்கு எதற்காக மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும்? “ என்றாள். அதற்குக் கணவன், “நீ உடனே மாஸ்க்கைப் போட்டுக்கொள்; அப்போதுதான் எனக்கு உன் முழு முகத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் நிம்மதியாய் இருக்கிறது” என்றானாம்! அதாவது கணவனுக்கு மனைவியின் முகத்தைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போய்விட்டதாம்! இருவர் எப்போதுமே சேர்ந்து இருந்தால் இப்படியும் ஆகிவிடுகிறது!

கொரோனா அச்சத்தால் வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் உலகம் பூராவும் எல்லா வீடுகளிலும் சண்டை சச்சரவுகள் அதிகமாகி வருகின்றனவாம். அது பற்றிய கேள்விகள் அம்மாவுக்கு வந்துகொண்டிருக்கின்றன.
ஒரு வேளை அம்மாவின் குழந்தைகளும் வீட்டில் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டாலும், மீண்டும் சமாதானம் செய்து கொண்டுவிடுங்கள். வீடு என்று இருந்தாலே சச்சரவுகள் வராமல் இருக்காது. உங்களால் இயன்றவரை அனுசரித்துப் போக முனையுங்கள்.


கொரோனா வைரஸ் தாக்கமானது நம் வாழ்வின் ஓர் மிகப்பெரும் சம்பவமாக ஆகி, வாழ்க்கை பற்றிய நம் கண்ணோட்டத்தையே புதிதாய் மாற்றி எழுதும் ஓர் நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறது. பல தொழில்கள் முடங்கிவிட்டன; விமானப் பயணம் நின்றுபோயிற்று; பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
மறு புறம் பார்த்தால், காற்று மண்டலம் சுத்தமாகி இருக்கிறது; சுற்றுச் சூழலில் ஏற்பட்டிருந்த சீர்கேடுகள் குறைந்து சம நிலை சிறிதேனும் திரும்பும் நிலைமை வந்திருக்கிறது. காற்றில் மாசு குறைந்ததால் பஞ்சாபிலிருந்து தொலைவிலுள்ள இமய மலையை இப்போது மீண்டும் கண்ணால் காணும் சூழல் வந்துள்ளதாம். ஆறுகளில் நீர் சுத்தமாக ஓடுகின்றதாம். புனித நதியான கங்கையில் சாக்கடை நீர், பிணங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், மாமிசத்திற்காக வெட்டப்படும் மிருகங்களின் கழிவுகள் என்றெல்லாம் வந்து கலப்பதால் சுமார் 75 சதவீதம் வரை மாசு பட்டுவிட்டிருந்தது. அந்த நீர் தற்போது ஓரளவு சுத்தமாக ஓடுகிறதாம். முன்னர் ஒரு ஒரு காலத்தில் கங்கையில் நீந்திய கங்கா டால்ஃபின் மீன்கள் அழிந்து போகக் கூடிய ஆபத்திலிருக்கும் ஓர் உயிரினமாகக் கருதப்பட்ட நிலையில் அவை தற்போது மீண்டும் அங்கே நீந்துவது காணக் கிடக்கிறதாம்!
இவற்றையெல்லாம் கேள்விப்படும்போது, இயற்கை ஓரளவேனும் தன் சம நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்கிற நன்னம்பிக்கை நமக்கு வருகிறது. ஒரு பக்கம் கொரோனாவினால் உண்டாகும் மரணங்கள் நமக்குக் கவலையைத் தந்தால், மற்றோரு புறம் கொரோனாவின் அச்சத்தால் வந்த பல செயல் முடக்கங்களின் பயனாக இயற்கை தன்னைச் சரி செய்து கொள்வது மன நிம்மதியையும் தருகிறது.


மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், சாலை விபத்துகளும் அவற்றால் வரும் சாவுகளும் நிகழவில்லை. கொலை, கொள்ளை, சூறையாடல், அடிதடிகள் என்று நிகழும் சமுதாயக் குற்றங்கள் பெருமளவில் நிகழவில்லை.
இந்தக் கொரோனா கால கட்டத்தில் ஒரு இருளாழ்ந்த குகையின் முடிவில் வெளிச்சம் தெரிவது போல சில நல்ல விஷயங்களும் வெளிவந்துள்ளன.

ஒரு நாளைக்குக் கூட நம்மால் துறக்கமுடியாத சில விஷயங்களை இப்போது துறந்திருக்கிறோம். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது மதுபானம். அது கிட்டாது போனதினால் ஒரு சிலரேனும் அந்தக் குடிப்பழக்கத்தை விட்டுவிட முடிந்திருக்கிறது. அதே போலத்தான் ‘ஷாப்பிங்’ எனும் நவீன போதைப் பழக்கம். சில பேர்களுக்கு கடைகளுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் போய் தேவையுள்ளதையும் தேவையற்றதையும் கண்டபடி வாங்கிப் போடுவது ஒரு போதைப் பழக்கம் போலவே ஆகிவிட்டது.
அவசியப் பொருள்களை வாங்கக் கடைகளுக்குப் போகத்தான் வேண்டும் என்றாலும் தற்போது வந்துள்ள தடை, இந்த ஷாப்பிங் போதையில் சிக்கியவர்களுக்கு ஓர் சுய கட்டுப்பாட்டையும், விழிப்புணர்வையும் தரும் என்று அம்மா எதிர்பார்க்கிறேன்.
அப்படியே, பல பேருக்கு சதா மாமிசம் உண்ணும் வேட்கையைக் கட்டுப்படுத்தி, சைவ உணவுப் பழக்கத்தை நோக்கி மனதைத் திருப்ப இந்த ஊரடங்கு உதவியிருக்கிறது. நம்மால் அடக்கிக் கொள்ளவே முடியாத பல ஆசைகளும் தேவைகளும் இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றன. ஆக, இப்படிப்பட்ட கட்டுப்பாடான ஓர் வாழ்க்கையை வாழ்வதும் நமக்கு சாத்தியமே என்கிற பாடத்தை நாம் இப்போது கற்றிருக்கிறோம்.


பலருக்கும் எப்போதும் வெளியில் போய்ச் சாப்பிடவேண்டும் என்கிற பழக்கம் இருந்தது; வேறு பலருக்கும் வீட்டிலேயே இருந்து கொண்டு, ஆனால் சமைக்காமல் ஓட்டலில் ஆர்டர் கொடுத்து வீட்டுக்கே உணவு வகைகளை வரவழைத்து உண்ணும் பழக்கம் வலுத்திருந்தது. இவர்கள் வெளி உணவை உண்ணும் ஆசையில் வீட்டில் சமைத்த உணவுகளைக் கூட தூக்கி எறிந்து வீணடிப்பார்கள். இப்போதோ வீட்டில் சமைத்தே சாப்பிட்டாகவேண்டிய நிர்ப்பந்தம் வந்து விட்டது; வீட்டுச் சாப்பாட்டின் அருமையை ரசிக்கவும் முடிகிறது.
அதற்காக, அம்மா வெளியிலேயே சாப்பிடவேண்டாம் என்று சொல்ல வரவில்லை. வெளியே உணவகங்கள் நடத்துபவர்களுக்கு அது தொழில்; அதற்கு வரும் வாடிக்கையாளர்கள் மூலம்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது; அவர்களும் பிழைக்க வேண்டும்.


ஆனாலும், இந்த சூழ்நிலையின் மூலமாக அம்மாவின் மக்களுக்கு அக முகமாக நோக்கி, நம்மை நாமே சரியாகப் புரிந்து கொள்வதற்கு ஓர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்களது கெட்டபழக்கங்களிலிருந்து விடுபட இது ஓரு அரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஊரடங்கெல்லாம் நீங்கிய பின் என் குழந்தைகள் மீண்டும் பழைய தீய பழக்கங்களுக்குப் பின்னே திரும்பிப் போய்விடாமல் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். எத்தனையோ குடும்பங்களிலிருந்து பிள்ளைகள் பலரும் வந்து “அம்மா, என் தந்தை குடிகாரராய் இருக்கிறார்” என்றெல்லாம் சொல்லி அழுகிறார்கள். அவர்களது கண்ணீரைக் காண அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட தந்தைமார்கள் இந்த சமயத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முழு முயற்சி எடுப்பார்கள் என்று அம்மா எதிர்பார்க்கிறேன். இதை அவர்களுக்கு என் வேண்டுகோளாக வைக்கிறேன்.


எவையெல்லாம் இல்லாமல் முடியாது என்று இத்தனை நாட்கள் நினைத்திருந்தோமோ அவையெல்லாம் அப்படியொன்றும் இன்றியமையாதவை அல்ல என்று இப்போது புரிந்துகொண்டிருக்கிறோம். சில விஷயங்கள் இல்லாது போனாலும் கூட நிம்மதியாய் வாழமுடியும் என்பதை நம் இளம் பிள்ளைகள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

. நமது எண்ணத்திலும் செயலிலும் உள்ள தவறுகளை சரிசெய்தே ஆகவேண்டும். அதை இப்போது தான், இந்த நிகழும் கணத்தில் தான் செய்ய முடியும். அதைச் சாதிப்பதற்கான திறனை அந்த பரமாத்மா அருளட்டும் என்று அம்மா பிரார்த்திக்கிறேன்.