ஐவகை யக்ஞங்களும் அவற்றின் தத்துவமும் கட்டுரையின் தொடர்ச்சி …..

கேள்வி: ஆன்மிக சாதனைகளுக்கும், இயற்கைப் பாதுகாப்பிற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் என்னென்ன?

அம்மா: “ஈசாவாஸ்யமிதம் ஸர்வம்“. அனைத்திலும் ஈசனின் சைதன்யமே நிறைந்துள்ளது என்றே நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே, நம்மைப் பொறுத்தவரை, இயற்கைப் பாதுகாப்பு என்பது இறை ஆராதனையே ஆகும். பாம்பைக்கூட வணங்கும் பண்பாடே நம்மிடம் உள்ளது. அனைத்திலும் இறைவனைக் கண்டு, அனைத்தையும் இறைவனாக வணங்கும்படியே மதம் கூறுகிறது. இந்த உணர்வு இயற்கைமீது அன்பு செலுத்த நமக்குக் கற்பிக்கிறது. நாம் யாரும் வேண்டுமென்றே நமது கையையோ, காலையோ காயப்படுத்த மாட்டோம். ஏனென்றால்,அவ்வாறு செய்தால் நமக்கு வலிக்கும் என்பது தெரியும். இதுபோல் சராசரம் முழுவதும் ஒரே ஜீவ சைதன்யமே உள்ளது என்று உணரும்போது, பிறருடைய வேதனையும், தனது வேதனையாகத் தோன்றும். அவரைக் காப்பதற்கு மனம் வரும். நாம்  விரைவோம்.அவசியமின்றி ஒரு உயிருக்கும் துன்பம் விளைவிக்கத் தோன்றாது. ஒரு பூ மலர்ந்த   பிறகு பத்துத் தினங்கள் செடியில் வாடாமல் இருக்குமெனில், பத்தாவது தினம் மட்டுமே நமது முன்னோர் அதைப் பறிப்பர்.

பழங்கால வீடுகளில் எல்லாம் பூஜையறை இருக்கும். ஒரே அறையுள்ள குடிசையில் வாழ்பவர்கள் கூட ஒரு மூலையில் இறைவனின் படத்தை வைத்து விளக்கு ஏற்றி வழிபடுவர். தினசரி பூஜைக்காக வீட்டில் பூச்செடிகளை வளர்ப்பர். அவற்றைப் பக்தியுடன் பாதுகாப்பர். தானே நட்டு வளர்த்த செடிகளில் உள்ள பூக்களால் அர்ச்சனை செய்யும்போது பக்திபாவம் அதிகரிக்கும். மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் அர்ச்சனையின் பலனாக எண்ணங்களின் எண்ணிக்கை குறையும். அது மனத்தூய்மைக்குக் காரணமாகிறது. அதுமட்டுமல்ல. ஆயுளும், ஆரோக்கியமும் வளர்கிறது. மாறாக,, எல்லாநேரமும் உலக விஷயங்களில் மூழ்கினால் மனதில் அமைதியின்மை அதிகரிக்கும். எண்ணங்கள் அதிகரிக்கும்போது மனதில் போராட்டமும் அதிகரிக்கும். அது இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் வரக் காரணமாகும். ஒரு வீட்டு  உபயோகச் சாதனம் கடையிலேயே இருக்கும்போது அதன் உத்தரவாதகாலம் குறையாது. அதை வாங்கி, உபயோகிக்க ஆரம்பிக்கும் நாள் முதல்தான் அதன் உத்தரவாத காலத்தைக் கணக்கிடுகிறோம். அதுபோல் எண்ணங்கள் இல்லாத மனதின் சக்தி நஷ்டமாவதில்லை.

பழங்காலத்தில் தோப்புகளில் திருவிழாச் சமயங்களில் கீர்த்தனங்கள் பாடுவது ஆசாரத்தின் ஒரு பாகமாக இருந்தது. குடும்பத்தில் பாடத் தெரிந்தவர்கள் இல்லை என்றால் நன்றாகப் பாடுபவரை அழைத்து வந்து பாடச்செய்வர். பக்தியும், ஞானமும் நிறைந்து வழியும் பாடல்கள், கேட்பவர் மனதில், அவரை அறியாமலே ஒரு ஆன்மிகப் பதிவை உருவாக்கும். இது மரம், செடி, கொடிகளுக்கும் நன்மை பயக்கும். இன்றைய அறிவியல், சங்கீதம் செடிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றும், செடிகளின் மீது அன்பு காட்டினால் அவற்றிலிருந்து விளைச்சல் அதிகம் கிடைக்கும் என்றும் கூறுகிறது. நமது ரிஷிகள் எத்தனையோ காலத்திற்கு முன்பே இவற்றை அறிந்தது மட்டுமல்ல; மனித வாழ்வின் அங்கமாக இவற்றை ஆக்கியும்  இருந்தனர்.

இயற்கையைப் பார்க்கும்போது  நமது திறமையின் குறுகிய எல்லை நமக்குப் புலப்படும். அது இறைவன்மீது பக்தி வளரவும், சரணாகதி ஏற்படவும் உதவும். உண்மையில் ஐம்புலன்களின் மூலம் காண இயலும் இறைவடிவமாக இயற்கை திகழ்கிறது. அதன்மீது அன்பு செலுத்துவதன் மூலமும், அதற்குச் சேவை செய்வதன் மூலமும் நாம் இறைவனையே வணங்குகிறோம்.

தேங்காயைத் தென்னை மரமாக ஆக்குவது போல், விதையை மரமாக்குவது போல் ஜீவன் பரமாத்ம நிலையை அடைவதற்கான வழியை ஏற்படுத்தித் தருவது இயற்கையாகும்.

(தொடரும்)