ஆன்மிக சாதனைகளும்…. கட்டுரையின் தொடர்ச்சி….

கேள்வி:சில உயிரினங்களின் வம்சம் அழிந்து வருவதைத் தடுக்கச் சமுதாய அளவில் நாம் செய்யக் கூடியது என்ன?

அம்மா: இதற்கு ஒரு நியதியைக் கொண்டு வருவது நல்லது. ஆனால், அதைச் சரியான முறையில் பிறரைப் பின்பற்றவும், பின்பற்றச் செய்யவும் தொண்டர்கள் அவசியம். இன்று ஒரு நியதியை ஏற்படுத்தும் ஆளே அதை மீறுகிறான். அதனால், புதிய ஒரு நல்ல பண்பாட்டை வளர்ந்துவரும் இளந்தலைமுறைக்குக் கற்பிப்பதே நிலையான தீர்வாகும். ஆன்மிகக் கல்வியின் மூலமே இது சாத்தியமாகும். ஒவ்வொரு மனிதனிடமிருந்தும், சகல சராசரங்களையும் நோக்கிப் பிரதிபலன் எதிர்பாராத அன்பு பெருகிவரும்போது இயற்கைப் பாதுகாப்பிற்காக என்று தனியான வேறொரு சட்டம் இயற்றும் அவசியம் ஏற்படாது.

ஒவ்வொரு கிராமத்திலும் இயற்கைப் பாதுகாப்பின் பயனைப் பற்றி மக்களுக்கு உணர்த்தச் சங்கங்களை நிறுவுவது மற்றொரு தேவையாகும். இதற்கு அறிவு மட்டும் போதாது; இதயபூர்வமாகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் பயன் ஏற்படும். அதற்கு மத ஆசாரங்களின் பின்பலம் உதவியாக இருக்கும். வருடத்தில் குறிப்பிட்ட ஒருநாளில் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மரக்கன்றுகளை நடுவதும், வளர்ப்பு மிருகங்களை அலங்கரித்து அவற்றை வணங்குவதும் ஒரு காலத்தில் மத ஆசாரத்தின் அங்கமாக இருந்தன.

மக்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கம் மட்டும் நினைத்தால் ஒன்றும் நடக்காது. அவ்விதம் நடக்க வேண்டுமெனில், அது மக்களின் மனமறிந்து செயல்படும் அரசாங்கமாக இருக்க வேண்டும். நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் லட்சியம், அதிகாரமும், பொருள் ஈட்டுவதுமாக இல்லாமல், மக்கள் மற்றும் நாட்டுநலனாக இருக்கவேண்டும். அவர்களிடமும் தர்ம சிந்தனையை வளர்க்க இறை நம்பிக்கை ஒன்றால்தான் முடியும். மடாதிபதிகளுக்கே இன்று ஆன்மிகக் கல்வி அவசியமாக இருக்கிறது.

கேள்வி: காடுகள் பூமியின் முக்கிய அங்கமா?

அம்மா: ஆமாம். காடுகள் இயற்கைக்குச் செய்கின்ற நன்மைகள் ஏராளம்  என்பதை அறிவியல் இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. சுற்றுப்புறத் தூய்மைக்கும், உலகில் வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்கவும், மண்ணில் ஈரத் தன்மையை நிலைக்கச் செய்யவும், பறவைகளையும், மிருகங்களையும் பாதுகாக்கவும் காடுகள் அவசியமாகும். மனிதனின் அவசியத் தேவைகளுக்காகக் காடுகளிலிருந்து மரத்துண்டுகளையும், மருத்துவ குணமுள்ள செடிகளையும் எடுப்பதில் தவறில்லை. காட்டையே அழித்து விடாதிருந்தால் போதுமானது. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கைக்குத் தெரியும். இயற்கைப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதன் இயற்கையைச் சுரண்டுகிறான். பறவைகளும், மிருகங்களும் காட்டில் ஆனந்தமாக வாழ்கின்றன. அவற்றின் ஒரே எதிரி மனிதன்தான். இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தனக்குத்தானே எதிரியாக மாறி இருக்கிறான். ஒரு மரத்தைக் கோடாரியால் வெட்டும்போது, அதன் மூலம் தனக்குச் சவக்குழி தோண்டுவதை அவன் நினைத்துப் பார்ப்பதில்லை.

(தொடரும்)