காடுகள் மற்றும் உயிரினங்களின் அவசியம் கட்டுரையின் தொடர்ச்சி…….

கேள்வி: தனது பிரச்னைகளுக்குத் தானே பரிகாரம் தேடுவதற்குப் பதிலாக, மனிதன் ஆன்மிகத் தலைவர்களையோ அல்லது மகான்களையோ நாடுவது அவர்களுக்குத் தொல்லை தருவதாக இருக்குமா?

அம்மா: நாம் வளர்த்த ஒரு செடி கருகிப் போனால் நாம் அழுவோம். ஆனால், அதை நினைத்து அழாமல், மற்றொரு செடியை நட்டு வளர்க்க வேண்டும். சிரத்தையுடன், அதே சமயம் பற்றின்றிக் கர்மம் செய்யுமாறே ஆன்மிகத் தலைவர்கள் கூறுகின்றனர். நடந்ததை நினைத்து மனிதன் சோர்ந்து விடக்கூடாது. தன்னைப்போல் பிறரை நேசிக்கவும், தனக்குச் செய்து கொள்வதைப்போல் பிறருக்கும் சேவை செய்யவுமே மகான்கள் கற்பிக்கின்றனர். இதை ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து படிக்க முடியாது. இதற்கு ஆன்மிகத் தலைவர்களையே நாட வேண்டும்.

மகான்களின் மனம், உலகியல் சுகத்தை மட்டும் தேடுகின்ற நமது மனதைப் போன்றதல்ல. தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் மற்றும் இனிய பழங்களைக் கொடுக்கும் மரத்தைப் போன்றவர்கள் அவர்கள். மெழுகுவர்த்தியைப் போல், தான் உருகி, சமுதாயத்திற்கு அன்பு மற்றும் அமைதியின் ஒளியைப் பரப்புவதே அவர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயமாகும். அகந்தையும், பற்றும் நிறைந்த நம்மைச் சரியான பாதையிலும், தர்ம மார்க்கத்திலும் அழைத்துச் செல்ல அவர்களால்தான் முடியும். அது அவர்களுக்குக் கஷ்டமான காரியமுமல்ல. அவர்கள் ஒரு தனி மனிதனுக்காக வாழ்வதில்லை. மனிதன் நல்லவனாவதால் அவர்களுக்கு ஆனந்தமே.
(நிறைவு)