இயற்கையும் மனிதனும் கட்டுரையின் தொடர்ச்சி

கேள்வி: மனிதனிடம் பயபக்தியை வளர்க்கும் மதத்தைவிட, இயற்கையைப் பற்றிக் கற்பிக்கும் நவீன அறிவியலல்லவா சிறந்தது?

அம்மா: மதத்தில் இல்லாத எதையும் அறிவியலில் காணமுடியாது. மதம் இயற்கையைக் காப்பாற்றுமாறுதான் கூறுகிறது. அனைத்தையும் இறைவனாகக் கண்டு அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவுமே மதம் கற்பிக்கிறது. மலைகளையும், நதிகளையும், மரங்களையும், காற்றையும், சூரியனையும், பசுக்களையும் ஒவ்வொரு விதத்தில் நம் முன்னோர் ஆராதித்து வந்தனர். பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய் அனைத்தும் நமக்குக் கிடைப்பதுபோல், மதத்திலிருந்து நமக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.

மதம் என்பது குருட்டு நம்பிக்கை என்று கூறி, சிலர் கேலியாகச் சிரிப்பதைக் காணலாம். ஆனால் இப்படிக் கூறுபவர்களின் செயல்களே இயற்கைக்கு மிகவும் கெடுதலாக மாறுகின்றன. இந்தப் பொய்யான பகுத்தறிவுவாதிகளை விட இயற்கையின் மீது அன்பு செலுத்துவதும், அதைப் பாதுகாப்பதும் மத உணர்வைப் பெற்றுள்ள சாதாரண மக்களே ஆவர். மதத்தில் கூறப்படும் சில விஷயங்கள் தவறென்று நிரூபிக்க அறிவியலை உதாரணம் காட்டச் சிலர் முயல்வதைக் காணலாம். ஆனால், பௌதிக அறிவியலை சரியாகத் தெரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன என்பதை அவர்கள் மறக்கின்றனர்.

மதம் வெறும் குருட்டுநம்பிக்கை என்று கூறுபவர்கள் அதன் ஆசாரங்களின் பின்னே உள்ள சாஸ்திர தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மதத் தத்துவங்கள் ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந்தவருக்காக மட்டும் கூறப்படுபவை அல்ல. எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் தேவையானது அவற்றில் உண்டு. சிறு குழந்தைக்குத் தேவையானதும், பத்து வயதுச் சிறுவனுக்கு வேண்டியதும், இளைஞனுக்குப் பொருந்துவதும், நூறு வயதுள்ள கிழவருக்குத் தேவையானதும், பைத்தியக்கா ரர்களுக்கும், அறிவாளிகளுக்கும் தேவையானவையும் சாஸ்திரங்களில் உள்ளன. ஒவ்வொருவரின் இயல்பிற்கும் பொருந்தும் ரீதியிலுள்ள தத்துவங்களே மதத்தில் உள்ளன. ராணுவத்திலும் காவல்துறையிலும், அலுவலகத்திலும் வேலை செய்வதற்குத் தேவையான தகுதிகளில் வித்தியாசமுண்டு. அதுபோல், மாறுபட்ட இயல்புள்ளவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட பல தத்துவங்கள் மதத்தில் உள்ளன. அனைத்தும் ஒன்றே எனும்போது, சில நேரங்களில், சில தத்துவங்கள் நமக்குப் பொருந்தாதவையாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொன்றும் ஒவ்வொருவரைக் கருத்தில் கொண்டு கூறப்பட்டதாகும். மதத் தத்துவங்களை அறிய முற்படுகையில் இந்தத் தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.

நம்பிக்கையின்றி யாரால் வாழ முடியும்? எத்தனையோ பேர் விபத்துகளிலும், வேறு விதங்களிலும் இறக்கின்றனர். பேசிக்கொண்டு நிற்கும்போதே இறந்து விடுகின்றனர். இருந்தபோதும் ‘நாம் இப்போது சாகமாட்டோம்‘ என்ற குருட்டு நம்பிக்கையே நமக்கு இருக்கிறது. இதுபோல் எந்த ஒரு செயலிலும் – அவ்வளவு ஏன்! – ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். இங்கே குண்டு விழாது என்ற நம்பிக்கையால்தான் இப்போது நாம் இங்கே இருக்கிறோம். எத்தனையோ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன; நேரில் கண்டிருக்கிறோம். இருந்தபோதும் வாகனங்களில் பயணம் செய்வது, நாம் பயணம் செய்யும் வாகனம் விபத்துக்குள்ளாகாது என்ற நம்பிக்கையால் தான். தனது மகளைக் கண்கலங்காமல் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில்தான் ஒருவர் தன் மகளை ஒரு ஆடவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். நாம் குடிக்கும் தண்ணீரில் விஷமில்லை என்ற நம்பிக்கையே நாம் அதைக் குடிக்கக் காரணமாகிறது. இப்படிப் பார்க்கும்போது வாழ்க்கையின் எந்த நிலையிலும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நம்பிக்கையே ஆகும். எதையும் நம்பிக்கையுடன் பார்க்கும் போதுதான் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். தான் விரும்பும் பெண் தருகின்ற கசப்பையும், இனிப்பாக எண்ணி அருந்த முடியும்; அதேசமயம் நாம் விரும்பாத ஒருவர் தரும் இனிப்பும் நமக்குக் கசப்பாகத் தோன்றும். எதையும் விரும்ப முடிந்தால் மட்டுமே வாழ்வில் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். அதற்குத் தடையாக நிற்பது நமது சுயநலமாகும். அதைத் துறக்க வேண்டும் என்றே மதம் கூறுகிறது.

மேகங்களில் ஏதோ உப்பைத் (சில்வர் அயோடைடு) தூவி மழை பெய்யச் செய்யலாம் என அறிவியல் கூறுகிறது. ஆனால், அவ்வாறு கிடைக்கும் மழைநீர் சுத்தமானது என்று கூற முடியாது. அதேசமயம், சில குறிப்பிட்ட செடிகள் மற்றும் பிறவற்றை முறையான மந்திர ஜபத்துடன் அக்னியில் ஆஹூதியாக அளிக்கும்போது இயற்கையில் அதற்கேற்ப நல்ல மாற்றம் ஏற்படுகிறது. ஹோமப்புகை மேலே செல்லும்போது அது மழை பெய்விக்க உதவுகிறது. செயற்கை மழையால் கிடைக்கும் மழைநீரை விட யாகங்கள், ஹோமங்களால் பெய்யும் மழைநீர் சுத்தமானதென்று அனுபவித்து அறிந்தவர்கள் கூறுகின்றனர். இயற்கை இழந்துவிட்ட
சமநிலையை ஹோமங்கள், யக்ஞங்கள் போன்றவை மீண்டும் உருவாக்குகின்றன. மூலிகை மருந்துகள் உடலின் நோயைப் போக்குவது போல், தூப, தீப, நைவேத்தியங்களும், ஹோமங்களும் பிறவும் சுற்றுச்சூழலில் தூய்மை ஏற்படச் செய்கின்றன.

கிருமிகளைக் கொல்வதற்குக் கிருமிநாசினிகளையும், நீரைத் தூய்மைப்படுத்த குளோரினையும் உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. மாறாக, நஸ்யம் (ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் ஒன்று) செய்யும்போது சளித்தொல்லை நீங்கி, நுரையீரல் சுத்தமடைவதுபோல் அத்தி, இத்தி, அரசு, தர்ப்பைப்புல் போன்றவற்றை உபயோகித்துச் செய்யும் ஹோமத்தில் எழும் புகையானது சுற்றுப்புறத்திலுள்ள மாசுகளை அகற்றுகிறது. கிரகண சமயத்தில் சூரியனை நேரடியாகப் பார்த்தால் கண்ணிற்குக் கெடுதல் என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. கிரகண சமயத்தில் சாண நீரில் தெரியும் சூரியனின் பிரதிபிம்பத்தை மட்டுமே பார்க்கலாம் என்ற மத ஆசாரத்தைப் பின்பற்றுவதன் மூலம், இந்த அறிவியல் கூற்றின் பயன்தான் நமக்குக் கிடைக்கிறது.

இயற்கை மற்றும் சமூகத்துடன் அன்புடனும், பரஸ்பர ஒற்றுமையுடனும் வாழவே மதம் கூறுகின்றது. இயற்கை அன்னைக்குத் தான் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிப் புரிந்துகொள்வதன் மூலம் மனிதனின் அகந்தை நீங்குகிறது. தன்னையே இயற்கையின் அங்கமாகக் காண்பதன் மூலம் எல்லாம் ஒரு ஆத்மாவே என்பதை அவன் அறிகிறான். உண்மையில் மதம் என்றால் நூறு சதவிகிதம் இயற்கைப் பாதுகாப்பாகும். இயற்கைப் பாதுகாப்பு இருந்தால்தான் நம்மால் வாழ முடியும்.

(தொடரும்)