நவராத்திரி பாரதம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். “நவராத்திரி” என்று சொல்லும்போதே ஒன்பது இரவுகள் என்பது தெளிவாகிறது. நாம் இப்போது இரவில்தான் வாழ்கிறோம்; அதாவது, அறியாமை இருளில் இருக்கிறோம் . அறியாமை இருளை நீக்கி ஞான ஒளியை உள்ளத்தில் பரவச் செய்வதுதான் நவராத்திரி பூஜையாகும். இவ்வாறு ஒன்பது இரவுகள் முடிந்து பத்தாவது நாளான விஜயதசமி வருகிறது. இங்கே விஜயம் என்பது சாதாரண விஜயம் (வெற்றி) அல்ல. அதாவது மனதின் பலவீனங்கள் மற்றும் எல்லைகளின் சங்கிலியை உடைத்து, பரிபூரண சுதந்திரம் பெறும்போது ஏற்படும் விஜயமாகும்.

“நவம்” என்ற வார்த்தைக்குப் புதியது என்றும் பொருளுண்டு. பாபங்கள் எல்லாவற்றையும் கழுவிச் சுத்தம் செய்யும் போது தான் புதிய பிறவி கிடைக்கிறது. அதாவது நாம் துவிஜன் (இரு பிறப்பாளன்) ஆகிறோம். இந்த உடல் பராசக்தியின் வாசஸ்தலமாகும் என்பதை அறிகிறோம். பின்னர் ஆத்மாவின் புதுமையை மட்டும் எங்கும் தரிசிக்க முடிகிறது. நவராத்திரி பூஜையின் முதல் மூன்று தினங்கள் சிம்மவாகினியான துர்க்கையை வழிபடுகிறோம். துர்க்கை என்பவள் சக்தியே வடிவானவள். உக்கிர மூர்த்தி ஆவாள். துர்க்கையை வழிபடுவது நம்முடைய உள்ளத்திலுள்ள விருப்பு-வெறுப்புகள், ஆசை மற்றும் கோபம் முதலியவை அழிந்து போவதற்காகவே ஆகும். சக்தி இருந்தால் தான் மனம் உறுதி பெறும். அப்போதுதான் நமது உள்ளத்தில் உள்ள எதிரிகளை அழிக்க முடியும்.மனம் சலனமற்று இருக்கும்போது பிறக்கும் சக்தியே துர்க்கை. தேவியின் வாள் வைராக்கியத்தின் சின்னமாகும். அது ஞானவாள். இறைவனை அறிவதற்கான தீவிரமான தாகமே வைராக்கியமாகும். அந்த வாளால்தான் மனதின் அசுரகுணங்களை அழிக்க முடியும். மகிஷாசுரனை தேவி அழிப்பதன் தத்துவம் இதுவே ஆகும். உண்மையில் துர்க்காதேவியை வழிபடுவதன் மூலம் நம்முடைய அகத்தில் உள்ள சக்தியையே விழிப்படையச் செய்கிறோம். அந்த சக்தி விழிப்படைந்தால் தான் மனதின் பலவீனங்களுடன் போர் செய்து தோல்வியுறச் செய்ய முடியும்.

இவ்விதம் ஆத்மசக்தியால் தீயவாசனைகளை அகற்றிவிட்டால் அடுத்தபடியாக நற்குணங்கள் மனதில் நிறையும். அதற்காகவே அடுத்த மூன்று தினங்கள் ஐஸ்வர்யத்தின் தேவியான இலட்சுமியை (திருமகளை) வழிபடுகிறோம். இலட்சுமி பூஜையின் மூலம் அன்பு, கருணை, இரக்கம், தானம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற தெய்விகச் செல்வத்தைப் பெறவேண்டும். மன மாசுகளை அகற்றி, அங்கே நற்குணங்கள் தோன்றி விட்டால் ஞானம் உதயமாகும். அதனால் தான் கடைசி மூன்று நாட்களில் வித்யா வடிவமான சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.

பத்தாவது நாள் விஜயதசமி.இதைத் தசரா என்றும் கூறுவர். “தச பாப ஹர” என்பதே இதன் பொருள். பத்து பாபங்களை அழித்தல்; அதாவது ஐந்து ஞானேந்திரியங்களின் மூலமும், ஐந்து கர்மேந்திரியங்களின் மூலமும் மனம் உலக சுகங்களை அனுபவிக்கிறது.    அதனால்தான் எங்கும் நிறைந்துள்ள இறைவடிவை நம்மால் உணர முடியவில்லை. வெளிமுகமாக நிற்கும் இந்த பத்து இந்திரியங்களே தசபாபங்களைச் (பத்து பாபங்களை) செய்கின்றன. அவற்றை அழித்து, ஞானத்தின் வெற்றியைப் பெறும் நாளே விஜயதசமியாகும்.

நவராத்திரியின் கடைசி மூன்று தினங்கள் தொழிலாளியும், முதலாளியும், பண்டிதரும், பாமரரும், ஏழையும் பணக்காரரும், பிராமணரும் அல்லாதாரும் மாணவமணிகளும், ஆசிரியர்களும் தாங்கள் வேலைசெய்ய உபயோகிக்கும் ஆயுதங்களைப் பூஜைக்கு வைக்கிறார்கள். ஜப, தியானங்களுடன் இந்த நாட்களைச் செலவிடுகிறார்கள். அனைத்தையும்  ( உயிருள்ள. உயிரற்ற பொருட்களை) இந்நாட்களில் வழிபடுகிறார்கள்.அறிவின் ஆதாரமான அக்ஷரத்தையும், அழிவற்ற பராசக்தியையும் அனைவரும் வணங்குகின்றனர். முதல் அக்ஷரங்களான “ஹரி:ஸ்ரீ” என்பதை எழுதி, குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் எல்லையற்ற அறிவின் முன்னர் சிறுகுழந்தைகள் ஆகிவிடுகின் றனர். இதை எப்போதும் நினைவுகூர முடிந்தால் வாழ்க்கை பொருளுள்ளதாகும். பின்னர் சக்தி வடிவான தேவி நமக்கு என்றும் வெற்றியை வழங்குவாள்.

மூன்றிற்கும் அவற்றின் பெருக்குத் தொகைக்கும் இந்து மதத்தில் சிறப்பான இடம் உண்டு. குறிப்பாக 18க்குத் தனி இடமுண்டு. நம்முடைய சாஸ்திரத்தின்படி (எண்ஜோதிடம்) 18க்கு ஜயம்,விஜயம் என்ற பொருள் உண்டு. மகாபாரதத்தின் மற்றொரு பெயர் ஜய என்பதாகும். பகவத்கீதைக்கு 18 அத்தியாயங்கள் உள்ளன. 18 அக்ஷரோணி படைகள் மகாபாரதப் போரில் பங்கெடுத்தன.குருக்ஷேத்திரப் போர் 18 தினங்கள் நடைபெற்றன. பகவான் 18 லட்சணங்களின் (இயல்புகள்) மூலம் ஸ்திதப் பிரக்ஞனை விவரிக்கிறார். நம்முடைய புராணங்களும், உபபுராணங்களும் 18 ஆகும். நவராத்திரியிலும் 9 உண்டு. 18-ன் பாதியே 9 ஆகும். சுருங்கக்கூறின், அனாத்மாவைத் தோல்வியுறச் செய்து ஆத்மஞானம் பெறுவதே நவராத்திரியின் தத்துவமாகும்.

(அம்மா மஹாநவமி அன்று (2007 ) வழங்கிய அருளுரை )