காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் அம்மாவின் 57-வது பிறந்த நாள் விழா மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதற்குப் பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.

சரியாக 9 மணி அளவில் அமிர்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் அம்மாவை மோகினி ஆட்டத்துடன் மேடைக்கு வரவேற்றனர். அப்போது அமிர்த விஸ்வ வித்யா பீடத்தின் அமிர்தபுரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் அமைந்த பிறந்த நாள் விழாத் திடல் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது.


சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் அம்மாவுக்குப் பாத பூஜை செய்தார்.அதன் பின்னர் குரு ஸ்தோத்ர பாராயணம் மற்றும் அம்மாவின் அஷ்டோத்தர அர்ச்சனையும் நடைபெற்றது. அதன்பின் அம்மாவின் மூத்த துறவிச் சீடர்கள் அம்மாவுக்கு மாலை அணிவித்தனர். அம்மாவின் அருளுரையின் முடிவில் சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அப்போது சுவாமி,” இன்று உலகம் முழுவதும் அம்மாவை உற்று நோக்குகிறது. அம்மா என்ன செய்கிறார்?அம்மா நமது கண்ணோட்டத்தை ஏழை எளியோர்,துன்பப்படுவோர், சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளோர், நோயாளிகள் மற்றும் கதியற்றோர் இவர்களை நோக்கித் திரும்புமாறு செய்கிறார்.மேலும் நமது பார்வையை விதவைகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோரிடம் இரக்கம் காட்டும்படி மாற்றுகிறார். உண்மையில், இதுதான் அம்மாவின் பிறந்தநாள் செய்தியின் ஒரு பகுதியாகும். பிறப்பு — உண்மையான பிறப்பு என்பது நமது நலனை விட மற்றவர்களது நலத்தையே பெரிதாகக் கருதி அவர்களை முன்னேற்றுவதாகும். உலகம் முழுவதையும் உன் இதயத்தில் நிறைத்து விட்டு நீ சுதந்திரமாக இரு . இதுதான் அம்மாவின் உபதேசமாகும்” என்றார். . அதன் பின் அம்மாவின் அருளுரை நடைபெற்றது. அதை சுவாமிஜி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

நமது மடத்தின் பல புதிய நலத் திட்டங்கள் அன்று தொடங்கி வைக்கப் பட்டன. அமிர்த ஸ்ரீ காப்பீட்டுத் திட்டம் என்பது மடத்தின் சுய தொழில் உதவிக்குழு அமைப்பும் (அமிர்த ஸ்ரீ ) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும் ( LIC ) இணைந்து செயல்படும் ஒரு திட்டமாகும். மத்திய அமைச்சர் உயர்திரு.குருதாஸ் காமத் அவர்கள், எல்.ஐ.சி கோட்ட மேலாளர் திரு. துரைசாமி அவர்களிடமிருந்து காப்பீட்டுத் திட்டத்திற்கான பாலிசிப் பத்திரத்தைப் பெற்று அமிர்த ஸ்ரீ ஒருங்கிணைப்பாளர் திரு.ரெங்கநாதன் அவர்களிடம் ஒப்படைத்தார். இத்திட்டத்தால் (விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ) மடத்தின் கீழ் இயங்கி வரும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அமிர்தா சுய உதவிக்குழு உறுப்பினர்களும் அவர்களது குடும்பமும் பயன்பெறும்.

அமிர்த நிதித் திட்டத்திற்கான புதிய பயனாளிகளுக்கு மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ் மற்றும் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு. உம்மன் சாண்டி அவர்களும் காசோலைகளை வழங்கினர். தற்போது மடம் அமிர்த நிதி உதவித் தொகையை உயர்த்தியுள்ளது.

500 புதிய மாணவர்களுக்கு வித்யாமிர்தம் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைகான காசோலைகளைக் கேரள அமைச்சர் திரு. திவாகரன் மற்றும் ஹரிப்பாடு தொகுதி எம்.எல்.ஏ. பாபு பிரசாத் அவர்கள் வழங்கினர்.

அமெரிக்கப் பத்திரிக்கையாளர் ஜூடித் கார்னல் எழுதிய அம்மாவின் வாழ்க்கை வரலாற்றின் மலையாள மொழிபெயர்ப்புப் பதிப்பை ( AMMA) மாத்ருபூமி புத்தகப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் முதல் பிரதியை ஜாக்கோபைட் சிரியன் ஆர்த்தோடாக்ஸ் கிறித்தவ சபையைச் சேர்ந்த அருட்தந்தை. மார் ஜீவர்கீஸ் கூர்லஸ் அவர்கள் வெளியிட்டார்.

அமிர்தா பல்கலைக் கழக மாணவர்கள், அமிர்த வித்யாலய மாணவர்கள் மற்றும் அமிர்தா யுவதர்மதாரா உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் இந்தியாவைத் தூய்மையாகப் பேணிக்காக்கவும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மற்றும் உள்ளூர் இளைஞர்கள் மது,புகையிலை மற்றும் போதைப் பொருள் இவற்றிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதை சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

மாத்ருவாணி இதழின் பிறந்தநாள் சிறப்புப் பதிப்பின் முதல் பிரதியை சிவகிரி ஸ்ரீ நாராயண குரு மடத்தின் தலைவர் சுவாமி பிரகாசானந்தா அவர்கள் வெளியிட பன்மனா சட்டம்பி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரணவானந்த தீர்த்த பாதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நமது ஆசிரம இணைய தளம் முதன் முறையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி,பெங்காலி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 9 மொழிகளில் வெளியிடப் பட்டது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். புதிய இணையதளத்தின் முகவரி www.amrita.in என்பதாகும். இதில் அம்மாவின் வாழ்வு, உபதேசங்கள், மற்றும் ,ஆசிரமத்தைக் குறித்த விவரங்கள் ஆகியவற்றைத்  தங்களது தாய்மொழியில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதை மார்த்தோமா கிறித்துவ திருச்சபையின் அருட்தந்தை.மார் கிறிஸ்டோட்டம் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்.

அம்மா 54 ஏழை ஜோடிகளுக்கு  இலவசத் திருமணம் நடத்தி வைத்தார். இவர்களுக்கான முழுத்  திருமணச் செலவையும் மடமே ஏற்றுக் கொண்டது. திருமணம் முடிந்ததும் நண்பகல் சுமார் 1 மணி அளவில் அம்மா தரிசனம் தரத் துவங்கினார். விழாவில் கலந்து கொண்ட  எல்லாப் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தரிசனத்துக்கு இடையில் அம்மா அதிக எண்ணிக்கையில் மாத்ரு வாணி சந்தாதாரர்களைச் சேர்த்த பிரசாரகர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். அமிர்தா பல்கலைக் கழகம் மற்றும் அமிர்த வித்யாலய மாணவ-மாணவிகளின், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று இரவு ஊட்டியைச் சார்ந்த படுகர் இன பக்தர்களின்  பாரம்பரிய நடனம் நடைபெற்றது. அவர்கள் ஆடிய ஆட்டத்தில் மற்ற பக்தர்களும் வெளிநாட்டவரும் கலந்து கொண்டு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அம்மாவின் நீண்ட தரிசனம் மறுநாள் காலை சுமார் 9 மணி அளவில் நிறைவடைந்தது.