கேள்வி: அம்மா அத்வைதம்தான்  உண்மையெனில் பாவதரிசனத்தின்தேவையென்ன?

அம்மா: அத்வைதம்   பேசும் வேதாந்திகளில்  யாரும் ஆடை அணியாமல் நடப்பதில்லையே? அவர்களும் உடை அணிகிறார்கள், உண்கிறார்கள, உறங்குகிறார்கள், அவை உடல் வாழ்க்கைக்குத் தேவை என்பது அவர்களுக்குத் தெரியும். சமூகத்தின் இயல்புக்கு ஏற்ப உடை அணிகிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப மகான்கள் வருகிறார்கள். ஸ்ரீராமர் வந்தார்:. ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார் ஸ்ரீராமரை போல் ஸ்ரீகிருஷ்ணர் இருக்க வேண்டும் என்று சொல்வதில் பொருளில்லை.

மருத்துவரிடம் பலவித நோயாளிகள் வருவார்கள் எல்லாருக்கும் ஒரே மருந்தை கொடுக்க முடியாது. ஆளுக்கும் நோய்க்கும் ஏற்பவே சிகிச்சையை நிச்சயம் செய்கிறார். சிலருக்கு மாத்திரை கொடுப்பார் சிலருக்கு ஊசி குத்த நேரிடும். அதுபோல் இங்கே வருபவர்களை அவர்களின் நிலைக்கு இறங்கி சென்று உயர்த்தவேண்டும். சாக்லேட் பலதரப்பட்ட பல மாறுபட்ட நிறமுள்ள காகிதங்களில் சுற்றப்பட்டு இருப்பதை காணலாம். உள்ளே இருக்கும் சாக்லேட்டின் சுவை ஒன்றுதான். வெளியில் பார்க்கும் போது வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றும். இதேபோல் அனைவரிலும் குடியிருப்பது ஒரே சைதன்யம்தான். இதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டுமெனில் முதலில் நாம் அவர்கள் நிலைக்கு இறங்கிச்  செல்ல வேண்டும். அதேசமயம், அங்கேயே அவர்களை நிறுத்தாமல் அவர்களையும், அத்வைத உணர்வு நிலைக்கு உயர்த்திக் கொண்டு வருவதுதான் அம்மாவின் நோக்கம். அதையே அம்மா செய்கிறேன். அனைவரிடமும் அத்வைதம் கூற முடியாது. அனைவருக்கும் குணமற்ற உருவமற்ற பரம்பொருளை உட்கொள்ள முடியாது.

சிலருக்கு ராதாகிருஷ்ணனையும், சிலருக்கு யசோதா கிருஷ்ணனையும் பிடிக்கும். சிலரோ முரளிகிருஷ்ணனை விரும்புவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் அவர்களது ஆனந்தம் அடைகிறார்கள் அது தவறென்று சொல்லமுடியாது. அனைவரும் ஒரே தெய்வத்தை விரும்ப வேண்டும் என்று அம்மாவால்  சொல்ல முடியாது. அதுபோல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனோபாவத்தில் அம்மாவை உட்கொள்கிறார்கள்.

தத்துவத்தை போதித்த போது அதற்கு தகுந்த சம்ஸ்காரம் உள்ள சிலரால் உயர்ந்த நிலையை அடைய முடிந்தது. மற்றவர்களுக்கு அதில் ஆழ்ந்து செல்ல முடியவில்லை. சிலர் மிகவும் பலவீனர்களாக ஆனார்கள். ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் சிலர் உண்டு. கேட்டால், “யார் யாருக்கு சேவை செய்வது? எல்லாம் ஒரு ஆத்மாவல்லவா”  என்பர். “ஏன் மதுவருந்தினாய்?” என்று கேட்டால், “நான் குடிக்கவில்லை, நான் ஆத்மா” என்று பதிலளிப்பர். இப்படி அத்வைதத்தை பேசியும், மதுவருந்தியம், பெண்களுக்குத் தொல்லை கொடுத்தும் வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் செய்யும் தவறுகளை மறைக்க பயன்படுத்தும் ஒரு திரையே வேதாந்தம். எல்லாம் ஒரே ஆத்மா என்று அனுபவித்து அறிவது  வரை நிலையானது எது, நிலையற்றது எவை என்று அறிந்து விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தர்மம் எது அதர்மம் எது என்று அறிந்து அதை விட வேண்டும். சாக்லேட் இனிப்பாக இருக்கிறது என்பதால், அளவின்றி தின்றால் வயிற்றுவலி வரும். “கொல்துதான் எனக்கு சந்தோஷம்” என்று சொல்லி ஒருவன் கண்ணில் காண்பவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும்?

எதற்கும் ஒரு தர்மம் உண்டு.மக்களை அந்த தர்மத்திற்கு ஏற்ப வாழ தகுந்தவர்களாக ஆக்கவேண்டும். அங்கே வேதாந்தம், வெறும் வார்த்தையில் நின்றுவிடாமல், செயலில் வெளிப்படவேண்டும். தர்மத்தைப் பின்பற்றி வாழ தகுந்தவர்களாக மக்களை ஆக்க  வேண்டுமெனில் நாம் முதலில் அவர்கள் நிலைக்கு இறங்கி செல்ல வேண்டும். “அம்மாவுக்கு இவை ஒன்றும் தேவையில்லை” என்று சொல்லி விலகி இருந்தால் மக்களை உயர்த்த முடியாது. செவி கேட்காதவர்களுக்கு சைகை மூலம் கற்பிக்கிறோம். அதன் பொருள் கற்பிப்பவருக்கு  பேச்சு வராது என்பதல்ல. சைகை மூலமே, அவர்களுக்கு விஷயங்களை உணர்த்த முடியும். அம்மா சைகை காட்டுவதும், அம்மாவுக்கு மொழி தெரியாத காரணத்தால் அல்ல; பிறரை விழிப்புறச் செய்ய அது தேவைப்படுகிறது. “பொய் சொன்னால் கண் குருடாகும்” என்று சொல்வது குழந்தைகளுக்கு கற்பிக்கவே ஆகும். அது உண்மையாக இருந்தால் இன்று உலகில் குருடர்கள் மட்டுமல்லவா இருப்பார்கள்?  சொல்வது பொய்யாக இருந்தாலும், அதன் மூலம் குழந்தைகளை உண்மை சொல்பவர்களாக ஆக்க முடிகிறது. இதுபோல், மக்களின் இயல்புக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள நேரிடும். எப்படியாவது மக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம். மக்களை அறியாமையில் இருந்து விடுவிக்க உதவுவது எதுவோ அதுதான் யதார்த்த பகுத்தறிவு. மக்களின் விடுதலையைத் தவிர உலகின் நற்சான்றிதழ் எதையும் அம்மா  எதிர்பார்க்கவில்லை.

ஒரு மனிதன் சகதியில் விழுந்து கிடப்பதை வீட்டின் மாடியிலிருந்து ஒருவன் கண்டான். அங்கிருந்த அந்த மனிதன் கைநீட்டி  விழுந்து கிடப்பவனைத் தூக்கமுடியாது. அவன் கீழே இறங்கிச் சென்று சகதியில் கிடப்பவனின் கைகளைப் பிடித்து தூக்க வேண்டும். இதுபோல், மக்களை விடுதலை பெறச் செய்ய வேண்டுமெனில் நாம் அவர்களின் நிலைக்கு இறங்கி செல்ல வேண்டும்.

சந்தைக் கடந்தே நெடுஞ்சாலையை  அடையமுடியும். நெடுஞ்சாலையை அடைந்து விட்டால் பின்னர் நேராக நடக்கலாம். நல்ல வாகன வசதி உண்டு. பேருந்து உண்டு. ஆனால், சந்திலிருந்து நெடுஞ்சாலையை அடைய வேண்டாமா? அதற்கு சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா ஆகியவற்றின்  உதவி தேவை. அதுபோல், பந்தம், பாசம் என்ற சந்துகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை அத்வைதம் நெடுஞ்சாலை அடையச்செய்ய மற்ற மார்க்கங்கள் எல்லாம் தேவையே.