குழந்தைகளே,
நமது வாழ்வில் சொத்தும், வருமானமும், வாகனங்களும் பிற சுக சௌகரியங்களும் தேவையே. ஆனால், அவற்றைத் தேடி அடைவதில் மட்டும் மூழ்கியிருப்பதல்ல மனித வாழ்வின் லட்சியம். தன்னைப்போல் பிறரையும் காணக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வதே சரியான வாழ்க்கை வெற்றியாகும். அவ்வாறு அல்லாத வெற்றி, ஒருவிதத்தில் மனிதனுக்கும், சமூகத்திற்கும் தோல்வி ஆகும்.

திறமைகளை வளர்த்துக் கொள்வதால் மட்டும் நாம் வெற்றி பெற முடியாது. எந்த சூழ்நிலையிலும் மனதை அமைதியாக வைத்திருக்க இயல வேண்டும். இல்லாவிடில், நமது திறமைகளைக் கூட முழுமையாக பயன்படுத்த முடியாது போய்விடும். ஒருமுறை உயர்கல்வி பயின்ற இளைஞன் ஒருவன், வேலை தேடி நேர்முகத்தேர்வுக்குச் சென்றான். தேர்வாளர் இளைஞனிடம், “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். பதற்றமாக இருந்த காரணத்தால், இளைஞன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான்; பின்னர், விரலை கடிக்க ஆரம்பித்தான். தொடர்ந்து, அவன் மெல்லிய குரலில் பாடுவதை தேர்வாளர் கேட்டார். “நீ ஏன் பதில் கூறவில்லை?” என்று அவர் கேட்டார். அதற்கு அவன், “நான் ஹேப்பி பர்த்டே டூ யூ என்று பாடி பார்க்கிறேன். அதன் இறுதியில் என் பெயர் வரும் என்றான்” இதுபோல், பதற்றத்தால் பெரும்பாலும் நமது பெயர் கூட நமக்கு நினைவுக்கு வருவதில்லை. திறமைகள் எவ்வளவுதான் இருந்த போதும், மனம் சலனமடையும். சலனம் நீங்கும் வரை, அந்தத் திறமைகளை முறையாக பயன்படுத்த முடியாது. உலகின் பார்வையில் வாழ்வில் வெற்றி பெற்றவனாகத் தோன்றும் ஒருவன், உண்மையில் தோல்வி அடைந்த வனாக இருப்பான். மாறாக, உலகின் பார்வையில் தோல்வி அடைந்ததாக காணப்படும் ஒருவன், உண்மையில் வெற்றி பெற்றவனாக இருப்பான். “வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற விஷயத்தைக் குறித்து நூல் எழுதி, புகழும், செல்வமும் சம்பாதித்த ஒரு எழுத்தாளர், இறுதியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கேட்டிருக்கிறேன். வாழ்வில் வெற்றி பெறுவது குறித்து எழுதுவதாலோ, படிப்பதாலோ, சொற்பொழிவாற்றுவதாலோ ஒரு பயனுமில்லை. மனதை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை என்றால், மேற்கூறிய திறமைகள் இருந்தும், அவற்றால் ஒரு பயனும் இல்லாது போகும்.

அம்மாவுக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. வில் பயிற்சி பெற்ற ஒருவன், பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான்; இறுதியில், உலகக் கோப்பையும் அவனுக்கு கிடைத்தது. இதைக்கேட்ட அவனுடைய நண்பன் ஒருவன் அவனிடம், “வில்பயிற்சியில் திறமை உள்ள ஓர் ஆன்மீக குரு இருக்கிறார். நீ போட்டியில் அவரை வென்றால், உன்னை நான் உலகையே வென்றவனாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றான். அந்த வீரனும் நண்பனின் அறைகூவலை ஏற்று, குருவின் ஆசிரமத்திற்கு வந்தான். இருவரையும் குரு வரவேற்றார். நண்பன் குருவிடம், “இவன் வில்வித்தையில் வென்று, உலகப் பதக்கம் பெற்றவன்” என்றாலன். அதைக் கேட்ட குரு, அவனது வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறினார். அப்போது நண்பன் குருவிடம், தாங்கள் இருவரும் வந்ததன் நோக்கத்தை தெரிவித்தான். குரு இருவரையும் நோக்கி, “நாம் சற்று நேரம் நடந்து விட்டு வரலாம்” என்றார். பின் வில் வீரனிடம், கையில் வில்லையும், அம்பையும் எடுத்து கொள்ளுமாறு கூறினார். வெகுதூரம் நடந்த அவர்கள், உயரமான மலையின் சிகரத்தை அடைந்தனர். அங்கே அந்த மலையை மற்றொரு மலையுடன் இணைக்கும் தொங்கு பாலம் இருந்தது. மலைகளுக்கு நடுவில் மிகப்பெரிய நதி ஒன்று பெருகி ஓடிக்கொண்டிருந்தது. மூவரும் தொங்கு பாலத்தில் நடக்க ஆரம்பித்தனர். பாலத்தின் நடு பாகத்தை அடைந்தபோது குரு, “மறு கரையிலுள்ள அந்த மரத்தில் ஒரு பழம்தான் உள்ளது. அதை நீ அம்பெய்து வீழ்த்துவாயா?” என்று கேட்டார். வில் வீரன் அம்பைத் தொடுத்தான். அப்போது வீசிய பலமான காற்றில், தொங்குபாலம் பயங்கரமாக ஆடியது. பாலத்திலிருந்து கீழே உள்ள நதியில் விழுந்து விடுவோமோ என அந்த வீரன் பயந்தான். பயத்தால் அவனது உடல் நடுங்கியது. அவன் மிகவும் கஷ்டப்பட்டு, ஒரு விதமாக தன்னை கட்டுப் படுத்தியபடி அம்பைச் செலுத்தினான். ஆனால் அது குறியை எட்டவில்லை. குருவின் முறை வந்தபோது, அவர் மிகவும் அமைதியுடன் அம்பை எடுத்து, வில்லில் தொடுத்தார். அப்போதும் பாலம் மிக வேகமாக ஆடிக்கொண்டிருந்தது. ஆனால், குருவின் கவனம் முழுவதும் பழத்தின் மீதே இருந்தது. அவர் ஒரே அம்பில் பழத்தை வீழ்த்தினார். தனது மனதின் “ரிமோட் கன்ட்ரோல்” அவரது கையில் இருந்தது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் எச்செயலும், அவரது கவனத்தை சிறிதும் தடுமாறச் செய்யவில்லை. இதனால், அவருக்கு சிறிதும் பயம் தோன்றவில்லை.

ஆடிக்கொண்டிருக்கும் மேடைமீது மன அமைதியுடன், நன்றாக நடனம் ஆட முடியுமா? அமைதி இழந்த மனதுடன் வாழ்க்கை நடத்துவதும் அது போன்றதே ஆகும். எந்தவித மாறுபாடும், தடுமாற்றமும் இல்லாமல் இருப்பவர் இறைவன் ஒருவரே. அந்த இறைவனை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டால், நம் மனமும் தடுமாற்றமின்றி, அமைதியாக இருக்கும். இறைவன் எனும் அசைவற்ற மேடைமீது தான் நாம் வாழ்வெனும் நடனத்தை ஆட வேண்டும். ‘என்றும், எப்போதும் நமக்கு நிழல் தந்து காப்பதற்கு இறைவன் இருக்கிறார்’ என்ற உறுதியான உணர்வு நமக்கு இருந்தால், எந்தவித பயமோ, சந்தேகமோ இன்றி, நம் வாழ்க்கையை வாழ முடியும். அது நம் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கும். பிறருக்கும் மகிழ்ச்சியை அளிக்க நமக்கு இயலும்.