குழந்தைகளே,
நான் விரும்புவதை காணவும், கேட்கவும், சொல்லவும் கூடிய சுதந்திரம் இருந்து விட்டால், நம் எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறோம். ஆனால், இக்கருத்து சரியல்ல. சுதந்திரமின்மை துன்பத்திற்கு காரணம் என்பது போல், அளவுகடந்த சுதந்திரமும் நமது துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரணமாகிவிடும்.

பாரத மக்களுக்கு இருப்பதைவிட, மேலை நாட்டு மக்களுக்கு சுதந்திரம் மிக அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கும் துன்பமும், நிராசையும் உண்டு. சரியான சுதந்திரம் வெளியில் உள்ளதல்ல. மாறாக, அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும்; தனக்குள் கண்டடைய வேண்டியதாகும். விருப்பு வெறுப்புகளிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுதலை அடைந்தால், பின் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நாம் சுதந்திரமாக இருப்போம்.

இன்று மேலை நாட்டவர் உலகியல் வாழ்வை துறந்து ஆன்மீகத்தை நோக்கி திரும்புகிறார்கள். அவர்கள் பாரதிய பண்பாட்டை குறித்து படிக்கவும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர். ஆனால், நாம் உலகில் சுகங்களில் அதிகமாக மூழகுவதுடன், மேலை நாட்டவரின் வாழ்க்கை முறையை பின்பற்றுவதில் உற்சாகம் காட்டுகிறோம். அவர்கள் தின்று துப்பிய சக்கையை பெரிதாகக் கருதி, நாம் அதை எடுத்து விழுங்குகிறோம்; சனாதன தர்மத்தின் நன்னெறிகளை அலட்சியம் செய்கிறோம்.

மேலைநாட்டவர் எதையும் படித்து புரிந்து கொண்ட பிறகே நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ இதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறோம். நமது நம்பிக்கை என்பது ஆலயங்களில் நின்றுவிடுகிறது. யாராவது ஒருவர் அதை சிறிதளவு விமர்சனம் செய்தாலும், மாறிவிடும் அளவு சக்தியே அந்த நம்பிக்கைக்கு உள்ளது. நமது அறிவு சந்தேகத்திற்கு இடமில்லாதது ஆக ஆக வேண்டும். அது ஆழமாக வேரூன்ற வேண்டும். அப்படிப்பட்ட அறிவானது, எத்தகைய எதிரான சூழ் நிலையையும் கடந்து செல்லும் ஆற்றல் உள்ளதாக இருக்கும். யுக்திபூர்வமான சிந்தனையையம், விசாரணையையும் நமது இயல்பாக ஆக்கவேண்டும். மேலைநாட்டவர் எழுதிய நூல்களைச் சார்ந்தே இன்று பாரதப் பண்பாட்டை குறித்து நாம் படிக்கவும், மதிப்பிடவும் செய்கிறோம். இந்த கண்ணோட்டம் மாற வேண்டும்.

அம்மா உலகில் எத்தனையோ நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். அந்நாட்டு மக்களுக்கு எல்லாம், தங்களுடைய பாரம்பரியத்தை குறித்தும், ஆச்சாரங்களை குறித்தும் மிகுந்த பெருமிதமும், மதிப்பும் உண்டு. ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் உள்ள ஆதிவாசிகளுக்குக் கூட தங்களுடைய பாரம்பரியத்தில் பெருமிதம் இருக்கிறது. ஆனால் பாரத மக்களான நமக்கோ, நமது பண்பாட்டை குறித்த அறிவும் இல்லை; பெருமிதமும் இல்லை. நம்மில் பெரும்பாலோர் அதை மிகவும் அற்பமாக காண்கிறார்கள். அஸ்திவாரம் ஆழமாக இருந்தால் மட்டுமே, உயரமான கட்டிடத்தை எழுப்ப முடியும். அதுபோல் முன்னோர் வழி வந்த பண்பை குறித்தும், நமது மூதாதையரின் வாழ்வைக் குறித்த அறிவும், பெருமிதமும் இருந்தால்தான் சிறப்பு மிகுந்த நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்க நமக்கு இயலும்.

“இந்த மனோபாவம் குறுகிய சிந்தனையின் விளைவு அல்லவா?” என்று சிலர் கேட்கக்கூடும். நமது பாரம்பரியத்தை குறித்த அறிவும், பெருமிதமும் உலகிற்கு நன்மை செய்யுமாறே நம்மை தூண்டுகின்றன. நற்செயல் புரிவதற்கு உற்சாகமூட்டும் ஒன்று, ஒருநாளும் குறுகிய சிந்தனையல்ல. சுதந்திரதின விழாவை கொண்டாடும் இவ்வேளை, ஆத்ம நிந்தனைக்கும், பிறரைப் பழிப்பதற்கும் உரிய வாய்ப்பல்ல. மாறாக, நமது தவறுகளை திருத்தவும், நற்செயல்களில் ஈடுபடவும் வேண்டிய வேளையாகும். அனைவரும் உறுதியுடனும், ஒரு மனதாகவும் செயல்பட்டால் மக்களின் அறியாமைக்கும், ஏழ்மைக்கும் முடிவைக் கொண்டு வரலாம்.

சுதந்திர தின விழா கொண்டாடும் இவ்வேளையில், நாம் செய்ய வேண்டியது என்ன? புகை பிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைக் கைவிட உறுதிகொள்ள வேண்டும். மது அருந்துபவர்கள், அப்பழக்கத்தைத் துறப்பதாக தீர்மானம் எடுக்க வேண்டும்.இத்தீய பழக்கங்களுக்குச் செலவிட்டு வந்த பணத்தை சேமித்தால், அதைப் பயன்படுத்தி, கிராமங்களில் உள்ள குடிசைகளுக்கு பதிலாக வீடுகள் கட்டிக் கொடுக்கலாம். பணம் இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டி படிக்க வைக்கலாம். இளைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி, கிராமங்களில் உள்ள சாக்கடைகள் போன்றவற்றை தூய்மை செய்து, கிராம சுற்றுப்புற தூய்மை நிறைந்ததாக ஆகலாம். இப்படியாக, ஒவ்வொருவரும் முயன்றால், நம் பாரதம் ஐஸ்வர்யம் நிறைந்ததாக ஆகும். பூமியையே நம்மால் சொர்க்கமாக மாற்ற முடியும்.