பிறப்பு இறப்பு அற்ற சர்வேஸ்வரன் ஒரு மனிதக் குழந்தையாக வந்து அஷ்டமிதிதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நன்னாளே ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாகும்

பகவான் அவதரித்த நேரத்தில் சுற்றிலும் ஒளி நிறைந்தது. திசைகள் தெளிவடைந்தன. மனிதர்களின் மனங்கள் ஆனந்தமடைந்தன. செடிகளும் மரங்களும் பூக்கள் நிறைந்ததாக மாறியது. பகவான் இருந்த சிறைக்கதவுகள் தானே திறந்தன. சிறையிலிருந்த வசுதேவருடைய கால்களில் கட்டிய சலங்கைகள் தானே அவிழ்ந்ததன. குழந்தை கிருஷ்ணருடன் அவர் கடந்து செல்ல யமுனை நதி வழிவிட்டது. என்றெல்லாம் பாகவதத்தில் கூறப்படுகிறது.

பகவான் அவதரித்த நேரத்தில் இயற்கையில்க் காணப்பட்ட மாற்றங்களைப் போல நமது மனதிலும் ஞானத்தின் ஒளி, நிறைந்து காணப்படும் வசுதேவரைப் போல பகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்விலும் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும். நாம் நமது இலட்சியத்தை விரைவில் அடைவோம்.

பக்தர்களுக்கு மகிழ்ச்சியளித்தல், தர்மத்தை பாதுகாத்தல், காலத்திற்கேற்றவாறு தர்மத்தை வெளிப்படுத்துதல், சமூகத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தேவையான உபதேசங்களை கொடுத்தல், நம்முடைய பண்பாட்டை எல்லா வழியிலும் உயர்த்துதல், எதிர்கால சந்ததி வழிபடக்கூடிய வகையில் நல்ல லீலைகளை புரி தல், போன்றவையே அவதாரத்தின் தர்மங்கள். இவையனைத்தையும் தன்னிகரற்ற முறையில் பகவான் தமது வாழ்வில் கடைபிடித்தார். ஒரு பொழுதும் குறையாத பிரசாத மதுர பாவம், விதவிதமான செயல்களில் ஏற்படுதல், எதனுடனும் ஒட்டாமல் தாமரை இலை தண்ணீர் போல் இருத்தல் போன்ற்வை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தனித்தன்மை ஆகும்.

மேடையில் பலப்பல வேடங்கள் அணியும் ஒரு நடிகனைப்போல தனது வாழ்க்கையையே ஒரு மேடையாக்கினார், லாகவத்துடன் ஒவ்வொரு வேடங்களையும் பூண்டார், அதே லாகவத்துடன் அணிந்த வேடங்களை கழற்றவும் செய்தார். எதிலும் அவர் ஒட்டவில்லை ஆனாலும் அனைத்தையும் அவர் சிறப்பாக்கினார். மனதை முற்றிலுமாக வெல்லும்பொழுதே நாம் முழுமையடைகின்றோம் பகவான் முற்றிலும் தனது மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அதுவே அவரை நாம் பூர்ணாவதாரம் என்று சொல்லக் காரணம் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்லும் லாகவத்துடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் புன்னகையுடன் எதிர்கொண்டார். காற்று எல்லா இடத்திலும் இருந்தாலும் ஒரு இடத்திலும் அது தங்கி இருப்பதில்லை அதை யாராலும் கட்டவும் முடியாது. பகவானும் அதுபோலவே இருந்தார்.ஸ்ருதியும் தாளமும் லயமும் கொண்ட இனிமையான ஒரு சங்கீதத்தைப் போல அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. அவரது வாழ்வின் முழுமை அவரது உபதேசங்களிலும் பிரதிபலிக்கின்றது. வாழ்வில் அனைத்துத் துறையில் இருப்பவறையும் உயர்த்தும் வகையில் ஆன்மீகமாகவும் உலகியலாகவும் அவருடைய உபதேசம் அமைந்திருந்தது.

பகவான் எனப்படும் அன்புச் சூரியன் எப்பொழுதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாம் நமது வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்து விட்டு உள்ளே அமர்ந்து பிரகாசம் அல்லது ஒளி வீட்டில் வரவில்லை என்று குறை கூறுவது சரி இல்லை. அகந்தை எனும் கதவைத் திறந்து நாம் வெளியே வரவேண்டும் அப்பொழுது பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் எனப்படும் அன்பின் இனிமையை நாம் அனுபவிக்கலாம் அந்த அன்பிற்கு குழந்தைகள் அனைவரும் தங்களது இதயக் கதவைத் திறக்க அம்மா பரமாத்மாவிடம் அர்ப்பிக்கிறேன்.