கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உடலை நீத்த காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது சங்கராச்சாரியார் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அம்மா தனது இதய பூர்வமான இறுதி அஞ்சலியை தெரிவித்தார். அவரின் பிரிவால் வாடும் அவரது பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் தனது அன்பான ஆறுதலையும் தெரிவித்தார். சங்கராச்சாரியார் அவர்களின் இறுதிச்சடங்கிலும் பிரார்த்தனையிலும் கலந்து கொள்ள அம்மாவின் மூத்த துறவிச்சீடரான ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தபுரி அவர்களை அனுப்பி வைத்தார்.

பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிரிவு மிகவும் வேதனை அளிக்கிறது. நான் உடலல்ல அனைத்திலும் நிறைந்திருக்கும் சைதன்யமே என்று அறிந்த ஒரு துறவி தன் உடலை துறக்கும்போது வருந்துவது முறையா என்று சந்தேகம் தோன்றலாம். இறுதி உண்மை அதுவே என்றாலும் பௌதீக நிலையிலிருந்து சிந்திக்கும்போது ஒருவரது பிரிவு நமக்குள் ஒரு வெறுமையை உண்டாக்கவே செய்கிறது. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிரிவு, அன்னாரது பக்தர்களின் உள்ளங்களில் மட்டுமின்றி, சனாதன தர்மத்தை பரவச்செயதவர் என்ற வகையில் பாரதத்திற்கும், ஈடு செய்ய இயலாத இழப்பையும் மிகப்பெரிய வெற்றிடத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

ஸ்வாமிகள் வேத வேதாங்கங்களின் கரைகண்டவராக இருந்தார். மறையின் இறுதி நோக்கமான வேதாந்த தரிசனத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ஒலித்து வந்தது அன்னாரது குரல். அவரது தேகத் தியாகத்தின் மூலம் ஆறு தரிசனங்கள் மற்றும் வேத வேதாங்கங்களைப் பற்றி அதிகாரபூர்வமாகக் கூறக்கூடிய ஒரு ஆச்சாரியரை பாரதம் இழந்துள்ளது. வேத தர்மத்தை முழுமையாக பாதுகாத்து வளர்த்துப் பரவச் செய்வதிலும் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவரது சொற்பொழிவுகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தூண்டுதலாகவும் வழிகாட்டுதலாகவும் அமைந்திருந்தன.

அவர் மடாதிபதியாக இருந்த பொழுது சமுதாயத்தில் துயரத்தால் தவிப்பவர்களின் உயர்வுக்காக எண்ணற்ற ஜீவகாருண்ய நற்பணிகளை காஞ்சி மடம் செயலாற்றியுள்ளது . ஆழ்ந்த அறிவாற்றல் மற்றும் கருணையுடன் கூடிய அணுகுமுறையுடன் உலக நன்மைக்காக ஸ்வாமிகள் எப்பொழுதும் பணியாற்றி வந்தார்.

பல ஆண்டுகளாக நிலை நின்றிருந்த சம்பிரதாயங்களைக் கடந்து 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்வாமிகள் {news} அமிர்தபுரி ஆசிரமத்திற்கு வருகை புரிந்தது ஒரு உண்மையான சந்நியாசிக்கு இருக்க வேண்டிய தீரத்தையும் பயமின்மையையும் பரந்த மனதையும் காட்டியது.

காஞ்சி மடத்திற்கு வருமாறு அவர் அழைத்திருந்த போதும் அம்மாவால் அப்பொழுது செல்ல இயலவில்லை. அவர் சமாதி ஆகியிருக்கும் இந்த சமயத்தில் மனதால் அங்கே சென்று அவரது பௌதீக சரீரத்திற்கு மரியாதையையும் இதயப்பூக்களையும் அர்ப்பிக்கிறேன்.

-அம்மா