(ஐயப்ப பக்தர்கள் சங்கமம், திருவனந்தபுரம், ஜனவரி 20, 2019)

அன்பின் வடிவாகவும் ஆன்மாவின் வடிவாகவும் இங்குள்ள அனைவருக்கும் அம்மாவின் பணிவான வணக்கங்கள்.
அண்மையில் சபரிமலை திருக்கோவில்     தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவும் வருந்தத்தக்கவையாகும். திருக்கோவில் பிரதிஷ்டையை பற்றியும் ஆலய வழிபாடு முறைகள் பற்றியும் ஞானம் இல்லாதது தான் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்.
ஒவ்வொரு ஆலயத்திற்கும் அதற்குரிய பிரதிஷ்டை சங்கல்பம் உள்ளது. அதை அலட்சியம் செய்வது சரியல்ல. 


ஆலயத்தில் உள்ள ‌‌விக்கிரகத்திற்கும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறைவனுக்கு எல்லைகள் ஏதுமில்லை. இறைவனுக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை.
இறைவன் எல்லையற்ற சக்தியே.
ஆனால் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் தேவதை இப்படிப்பட்டது அல்ல.
கடலில் உள்ள மீனுக்கும் நீர் தொட்டியில் உள்ள மீனுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.


நீர் தொட்டியில் உள்ள மீனுக்கு தக்க நேரத்தில் உணவளிக்க வேண்டும். நீர் சுழற்சிக்கும் காற்று சுழற்சிக்கும் வழிவகுக்க வேண்டும். ஆனால் கடலில் வாழும் மீனுக்கு இப்படிப்பட்ட தேவைகள் எதுவும் இல்லை. அதேபோல் நதி நீரில் குளிப்பதற்கு விதிமுறைகள் இல்லை. ஆனால் அதே நதிநீரை ஒரு நீச்சல் குளத்தில் நிரப்பும்போது அந்த நீருக்கு குளோரின் முதலிய வேதிப்பொருட்களை சேர்க்க வேண்டும். நீரை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு செல்லும் முன் நாம் வேறு நீரில் நீராடி உடலில் இருக்கும் வியர்வையை கழுவிக் கொண்ட பிறகு தான் நீச்சல் குளத்தில் இறங்க வேண்டும்.


நீச்சல் குளத்தில் நீந்துவதற்கு நீச்சல் ஆடை அணிய வேண்டும். நீச்சல் குளத்தில் சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது. நதி நீர் தான் நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்டு இருக்கிறது என்றாலும் கூட, மேல் சொன்ன கட்டுப்பாடுகள் நீச்சல் குளத்திற்கு தேவை. 
எங்கும் உள்ள இறை பேருணர்வுதான் ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறது என்றாலும் கூட தூய்மை பேணுவது ஆசாரங்களை கடை பிடிப்பது போன்றவை இன்றியமையாதவை.


 நாம் ஒரு விதை விதைத்து நீர் ஊற்றி உரம் இட்டால் அது வளர்ந்து பூக்களையும் காய்களையும் வழங்கும். அதுபோல் ஆலய தேவதைக்கு தக்க நேரத்தில் பூசை செய்ய வேண்டும். நைவேத்தியம் படைக்க வேண்டும். இதர நடைமுறை விதிகளை கடைபிடிக்க வேண்டும். எங்கும் நிறை இறைவனுக்கு இவ் விதிமுறைகள் ஒன்றும் வேண்டாம். 
ஆலயத்தில் ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியான சங்கல்பங்கள் உள்ளன. ரெளத்ர பாவத்திலுள்ள தேவதையின் சங்கல்பம் வேறு. சாந்த பாவத்தில் திகழும் தேவதையின் சங்கல்பம் வேறு. அதுபோல் ஒவ்வொரு கோவில் பிரதிஷ்டைக்கும் அதற்குரிய சங்கல்பங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பூசைகள் வேண்டும், ஆசாரங்கள் வேண்டும், தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. பரம்பரையாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஆசாரங்களை சரிவர கடைபிடிக்கவில்லை எனில் ஆலயத்தின் சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படும். 


ஒரு குழந்தைக்கு பெற்றோர்களும் ஆசான்களும் தேவை என்பது போல் ஒரு ஆலயம் அதன் தந்திரி, பூசாரி மற்றும் பக்தர்களை சார்ந்து உள்ளது. நம்பிக்கையற்றவர்கள் ஆலயத்துக்குச் சென்றால் அவர்கள் ஆலயத்தை அசுத்தப்படுத்த கூடும். 
சபரிமலை ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரியாக திகழ்ந்தார். அவர் சமாதி ஆவதற்கு முன்பு தெரிவித்த விருப்பத்திற்கு ஏற்பவே ஆலய வழிபாடு முறைகள் வைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள். காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றங்கள் தேவை. ஆனால் ஆலயங்களை பொறுத்தவரை கண்மூடித்தனமான மாற்றங்களை ஏற்படுத்தினால், நமது பண்பாடு பாதிப்படையும். இது ஒரு குழந்தையை குளிப்பாட்டி குளிப்பாட்டி குழந்தையையே களைந்து விடுவதற்கு ஒப்பாகும். 
ஆதிசங்கரர், நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோர் அத்வைத சித்தாந்தத்தை தான் நிலைநாட்டினர். இருப்பினும் அவர்கள் நாடெங்கும் பல ஆலயங்களை அமைத்து விதிமுறைகளையும் வழங்கினர். அப்படிப்பட்ட ஒரு கோவிலின் அழைப்பை ஏற்று அம்மா அங்கு சென்றார். கேரளாவில் சிவன் கோவிலில் வலம் வைப்பதன் விதமே வேறு. அம்மா எங்கும் இறைவனையே காண்கிறார் என்றாலும் அங்கு சென்றபோது அம்மா அவ்விதிமுறையை கடைபிடித்தார்.  அம்மா பிரம்மஸ்தான திருக்கோவில் பிரதிஷ்டை செய்யும் முன்பு எல்லா தந்திரிகளையும் அழைத்து அவர்களோடு கலந்தாலோசித்தார். அதுபோல் அம்மா ஆசிரம சீடர்களுக்கு துறவறம் அளிக்கும் முன்பு சன்னியாச பரம்பரையை சேர்ந்தவர்களை அழைத்து அவர்களோடு கலந்தாலோசித்து பண்பாட்டிற்கு ஏற்பவே துறவு அளித்தார். அம்மா ஆசாரங்களை கைவிட்டதில்லை. 


ஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் அது நூல் அறுந்த பட்டத்தை போல ஆகிவிடும். 
அம்மா வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே புகைபிடிக்க அனுமதிப்பதை கண்டதுண்டு. அதுபோல் விமான நிலையத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே புகை பிடிக்கலாம். இப்படிப்பட்ட விதிமுறைகளை பயணிகள் கடைபிடிக்கிறார்கள். 


மன்னார்சாலை கோவிலில் பெண்கள் தான் பூஜை செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக கல்வி பயிலும் பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன. அப்படிப்பட்ட கல்வி சாலைகளில் ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்த யாரும் முயல்வதில்லை. 


சபரிமலை திருக்கோவிலில் குறிப்பிட்ட வயது வரம்பிற்கு அப்பாற்பட்ட பெண்கள் ஆலய வழிபாடு செய்யலாம். எனவே சபரிமலை ஆலயத்தில் பெண்களை நிராகரிக்கவில்லை என்பதுதான் உண்மை. 


பொய் சொன்னால், கண் குருடாகும்! மூக்கு பெரிதாகிவிடும்! என்று தாய்மார்கள் குழந்தைகளை அச்சுறுத்துவது உண்டு. அது உண்மை  எனில் நாம் எல்லோரும் குருடர்களாக இருக்க வேண்டும். ஆனால் பகுத்தறிவு இல்லாத குழந்தைப் பருவத்தில் அக்கூற்று சிறுவர்-சிறுமியர்களை திருத்த உதவும். ஒரு சிறுவன் ஒரு படத்தை வரைந்து தனது தந்தையிடம் அப்பா நான் யானையின் படத்தை வரைந்து இருக்கிறேன் என்றான். அதை வாங்கிப் பார்த்த தந்தை இது யானையின் படம் அல்ல சில கோடுகள் மட்டுமே உள்ளன என்றார். இதைக் கேட்ட சிறுவன் அழத் தொடங்கினான். என்ன சொல்லியும் அவன் அழுகை நிற்கவேயில்லை. கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிய தொடங்கினான். அப்போது அப்பா சொன்னார். ‘மகனே கண்ணாடி வைத்த பின்னர் தான் சரிவர காணமுடிந்தது. மிகச் சிறந்த முறையில் யானையை வரைந்துள்ளாய்’. அடுத்தவரது நிலைக்கு நாம் இறங்கி செல்ல வேண்டும். அதுவே இதயத்தின் மொழி எனப்படும். 

ஆலயங்களை படிக்கட்டுகளோடு ஒப்பிடலாம். படிக்கட்டுகளை பயன்படுத்தி மேலே  சென்றடையும்போது, கட்டிடத்தின் மேல் நிலையும் படிக்கட்டுகளும் சிமெண்ட், மணல் போன்ற பொருட்களால் செய்யப்பட்டன என்பது புரியும். இருப்பினும் நாம் படிக்கட்டுகளை தேவையில்லை என்று கூறி நிராகரிக்க மாட்டோம். எல்லாம் இறைவனே என்று அறிந்த பின்னரும் அடுத்தவர்களும் அதே நிலையை அடைய வேண்டும் என்று கருதி ஆலய வழிபாட்டு முறைகளை நிராகரிக்க மாட்டார்கள். சபரி மலை புனிதப் பயண காலத்தை பற்றி அம்மா ஒரு பரிசோதனை செய்தார். சென்ற பத்து பதினைந்து ஆண்டுகளாக பல மருத்துவமனைகளில் இருந்தும் தகவல் சேகரித்தார். அதன்படி மண்டல காலத்தில் 40 சதவிகித நோயாளிகள் குறைந்து விடுவதை அறிய முடிந்தது. அதற்கு காரணம் மண்டல காலத்தில், அவர்கள் மது அருந்துவதில்லை, புலால் உணவு உண்பதில்லை, மனைவியரை திட்டுவதில்லை, குடும்பத்தினர் ஒருங்கிணைந்து விரதம் கடைப் பிடிக்கிறார்கள். இப்படியாக தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் இசைவு நிலையை ஏற்படுத்த மண்டல விரதங்கள் உதவுகின்றன. எனவே இந்தப் பண்பாட்டை நிலை நிறுத்துவது இன்றியமையாதது. பண்பாட்டின் அடிப்படையில் தான் சமூகம் நிலைகொள்கிறது. எல்லோரும் இதை புரிந்து கொண்டு முன்னேற வேண்டும். அர்ஜுனன் போர் முறைகளைப் பற்றி கண்ணபிரானிடம் கேட்டார். கண்ணபிரான் போர் முறைகளைப் பற்றி பீஷ்மரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள சொன்னார். ஏனெனில் போர் முறையைப் பற்றிய அறிவுரை வழங்க பீஷ்மர் தான் தக்கவர். தந்திரிகளும் பூசாரிகளும் உங்களைப் போன்ற பக்தர்களும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும். ‘மெல்ல சாப்பிட்டால் பனைமரத்தை கூட உண்ண முடியும்’ என்பது ஒரு மலையாள பழமொழி. அம்மாவிற்கு வேறு ஒன்றும் அதிகம் கூறுவதற்கில்லை. இதற்கு முன் பேசிய பலரும் இந்த பிரச்சினையை பற்றி சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டார்கள்.
ஓம் நமசிவாய.