கேள்வி: மனித வாழ்வில் இறை நம்பிக்கையின் அவசியம் என்ன?
அம்மா: இறை நம்பிக்கை இல்லாமலும் வாழ முடியும். ஆனால், வாழ்வின் பாதகமான சூழ்நிலைகளில் மனம் பதறாமல் உறுதியாக முன்னேறிச் செல்ல வேண்டுமெனில், நாம் கடவுளைச் சரண்புகத் தயாராக வேண்டும். அவருடைய பாதையைப் பின்பற்றி வாழத் தயாராக வேண்டும்.

இறைவனை அடைக்கலம் அடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு வழக்கறிஞர்கள் மட்டும் வாதாடுவது போன்றதாகும்.வெறும் வாதம் மட்டும் எந்தவொரு முடிவையும் அளிக்காது.வாதத்திற்குத் தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. நீதிபதி இல்லாமல் வாதம் நடந்தால் வாதத்தைத் தொடரலாமே அன்றி தீர்ப்பு அளிக்க முடியாது.

இறை குணங்கள் நம்மிடம் வளர்வதற்காகவே இறைவனை வணங்குகிறோம். இறைவனை வணங்காமல் இறை குணங்களை வளர்த்துக்கொள்ள முடிந்தால் இறை நம்பிக்கை தேவையில்லை. நாம் நம்பினாலும் நம்பாவிடிலும் இறைவன் மெய்ப்பொருளாவார். அந்த மெய்ப்பொருளை ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிடிலும் அதற்கு ஒரு குறைவும் ஏற்படாது. புவிஈர்ப்பு சக்தி ஒரு உண்மையாகும். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அது இல்லாமல் போவதில்லை. அதேசமயம் அதை மறுத்து, உயரத்திலிருந்து குதிக்கும் போது
ஏற்படும் விபத்தின் மூலம் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்; அவ்வளவுதான் . இதுபோல் உண்மைக்கு எதிராக முகத்தைத் திருப்பிக் கொள்வதானது கண்களை மூடிக்கொண்டு, “இருட்டு” என்று கூறுவதைப் போலாகும். இறைவன் என்ற மெய்ப்பொருளை ஏற்றுக்கொண்டு வாழ்வை முறைப்படுத்துவதன் மூலம் அல்லலற்ற வாழ்க்கை வாழ முடியும்.