அம்மாவின் 58 வது பிறந்த நாள் விழா காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதற்கு பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.

சரியாக 9 மணி அளவில் அமிர்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் அம்மாவை மோகினி ஆட்டத்துடன் மேடையில் வரவேற்றனர். அப்போது அமிர்த விஸ்வ வித்யா பீடத்தின் அமிர்தபுரி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் அமைந்த பிறந்த நாள் விழாத் திடல் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கல்லூரி வளாகம் முழுவதும் நிறைந்து இருந்தனர். சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் அம்மாவுக்குப் பாத பூஜை செய்தார். அம்மாவின் பாதபூஜை உலகம் முழுவதும் இணையதளத்தின் ( www.amritapuri. org ) மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இதைப் பல்வேறு நாடுகளில் இருந்து ( 3 பேர் பாகிஸ்தானில் இருந்தும் , 13 பேர் சீனாவில் இருந்தும் ) சுமார் 2 லட்சம் பேர் கண்டுகளித்தனர். அதன் பின்னர் குரு ஸ்தோத்ர பாராயணம் மற்றும் அம்மாவின் அஷ்டோத்தர அர்ச்சனையும் நடைபெற்றது. அதன்பின் அம்மாவின் மூத்த துறவிச் சீடர்கள் அம்மாவுக்கு மாலை அணிவித்தனர். அதன் பின் அம்மாவின் அருளுரை நடைபெற்றது. அதை சுவாமிஜி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

 

 

அம்மாவின் தனது அருளுரையின் போது ” நாம் வாழும் இன்றைய உலகம் வேற்றுமையாலும் பிரிவினைவாதத்தாலும் நிறைந்துள்ளது. இங்கு ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையுடன் அமர்ந்திருக்கும் உங்களைக் காணும் போது அம்மாவின் இதயம் நிறைகிறது. இன்று உலகில் ஒற்றுமைக் குறைவும் மக்களிடையே நற்பண்புகளும் குறைந்து வருவதே முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. உண்மையில் அம்மா உங்களுக்கிடையில் இருந்தாலும் இதை நினைத்து அம்மாவின் உள்ளம் வருந்துகிறது. இன்றைய உலகின் நிலையை எண்ணும் போது எப்படி நம்மால் விழா கொண்டாட இயலும்.? ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து தமது பொருந்தாத இயல்புகளை நீக்க உண்மையாக முயலும்போது உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும்” என்று அம்மா கூறினார்.

 

 

இவ்விழாவில் மகாராஷ்டிர ஆளுநர் உயர்திரு. கே. சங்கர நாராயணன் , மத்திய அமைச்சர்கள் உயர்திரு .விலாஸ்ராவ் தேஷ்முக் , திரு . கே.சி. வேணுகோபால், திரு. என். பீதாம்பரகுருப்பு எம்.பி , தமிழக எம்.எல்.ஏ. திரு. ராமகிருஷ்ணன், சிவகிரி மடாதிபதி ஸ்வாமி பிரகாசானந்தா, பன்மனா ஆசிரமத் தலைவர் ஸ்வாமி பிரணவானந்த தீர்த்த பாதர், பிஷப். மார் கிறிஸ்டோட்டம் போன்றோர் விழாவுக்கு வந்திருந்த முக்கியப் பிரமுகர்களாவர்.

அமிர்த கீர்த்தி விருது

திரு. எம்.பி. வீரேந்திரகுமார் ( மாத்ருபூமி நாளிதழின் இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ) அவர்களுக்கு 2011 ஆண்டுக்கான அமிர்த கீர்த்தி விருது வழங்கப்பட்டது. இவ்விருது 1,23,456 ரூபாய் ரொக்கத் தொகையும் சான்றிதழும் சரஸ்வதி விக்கிரகமும் அடங்கியதாகும். இதை மகாராஷ்டிர ஆளுநர் உயர்திரு. கே. சங்கர நாராயணன் அவர்கள் வழங்கினார். அதை ஏற்றுக் கொண்ட திரு. எம்.பி. வீரேந்திரகுமார் அவர்கள் தமது உரையில் ” வாழ்வில் அன்பும் புண்ணியமும் என்னவென்று தனது ஸ்பர்சம் மற்றும் அரவணைப்பின் மூலம் உலகிற்குக் காட்டிக்கொடுத்தவர் அம்மா. இந்த அமிர்தகீர்த்தி விருதை அம்மாவின் அருளாக காண்கிறேன். இந்த நிமிடம், இதே மேடையில் உயிர் பிரிந்தாலும் அதை என் பாக்கியமாகக் கருதுவேன் ” என்றார்.

இ- டியூஷன்

இவ்விழாவின் போது இரு புதிய திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டன. முதலாவது கல்லூரி மாணவருக்கான இலவச டியூஷன் ( இ- டியூஷன் ) திட்டம். இதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் உயர்திரு .விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்கள் துவக்கி வைத்தார்.

அமிர்த ஸாந்த்வனம்

இரண்டாவதாக ” அமிர்த ஸாந்த்வனம் ” குடும்ப செவிலியர் ( ஹோம் நர்ஸிங் ) பயிற்சி வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிர ஆளுநர் உயர்திரு. கே. சங்கர நாராயணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சமூகத்திற்கு திறமை வாய்ந்த 10,000 குடும்ப செவிலியர்களை உருவாக்க வேண்டும் என்பது அம்மாவின் நோக்கமாகும். அவ்வாறு பயிற்சி பெறும் பெண்களுக்கு 6 மாத இலவசப் பயிற்சியும் தங்கும் வசதியுடன் மட்டுமல்லாது பயிற்சிக்காலத்தில் அவர்களுக்கு பயிற்சி ஊக்கத்தொகையும் அளிக்கப்படும்.

அமிர்த ஸ்ரீ பாதுகாப்புத் திட்டம்

அமிர்த ஸ்ரீ பாதுகாப்புத் திட்டம் என்பது மடத்தின் சுய தொழில் உதவிக்குழு அமைப்பும் (அமிர்த ஸ்ரீ ) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும் ( LIC ) இணைந்து செயல்படும் ஒரு திட்டமாகும். இத்துடன் அமிர்த ஸ்ரீ குடும்பத்தைச் சார்ந்த 15% குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1200 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கான உதவித்தொகையை மத்திய மந்திரி கே. சி. வேணுகோபால் அவர்கள் வழங்கினார்.

அமிர்தா சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இயல்பான மரணம் ஏற்பட்டால் 40,000 ரூபாயும் விபத்தில் உயிரிழந்தால் 85,000 ரூபாயும் வழங்கப்படும். இத்திட்டத்தால் (விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ) மடத்தின் கீழ் இயங்கி வரும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களும் அவர்களது குடும்பமும் பயன்பெறும்.

அமிர்த நிதித் திட்டம்

அமிர்த நிதித் திட்டத்திற்கான புதிய பயனாளிகளுக்கான தொகையை பாராளுமன்ற உறுப்பினர் திரு . பீதாம்பர குருப்புஅவர்கள் காசோலைகளை வழங்கினார். இத்திட்டத்தால் ஆதரவற்றவர்கள் மற்றும் விதவைகள் போன்றோர்சுமார் 1 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர்.

வித்யாமிர்தம்

புதிய ( 25 ) மாணவர்களுக்கு வித்யாமிர்தம் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் உயர்திரு .விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்கள் வழங்கினார். இவ்வருடம் இத்திட்டம் மேலும் சுமார் 5000 மாணவர்களுக்காக விரிவு படுத்தப்பட்டுள்ளது.

மாத்ருவாணி இதழின் பிறந்தநாள் விழாவின் சிறப்புப் பதிப்பின் முதல் பிரதியை சிவகிரி ஸ்ரீ நாராயண குரு மடத்தின் தலைவர் சுவாமி பிரகாசானந்தா அவர்கள் வெளியிட பன்மனா சட்டம்பி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரணவானந்த தீர்த்த பாதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அமிர்தா பல்கலைக் கழக மாணவர்கள், அமிர்த வித்யாலய மாணவர்கள் மற்றும் அமிர்தா யுவதர்மதாரா உறுப்பினர்களும் மற்றும் பக்தர்களும் இந்தியாவின் தூய்மையாகப் பேணீக்காக்கவும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மற்றும் உள்ளூர் இளைஞர்கள் மது,புகையிலை மற்றும் போதைப்பொருள் இவற்றிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதை சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

அம்மா 58 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். இவர்களுக்கான முழு திருமணச் செலவையும் மடமே ஏற்றுக் கொண்டது.
திருமணம் முடிந்ததும் நண்பகல் சுமார் 1 மணி அளவில் அம்மா தரிசனம் தரத் துவங்கினார். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தரிசனத்துக்கு இடையில் அம்மா அதிக எண்ணிக்கையில் மாத்ருவாணி சந்தாதாரர்களைச் சேர்த்த பிரசாரகர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். அம்மாவின் தரிசன வேளையில் 27 அமிர்த வித்யாலயங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று இரவு ஊட்டியைச் சார்ந்த படுகர் இன பக்தர்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. அவர்கள் ஆடிய ஆட்டத்தில் மற்ற பக்தர்களும் வெளிநாட்டவரும் கலந்து கொண்டு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அம்மாவின் நீண்ட தரிசனம் மறுநாள் காலை சுமார் 8 மணி அளவில் நிறைவடைந்தது.