கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

அம்மா: குழந்தைகளே, அம்மாவுக்கு பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் அம்மாவின் குழந்தைகளே. அதேசமயம் வெளிநாடுகளுக்கும் பாரதத்திற்கும் இடையில் கலாசார வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் நிலவளமும் செல்வ நிலையும் மக்களின் மனவளர்ச்சியுமே அங்குள்ள குடிமக்களின் கலாசாரத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் வேறுபாடுகள் உண்டு என்றே கூறலாம். இங்கே சாலையின் இடது பக்கம் வாகனம் ஓட்டுகிறோம் என்றால் அங்கே வலது பக்கம் வாகனம் ஓட்டவேண்டும். இதுபோன்ற வித்தியாசங்கள் கலாசாரங்களுக்கு இடையிலும் உள்ளது.

அதே சமயம் அன்பு, அமைதி போன்ற பண்புகள் எல்லா இடங்களிலும் ஒன்று தான். நாடுகளின் எல்லைகளால் இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. பாரதத்தில், அமெரிக்காவில், ஐரோப்பாவில் என எங்கும் உள்ள பசுக்களின் பாலுக்கு வெள்ளை நிறம் தான். இங்குள்ள தீயின் இயல்பும் பிற நாடுகளில் உள்ள தீயின் இயல்பும் ஒன்று தான். இங்குள்ள தேனுக்கும் அங்குள்ள தேனுக்கும் சுவை இனிப்புத் தான். அதுபோல் அன்பு என்பது எல்லோருக்கும் அளிக்கும் அனுபவம் ஒன்று தான். அமைதியின் அனுபவமும் ஒன்று தான்.

அன்பையும் அமைதியும் அனுபவிப்பதற்கு மொழியோ,வர்க்கமோ, நிறமோ ஒருநாளும் தடையாவதில்லை. அன்பு ஒன்று தான் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அம்மாவையும் குழந்தைகளையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.. அம்மா அதை மட்டுமே காண்கிறேன்.

இவ்வளவு கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது மேலை நாடுகளில் உள்ள மக்களுக்கு பொதுவாக ஆன்மிகத்தைப் பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்து வருவதை அம்மா காண்கிறேன். அங்குள்ள மக்களுக்கு எல்லாவித சுதந்திரமும் உண்டு. கருப்புநிறத்தோலை வெளுக்கச் செய்யலாம். பெண் ஆணாக மாறலாம். ஆண் பெண்ணாக மாறலாம். வயது முதிர்வதால் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி விடலாம். முடியின் ஒரு பாகத்தை நீலமாக்கலாம். மறுபாகத்தை மஞ்சளாக்கலாம். மற்றொரு பாகத்தை சிகப்பாக மாற்றலாம். முடிக்கு எந்த நிறத்தை வேண்டுமானாலும் கொடுக்கலாம். பெண் பெண்ணையும், ஆண் ஆணையும் திருமணம் செய்து கொள்ளலாம். எந்த நகரத்திலும் வேண்டுமானாலும் மாறி மாறி வசிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் ஆடைகள் அணியலாம். இவ்வளவு சுதந்திரம் இருந்தபோதும் அவர்களுக்கும் துக்கம் உண்டு. நிராசை உண்டு. இதிலிருந்து அவர்கள், சுதந்திரம் என்பது வெளியில் இருப்பது அல்ல; அது உள்ளே இருந்து வர வேண்டியதாகும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். அது அகத்திலிருந்து பெற வேண்டியதாகும் என்ற இந்த அறிவானது அவர்களை உள்ளே காண்பதற்குத் தூண்டி வருகிறது. அவர்களை ஆன்மிகத்தைப் பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்களாக மாற்றி வருகிறது.

 

அவர்கள் உலகியலைத் துறந்து ஆன்மிகத்தை நோக்கித் திரும்புகிறார்கள். வெளிநாட்டவர், பாரதக் கலாசாரத்தை க்குறித்துப் படிக்கவும் அதைப் புரிந்து கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். அதேவேளையில் நாம் உலகியல் சுகங்களில் அதிகமாக மூழ்குவதுடன் வெளிநாட்டவரைப் போல நடந்து கொள்ள முனைப்பு உள்ளவர்களாக இருக்கிறோம். ” இதில் ஒன்றுமில்லை ” என்பதை அறிந்து அவர்கள் மென்று துப்பியதை, நாம் மிகப் பெரியதாகக் கருதி எடுத்து விழுங்குகிறோம். நம்முடைய உயர்ந்த கருத்துக்களை அலட்சியம் செய்கிறோம். அதேசமயம் விலைமதிப்புள்ள அவற்றைப் புரிந்து கொள்ள அவர்கள் ஏங்குகிறார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறினால் மேலைநாட்டவர் அதைப்புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். இங்கே இருப்பவர்கள் அதைப் புரிந்து கொண்டாலும் ஏற்றுக் கொள்வது கடினம். (எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் என்று அம்மா கூறவில்லை.) வெளிநாட்டவர் அப்படியல்ல. ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டுவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு தயக்கமும் இல்லை. அவர்களுடைய உலகியல் வளர்ச்சிக்கு இந்த மனோபாவமே ஒரு காரணம் எனலாம்.

பாரதத்தின் உண்மையான மதிப்பு அதன் கலாசாரமாகும். அதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை. அதன் ஆழத்திற்குச் செல்லவில்லை. அவர்களுடைய நம்பிக்கை கோயிலோடு நின்று விடுகிறது. பிறர் தவறாகக் கூறுவதைக் கேட்டால் போய்விடும் அளவிற்கு பலவீனமாக அந்த நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வேரூன்றவில்லை. அதனால் நம் கலாசாரம் பண்பாட்டின் உண்மையான தத்துவங்களைப் புரிந்து கொள்ள இங்குள்ளவர்கள் முன்வர வேண்டும்.

மேலைநாட்டவர்கள் எதையும் படித்த பிறகுதான் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். ஆனால் நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டதாகும். தந்தை ஆலயத்தைச் சுற்றி வருவதைக் கண்ட மகன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வலம் வந்தான். மகன் பெரியவனாகும் போது தனது மகனையும் அதுபோல் நடக்க செய்கிறான். ஆனால் யாருமே இது எதற்காக என்றோ இதனால் வரும் பயன் என்னவென்றோ சிந்திப்பதில்லை. பாரதப் பண்பாட்டைக் குறித்துப் படிக்க மேலைநாட்டவர் அடைக்கலம் புக வேண்டிய நிலைதான் நமக்கு இப்போது வந்திருக்கிறது.
(தொடரும் )