ஓம் அமிர்தேஸ்வர்யை நம:

av60 tamil

அன்புடையீர்,
அம்மா – நமது தாய், குரு என்பதற்கு மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலத்திற்கு சேவை செய்வதுடன் ஞானம் பகர்ந்தும் வலிமையையும் அளித்து மிகச்சிறந்த தூண்டுகோலாக அம்மா விளங்குகிறார். அம்மாவின் வாழ்வு எப்போதும் நமக்கு நிலையான அன்பு, அமைதி, கருணை, தன்னலமின்மை போன்ற அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே நமக்கு நினைவூட்டுகிறது. அம்மாவின் அன்பின் மூலம் வெளிப்படும் அரிய செயல்கள், மன வலிமை, சுயநலத்தியாகம் முதலியவை எண்ணற்றோருக்கு தன்னலமற்ற சேவையில் ஈடுபட ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.
அம்மா மனிதகுல மேன்மைக்காக எண்ணற்ற சேவைத்திட்டங்களை இந்தியாவிலும் அகிலத்தை அரவணைத்தல் (Embracing the world ) எனும் பெயரில் வெளிநாட்டிலும் செயல்படுத்தி வருகிறார்.
நமது மடம் ஐ.நா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சேவைக்கான விருது பெற்ற இந்திய தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுள் ஒன்றாகும்.

அமிர்தவர்ஷம் – 60

அம்மாவின் 60-ஆம் பிறந்தநாள் விழா அமிர்தபுரியிலுள்ள அமிர்தா கல்லூரியில் செப்டம்பர்- 26 & 27 ஆகிய நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இணையதள அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அமிர்த வர்ஷம் — 60 – நிகழ்ச்சி நிரல்

செப்டம்பர் 25, புதன்
இரவு 9 மணி முதல் 12 மணிவரை — உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

செப்டம்பர் 26, வியாழன்
காலை 5மணி — 6.30 மணி வரை — மஹாகணபதிஹோமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை
காலை 8மணி — 9.00 மணி வரை – கொடியேற்றம், செண்டைமேளத்துடன் கேரள பாரம்பரிய முறையில் வரவேற்பு

காலை 9 மணி — 10 மணி வரை — வரவேற்பு நடனம் — இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நடன கலைஞர்களது பாரம்பரிய கலாசாரச் சிறப்பு நடனம்

காலை 10மணி — மதியம் 1 மணி வரை — பெண்கள் முன்னேற்றத் திட்டங்களின் தொடக்கம் மற்றும் பல்வேறு செயல் திட்டங்கள்

மதியம் 1 மணி — மாலை 5 மணி வரை – அம்மாவின் தரிசனம் மற்றும் உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்

மாலை 6.30 மணி — 8.30 மணி வரை — அம்மாவின் பஜனை

செப்டம்பர் 27, வியாழன்
காலை 5மணி — 6.30 மணி வரை — மஹாகணபதிஹோமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை

காலை 7.45 மணி — 8.15 மணி வரை — சுவாமி அமிர்தசொரூபானந்த புரி அவர்களின் ஆன்மிக உரை

காலை 9 மணி — 11 மணி வரை — அம்மாவின் திருப்பாத பூஜை மற்றும் அம்மாவின் அருளுரை

காலை 11மணி — மதியம் 1 மணி வரை — அமிர்தகீர்த்தி விருது வழங்கல்,
ஏழைகளுக்கான புதிய நலத்திட்டங்களின் துவக்கம் :
· ரூ. 50 கோடி செலவில், இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தில் 500 வீடுகளைக் கட்டிக் கொடுத்தல்.
· சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்ட நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள்.
·50 கோடி ரூபாய் செலவில் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை.
·‘அமிர்தநிதி ’ விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் ’ வித்யாமிர்தம் ’ கல்வி உதவித்தொகையை விரிவுபடுத்துதல்
·ஏழைப்பெண்களுக்கான இலவச திருமணங்கள்.
· ஏழைகளுக்கான ஆடைதானம்
. புதிய ஆசிரம நூல்களின் வெளியீடு

மதியம் 1 மணி முதல் —- அம்மாவின் தரிசனம் தொடங்குதல்

சிறப்பு நிகழ்ச்சிகள் :
செப்டம்பர் 24, 25 & 26 — அதிகாலை முதல் மாலை வரை உலக அமைதி மற்றும் நன்மைக்கான சிறப்பு மஹா சண்டி ஹோமம்

செப்டம்பர் 25 & 26 — நமது கிராமம், நமது உலகம் – ” நம்மால் என்ன செய்ய முடியும்? ” — அகில உலக விஞ்ஞானியர் மாநாடு — உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த விஞ்ஞானிகள், சமூகத் தலைவர்கள், தலைசிறந்த கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்களின் பங்கேற்பு .

குறிப்பு:
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய www.amritapuri.org, www.amritavarsham.org ஐத் தொடர்புகொள்ளவும்.
மின்னஞ்சல் முகவரி: celebration (at) amritavarsham.org, info (at) amritapuri.org
தொலைபேசி : +91 9497714870, +91 (476) 2895288, 2896399

அனைவரும் வருக!! அம்மாவின் அருளைப் பெறுக !!

கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

அம்மா: குழந்தைகளே, அம்மாவுக்கு பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் அம்மாவின் குழந்தைகளே. அதேசமயம் வெளிநாடுகளுக்கும் பாரதத்திற்கும் இடையில் கலாசார வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் நிலவளமும் செல்வ நிலையும் மக்களின் மனவளர்ச்சியுமே அங்குள்ள குடிமக்களின் கலாசாரத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் வேறுபாடுகள் உண்டு என்றே கூறலாம். இங்கே சாலையின் இடது பக்கம் வாகனம் ஓட்டுகிறோம் என்றால் அங்கே வலது பக்கம் வாகனம் ஓட்டவேண்டும். இதுபோன்ற வித்தியாசங்கள் கலாசாரங்களுக்கு இடையிலும் உள்ளது.

அதே சமயம் அன்பு, அமைதி போன்ற பண்புகள் எல்லா இடங்களிலும் ஒன்று தான். நாடுகளின் எல்லைகளால் இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. பாரதத்தில், அமெரிக்காவில், ஐரோப்பாவில் என எங்கும் உள்ள பசுக்களின் பாலுக்கு வெள்ளை நிறம் தான். இங்குள்ள தீயின் இயல்பும் பிற நாடுகளில் உள்ள தீயின் இயல்பும் ஒன்று தான். இங்குள்ள தேனுக்கும் அங்குள்ள தேனுக்கும் சுவை இனிப்புத் தான். அதுபோல் அன்பு என்பது எல்லோருக்கும் அளிக்கும் அனுபவம் ஒன்று தான். அமைதியின் அனுபவமும் ஒன்று தான்.

அன்பையும் அமைதியும் அனுபவிப்பதற்கு மொழியோ,வர்க்கமோ, நிறமோ ஒருநாளும் தடையாவதில்லை. அன்பு ஒன்று தான் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அம்மாவையும் குழந்தைகளையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது.. அம்மா அதை மட்டுமே காண்கிறேன்.

இவ்வளவு கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது மேலை நாடுகளில் உள்ள மக்களுக்கு பொதுவாக ஆன்மிகத்தைப் பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்து வருவதை அம்மா காண்கிறேன். அங்குள்ள மக்களுக்கு எல்லாவித சுதந்திரமும் உண்டு. கருப்புநிறத்தோலை வெளுக்கச் செய்யலாம். பெண் ஆணாக மாறலாம். ஆண் பெண்ணாக மாறலாம். வயது முதிர்வதால் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி விடலாம். முடியின் ஒரு பாகத்தை நீலமாக்கலாம். மறுபாகத்தை மஞ்சளாக்கலாம். மற்றொரு பாகத்தை சிகப்பாக மாற்றலாம். முடிக்கு எந்த நிறத்தை வேண்டுமானாலும் கொடுக்கலாம். பெண் பெண்ணையும், ஆண் ஆணையும் திருமணம் செய்து கொள்ளலாம். எந்த நகரத்திலும் வேண்டுமானாலும் மாறி மாறி வசிக்கலாம். எப்படி வேண்டுமானாலும் ஆடைகள் அணியலாம். இவ்வளவு சுதந்திரம் இருந்தபோதும் அவர்களுக்கும் துக்கம் உண்டு. நிராசை உண்டு. இதிலிருந்து அவர்கள், சுதந்திரம் என்பது வெளியில் இருப்பது அல்ல; அது உள்ளே இருந்து வர வேண்டியதாகும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். அது அகத்திலிருந்து பெற வேண்டியதாகும் என்ற இந்த அறிவானது அவர்களை உள்ளே காண்பதற்குத் தூண்டி வருகிறது. அவர்களை ஆன்மிகத்தைப் பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்களாக மாற்றி வருகிறது.

 

அவர்கள் உலகியலைத் துறந்து ஆன்மிகத்தை நோக்கித் திரும்புகிறார்கள். வெளிநாட்டவர், பாரதக் கலாசாரத்தை க்குறித்துப் படிக்கவும் அதைப் புரிந்து கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். அதேவேளையில் நாம் உலகியல் சுகங்களில் அதிகமாக மூழ்குவதுடன் வெளிநாட்டவரைப் போல நடந்து கொள்ள முனைப்பு உள்ளவர்களாக இருக்கிறோம். ” இதில் ஒன்றுமில்லை ” என்பதை அறிந்து அவர்கள் மென்று துப்பியதை, நாம் மிகப் பெரியதாகக் கருதி எடுத்து விழுங்குகிறோம். நம்முடைய உயர்ந்த கருத்துக்களை அலட்சியம் செய்கிறோம். அதேசமயம் விலைமதிப்புள்ள அவற்றைப் புரிந்து கொள்ள அவர்கள் ஏங்குகிறார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறினால் மேலைநாட்டவர் அதைப்புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். இங்கே இருப்பவர்கள் அதைப் புரிந்து கொண்டாலும் ஏற்றுக் கொள்வது கடினம். (எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் என்று அம்மா கூறவில்லை.) வெளிநாட்டவர் அப்படியல்ல. ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டுவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு தயக்கமும் இல்லை. அவர்களுடைய உலகியல் வளர்ச்சிக்கு இந்த மனோபாவமே ஒரு காரணம் எனலாம்.

பாரதத்தின் உண்மையான மதிப்பு அதன் கலாசாரமாகும். அதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை. அதன் ஆழத்திற்குச் செல்லவில்லை. அவர்களுடைய நம்பிக்கை கோயிலோடு நின்று விடுகிறது. பிறர் தவறாகக் கூறுவதைக் கேட்டால் போய்விடும் அளவிற்கு பலவீனமாக அந்த நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை வேரூன்றவில்லை. அதனால் நம் கலாசாரம் பண்பாட்டின் உண்மையான தத்துவங்களைப் புரிந்து கொள்ள இங்குள்ளவர்கள் முன்வர வேண்டும்.

மேலைநாட்டவர்கள் எதையும் படித்த பிறகுதான் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். ஆனால் நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டதாகும். தந்தை ஆலயத்தைச் சுற்றி வருவதைக் கண்ட மகன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வலம் வந்தான். மகன் பெரியவனாகும் போது தனது மகனையும் அதுபோல் நடக்க செய்கிறான். ஆனால் யாருமே இது எதற்காக என்றோ இதனால் வரும் பயன் என்னவென்றோ சிந்திப்பதில்லை. பாரதப் பண்பாட்டைக் குறித்துப் படிக்க மேலைநாட்டவர் அடைக்கலம் புக வேண்டிய நிலைதான் நமக்கு இப்போது வந்திருக்கிறது.
(தொடரும் )

அம்மாவின் 58 வது பிறந்த நாள் விழா காலை 5 மணி அளவில் சூர்ய காலடி ஜெயசூர்யன் பட்டத்திரிபாடு அவர்கள் நடத்திய மஹா கணபதி ஹோமத்துடன் மங்களகரமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலக அமைதிக்காக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதற்கு பின்னர் சுவாமி துரியாமிர்தானந்த புரி அவர்கள் விழாவை காலை 7-30 மணி அளவில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது சுவாமி அமிர்தசொரூபானந்தபுரி அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.

சரியாக 9 மணி அளவில் அமிர்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் அம்மாவை மோகினி ஆட்டத்துடன் மேடையில் வரவேற்றனர். அப்போது அமிர்த விஸ்வ வித்யா பீடத்தின் அமிர்தபுரி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் அமைந்த பிறந்த நாள் விழாத் திடல் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கல்லூரி வளாகம் முழுவதும் நிறைந்து இருந்தனர். சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் அம்மாவுக்குப் பாத பூஜை செய்தார். அம்மாவின் பாதபூஜை உலகம் முழுவதும் இணையதளத்தின் ( www.amritapuri. org ) மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இதைப் பல்வேறு நாடுகளில் இருந்து ( 3 பேர் பாகிஸ்தானில் இருந்தும் , 13 பேர் சீனாவில் இருந்தும் ) சுமார் 2 லட்சம் பேர் கண்டுகளித்தனர். அதன் பின்னர் குரு ஸ்தோத்ர பாராயணம் மற்றும் அம்மாவின் அஷ்டோத்தர அர்ச்சனையும் நடைபெற்றது. அதன்பின் அம்மாவின் மூத்த துறவிச் சீடர்கள் அம்மாவுக்கு மாலை அணிவித்தனர். அதன் பின் அம்மாவின் அருளுரை நடைபெற்றது. அதை சுவாமிஜி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

 

 

அம்மாவின் தனது அருளுரையின் போது ” நாம் வாழும் இன்றைய உலகம் வேற்றுமையாலும் பிரிவினைவாதத்தாலும் நிறைந்துள்ளது. இங்கு ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையுடன் அமர்ந்திருக்கும் உங்களைக் காணும் போது அம்மாவின் இதயம் நிறைகிறது. இன்று உலகில் ஒற்றுமைக் குறைவும் மக்களிடையே நற்பண்புகளும் குறைந்து வருவதே முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. உண்மையில் அம்மா உங்களுக்கிடையில் இருந்தாலும் இதை நினைத்து அம்மாவின் உள்ளம் வருந்துகிறது. இன்றைய உலகின் நிலையை எண்ணும் போது எப்படி நம்மால் விழா கொண்டாட இயலும்.? ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து தமது பொருந்தாத இயல்புகளை நீக்க உண்மையாக முயலும்போது உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும்” என்று அம்மா கூறினார்.

 

 

இவ்விழாவில் மகாராஷ்டிர ஆளுநர் உயர்திரு. கே. சங்கர நாராயணன் , மத்திய அமைச்சர்கள் உயர்திரு .விலாஸ்ராவ் தேஷ்முக் , திரு . கே.சி. வேணுகோபால், திரு. என். பீதாம்பரகுருப்பு எம்.பி , தமிழக எம்.எல்.ஏ. திரு. ராமகிருஷ்ணன், சிவகிரி மடாதிபதி ஸ்வாமி பிரகாசானந்தா, பன்மனா ஆசிரமத் தலைவர் ஸ்வாமி பிரணவானந்த தீர்த்த பாதர், பிஷப். மார் கிறிஸ்டோட்டம் போன்றோர் விழாவுக்கு வந்திருந்த முக்கியப் பிரமுகர்களாவர்.

அமிர்த கீர்த்தி விருது

திரு. எம்.பி. வீரேந்திரகுமார் ( மாத்ருபூமி நாளிதழின் இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ) அவர்களுக்கு 2011 ஆண்டுக்கான அமிர்த கீர்த்தி விருது வழங்கப்பட்டது. இவ்விருது 1,23,456 ரூபாய் ரொக்கத் தொகையும் சான்றிதழும் சரஸ்வதி விக்கிரகமும் அடங்கியதாகும். இதை மகாராஷ்டிர ஆளுநர் உயர்திரு. கே. சங்கர நாராயணன் அவர்கள் வழங்கினார். அதை ஏற்றுக் கொண்ட திரு. எம்.பி. வீரேந்திரகுமார் அவர்கள் தமது உரையில் ” வாழ்வில் அன்பும் புண்ணியமும் என்னவென்று தனது ஸ்பர்சம் மற்றும் அரவணைப்பின் மூலம் உலகிற்குக் காட்டிக்கொடுத்தவர் அம்மா. இந்த அமிர்தகீர்த்தி விருதை அம்மாவின் அருளாக காண்கிறேன். இந்த நிமிடம், இதே மேடையில் உயிர் பிரிந்தாலும் அதை என் பாக்கியமாகக் கருதுவேன் ” என்றார்.

இ- டியூஷன்

இவ்விழாவின் போது இரு புதிய திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டன. முதலாவது கல்லூரி மாணவருக்கான இலவச டியூஷன் ( இ- டியூஷன் ) திட்டம். இதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் உயர்திரு .விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்கள் துவக்கி வைத்தார்.

அமிர்த ஸாந்த்வனம்

இரண்டாவதாக ” அமிர்த ஸாந்த்வனம் ” குடும்ப செவிலியர் ( ஹோம் நர்ஸிங் ) பயிற்சி வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிர ஆளுநர் உயர்திரு. கே. சங்கர நாராயணன் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சமூகத்திற்கு திறமை வாய்ந்த 10,000 குடும்ப செவிலியர்களை உருவாக்க வேண்டும் என்பது அம்மாவின் நோக்கமாகும். அவ்வாறு பயிற்சி பெறும் பெண்களுக்கு 6 மாத இலவசப் பயிற்சியும் தங்கும் வசதியுடன் மட்டுமல்லாது பயிற்சிக்காலத்தில் அவர்களுக்கு பயிற்சி ஊக்கத்தொகையும் அளிக்கப்படும்.

அமிர்த ஸ்ரீ பாதுகாப்புத் திட்டம்

அமிர்த ஸ்ரீ பாதுகாப்புத் திட்டம் என்பது மடத்தின் சுய தொழில் உதவிக்குழு அமைப்பும் (அமிர்த ஸ்ரீ ) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமும் ( LIC ) இணைந்து செயல்படும் ஒரு திட்டமாகும். இத்துடன் அமிர்த ஸ்ரீ குடும்பத்தைச் சார்ந்த 15% குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1200 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கான உதவித்தொகையை மத்திய மந்திரி கே. சி. வேணுகோபால் அவர்கள் வழங்கினார்.

அமிர்தா சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இயல்பான மரணம் ஏற்பட்டால் 40,000 ரூபாயும் விபத்தில் உயிரிழந்தால் 85,000 ரூபாயும் வழங்கப்படும். இத்திட்டத்தால் (விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு ) மடத்தின் கீழ் இயங்கி வரும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களும் அவர்களது குடும்பமும் பயன்பெறும்.

அமிர்த நிதித் திட்டம்

அமிர்த நிதித் திட்டத்திற்கான புதிய பயனாளிகளுக்கான தொகையை பாராளுமன்ற உறுப்பினர் திரு . பீதாம்பர குருப்புஅவர்கள் காசோலைகளை வழங்கினார். இத்திட்டத்தால் ஆதரவற்றவர்கள் மற்றும் விதவைகள் போன்றோர்சுமார் 1 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர்.

வித்யாமிர்தம்

புதிய ( 25 ) மாணவர்களுக்கு வித்யாமிர்தம் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் உயர்திரு .விலாஸ்ராவ் தேஷ்முக் அவர்கள் வழங்கினார். இவ்வருடம் இத்திட்டம் மேலும் சுமார் 5000 மாணவர்களுக்காக விரிவு படுத்தப்பட்டுள்ளது.

மாத்ருவாணி இதழின் பிறந்தநாள் விழாவின் சிறப்புப் பதிப்பின் முதல் பிரதியை சிவகிரி ஸ்ரீ நாராயண குரு மடத்தின் தலைவர் சுவாமி பிரகாசானந்தா அவர்கள் வெளியிட பன்மனா சட்டம்பி சுவாமிகள் ஆசிரமத்தின் தலைவர் சுவாமி பிரணவானந்த தீர்த்த பாதர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அமிர்தா பல்கலைக் கழக மாணவர்கள், அமிர்த வித்யாலய மாணவர்கள் மற்றும் அமிர்தா யுவதர்மதாரா உறுப்பினர்களும் மற்றும் பக்தர்களும் இந்தியாவின் தூய்மையாகப் பேணீக்காக்கவும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மற்றும் உள்ளூர் இளைஞர்கள் மது,புகையிலை மற்றும் போதைப்பொருள் இவற்றிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதை சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

அம்மா 58 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார். இவர்களுக்கான முழு திருமணச் செலவையும் மடமே ஏற்றுக் கொண்டது.
திருமணம் முடிந்ததும் நண்பகல் சுமார் 1 மணி அளவில் அம்மா தரிசனம் தரத் துவங்கினார். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தரிசனத்துக்கு இடையில் அம்மா அதிக எண்ணிக்கையில் மாத்ருவாணி சந்தாதாரர்களைச் சேர்த்த பிரசாரகர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். அம்மாவின் தரிசன வேளையில் 27 அமிர்த வித்யாலயங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று இரவு ஊட்டியைச் சார்ந்த படுகர் இன பக்தர்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. அவர்கள் ஆடிய ஆட்டத்தில் மற்ற பக்தர்களும் வெளிநாட்டவரும் கலந்து கொண்டு ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அம்மாவின் நீண்ட தரிசனம் மறுநாள் காலை சுமார் 8 மணி அளவில் நிறைவடைந்தது.

டோக்கியோ ஜூலை 25, 2011

டோக்கியோ நகரில் அம்மாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அந்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட  பலர் ஆறுதலையும் அறிவுரையையும் நாடி அம்மாவிடம் வந்திருந்தனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை அம்மாவிடம் கூறிய போது துக்கம் தாளாமல் வாய்விட்டு அழுதனர். அம்மா அவர்களை அணைத்து ஆறுதல் கூறினார். இவர்களது வேதனையையும்  துயரையும் கவனித்த அம்மா பாதிக்கப்பட்ட பகுதியையும் ஏதாவது ஒரு நிவாரண முகாமையும் பார்வையிடத் தீர்மானித்தார்.

டோக்கியோ நிகழ்ச்சி அதிகாலை 5மணிக்கு நிறைவுற்றது. அதற்குப் பிறகு அம்மா அங்கிருந்து  5 கி.மீ தொலைவில் உள்ள டகாஜோ விளையாட்டு  வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நிவாரண முகாமுக்கு விஜயம் செய்தார். அப்பகுதி சுனாமியால் இடம் பெயர்ந்து வாழ நேர்ந்துள்ளவர்களுக்கான நிவாரண முகாமாக விளங்கி வருகிறது. அங்கே சுமார் 200க்கு அதிகமானவர்கள் தட்டிகளால் அமைக்கப்பட்ட சிறு அறைகளில் தற்காலிகமாக வசிக்கின்றனர். அதை அம்மாவிற்குச் சுற்றிக்காட்டினர். அங்கே இருந்தவர்களுக்கு அம்மா பின்வருமாறு ஆறுதல் கூறினார்:

வேதனை மிக்க அனுபவங்களை நீங்கள் சமீபத்தில் பெற்றிருக்கி றீர்கள். அவற்றின் அதிர்ச்சியில் இருந்து  இன்னும் நீங்கள் விடுபடவில்லை. உங்களுக்கு வார்த்தைகள் எதுவும் மன அமைதியைத் தரும் சூழ்நிலை எதுவும் இங்கு     நிலவவில்லை. நீங்கள் அனுபவித்து வரும் துன்பத்தில் பங்கேற்கவே அம்மா இங்கு வந்துள்ளேன். குழந்தைகளே, இறை ஆற்றலில் நம்பிக்கை வைத்து அவரது அருளுக்காகப் பிரார்த்தியுங்கள். “எது நேர்ந்தாலும் மகிழ்வோடு இருப்பேன்; திடமாக இருப்பேன்” என்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள். தன்னம்பிக்கையும் இறைவன் மீதுள்ள நம்பிக்கையும் இழந்து விடாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

சில நிமிடங்கள் மௌனமாகத் தியானத்தில் கழிந்தன. அதன் பின் அம்மா சுனாமியால் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையில் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்தார்.

அடுத்ததாக அங்கிருந்தவர்களைத் தனித்தனியாக அரவணைத்து, அதாவது துன்பச் சுமையைத் தமது திருத்தோள்களில் இறக்கி வைக்கச் செய்தார். அவர்களது துயரமானது அம்மாவின் திருமுகத்தில் பிரதிபலித்தது. அவர்களது  கண்கள் கண்ணீர் வடித்ததுபோல அம்மாவின் கண்களும் குளமாயின. அம்மா அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட பொருட்களை வழங்கினார். இவை அந்த முகாமில் அவர்களது வாழ்க்கையை ஓரளவு வசதியாக்கும்.

ஸிசிஹகமா கடற்கரைப் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டதாகும். பசிபிக் பெருங்கடலை ஒட்டிய அந்த இடத்திற்கு  அம்மா  பக்தர்களுடன் சென்று அனைவரையும் இயற்கையில் சாந்தியும்  நல்லிணக்கமும் நிலவுவதற்காகப் பிரார்த்தனை புரியுமாறு சொன்னார். அதன்பின், எங்கும் சாந்தி நிலவுவதற் காக அம்மா ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என 9 முறை கூப்பிய கரங்களுடன் சொல்ல அதை அனைவரையும் பின்தொடர்ந்து  சொன்னார்கள். அடுத்து அம்மா “லோகா: ஸமஸ்தா சுகினோ பவந்து” எனும் சாந்தி மந்திரத்தை மூன்று முறை ஓத, அனைவரும் பின்தொடர்ந்து ஓதினார்கள்.

பிறகு கடல்நீர் தமது திருப்பாதங்களை நனைக்கும் அளவுக்கு முன்னே சென்ற அம்மா, கடல் அன்னைக்கு ஒரு மலர்க்கொத்தைச் சமர்ப்பித்து, தலைகுனிந்து வணங்கினார். நிமிர்ந்த அம்மா தொடுவானத்தைச் சிறிது நேரம் உற்று நோக்கியவாறு நின்றார். பின்னர் அனைவரையும் கடல் அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பிக்கச் சொன்னார். இளஞ்சிவப்பு நிறமலர்களையும் அவற்றுடன் ஒவ்வொருவரும் சாந்திக்காகச் செய்த பிரார்த்தனையும் கடல் அன்னை ஏற்றுக்கொண்டார்.

டோக்கியோ, ஜப்பான், ஜூலை 23

இந்த ஆண்டு மார்ச் 11ல் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியில் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அம்மா அறிவித்தார். குறிப்பாக சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்காக இது அளிக்கப்பட்டது.

“அகிலத்தை அரவணைக்கும் அம்மா ” (Embracing the World ) என உலகெங்கும் அறியப்படும் அமெரிக்காவில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் அகில உலக அறக்கட்டளை மூலமாக எனும் இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்பு ஷினாகாவா எனும் நகரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் திரு. கெய்க்கி ஸோமா ( மியாகி கவர்னரின் பிரதிநிதி) மற்றும் மியாகியின் துணை இயக்குநர் அவர்களின் முன்னிலையில் அம்மாவால் வழங்கப்பட்டது.

 

அம்மாவின் பக்தர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் சுனாமி நிகழ்ந்த (மார்ச் 13) இரு தினங்களுக்குப் பின் தமது நிவாரணப் பணிகளைத் தொடங்கினர். அவர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தேவையற்ற குப்பை கூளங்களை அகற்றினர். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் தூய்மைப் படுத்தினர். மேலும் பாதிக்கப் பட்டோருக்கான சுனாமி நிவாரண மையங்களில் உணவு , வீட்டு உபயோகப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வழங்குவதன் மூலம் சேவை செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு ஆன்மிகத்தின் மூலமாகவும் உளவியல் மூலமாகவும் ஆறுதல் அளிக்கப்பட்டது.

புதிய குழந்தைகள் காப்பகத் திறப்பு விழா

ஏப்ரல் 5, கென்யா
கென்யாவில் புதிய குழந்தைகள் காப்பகம் 5-4-2011-ல் திறந்து வைக்கப் பட்டது. கென்யக் குடியரசின் துணைக் குடியரசுத்தலைவர்
மேன்மைமிகு கலோஜோ மிஸியோக்கா மேற்கூறிய காப்பகத்தை அம்மாவின் முன்னிலையில் 5-4-2011-ம் நாளன்று திறந்து வைத்தார். இதைக் கென்யாவின் மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளை கட்டியுள்ளது. இதையொட்டி ஆதிநதி (Adhi river) என்னுமிடத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டின் விளையாட்டு மற்றும் கலாசாரத் துறையின் இணையமைச்சர் திருமதி. வவின்ய நிதேதி, பாராளுமன்றத்தின் பல உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அந்நாட்டின் புகழ்மிக்க பாடகர் எரிக் வெய்னைனா முதலிய பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்குழந்தைகள் காப்பகத்தில் இப்போது 108 குழந்தைகள் வாழ்வதற்கான வசதிகள் உள்ளன.

இதே நாளில் அமிர்தா தொழிற்பயிற்சி மையம், அமிர்தா குடிநீர் வழங்கும் திட்டம் ஆகிய இரு சேவை அமைப்புகளும் ஆரம்பித்து வைக்கப் பட்டன. இது அருகில் இருக்கும் சேரிக் குடியிருப்பான ஜேம் சிட்டியில் வாழும் மக்களுக்குச் சேவை செய்யும். இந்த மையத்தின் முதலாவது குழுவில் 50 பேர் அடிப்படை கணினி இயக்கத்தில் பயிற்சி பெறுகின்றனர்.

குழந்தைகள் காப்பகத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மஸாய் என்னும் பழங்குடியினார் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வறட்சியால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்குத் தினசரி தூய குடிநீர் அமிர்தா குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் தரப் படுகிறது.

கேள்வி: விக்கிரக வழிபாடு என்ற பெயரில் சிலர் இந்துமதத்தை நிந்திக்கிறார்களே! இதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

அம்மா: எந்த நோக்கத்துடன் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு வகையில் விக்கிரக வழிபாடு எல்லா மதங்களிலும் இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தில் உண்டு ; இஸ்லாம் மதத்தில் உண்டு; புத்த மதத்தில் உண்டு; கிறிஸ்தவ மதத்தில் பாயாஸ நைவேத்தியமும், மலர் அர்ச்சனையும் இல்லை; அவ்வளவுதான். அதற்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள். ரொட்டியைக் கிறிஸ்துவின் உடலாகவும், திராட்சை மதுவை அவரது இரத்தமாகவும் கருதிச் சமர்ப்பிக்கிறார்கள். இந்துக்கள் கற்பூர ஆரதி காட்டுகிறார்கள் என்றால் கிறிஸ்தவ மதத்தில் குங்கிலியத் தூபம் புகைக்கிறார்கள். அவர்கள் சிலுவையைத் தியாகத்தின் சின்னமாகக் காண்கிறார்கள். கிறிஸ்துவின் சிலைக்கு முன்னால் மண்டியிட்டு வணங்குகிறார்கள். இஸ்லாம் மதத்தில் மெக்காவைத் தூய்மையானதெனக் கருதி அது உள்ள திசையை நோக்கித் தொழுகிறார்கள். ‘காபா‘வுக்கு முன்னால் அமர்ந்து இறைவனின் கல்யாண குணங்களைச் சிந்தித்துப் பிரார்த்திக்கிறார்கள். இந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் நம்மிடம் நல்ல குணங்களை விழிப்புறச் செய்வதற்காகவே ஆகும். அ, ஆ, இ, ஈ என்று படிப்பது, எழுத்துக்களைக் கூட்டி, வார்த்தைகளைப் படிப்பதற்காகவே ஆகும். ஏ, பி, ஸி, டி என்று படிப்பது ஆங்கில வார்த்தைகளைப் படிப்பதற்காகவே. அதேபோல் இப்படிப்பட்ட வழிபாடுகள் எல்லாம் இறை குணங்களை நாம் பெறுவதற்காகவே ஆகும்.

காடுகள் மற்றும் உயிரினங்களின் அவசியம் கட்டுரையின் தொடர்ச்சி…….

கேள்வி: தனது பிரச்னைகளுக்குத் தானே பரிகாரம் தேடுவதற்குப் பதிலாக, மனிதன் ஆன்மிகத் தலைவர்களையோ அல்லது மகான்களையோ நாடுவது அவர்களுக்குத் தொல்லை தருவதாக இருக்குமா?

அம்மா: நாம் வளர்த்த ஒரு செடி கருகிப் போனால் நாம் அழுவோம். ஆனால், அதை நினைத்து அழாமல், மற்றொரு செடியை நட்டு வளர்க்க வேண்டும். சிரத்தையுடன், அதே சமயம் பற்றின்றிக் கர்மம் செய்யுமாறே ஆன்மிகத் தலைவர்கள் கூறுகின்றனர். நடந்ததை நினைத்து மனிதன் சோர்ந்து விடக்கூடாது. தன்னைப்போல் பிறரை நேசிக்கவும், தனக்குச் செய்து கொள்வதைப்போல் பிறருக்கும் சேவை செய்யவுமே மகான்கள் கற்பிக்கின்றனர். இதை ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து படிக்க முடியாது. இதற்கு ஆன்மிகத் தலைவர்களையே நாட வேண்டும்.

மகான்களின் மனம், உலகியல் சுகத்தை மட்டும் தேடுகின்ற நமது மனதைப் போன்றதல்ல. தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் மற்றும் இனிய பழங்களைக் கொடுக்கும் மரத்தைப் போன்றவர்கள் அவர்கள். மெழுகுவர்த்தியைப் போல், தான் உருகி, சமுதாயத்திற்கு அன்பு மற்றும் அமைதியின் ஒளியைப் பரப்புவதே அவர்களுக்கு சந்தோஷம் தரும் விஷயமாகும். அகந்தையும், பற்றும் நிறைந்த நம்மைச் சரியான பாதையிலும், தர்ம மார்க்கத்திலும் அழைத்துச் செல்ல அவர்களால்தான் முடியும். அது அவர்களுக்குக் கஷ்டமான காரியமுமல்ல. அவர்கள் ஒரு தனி மனிதனுக்காக வாழ்வதில்லை. மனிதன் நல்லவனாவதால் அவர்களுக்கு ஆனந்தமே.
(நிறைவு)