ஞானமின்றி நாம் எந்த செயலைப் புரிந்தாலும் அது நம்மையே நாம் இழப்பதைப் போன்றதாகும். நாம் வாகனத்தை ஓட்ட கற்றபின் ஓட்டினால் 98% சென்றடைய வேண்டிய லட்சியத்தை அடைவோம். ஆனால் வாகனத்தை ஓட்ட கற்காமல் ஓட்டினால் அது நம்மை மருத்துவமனைக்கே கொண்டு செல்லும். ஞானத்துடன் புரியும் செயலானது வரைபடத்தின் உதவியுடன் பயணம் செய்வதற்கு நிகரானது. ஞானமின்றி செயல் புரிந்தால் அது நம்மை வழி பிறழச் செய்யும். வாழ்வில் தன்னம்பிக்கை மிகவும் இன்றியமையாததாகும். இருள் நிறைந்த வழியே தனியாகச் சென்றால் நமக்கு அச்சமேற்படும். ஆனால் நம்முடன் ஒரு போலீஸ்காரர் இருக்கிறார் என்று எண்ணும்போது அந்த அச்சமானது அகன்றுவிடும்.இதுபோல் இறைவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் எனும் உண்மையை உணரும்பொழுது அனைத்து அச்சங்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும். அந்த நம்பிக்கையானது ஒரு வடிகட்டியைப் போன்றதாகும். அது நம்முள்ளிருக்கும் அனைத்து தீமைகளையும் அகற்றிவிடும்.


–அம்மாவின் 63 ஆம் அவதாரத்திருநாள் அருளுரையிலிருந்து

 

அன்பு என்பது நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும்

இறைவன் எல்லைகளும், வேற்றுமைகளும் இல்லாத அகண்டமான ஓருமையாவார்.இயற்கையிலும், அண்டத்திலும், மிருகங்களிலும், மனிதர்களிலும், செடி கொடிகளிலும், மரங்களிலும், பறவைகளிலும், ஓரோர் அணுவிலும், இறையாற்றல் நிறைந்து ததும்பி நிற்கிறது. உயிருள்ளதும் உயிரற்றதுமான
அனைத்தும் இறைமயமேயாகும்.இந்த உண்மையை நாம் முழுவதுமாக அறிந்தால்,நம்மால் நம்மீதும், மற்றவர் மீதும் இந்த உலகின் மீதும் அன்பு செலுத்த மட்டுமே இயலும்.

அன்பின் முதல் அலையை நாம் நம்மிடமிருந்துதான் தோற்றுவிக்கவேண்டும். அமைதியாக உள்ள ஒரு குளத்தில் ஒரு கல்லை எறிந்தால், முதல் அலை அந்தக் கல்லை சுற்றித்தான் வட்டமாகத் தோன்றும். மெல்ல அந்த அலையின் வட்டம் பெரிதாகி, குளக்கரையை சென்றடையும். இதைப்போலவே அன்பும் நமக்குள்ளேயிருந்துதான் முதலில் தொடங்கவேண்டும். அவரவருக்குள் குடிகொண்டுள்ள அன்பைத் தூய்மைப்படுத்த இயன்றால், மெல்ல அது வளர்ந்து பெரிதாகி இந்த உலகம் முழுவதையும் அரவணைக்கும்.

ஒரு புறாவின் கழுத்தில் பாரமுள்ள ஒரு கல்லைக் கட்டினால், அந்த புறாவால் பறக்க இயலாது. அதுபோல் அன்பெனும் புறாவின் கழுத்தில், நாம் இன்று பற்று எனும் கல்லை கட்டியிருக்கிறோம். எனவே, நம்மால் சுதந்திரம் எனும் எல்லையற்ற ஆகாயத்தில் பறக்க இயலாது போகிறது. ‘நான்’ ‘எனது’ என்கிற பற்றெனும் சங்கிலியால் நாம் அன்பை பிணைத்துள்ளோம். அன்பில்லையெனில் வாழ்வே இல்லை. அன்பில்லையெனில் எந்தத்துறையிலும் தொண்டாற்றவும் இயலாது. இரண்டுபேர் இணைந்து வாழும்பொழுது இயற்கையாகவே முரண்பாடு ஏற்படும். எல்லாவித உறவுகளிலும் நாம் இதைத்தான் காண்கிறோம்.

பொறுமையும் சகிப்புத்தன்மையும் உள்ள இடத்தில்தான் வாழ்வின் வசந்தம் மலரும். இந்தப் பண்புகள் இல்லையென்றால் வாழ்க்கை ஒரு பாலைவனம் போல் சுட்டெரிக்கும்.அங்கெ மலர்களோ மரங்களோ ஆறுகளோ,பாடும் பறவைகளோ இருக்காது.

அன்பு, பெறுபவரைக்காட்டிலும் கொடுப்பவருக்கே அதிக மகிழ்வைத்தரும் சொத்தாகும். நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்து.காலமெனும் பாதையில் அன்பின் காலடிச்சுவடுகள் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும். அது மிகவும் பலம் வாய்ந்த எதிரியையும் வெற்றிகொள்ள வல்ல ஆயுதமாகும். அது அருவமான இறைவனைக்கூட பிணைத்திடும் கயிறாகும். அன்பு மட்டுமே மாயையின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடிய மந்திரம். அன்பு ஒன்று மட்டுமே அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகும் நாணயம்.

அன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக்கூடியதல்ல.நம் செயல்களின் மூலம் அதை ஒளிரச் செய்யவேண்டும். நாம் அன்புமயமாக மாறும்பொழுது, நமது புலன்கள் அனைத்தும் அன்பின் பாலங்களாக மாறுகின்றன. எவரது கர்வத்தாலும் வெல்ல முடியாததாக அன்பு ஒன்று மட்டுமே உள்ளது. அது துன்பத்தைத் தீர்க்கக்கூடிய அருமருந்தாகும். அது தனிமையின் ஊன்றுகோலுமாகும்.
நம் வாழ்வின் அனைத்து வெற்றிகளுக்கும் சரியான அளவுகோலும் அன்பு ஒன்று மட்டுமேயாகும்.

-அம்மாவின் 63 ஆம் அவதாரத்திருநாள் அருளுரையிலிருந்து

அன்பும் ஒற்றுமையும்

வண்ணங்களின் இணக்கத்தோடும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போலவே இன்று இங்கே இந்த பூமியில் அதே போன்ற ஒரு வானவில்லைக் காண்பது போல அம்மாவுக்குத் தோன்றுகிறது. அம்மாவின் அன்புக்குழந்தைகள் அன்போடும் ஒற்றுமையோடும் இங்கே ஒன்றாகக் கூடியிருப்பதே அந்தப் பூரண அழகு மிளிரும் வானவில். இதே அன்பும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திட இறைவனின் அருள் என் குழந்தைகளுக்கு கிடைத்திடட்டும்.

படைத்தலைவர்கள்

இன்று நம் நாட்டுக்கும் உலகுக்கும் தேவையாயிருப்பது, அன்பின் சக்தியை தம்முள் விழிப்படையச் செய்து அச்சமற்று தீரர்களாக விளங்கக்கூடிய படைத்தலைவர்களே. படைத்தலைவர்கள் என்றால் அடுத்தவரோடு போரிட்டு வென்று அவர்களது சொத்துக்களையும் நாட்டையும் கவர்ந்து கொள்ளும் வீரர்கள் அல்ல. சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தரம்மிக்க தலைமையைத் தரக்கூடிய படைத்தலைவர்களைத் தான் உலகம் தாகத்தோடு எதிர்பார்த்து நிற்கிறது.

வெறுப்பும் கசப்பும் எதிர்ப்பும் உள்ளடங்கிய கருமேகங்கள் ஆகாயத்தை மூடியுள்ளன. மக்களின் இதயங்களிலோ கொடுமைகள் அனுபவித்த இளம் வயது, இழந்துவிட்ட இளமை, மிதிக்கப்பட்ட பெண்மை, கவனிப்பார் அற்ற முதுமை இவற்றின் சுமைகள் சேர்ந்து அழுத்துகின்றன. இந்த இருளடைந்த கால கட்டத்தில் உலகம் விவேகத்தின் ஒளியையும் மன்னிக்கும் குணமென்னும் குளிர் சாரலையும், உடல்-மனப்புண்களை ஆற்றும் தயையின் ­அன்பு வருடலையும் எதிர் நோக்கி ஏங்கிக் காத்திருக்கிறது.

இன்று அம்மாவின் குழந்தைகளிடையே இங்கு காணும் அன்பு, ஒற்றுமை மற்றும் உத்வேகம் உலகில் சூழ்ந்திருக்கும் அந்த இருளைப் போக்க உதவட்டும்; மற்றவர்களுக்கு ஒர் முன்னுதாரணமாக அமைந்து ஊக்கம் தருமாறும் இவை அமையட்டும் என்று அம்மா பிரார்த்திக்கிறேன்.

இருமை என்பது உலகத்தின் இயல்பு

நமது இதயத்துக்கு வேதனை தரக்கூடிய விஷயங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும்; அதே சமயம் அன்பின் ஒளியும், இரக்கமும் நம்முள் இருக்கத்தான் இருக்கிறது. ஒரு மகாத்மா முன்பு சொன்னதுண்டு “துக்கம் என்பது இருக்கிறது; அதே சமயம் துக்க நிவாரணமும் இருக்கத்தான் செய்கிறது”. இந்தச் செய்தியின் பிற்பகுதிதான் சாரமான உண்மை; அதாவது துக்கம் தற்காலிகமானது; ஆனால் எந்த சாந்தி துக்கத்தையெல்லாம் நீக்குகிறதோ அது நிரந்தரமானது. இந்த அமைதிதான் உலகத்தின் அடி நாதம். இருமை என்பது உலகத்தின் இயல்பு. வெளிச்சம்-இருள், அன்பு-வெறுப்பு, சண்டை-சமாதானம் என்று எதிலும் இருமை உண்டு. இரண்டையுமே வெளிக் கொணரும் சக்தி மனிதர்களுக்கு உண்டு. இதில் முக்கிய கேள்வி என்ன என்றால் “நாம் இந்த இருமைகளில் எந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெளிக்கொணருகிறோம்?” என்பது தான்.

உலகில் இரண்டு வகையான இயல்பு கொண்ட மக்கள் இருக்கிறார்கள். முதல் வகையினர், அடுத்தவர்களை அழுத்தி மிதித்துக் கொண்டு மேலேறி வருபவர்கள். கம்ஸன், துரியோதனன், இராவணன் போன்றவர்கள் இந்த வகையினர். இரண்டாவது வகையினரோ அடுத்தவர்களை உயர்த்துவதன் மூலம் தாம் மேலான உயரங்களை எட்டுபவர்கள். ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் இதற்கு உதாரணங்களாய்த் திகழ்கிறார்கள். அற்பமான குப்பையிலிருந்து மகாத்மாக்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள் அவர்கள். தனது சக்தியையும், வீரத்தையும் தானே அறியாத அனுமான் தன்னை முற்றிலுமாக ஸ்ரீராமரது சேவைக்கு அர்ப்பித்துக் கொண்டதன் மூலம் ஒரு மகாபுருஷராக உருப்பெற்றார். ஒரு அற்ப அணிலையும் கூட பொதுநலச் சேவைக்காகத் தன்னை அற்பணிக்க வைக்க ஸ்ரீராமர் உத்வேகமளித்தார். நம்முள்ளும் அதேபோல சக்தியும், வீரியமும் வெளிப்படாத நிலையில் உறங்கிக் கிடக்கிறது. அதை விழிப்படையச் செய்ய நமக்குத் தேவை திறந்த மனது ஒன்று மட்டுமே.

தொழில்நுட்ப சாதனங்கள்

பொதுவாக ஒரு தேசத்தின் வளர்ச்சியை அளவிட நாம் GDP (Gross domestic product) எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்கிற அளவுக் குறியீட்டை உபயோக்கிறோம், ஆனால் இப்போது உலகம், GDP மூலம் பூரணமான ஒரு கணிப்பு கிட்டுவதில்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டது. பொருளாதார வளர்ச்சி என்பது முன்னேற்றத்தின் ஒரு அம்சம் மட்டுமே. மக்கள் அமைதியையும் திருப்தியையும் அனுபவிக்கவில்லை என்றால் எங்கோ ஏதோ சரியில்லை என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். சாந்தியும், திருப்தியும் அனுபவிக்க பணம் மட்டுமே போதாது. நமக்கு வேண்டியது ஆன்மிகப் பண்பாடும் உலகளாவிய தார்மீக ஒழுக்க நெறிகளும். அவை இல்லையென்றால் நம்முடைய முயற்சிகளெல்லாம் பிணத்துக்கு அலங்காரம் செய்வதைப் போன்றே இருக்கும்.

இன்றைய உலகில் புதிய புதிய கைபேசிகளும், கணினிகளும் மற்ற பல மின்னணு சாதனங்களும் அன்றாடம் விதம் விதமாய் வந்து கொண்டே இருக்கின்றன. கையில் ஒரு தொலைபேசியை வைத்துக் கொண்டே இன்று நம்மால் செய்யக்கூடிய காரியங்கள் பிரமிக்க வைக்கின்றன. இந்த அவசரயுகத்தில் இந்த நவீன சாதனங்களுக்கு உரிய உபயோகம் இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்ப சாதனங்கள் எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; நாம் அவற்றிற்கு அடிமையாகி விடக்கூடாது. துரதிருஷ்ட வசமாக, இன்று நம்மில் பெரும்பாலாரும் கைபேசிக்கும், கணினிக்கும், இணையத்துக்கும் அடிமையாகி இருப்பது தான் உண்மை நிலை. இன்று பல நாடுகளிலும் இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டவர்களுக்கு சிகிச்சை செய்து அவர்களை சாதாரண நிலைக்கு மீட்டுக் கொண்டு வரும் மனநல மருத்துவம் பரவலாகிக் கொண்டிருக்கிறது.

தகவல் தொடர்பு வளரும் அதே வேகத்தில் மன முதிர்ச்சியும் வளருவது அவசியம். இல்லையெனில், நன்மையைவிடத் தீமையே அதிகமாகிறது. இந்த உண்மையைக் கண்கூடாக நிரூபிப்பவர்கள் இன்று நம்மிடையே பலரும் காணக் கிடைக்கிறார்கள். இந்த சாதனங்கள் மூலம் ஒரளவு மகிழ்ச்சி கிட்டக் கூடும் என்றாலும் அந்த மகிழ்ச்சிக்குக் கொடுக்கும் விலை மிக அதிகமே. வெளியுலகத்திலிருந்து உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும் என்பது சாத்தியமில்லை என்பதே உண்மை.

இன்று உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. ஆனாலும் அதில் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் மேம்போக்கானதே. மனிதர்களுக்கிடேயே உள்ள இடைவெளியை இவை குறைத்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் இன்று மனிதர்களின் இதயங்களுக்கிடையே உள்ள இடைவெளி மிகவும் அதிகரித்து விட்டிருக்கிறது. எத்தனையோ விதங்களில் நேரத்தை சேமிக்க இன்று முடிகிறதென்றாலும், முன்காலம் போல ஒய்வெடுத்து வாழ்க்கையை அனுபவிக்க இன்று நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு எல்லாவிதமான விளையாட்டுப் பொருள்களும் இன்று உண்டு; ஆனால் விளையாடத்தான் நேரமில்லை! மன இறுக்கத்திற்கு எத்தனையோ நிவாரண மருந்துகள் இன்று உண்டு; ஆனால் இன்று உலகில் மன இறுக்கமும், மனத்தளர்ச்சியும் பெரும் நோய்களாகப் பரவி வருகின்றன.

பெருமைமிகு கலாசாரப் பாரம்பரியத்தின் வழித்தோன்றல்கள் நாம். ஆனால் காலப்போக்கில் நாம் இன்று அந்த மேம்பட்ட ஒழுக்க நெறிகள் அழுகிப் போய்க் கொண்டிருப்பதைக் காண்கிறோம். நாம் நமது பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமைக் கொள்வோம்; அதே சமயம் அவற்றை நாம் நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் பாடுபடுவது அவசியம். நமது செயல்பாடுகளில் நமது பாரம்பரியத்தின் உயர்நெறிகள் வெளிப்படவில்லை என்றால், அது பாட்டரி தீர்ந்து போன செல்போனைக் கையில் வைத்திருப்பது போலத்தான். அடுத்தவர்களிடம் காட்டிப் பெருமை பீற்றிக் கொள்ளத்தான் முடியுமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை. நன்னெறிகளே நமது அடித்தளம். நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒர் நல்ல அடித்தளம் அவசியம். இல்லையென்றால், தானே ஆட்டம் காணும் ஒர் நடன மேடையைப் போல நமது வாழ்க்கையே நிலையற்ற குலுக்கல் ஆகிவிடும். நம்முள்ளில் நாமே திடமான ஓர் மேடையை அமைத்தல் அவசியம். ஒழுக்க நெறிகளில் வேரூன்றியிருப்பதே அந்த மேடை.

பறவைகள் போல பறக்கவும் மீன் போல நீந்தவும் நாம் கற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் ஒரு மனிதனைப் போல் நடக்கவும் வாழவும் நாம் மறந்துவிட்டோம். இன்று ரூபாயின் மதிப்பு வீழ்ந்து விட்டது. சமுதாய ஒழுக்க நெறிகளும் வீழ்ந்து விட்டன, இயற்கையில் உற்பத்தியாகும் பொருள்களின் தரமும் வீழ்ந்து விட்டது. கல்வியின் தரம் தாழ்ந்து கொண்டேருக்கிறது. நாலாபுறமும் கொழுந்து விட்டெரியும் தீ நம்மைச் சூழ்ந்துள்ளது போலத் தோன்றுகிறது.

நமது சமுதாயம் அடுத்தவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதிலேயே முனைப்பாய் இருக்கிறது. தனது தவறுகளை கண்டுகொண்டு தன்னைத்தானே திருத்திக் கொள்ள நாட்டமில்லை. அடுத்தவர்களைக் குற்றம் காணுவதில் நாம் நீதிபதிகளாக இருக்கிறோம்; நமது குற்றம் குறைகளைப் பொறுத்தவரை ஒரு திறமையான வக்கீலைப் போல நாம் நமது தவறுகளை மறுத்து வாதிக்கிறோம்.

அசுரர்கள் என்பவர்கள் உண்மையில் தமது விவேக புத்தியை இழந்து கீழே விழுந்து விட்ட தேவர்கள் தாம். அடிப்படையில் தெய்வீகத்தின் அம்சமான மனிதனோ இன்று அசுரனைப் போலவே நடந்து கொள்கிறான். பல புராண நிகழ்வுகளில் மட்டுமின்றி இன்று நடைமுறையில் அசுரர்களே மனிதர்களாய்ப் பிறப்பது கண்கூடாகக் காணமுடிகிறது. பெண்களைத் தாயாகவும், தெய்வமாகவும் மதித்துப் போற்றுகின்ற, மனம் திறந்து பேசிப் பரிமாறிக்கொள்ளும் அன்புத் தோழிகளாய்ப் போற்றுகின்ற நமது அழிவற்ற பாரம்பரியப் பெருமை மீது சேற்றை வாரி இறைக்கும் விதத்தில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்வு கூட இல்லாமல் போவதில்லை.

– – (அமிர்தவர்ஷம் 60) – 2013

சிறப்புரை: ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி
அவர்கள், அமிர்தா பல்கலைக் கழக வேந்தர்,
ஐ.நா சபை, நியூயார்க், ஜூலை 8, 2015

இங்கு கூடியிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது நமஸ்காரம். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஐ.நா. – யூ.என்.ஏ.ஐ. ஆகிய நிறுவனங்களோடும் இம்முயற்சியில் இணைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயல்பாகவே ஆன்மிக சிந்தனையையும் செயலையும் நான் வாழ்வின் விரதமாகக் கொண்டவள். ‘ அத்தகைய ஒருவருக்கு இங்கே என்ன வேலை?‘ என்று இங்கே இருக்கும் சிலருக்காவது தோன்றினால், அதில் வியப்படைய ஏதுமில்லை. ஒருவேளை எனது நம்பிக்கையும் கோட்பாடுகளுமே உங்கள்முன் என்னைக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கலாம். ஆன்மிகத் தத்துவங்களில் நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இடையில், உலகின் எதிர்காலம், இயற்கைப் பாதுகாப்பு, நஷ்டமாகிவரும் அதன் சமநிலை இவற்றைக் குறித்தெல்லாம் நான் மிக ஆழமாகச் சிந்திப்பதுண்டு. இவ்வாறு சிந்திக்கச் சிந்திக்க, பிரபஞ்சத்தின் சமநிலை நிலைத்திருக்க ஆன்மிகம், அறிவியல், தொழில்நுட்பக் கல்வி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைவது மிகவும் அவசியம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தக் காலகட்டத்தில் நம்மைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்ச்சிகளும் அவை தேவை என்றே அறிவுறுத்துகின்றன.

அறிவியலும் தொழில்நுட்பக் கல்வியும் மனிதனின் கட்டுப்பாட்டிற்குள் அடங்காத அளவுக்கு தோன்றி தினமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இது எதை நோக்கிச் செல்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. நம்மைச் சுற்றிக் கூர்ந்து கவனித்தால், ஒவ்வொரு புதிய பொருளை வாங்குபவர்களும் அதை உற்பத்தி செய்பவர்களும் எல்லாம் ஒருவித மயக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. பெரிய பல்பொருள் அங்காடிக்கு சிறு குழந்தை சென்றால் என்ன நிகழும்? இன்றைய உலகில் மனிதனின் நிலையும் கிட்டத்தட்ட இதுபோல் இருக்கிறது.

இன்று உண்ணவும், குடிக்கவும், கேட்கவும், காணவும், தேவையான எல்லாப் பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே வரவழைக்கவும் (ஆர்டர் செய்ய) முடியும். நாம் இருக்கும் இடத்திற்கே அதைக் கொண்டுவந்து சில நிமிடங்களுக்குள் தருவார்கள். பொருட்களை விற்கவோ வாங்கவோ கடைக்குப் போகவேண்டாம். கடையைத் தேடி நடக்கவும் வேண்டாம். எல்லாவற்றுக்கும் அதற்குரிய இணையதளங்கள் உள்ளன. இணையதளம் ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறது. இது மிகவும் நல்லதுதான். இன்று விரலை ஒரு முறை அழுத்தினால் ஒன்றைத் தவிர வேறு எதையும் வாங்கலாம். அதுதான் அன்பு.
நம்மில் பெரும்பாலோர் குளிர்சாதன வசதி உள்ள அறையில் வசிக்கிறோம். ஆனால் இந்த அறையில் படுத்த போதும் உறக்கம் வராமல் தூக்கமாத்திரை சாப்பிடுவோரும் உண்டு; சிலர் அந்த அறையிலேயே தற்கொலை கூடச் செய்து கொள்கின்றனர். நாம் வசிக்கும் அறைதான் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றால் இந்நிலை வரவேண்டிய அவசியமில்லை. அப்படியானால் மகிழ்ச்சி என்பது மனதையும் சார்ந்திருக்கிறது என்பதே உண்மை. மனதைக் குளுமையாக்கும் (ஏர்கண்டிஷன்) கல்வியே ஆன்மிகக் கல்வியாகும்

இன்று நாம் எங்கு சென்றாலும் இண்டர்நெட் தொடர்பு கிடைக்க வேண்டும் என்று தவிக்கிறோம். ஆனால் இண்டர்நெட் தொடர்பு கிடைத்தால் மட்டும் போதாது; இன்னர்நெட்டின்( மனதின்) தொடர்பையும் சரியாக்க வேண்டும். அகத்தையும் புறத்தையும் சமமாகப் பயன்படுத்தக் கற்பிப்பதே ஆன்மிகக் கல்வியாகும். கடலில் நீந்தக் கற்றவன் அலைகளில் நீந்தி மகிழ்வான்; அப்படிக் கற்காதவனோ நீரில் மூழ்கி இறப்பான்.

மனித குலத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை என்ன? வாழ்வின் வேகமான ஓட்டத்திலும் பரபரப்பிலும் அகப்பட்டு அவன் நன்னெறிகளை அடியோடு மறக்கிறான்; இல்லாவிட்டால் அதை அற்பமாகக் கருதுகிறான். தனிமனிதன் முதல் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் வரை தனியாகவும் கூட்டாகவும் செய்யும் அதர்மங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் நாம் நியாயம் கற்பிக்க முயலுகிறோம். அதை சமுதாயத்தின் மனங்களில் சுமத்தவும் செய்கிறோம்.

பழங்காலம் முதலே உலகில் பிரச்னைகள் இருந்தன. போரும் போராட்டமும் நிறவெறியும் இனவேறுபாடுகளும் சமுதாய, குடும்பக் கலகங்களும் காணப்பட்டன. ஆனால், நம்முடைய முன்னோர்களுக்கு வாழ்வைக் குறித்த வேறுபட்ட கண்ணோட்டம் இருந்தது. மனிதன், இயற்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைத்து அவற்றைச் சமநிலையில் இருக்கச் செய்யும் கண்ணுக்குப் புலப்படாத சக்தி ( இறை ஆற்றல் ) இந்த மூன்று பிரிவுகளையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் வாழ்ந்தனர்.

நமது முன்னோர்களின் கண்ணோட்டமானது தனிமனிதன், பிரபஞ்சம் இவற்றின் வெளித்தோற்றத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு வாழ்வதாக இருக்கவில்லை. தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஆதாரமான , அவற்றை இணைத்து நிறுத்துகின்ற கண்ணுக்குப் புலப்படாத சக்தியையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அந்த சக்தியை வாழ்வின் முக்கிய அங்கமாகக் கருதினர். பல வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்பட்டாலும் மனித குலமும் இயற்கையும் எல்லா உயிரினங்களும் ஒரே நூலில் கோர்க்கப் பட்ட முத்துமாலையைப் போன்றது என்று அவர்கள் நம்பினர். அதனால் அவர்கள் தங்கள் வாழ்வில்,‘ பங்கு கொள்வது, பங்கிடுவது, ஆழ்ந்து சிந்திப்பது, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது போன்றவற்றிற்கு மிக உயர்ந்த இடத்தை அளித்தனர். அந்தப் பண்பாட்டை நாம் நடைமுறைக்கு ஒவ்வாதது- அநாகரிகமானது என்றெல்லாம் முத்திரை குத்தி ஒதுக்கிவிட்டோம்.

மனித வாழ்வின் எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும், ஆடம்பரத்திற்கு நடுவில் வயிற்றில் நெருப்புடன் வாழ்பவர்களையே நாம் அதிகமாகக் காண்கிறோம். பேராசையானது மனிதனைக் குருடனாக ஆக்கி இருக்கிறது. அதன் பலனாக,மனிதத்தன்மையற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. மன வருத்தமும்,மன உளைச்சலும் மனிதனை இதுவரை இல்லாத எல்லா புதிய நோய்களுக்கும் அடிமையாக ஆக்குகிறது.

எவ்வழியில் செல்லவேண்டும் என்பது புரியாமல் ஒரு நாற்சந்தியில் திகைத்து நிற்கும் ஒரு மனிதனது நிலையில் தான் இன்றைய மனிதகுலம் உள்ளது. இதுவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மட்டும் சார்ந்து மனிதன் வாழ்ந்தான். ஆனால் இன்றைய குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்து ஆன்மீக சிந்தனையையும் அவற்றுடன் சேர்த்து சோதனை செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

இடையிடையே நிகழும் இயற்கைச் சீற்றங்கள், பயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள காலநிலை மாற்றங்கள், உலகம் வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமியிலும் இயற்கையிலும் பலவித மாற்றங்கள் ஏற்படுகிறது. அவற்றை எல்லாம் மனிதனின் முயற்சியால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியுமா என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பழங்கால மனிதர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தனர். ஒரு மரக்கன்றை நடவும், வெட்டவும் நல்ல நாள் பார்ப்பார்கள். மரத்தை வெட்டுவதற்கு முன்பு, முதலில் பூஜை செய்து, மரத்திடம் அனுமதி கேட்பார்கள். பின்னர் “நாங்கள் செய்யும் தவறைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.எங்களது தேவைக்காகவே உன்னை வெட்டுகிறோம்” என்று மன்னிப்பு கேட்பார்கள். அதன்பிறகுதான் வெட்டுவார்கள். ஆனால் இன்றோ மரக்கன்றுகளை நடுவதில்லை என்பது மட்டுமல்ல; கணக்கில்லாமல் மரங்களையும், இயற்கையையும் ஒரு நன்றியில்லாமல் அழிக்கவும் செய்கிறோம்.

.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கை அல்லது காலில் காயம்பட்டால், காயத்தில் சாணத்தைப் பூசிக் கட்டுவார்கள். காயம் விரைவில் ஆறிவிடும். ஆனால், இன்று அப்படிச் செய்தால் காயம் சீழ்பிடித்துவிடும். ஒரு வேளை அதற்கான ஊசி போடவில்லையெனில் இறந்து போவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. அன்று மருந்தாக இருந்த சாணம் இன்று விஷமாக ஆகி இருக்கிறது. இயற்கை அந்த அளவு அசுத்தமாகி உள்ளது.

இப்பிரபஞ்சத்திற்கு ஒரு தாளம் (சமநிலை) உண்டு. இந்த உலகிற்கும் இதிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் இடையில் பிரிக்கமுடியாத பந்தம் உண்டு. ஒன்றுகொன்று பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு ‘நெட் ஒர்க்’ போன்றது இவ்வுலகம். நால்வர் பிடித்து நிற்கும் ஒரு வலையின் ஒரு மூலையில் சிறிய அசைவு ஏற்பட்டாலும், அதன் அசைவு வலையின் எல்லா முனைகளிலும் பிரதிபலிக்கிறது. அது போல இப்பிரபஞ்சத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் அனைத்து செயல்களும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலில் அவர்கள் மாறட்டும். நாம் பின்னர் மாறுவோம் என்றால் நடக்காது. அவர்கள் மாறாவிட்டாலும் நாம் மாறலாம் என்றால் உலகில் மாற்றம் கொண்டு வர இயலும். நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். அதனால் அம்மா எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். “அன்னையர் தினமும், தந்தையர் தினமும்” கொண்டாடுவதுபோல், இயற்கையை மரியாதை செய்யவும், அதை வழிபடவும் ஒரு நாள் இருக்கவேண்டும். நாம் எப்பொழுதும் இயற்கையைச் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அதற்குப் பதிலாக இந்தப் புத்தாண்டு முதல் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு மரக்கன்று வைத்து வளர்ப்பது நல்லது என்று அம்மா விரும்புகிறேன்.

இன்று வாழ்வில் நன்னெறிகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டது,அது நடைமுறைக்கு பொருந்தாது என்றும் தேவையற்றதென்றும் மனிதன் நினைக்கிறான். மனிதனும் இயற்கையும் கைகோர்த்து சென்றாலே இவ்வுலகு மற்றும் பிரபஞ்சத்தின் தாளகதி உண்டாகிறது. இன்றைய மனிதன் அவனின் கண்டிபிடிப்புகளுக்கே முக்கியத்துவம் நல்குகிறான். எந்த இயந்திரமானாலும் துருப்பிடிக்காமல் நன்றாக ஓடவேண்டுமெனில் அதற்கு எண்ணெய் விடவேண்டும். அதுபோல் நமது வாழ்வும் நன்றாக அமைய நன்னெறிகள் அவசியமாகும். ஆன்மீகத்தின் மூலமாக மட்டுமே நன்னெறிகள் உண்டாகும் என்று அம்மா நினைக்கிறேன்

உயிர்வாழ்வதற்கான கல்வி; வாழ்விற்குரிய கல்வி – இவை இரண்டும் இரண்டாகும். உயிர்வாழ்வதற்கு அதாவது, வயிற்றுப்பிழைப்புக்கு உள்ள கல்வி. மருத்துவராக வேண்டும்; எஞ்ஜினியராக வேண்டும்; கல்லூரியில் படிக்கவேண்டும். இரண்டாவது, வாழ்விற்குரிய கல்வியாகும். இதை அறியவேண்டுமெனில், ஆன்மிகம் நமக்குப் புரியவேண்டும். அதாவது, உலகின் இயல்பும், மனதின் இயல்பும், உணர்ச்சிகளையும் பற்றிய அறிவு வேண்டும். நமது கல்வியின் லட்சியம் எந்திரங்களின் மொழியை மட்டும் புரிந்துகொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவது அல்ல என்பதும் நமக்குத் தெரியும். கல்விப் பயிற்சியால் முக்கியமாக நாம் பண்பாட்டைப் பெறவேண்டும். மனிதன் நாகரிகமானவனாக இருப்பதற்கு கல்வி அவசியம் எனபதில்லை..


கடலில் நீந்தக் கற்றவன் அலைகளில் நீந்தி மகிழ்வான்; அப்படிக் கற்காதவனோ நீரில் மூழ்கி இறப்பான். இது போன்றதுதான் ஆன்மிக வாழ்வும், வருவதை மகிழ்வுடன் எதிர்கொள்ளும் ஒரு மனோபாவத்தை உருவாக்குவதே ஆன்மிகம்.
ஆன்மீகமும் ஒரு அறிவியலாகும்; அலட்சியம் செய்யமுடியாத ஒரு பிரிவாகும். அறிவியல் உலகம் புறம் சார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்துவரும் பிரபஞ்ச ரகசியங்களை, கடினமான ஆத்ம விசாரணையின் பாதைகளின் மூலம் கண்டறிந்தவர்களின் வார்த்தைகளும் அனுபவங்களுமே ஆன்மீக நூல்களில் விவரிக்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி பரிசோதித்துப் பார்த்தால்,ஒருவேளை அதன் சிறப்பைப் புரிந்துகொள்ள முடியாமல் போகும். ஒரு குழந்தையின் மனதிலும் , கண்ணிலும் தோன்றும் ஆச்சர்யம் மற்றும் நம்பிக்கை எனும் கண்ணால் ஆன்மீகத்தை நாம் அணுக வேண்டும். வல்லுநர்களும் பிரசித்தி பெற்றவர்களும் விஞ்ஞானிகளும் இப்பிரபஞ்சத்தை விசித்திரங்கள் நிறைந்த ஒரு ஆச்சர்யமாகவே கண்டனர். அவர்களின் ஆராய்ச்சிகளுக்கு களங்கமற்ற ஒரு குழந்தையின் அறிவும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது. உண்மையில் பல உலகியல் விஞ்ஞானிகளும் அவர்களின் வாழ்வின் இறுதிகட்டத்தில் அத்தகு நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது. அத்தவறு இப்போது நம்மை வழிநடத்தும் அறிவியல் உலகிற்கு ஏற்படாமல் இருக்கட்டும் என்று பிரார்த்திப்போமாக.

சர்க்கரையும் மணலும் கலந்திருந்தால் ப்குத்தறிவுச் சிந்தனையால் அதைப் பிரித்தெடுக்க முடியாது. ஆனால் அதை எறும்பு எளிதாகப் பிரித்து விடுகிறது . அது இதயத்தின் மொழியாகும். கருணையின் மொழியாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.

அம்மா பிறந்து வளர்ந்த கிராமத்தில் பலரும் அன்றாடம் கூலிவேலைக்குச் சென்று வாழ்பவர்கள் ஆவர். சிலருக்குச் சிறிய வயதில் இதயநோய் வந்து வால்வை மாற்ற நேர்ந்தது. பலருக்கு மாரடைப்பு வந்தது. ஆனால், அன்று வெளிநாடுகளிலிருந்து வாங்குவதற்குப் போதுமான பணம் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால்,70 வயதுவரை வாழவேண்டியவர்கள் 30,40 வயதில் இறந்தனர். இதை எல்லாம் கண்டபோதுதான் அம்மாவுக்கு மக்களுக்கு சேவை செய்வதற்குத் தேவையான ஆராய்ச்சிகளின்மீது விருப்பம் தோன்றியது. குறைந்த விலைக்கு இப்படிப்பட்ட பொருள்களை இங்கேயே தயாரிக்க முடிந்திருந்தால், எத்தனை ஏழைகளின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்பதுதான் இதன் காரணமாகும்.

உலகெங்குமுள்ள நாடுகளில் குழந்தைச் சாவு இன்று ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது, பாரதத்தில் பல கிராமங்களிலும் நாங்கள் இதைப்பற்றி ஆராய்ச்சி நடத்தியபோது பல பெண்கள் ஒரு குறிப்பிட்ட பச்சிலையைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள். எதற்காக அந்த இலையை சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள். வீட்டிற்கு கணவரின் வருமானம் மட்டுமே உள்ளது. அதுவும் எப்போதாவதுதான் கூலிவேலை கிடைக்கும். அந்தப் பணத்தில் மிகக் குறைவான உணவே தயாரிக்க முடியும். அதை நாங்கள் எங்கள் கணவருக்குக் கொடுப்போம். பசி எடுக்காமல் இருப்பதற்காக நாங்கள் இந்த குறிப்பிட்ட பச்சிலையைச் சாப்பிடுவோம் என்றனர். கருவுற்றிருக்கும் வேளையிலும் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். சத்துள்ள உணவு சிறிதும் கிடைக்காமல் இந்தப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் உள்ளவர்களாக எப்படி இருப்பார்கள்?

சில கிராமங்களில் உள்ள பெண்கள்,கையில் கிடைக்கும் பணத்தை எல்லாம் கணவர் குடித்தும், பிற வழிகளிலும் வீண்செலவு செய்கிறார்கள். குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எங்களை அடிப்பார்கள் . இப்படியாக இருக்கும் உணவைக்கூட சாப்பிட அவர்கள் விடுவதில்லை என்று சொல்கிறார்கள்.

வேறு சில கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கல்வி அறிவற்றவர்கள். அரசாங்கத்திலிருந்து சிறிய தொகை கிடைக்கிறது. ஆனால், மிகக் குறைவான இந்தப் பணத்தையும் கணவர் போலியாகக் கையொப்பமிட்டு வாங்கிக்கொள்வார்கள் என்றனர். இவற்றையெல்லாம் அறிந்தபிறகுதான் அம்மா, கிராமங்களில் உள்ள பெண்களுக்கான கல்வித் திட்டத்தை ஆரம்பித்தேன். அவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் கிடைத்த் அனுபவத்தின் அடிப்படையில் தான் பல்வேறு உதவிகளையும் செய்ய முடிந்தது.

செல்வந்தருக்கும்,ஏழைகளுக்குமிடையே உள்ள இடைவெளி இன்றைய உலகின் சாபமாகும். இந்த இடைவெளி நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் உயர்ந்த குன்றும்,மறுபுறம் பாதாளமும் என்பது போல்,இன்றைய உலகின் செல்வ நிலையில் வேறுபாடு உள்ளது. ஆடம்பர வாழ்வு வாழும் ஒரு பிரிவினர்; ஒருபுறம் அதே சமயம் பசியாலும் வலியாலும் துன்பத்தில் வாடும் மற்றொரு பிரிவினர். இந்த இடைவெளியை நீக்குவதற்கு இனியும் நாம் தாமதித்தால் அது கால அளவில் மிகப்பெரிய கொடுமையான தெருச்சண்டைகளுக்கு வழிவகுக்கும். எனவே இவர்களுக்கிடையில் அன்பு மற்றும் கருணை எனும் பாலத்தை கட்டவேண்டும்

மனிதனிடம் உள்ள எல்லா நற்குணங்களையும் அழிக்கக் கூடிய அவனது எல்லா திறமைகளையும் அடியோடு நாசம் செய்யும் பெரிய விபத்தாக வறுமை உள்ளது,எல்லாவித நற்பண்புகளும் அழிவதற்கு அது காரணமாகிறது.

ஒரு வெளிநாட்டில் பல குழந்தைகள் தரிசனத்திற்கு வந்தனர். அவர்களில் பலர் அம்மாவுக்கு ஓவியம் வரைந்து கொண்டுவந்தனர். சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ள குடும்பங்களைச் சார்ந்த சில குழந்தைகள் வரைந்த ஓவியங்களில் போர்க்கப்பல்களும் அணுகுண்டுகளும் காணப்பட்டன. ஒரு குழந்தை கிறிஸ்து, மேரி சித்திரங்களை வரைந்திருந்தது. ஆனால், அவர்களின் கைகளிலும் துப்பாக்கி வரையப்பட்டிருந்தது. “ஏன் இப்படி வரைந்தாய்?” என்று கேட்டபோது அக்குழந்தை, “பசிக்கும்போது அவர்களுக்கு உணவு வேண்டாமா? துப்பாக்கி கையில் இருந்தால், அதைக்காட்டி மிரட்டி பணம் வாங்கலாம்” என்றது.

“மகனே, துப்பாக்கியைக் காட்டினால்தான் பணம் கிடைக்குமா?” என்று அம்மா கேட்டபோது அவன், “என் தந்தை அப்படித்தான் செய்கிறார்” என்றான். “அப்பா ஆரோக்கியமாக இருக்கிறார் அல்லவா? வேலை செய்து பணம் சம்பாதிக்கலாமே” என்று அம்மா கேட்டேன். அவன், “என் தந்தைக்கு வேலை செய்வதற்கான ஆரோக்கியம் இருக்கிறது. பல நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றார். ஆனால், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால், யாரும் தந்தைக்கு வேலை கொடுக்கவில்லை. அங்கே அழகுள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்பார்கள். அதனால் இப்போது என் தந்தை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும், மக்களிடமிருந்து பணம் பெற்றும்தான் எங்களை வளர்க்கிறார்” என்றான். இதுபோல், தனது அனுபவம், இல்லாவிடில் கண்டு வளர்ந்த காட்சிகள் குழந்தைகளின் மனங்களின் ஆழத்தில் பதிகிறது. ஏழ்மையாலும், தாழ்வுணர்ச்சியாலும் சிறுவயதிலேயே குழந்தைகளின் மனங்களில் ஆக்கிரமிப்பு இயல்பு வளர்கிறது. நாளடைவில், சமூகத்தில் நன்னெறிகள் அழிகின்றன. இங்குதான் அன்பு ம்ற்றும் கருணையின் அவசியம் நமக்குப்புரிகிறது.

ஆன்மிகத்தைக் குறித்து பலர் மிக அற்பமாகப் பேசுகிறார்கள். ஆன்மிகம் என்றால் என்ன? கருணையை செயல்முறைப்படுத்துவதுதான் சரியான ஆன்மிகம். ஆன்மிகத்தின் ஆரம்பமும், அதன் முழுமையும் கருணையில்தான் அடங்கி இருக்கிறது. கருணை என்ற ஒரு வார்த்தையை நமது செயலில் கொண்டுவந்தாலே இவ்வுலகில் இன்று நடமாடும் 90 சதவிகித பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதைப்பற்றிய சரியான அறிவு அளிப்பது அவசியமாகும். சர்க்கரை நோய் உள்ள ஒருவர் மருந்துடன், இனிப்புப் பொருள்களையும் சாப்பிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். ஆக, மருந்தைவிட அவருக்கு, நோய் பற்றிய சரியான அறிவை அளிக்கவேண்டும். உதாரணமாக, நாங்கள் கிராமங்களைத் தத்தெடுத்தபோது, அங்குள்ள ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து, கழிவறைகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்தோம். அவர் கழிவறையைக் கட்டிக்கொடுத்தார். நாங்கள் கிராமத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, கிராமவாசிகள் திறந்தவெளியில் மலஜலம் கழித்தனர். அதுமட்டுமல்ல; ஒரு பூஜை அறையைப்போல், கழிவறையைத் திறந்து பார்ப்பார்கள்; சுத்தம் செய்வார்கள்; பின்னர் அதை மூடிவைப்பார்கள். “திறந்த வெளியில் மலஜலம் கழித்தால், அது நம் உணவை அசுத்தமாக்கும். பின்னர், அதிலிருந்து குடல்புழுவும், பிற கிருமிகளும் நமக்குப் பல நோய்களை உண்டாக்கும்” என்பதை அவர்களுக்குப் புரியவைத்தபோது, அவர்கள் கழிவறையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இவ்வாறு, ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவை அளிக்காத தொண்டு முழுமை அடையாது. ஞானமில்லாத கருணை நமக்கும், மற்றவர்களுக்கும் சமமான தீயபலனை அளிக்கும். நாம் செய்யும் சேவை பலனளிக்கவேண்டுமெனில், விவேக புத்தி அவசியமாகும்.

ஒரு மீன், நதியில் நீந்தி விளையாடியது. நீர் குடிக்கவந்த ஒரு குரங்கு மீனைக் கண்டது. “பாவம், மீன் நீரில் அகப்பட்டுக்கொண்டு தப்ப வழியின்றி வருந்துகிறது. அதை எப்படியாவது காப்பாற்றவேண்டும்” என்று குரங்கு நினைத்தது. மீன்மீது கருணை தோன்றிய குரங்கு, கைகளால் மீனைப் பிடித்துக் கரையில் போட்டது. பாவம் அந்த மீன். மூச்சுவிட முடியாமல் துடிதுடித்து இறந்துவிட்டது. மீனைக் கரையில் போடுவதற்கு முன் அந்தக் குரங்கு மீனின் மனநிலை என்ன என்பதை அறிய முயன்றிருந்தால்…! “உன்னை நான் நீரிலிருந்து வெளியில் எடுக்கவா?” என்று கேட்டிருந்தால்…! என்று ஒருவேளை அந்த மீன் பிழைத்திருக்கக்கூடும். “ஐயோ, நீரிலிருந்து எடுத்தால் நான் செத்துவிடுவேன்” என்று மீன் சொல்லியிருக்கும். ஞானமில்லாத கர்மமானது, குரங்கு மீனைக் காப்பாற்ற முயன்றது போல் ஆகிவிடும். நம்முடைய செயல்களில் மனமும், புத்தியும் இணையவேண்டும்.

அம்மாவின் அனுபவங்களில் இருந்து ஒன்றைக் கூறுகிறேன். ஒருமுறை ஒருவர், 10 வயதுள்ள சிறுவனை அம்மாவிடம் ஒப்படைக்கக் கொண்டுவந்தார். தந்தை இறந்தபின், அவனது தாயும், 13 வயதுள்ள சகோதரியும் வீட்டிற்கு அருகிலுள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்தனர். தாயின் சிறுநீரகத்தில் நோய் பாதிக்கவே, அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. கூலி மிகவும் குறைவாக இருந்தபோதும், சகோதரி மட்டும் வேலைக்குச் சென்றுவந்தாள். அந்த வருமானத்தில், தாய்க்குத் தேவையான மருந்து வாங்கவும், மூவரின் பசியைப் போக்கவும் முடிந்தது.

அவ்வேளையில், சிறுவர்கள் வேலை செய்வதற்கு எதிராகப் புதிய சட்டங்கள் வந்தன. அதன்படி, தீப்பெட்டித் தொழிற்சாலையின் உரிமையாளரைக் காவலர்கள் கைது செய்தனர். தொழிற்சாலை மூடப்பட்டது. அங்கே வேலை செய்திருந்த சிறார்களை எல்லாம் வீட்டிற்குத் திருப்பி அனுப்பினர். வாழும் வழி அடைபட்ட ஏமாற்றத்தில் ஒருநாள், மகன் பள்ளிக்குச் சென்றிருந்த வேளையில், தாயும் மகளும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இங்கே, சிறுவர்கள் வேலை செய்வதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது. ஆனால், அங்கிருந்து வேலையை இழந்து வெளியேறிய சிறார்களை நம்பி வாழ்ந்திருந்த குடும்பங்களை மறந்துவிட்டனர்.

மனதையும் புத்தியையும் மட்டும் பயன்படுத்தி, பிரச்னைகளுக்கு பரிகாரம் காண முயலும்போது, பிரச்னையின் ஒரு பக்கத்தை மட்டுமே பெரும்பாலும் நாம் காண்கிறோம். பிரச்னைகளுக்கான பரிகாரம் தேடும் முயற்சிக்கு இடையில், ஒரு பக்கத்தை மட்டும் கண்டு, மறு பக்கத்தை காண இயலாமலும் போகிறது.

“இந்த இடத்தில் ஆன்மிகத்தின் அவசியம் என்ன?” என்று கேட்பவர்கள் உண்டு. அவசியமானது, ஆடம்பரமானது – இவை இரண்டையும் நன்கு புரிந்துகொள்ளும் விவேகத்தை அளிப்பதுதான் ஆன்மிகம். உதாரணமாக, நேரத்தை அறிவதற்கு நமக்கு ஒரு கைக்கடிகாரம் தேவை. 100 ரூபாய் கைக்கடிகாரத்தை வாங்கினாலும், 5000 ரூபாய் கைக்கடிகாரத்தை வாங்கினாலும் நேரத்தை அறிய முடியும். அப்படியிருக்க, குறைந்த விலையிலுள்ள கைக்கடிகாரத்தை வாங்கி, மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தினால், அது எவ்வளவு சிறந்த செயலாக இருக்கும்! நூறு குடங்களில் சூரியன் பிரதிபலித்தாலும், சூரியன் ஒன்றே ஆகும். இதுபோல், அனைவரிலும் இருக்கும் ஆத்மா ஒன்றே ஆகும். இந்த மனோபாவத்தின் மூலம் நமக்குப் பிறரையும் நினைத்துப் பார்க்கக்கூடிய மனம் உண்டாகும். தனது வலது கை வலிக்கும்போது, இடது கை உடனே அதைத் தடவிவிடச் செல்வதுபோல், பிறரை நாமாகக் கண்டு அன்பு செய்யவும், தொண்டு செய்யவும் கூடிய மனோபாவம் நம் அனைவருக்கும் உண்டாகட்டும்.

இன்று உலகில் இருவகையில் வறுமையை அனுபவிப்பவர்கள் இருக்கிறார்கள். உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் இல்லாமல் வறுமையை அனுபவிப்பவர்கள் ஒருவகை. அன்பும், கருணையும் கிடைக்காமல் வறுமையை அனுபவிப்பவர்கள் மற்றொரு வகை. இவற்றில் இரண்டாவது வகை வறுமையையே முதலில் கவனிக்க வேண்டும். ஏனெனில், மனதில் அன்பும் கருணையும் இருந்தால், உணவும், உடையும் இருப்பிடமும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களை நாம் நிறைந்த மனதுடன் அன்பு செலுத்தவும், உதவவும் செய்வோம்.

ஒரு கிராமத்தில் ஒரு மகானின் அழகான சிலை இருந்தது. இரு கைகளையும் முன்னால் நீட்டியபடி நிற்கும் சிலைக்குக் கீழே ஒரு கல்லில் “என் கைகளுக்குள் வாருங்கள்” என்று செதுக்கி வைத்திருந்தது. காலப்போக்கில் அச்சிலையின் கைகள் உடைந்துவிட்டன. கிராம மக்கள் அச்சிலையை மிகவும் விரும்பினர். அதன் கைகள் உடைந்ததைக் கண்டு அவர்கள் வருந்தினர். சிலர் அச்சிலையை அங்கிருந்து எடுத்துவிடுவது நல்லதெனக் கூறினர். சிலைக்குப் புதிய கைகளை வைத்தால் போதுமென வேறு சிலர் கூறினர். அப்போது அங்கு இருந்த ஒரு முதியவர், “சிலையை மாற்றவோ, அதற்குப் புதிய கைகள் வைக்கவோ வேண்டாம்” என்றார். கிராமவாசிகள், “அது எப்படி? சிலையின் கீழே எழுதி இருப்பதைப் பார்க்கவில்லையா? என் கைகளுக்குள் வாருங்கள் என்று எழுதி இருக்கிறதே!” என்றனர். முதியவர், “அது பரவாயில்லை. அதன் கீழே நீங்கள், “என் கை உங்களின் வழியாக” என்று எழுதிச் சேர்த்தால் போதுமானது” என்றார்.

நாம் இறைவனின் கரங்கள் ஆகவேண்டும்; கண்கள் ஆகவேண்டும்; காதுகள் ஆகவேண்டும். நமது ஊக்கமும் ஆற்றலும் வீரியமும் அவராக வேண்டும். அப்போது பயமும் சந்தேகமும் பாவமும் நம்மைத் தீண்டாது.

சூரியனுக்கு மெழுகுவத்தியின் தேவை இல்லை. அதுபோல் இறைவனுக்கு நம்மிடமிருந்து எதுவும் தேவை இல்லை. இவ்வுடல் என்றாவது ஒருநாள் அழியும். அப்படியிருக்க, அது துரு பிடித்துப் போவதை விட தேய்ந்து போவதல்லவா நல்லது? இல்லாவிடில், புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? அதுவும் உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்து இறுதியில் இறந்தும் போகிறது. நாம் இதிலிருந்து வித்தியாசமாக என்ன செய்கிறோம்? நாம் இயற்கையை மேலும் மேலும் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அதைப் புரிந்து கொண்டு நம்மால் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க் முடியும்.

அம்மா பிறந்த கிராமத்தில், முன்பு 1000 குடும்பங்கள் குடி தண்ணீர் பிடிப்பதற்கு ஒரு குழாய்தான் இருந்தது. தண்ணீர் பிடிப்பதற்கு நாள் முழுவதும் தவம் செய்வது போல் காத்திருக்க வேண்டும். அப்படியே காத்திருந்தாலும், ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயம். சிலவேளைகளில் ஒரு துளி நீர் கூடக் கிடைக்காது. அப்படி எல்லாம் வாழ்ந்த காரணத்தால், பயணத்திற்கிடையே எங்காவது குழாய் உடைந்தோ, பிற காரணங்களாலோ நீர் வீணாவதைக் கண்டால், என் உடலில் இருந்து ரத்தம் வடிவது போல் தோன்றும். தண்ணீர் வீணாவதை எப்படித் தடுப்பது? யாரை அழைத்தால் காரியம் நடக்கும் என்றெல்லாம் சிந்திப்பேன். வசதிகள் எதுவும் இல்லாமல் வளர்ந்ததாலும், பிறரது கஷ்டங்களை நேரடியாகக் காண முடிந்தது. விழிப்புணர்வு ஏற்பட்டது. .

ஒரு தாய் தனது குழந்தையை சுமார் இரண்டு வயதுவரை ம்ட்டுமே ம்டியில் இருத்தி வளர்ப்பாள். ஆனால் இந்த பூமித்தாய் நம்மை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறாள். அந்தத் தாய்க்குச் செய்ய வேண்டிய நன்றிக் க்டனை நாம் மறக்கக் கூடாது. இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு விஷ்யத்திலும் கவனத்தைக் கொண்டு வ்ரவேண்டும்.

அம்மாவுக்கு ஓர் ஆசை உள்ளது. அதாவது ஒவ்வொரு பல்கலைக் கழகத்தில் இருந்தும் மாணவர்களை இரு மாதங்களாவது கிராமங்களுக்கு அனுப்பி, அங்குள்ள பிரச்னைகளை நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டு, அதைப் பற்றிய விவரங்களை ஒரு விஷயமாக (அறிக்கை சமர்ப்பித்தல்) எழுத முயற்சிக்க வேண்டும். இதன்மூலம் நமக்கு ஏழைகளுக்கு உதவவும், இளமையான மனங்களில் கருணையை விழிப்புறச் செய்யவும் வேண்டும்.
இன்றைய பல்கலைக் கழகங்கள், அங்கே வேலை செய்யும் ஆராய்ச்சி மாணவர்களின் வளர்ச்சியையும் பதவி உயர்வையும் அவர்கள் எவ்வளவு நிதி கொண்டு வந்தார்கள்; எத்தனை பாடம் சம்பந்தமான அறிக்கைகளை சமர்ப்பித்தனர்; அறிவு பூர்வமாக அவர்கள் எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றினர் என்பதை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கின்றன. அத்துடன் சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அது எவ்வளவு உதவியது? அவர்களுக்கு நம்மால் எந்த அளவு சேவை செய்ய இயலும்? எனபதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் தங்கத்திற்கு நறுமணமும் சேர்ந்தது போல் இருக்கும்.

அறிவியலை ஆன்மிகத்திலிருந்து வேறுபடுத்தியதுதான் கடந்த சில நூற்றாண்டுகள் மனித சமூகத்திற்குச் செய்த மிகப் பெரிய அபராதமாகும். ஒன்றாகக் கைகோர்த்துப் போகவேண்டிய விஞ்ஞானத்தின் இரு முக்கியக் கிளைகளை வேறுவேறாகப் பிரித்து, நவீன அறிவியலின் தலைவர்கள் என்றும் மத நம்பிக்கைகளின் பிரதிநிதிகள் என்றும் முத்திரை குத்தி விட்டனர். மனித குலம், சகல உயிரினங்கள், இயற்கை மற்றும் நாம் வசிக்கும் இந்தப் பூமியின் எதிர்காலத்தையும் அதன் நிலைப்பாட்டை நிர்ணயிக்கும் பருவ, கால மாற்றங்களும், சமீபத்தில் உலகின் பல பாகங்களில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களும் எல்லாம் இவ்வாறு வேறுபடுத்தியதன் தீய விளைவுகளாகும். ஆன்மிகமும் அறிவியலும் இணைந்து சென்றால்தான் உறுதியாக மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்

நமது வாழ்க்கையெனும் மரம் அன்பெனும் மண்ணில் உறுதியாக நிற்கட்டும்; நற்செயல்கள் அதன் இலைகளாகட்டும்; கருணை மிக்க சொற்கள் அதன் மலர்களாகட்டும்; அமைதி அதில் தோன்றும் பழங்களாகட்டும். அன்பால் ஒன்றாக இணைந்த ஒரு குடும்பமாக உலகம் வளர்ந்து பரந்ததாகட்டும். இவ்விதமாக அமைதியும் சமாதானமும் நிறைந்து காணும் ஒரு உலகம் நமது சொந்தமாகட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஒரு செயலின் வெற்றிக்கு மூன்று விஷயங்கள் ஒன்று சேர வேண்டுமென்று கூறுவர். அவை காலம், முயற்சி, கடவுள் அருள் என்பவையே. நாம் எங்காவது வெளியூர் பயணத்திற்குச் செல்லும்போது சரியான நேரத்தில் புறப்பட்டாலும் விபத்துக்குள்ளாகி சிலவேளை பயணம் தடை படலாம். அல்லது விபத்தில்லாமல்
விமான நிலையத்தை அடைந்தாலும் கால நிலை, இயற்கைச் சீற்றம் அல்லது எந்திரக் கோளாறு காரண்மாக பயணம் தடை படலாம். காலமும் முயற்சியுமிருந்தால் கூட இறை அருள் இல்லாவிட்டால் தடை ஏற்படும்.
எனவே இந்த மூன்றும் இருந்தால் ம்ட்டுமே ஒரு செயல் முழுமை அடையும். அவ்வாறு அருள்கிடைக்க நாம் நல்ல கர்மங்கள் செய்திருக்க வேன்டும். எல்லோருக்கும் அந்த அருள் கிடைப்பதற்கான சக்தியும் ஊக்கமும் ஏற்படட்டும். அதற்கு இறையருள் துணை நிற்கட்டும்.

பாரிஸில் நடந்த காலநிலையைக் குறித்த ( summit for conscience) உச்சி மாநாட்டில் அம்மா ஆற்றிய காணொளி உரை. ஜூலை 21, 2015 பாரிஸ், பிரான்ஸ்

அன்பின் வடிவாகவும் ஆத்மாவின் வடிவாகவும் இருக்கும் அனைவர்க்கும் அம்மாவின் முதற்கண் வணக்கம்.

சிலர் வந்து அம்மாவிடம் “அம்மா எனக்குத் தலை சுற்றுகிறது என்று கூறுவதுண்டு, அவர்களின் தலைவலிக்குக் காரணம் காதில் உள்ள திரவத்தின் சமநிலையின்மையும் சில செல்களின் இட்மாற்றமுமேயாகும். இப்பொழுது இயற்கையின் நிலையும் இதுவேயாகும். அதனால் நாம் துப்பாக்கி முனையில் நிற்கும் வீரனைப் போன்ற கவனத்துடன் இந்தப் பிரச்னையைக் கையாள வேண்டும்.

அம்மாவின் சிறுவயதில் அடுத்துள்ள வீடுகளுக்குச் சென்று காய்கறிகளின் மீதித்தோல்களைக் கொண்டுவந்து கால்நடைகளுக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு வீட்டிற்குச் சென்றபோது அந்த வீட்டின் தலைவி அம்மாவிடம், “நேற்று பணம் எதுவும் கிடைக்காததால் வீட்டில் சமையல் செய்யவில்லை. அதனால் மீதமான காய்கறிகள் எதுவும் இல்லை” என்று கூறினார். அவர்களுக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் இருந்தனர். அனைவரும் பசியின் மிகுதியால் அந்தத் தாயின் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தனர். அம்மா அவரிடம், “யாரிடமிருந்தாவது கடன் வாங்கிக் குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நேற்று என் கணவர் கடலுக்குச் சென்றும் மீன் ஒன்றும் கிடைக்காமல் திரும்ப நேர்ந்தது. இங்கிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒருவரிடம் கடன் வாங்கக் கால்நடையாகவே சென்றார். அங்கும் கடன் கிடைக்காததால் திரும்ப நடந்து வந்துகொண்டிருந்தார். நேரம் இருட்டாகிவிட்டது. அன்று நல்ல நிலவொளியாக இருந்த காரணத்தால் அவர் நடந்து வரும் வழியில் ஆமை ஒன்று கரையில் வந்து முட்டையிடுவதைத் தெளிவாகக் காணமுடிந்தது. அந்த ஆமை கடலுக்குள் செல்லும்வரை காத்திருந்து, அது கடலுக்குள் சென்றதும் நூறு முட்டைகளிலிருந்து பாதியை எடுத்து வந்து குழந்தைகளுக்கு அதை வேகவைத்துக் கொடுக்கச் சொன்னார்.

அப்போது எங்களது ஒரு மகள் “அப்பா! அங்கிருந்த எல்லா முட்டைகளையும் எடுத்து வந்திருக்கலாம் அல்லவா?” என்று கேட்டாள். அதற்கு அவர் “மகளே, உங்களில் ஒருவர்கூட பாக்கியில்லாமல் அனைவரும் இறக்க நேரிட்டால் பெற்ற எங்களுக்கு எவ்வளவு மனதில் வலியிருக்குமோ அதே அளவு வலி அந்த ஆமைக்கும் இருக்குமல்லவா? எனவேதான் அனைத்து முட்டைகளையும் எடுக்காமல் பாதியை மட்டும் எடுத்துவந்தேன். அதுமட்டுமின்றி, நமது சுயநலத்தை மட்டும் கருதி இன்று நாம் அனைத்து முட்டைகளையும் எடுத்தோமேயானால் ஆமையின் இனமே அழிந்துவிடுமல்லவா? அதனால் வருங்காலத்தில் பசியால் வாடும் சந்ததியினருக்கு முட்டை கிடைக்காமல் போய்விடும் அல்லவா? என்றார்” என்று கூறினார்.

இவ்வளவு வறுமையிலும், இப்படிப்பட்ட ஏழ்மையிலும் கூட மற்ற உயிரினங்களைப் பற்றிச் சிந்திக்கவும், அவற்றின் வலியை உணரும் தன்மையையும் நமது முன்னோர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இன்றோ, பணத்திற்காகவும் இறைச்சிக்காகவும் மக்கள் ஆமைகளை ஏற்றுமதி செய்கின்றனர்.

நாம் ஒவ்வொரு முறை ஒரு மரத்தை வெட்டும்பொழுதும் அது நமக்காகச் செய்யப்படும் சவப்பெட்டியாகும். இதை நாம் எப்பொழுதும் சிந்திக்கவேண்டும். இத்தகைய நிலையில், நாம் ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஒரு மரத்தை மட்டும் நட்டு வளர்த்தால் போதாது. குறைந்தது நாற்பது மரங்களையாவது நடவேண்டும்.

இப்பொழுது ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காற்றின் மூலமாக புற்றுநோய் பரவியிருக்கிறது. இதற்குக் காரணம் இயற்கை மாசு அடைந்ததேயாகும். இயற்கை மலினமடைந்ததற்கு பின்வரும் விஷயமே உதாரணம். அமமாவின் சிறுவயதில் இந்த கிராமத்தில் யாருக்காவது உடலில் புண் ஏற்பட்டால், அவ்விடத்தில் சிறிது மாட்டுச்சாணத்தை வைத்தால் போதும். அப்புண் நாளடைவில் சரியாகிவிடும். ஆனால் இப்பொழுதோ, மாட்டுச்சாணத்தை வைத்தால், புண் பழுத்துப் பெரிதாகிவிடுகிறது. அன்றைய மருந்து இன்று நஞ்சாகிவிட்டது.

இந்த இயற்கையில் ஒன்றையும் எளிதாக நினைத்துத் தள்ளிவிடக்கூடாது. எப்படி ஒரு விமானம் பறக்க அதன் எஞ்சின் மிகவும் முக்கியமானதோ, அதேஅளவு முக்கியம் ஒரு சிறிய திருகாணிக்கும் உண்டு. சிறிய திருகாணி இல்லாமல் பறக்க முடியாமல் நின்ற விமானங்களும் உண்டு. நாம் மிகச்சிறிய உயிர் என்று நினைக்கும் தேனீக்கும் இயற்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தேனீக்களால் நடக்கும் மகரந்தச் சேர்க்கையினாலேயே நமக்குக் காய்கறிகளும் பழங்களும் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட தேனீக்கள் விஷத் த்ன்மை மிக்க வேதி உரங்கள் உபயோகித்து வளர்த்த பூக்களில் அமர்ந்து தேன் பருகுவதால் தங்களுடைய நினைவாற்றலை இழக்கின்றன. முன்பு சுமார் 3 கிலோமீட்டர் பறந்து சென்று தேன் சேகரித்துக் கொண்டிருந்த தேனீக்களால் இப்பொழுது தங்களது கூட்டை நினைவு வைத்துக் கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றன. இந்நிலை நீங்க நாம் காடுகளுக்கு இடையே விஷத்தன்மை உள்ள வேதிஉரங்கள் பயன்படுத்தப் படாத செடிகளை வளர்த்து அவற்றின் மூலமாக தேனீக்களுக்கு உதவவேண்டும். லட்சக்கணக்கான அம்மாவின் பக்தர்கள் இப்போது இதைச் செய்து கொண்டிருக்கின்றனர். இனிமேலும் அனைத்து பக்தர்களும் தங்களால் இயன்ற அளவு இம்முறையில் தேன்கூட்டை வளர்க்க முயல வேண்டும்.

நம்மைப் பெற்ற தாய் கூட ஒரு வேளை நான்கோ ஐந்தோ வயது வரை தனது மடியில் அமர நம்மை அனுமதிக்கலாம். ஆனால் இந்த பூமித்தாயோ தமது வாழ்நாள் முழுவதும் நாம் அடித்தாலும் துப்பினாலும் குத்தினாலும் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவளது மடியில் நம்மை அமர அனுமதிக்கிறாள். அப்படிப்பட்ட இந்த பூமித்தாயிடம் நாம் நன்றியற்றவர்களாக நாம் செய்ய வேண்டிய கடமையை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

பத்து மாடிக் கட்டிடத்தில் வசிக்கும் ஒருவர் அங்கிருந்து கீழ்தளங்களில் வசிப்பவர்களை நோக்கிக் கத்துகிறார்,” ஐயோ! யாராவது உடனே இங்கே ஓடிவாருங்கள். இங்கே தீப்பிடித்து விட்டது. அப்போது கீழே வசிப்பவர்கள் கூறுகின்றனர்,”அது உன்னுடைய வீடுதான், நீயே பார்த்துக்கொள்.” பத்தாவது மாடியில் உள்ள தீயை உடனே அணைக்கா விட்டால் அது பரவி கீழ்தளத்தில் உள்ள வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி அங்கே உள்ளவர்களையும் எரித்து விடும் என்று யாரும் சிந்திப்பதில்லை. அதுபோல வருங்காலத்தில் வரவிருக்கும் இயற்கைச் சீரழிவை நேரிடாமல் இருக்க நாம் மாறியே ஆகவேண்டும்.

எனவேதான் அம்மா கூறுவதுண்டு,” இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு தாளகதியுண்டு. ஒவ்வொரு உயிர்களுக்கும் இடையே பிரிக்க முடியாத் ஓர் ஒற்றுமை உண்டு. ஒரு உயிருக்கு ஏற்படுத்தும் ஆபத்து அறிந்தோ அறியாமலோ மற்ற உயிர்களையும் பாதிக்கும். இந்தப் பிரபஞ்சம் என்பது அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரு இணையமாகும். நான்கு பேர் சேர்ந்து பிடித்திருக்கும் ஒரு வலையில் ஏற்படும் அதிர்வு எப்படி நான்கு பேரையும் பாதிக்கிறதோ, அது போல இப்பிரபஞ்சத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ நாம் அறிந்தோ அறியாமலோ செய்யும் அனைத்து செயல்களும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைவரையும் அது பாதிக்கிறது. எனவே நம்மால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யவேண்டும் முதலில் பிறர் மாறட்டும; பிறகு நான் மாறுகிறேன் என்று நினைப்பதைவிட நாம் முதலில் மாற முயலவேண்டும்

எப்படி அன்னையர் தினம, தந்தையர் தினம் என்று நாம் உற்சாகமாகக் கொண்டாடுகிறோமோ அதுபோல் இந்த இயற்கையைப் பேணிக்காக்க ஒரு தினம் வேண்டும். அன்றைய தினத்தில் இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் செடிகளை நட்டு இயற்கையைப் பேணிக்காக்க வேண்டும்

நாம் நமது சொந்த சுகத்திற்காக இயற்கையை வீணாக்கக்கூடாது. இப்பிரபஞ்சத்தின் இப்போதைய நிலையை மனதில் கருதி ஆடம்பரத்தைக் குறைக்க முயலவேண்டும். உதாரணமாக 3000 சதுர அடியில் ஆடம்பரமாக வீடு கட்ட நினைப்பவர்கள் அதை 1500 சதுர அடியாக குறைக்க முயலவேண்டும். இப்படியே 2000த்தை 1000மாகவும் 1000த்தை 500 ஆகவும் குறைப்பதின் மூலமாக தேவைக்கதிகமாக மரம் வெட்டுவதை வெகுவாகக் குறைக்கலாம். இப்படிச் செய்வதின் மூலமாக மின்சாரத் தட்டுப்பாடு உண்டாகாது. காகிதத்திற்காக நாம் மரம் வெட்டுவதும் குறையும்.

கார்பூல் (carpool) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக எரிபொருளைச் சேமிக்கலாம். நூறு ரூபாய் செலவழித்தும் ஆயிரம் ரூபாய் செலவழித்தும் பேனா வாங்கி நம்மால் எழுத முடியும். ஆனாலும் நாம் முடிந்தவரை ஆடம்பரத்தைக் குறைத்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இல்லாதவர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கலாம்.

ஒரு பெரிய குளம் மலினமடைந்து கிடப்பதைக் கண்டு, இதை நான் ஒருவன் மட்டும் எப்படித் தூய்மை செய்வது என்று நினைப்பதைவிட நம்மால் இயன்றதைச் செய்ய நாம் முயற்சித்தால் நம்மைக்கண்டு வேறொருவரும் அவரால் முடிந்ததைச் செய்வார். இப்படிச் சிறிது சிறிதாக அந்தப் பெரிய தடாகமே தூய்மையடைந்து விடும். Carpool திட்டம், தேன்கூட்டை வளர்த்தல், செடி நடுதல், இயற்கையைத் தூய்மைப் படுத்துதல், கழிவுகளை அகற்றும் திட்டம், காய்கறிகளை நடுதல் போன்றவற்றை நீண்ட நாட்களாக அம்மாவின் பக்தர்கள் செய்து வருகின்றனர். இப்போதுகூட கவனத்துடன் ஒன்று சேர்ந்து இவற்றையெல்லாம் செய்து இந்தப் பூமியைச் சொர்க்கமாக்க நம்மால் முடியும். அதற்கு அனைவருக்கும் இறைவனது அருள் உண்டாகட்டும் என்று அம்மா பரமாத்மாவை வேண்டிக்கொள்கிறேன்.

பாரிஸில் நடந்த காலநிலையைக் குறித்த ( Summit For Conscience) உச்சி மாநாட்டிற்கு அம்மாவை பிரெஞ்சு அதிபர் பிரான்ஸ்வ ஹோலொன்தெ தனது சிறப்புத் தூதர் மூலம் அழைப்பு விடுத்திருந்தாலும் அம்மாவின் அமெரிக்கப் பயணம் இருந்ததால் அம்மாவுக்கு அதில் கலந்து கொள்ள இயலவில்லை. அம்மாவின் பிரதிநிதியாக மாதா அமிர்தானந்த மயி மடத்தின் துணைத் தலைவரான சுவாமி அமிர்த சொரூபானந்த புரி அவர்கள் அம்மாவின் அருளுரையைத் தெரிவித்தார்.

இந்த வருடம் டிசம்பரில் பாரீஸில் நடக்க இருக்கும் சிறந்த நிலையான வளர்ச்சியைக் குறித்துள்ள உச்சி மாநாட்டில்-COP21 ஆற்றல் மிக்கதும் பயனுள்ளதுமான விஷயங்கள் உலக அளவில் விவாதிக்கப் பட வேண்டிய அவசியம் உண்டு என உலகளவில் உள்ள மத, ஆன்மிக மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங்களின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட உச்சி மாநாடு சுட்டிக்காட்டியது. கான்ஸ்டான்டி நோபிள் ஆர்ச் பிஷப் பர்த்தலோமியா ஒன்னாமன், ஐ. நா. சபையின் முன்னாள் பொதுச் செயலர், திரு. கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற டாக்டர். முகமது யூனூஸ், நடிகரும் சமூகசேவகருமான அர்னால்டு ஷார்ஸெனகர் போன்ற பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மதத்தலைவர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் ஐ.நா. சபையின் பல்வேறு துணை அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இறைவனிடம் நமக்கு உள்ள சமர்ப்பணம் நமது எல்லா மனச்சுமைகளையும் குறைத்து விடும். உண்மையில், நமது வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமது விருப்பப்படி நடப்பதில்லை. அடுத்த மூச்சு கூட நம் கையில் உண்டு என்பதை நாம் உறுதியாகக் கூறமுடியாது. எனவே, எல்லாவற்றையும் இறைவனிடம் அர்ப்பித்து விட்டு செயல்கள் புரியவேண்டும் என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியதாகும். ஆனால், நான் செய்கிறேன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படக் கூடாது. இறைவனது திருவருள் துணை கொண்டுதான் நான் பணிபுரிகிறேன் என்ற மனோபாவமே நமக்குத் தேவை. இறைவனது பூஜையாகக் கருதி நாம் செயல்களைச் செய்யவேண்டும். இந்தவொரு சமர்ப்பண மனோபாவத்தையே நாம் வளர்க்க வேண்டும்.

ஒரு கிராம மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ்ந்து வந்தனர். அக்கிராமத்தினர் இவ்விதம் ஒற்றுமையாக வாழ்வதற்கு, அந்தக் கிராமத்தில் சிறந்த உதாரணமாக ஒரு குடும்பம் வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும். எந்த வீட்டிலாவது தம்பதியருக்கிடையே சண்டை ஏற்பட்டால், உடனே அவர்களில் ஒருவர், ” அந்த வீட்டிலுள்ள பெண்மணியைப் பார். எவ்வளவு ஒற்றுமையாகத் தனது கணவருடன் வாழ்கிறார்? ஏதாவது சண்டையோ சச்சரவோ அவர்கள் வீட்டில் எப்போதாவது கேட்டதுண்டா? அவர்கள் எவ்வளவு அன்புடன் வாழ்கிறார்கள்? அவரைப் போலப் பொறுமையாக இருக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்வார். இதைக் கேட்டதும் சண்டை நின்று அன்பு நிலவும். இவ்வாறு அந்தக் கிராமம் முழுவதும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வந்தது. அப்படியிருக்க, அந்தத் தம்பதிகளின் 30 – ஆம் திருமணநாள் வந்தது. அதைக் கொண்டாடக் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். மிகவும் சிறப்பாக அந்தநாள் கொண்டாடப் பட்டது. அதைக் கேள்வியுற்ற பத்திரிகை நிருபர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அந்தப் பெண்மணியிடம், ” உங்களைப் பற்றிப் புகழாதவர்கள் யாரும் இந்த கிராமத்தில் இல்லை. கிராமத்தில் உள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன் உங்கள் கணவர் முன்கோபக்காரர் என்று அறிந்தோம். ஆனால், கல்யாணத்திற்குப் பின் நீங்கள் ஒருமுறை கூட சண்டை போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அதன் ரகசியம் என்னவென்று சொல்வீர்களா என்று கேட்டார்.

 

 இதைக்கேட்ட மனைவி, இதில் பெரிய இரகசியம் எதுவும் இல்லை. திருமணம் முடிந்த மூன்றாவது நாள் நாங்கள் ஒரு உல்லாசப் பயணம் சென்றோம். எங்களுடன் ஒரு கழுதையையும் கொண்டு சென்றோம். எங்களின் பெட்டி படுக்கைகளையும் உணவுப் பொருட்களையும் அந்தக் கழுதை சுமந்து வந்தது. செல்லும் வழியில் கழுதை கால் இடறி விழுந்தது. என் கணவருக்கு அது சிறிதும் பிடிக்க வில்லை. அவர் ஓடிச் சென்று அந்தக் கழுதையின் காதைப் பிடித்துத் திருகி, இது முதல் எச்சரிக்கை . நீ கவனமாக இருக்க வேண்டும் தெரிந்ததா?” என்றார். கீழே விழுந்த பாரத்தை மீண்டும் கழுதையின் மேல் வைத்து நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். சிறிது தூரம் சென்றதும் வழியிலிருந்த கல் இடறி கழுதை மீண்டும் உருண்டு விழுந்தது. கணவர் கோபத்துடன் அதன் அருகில் சென்று இரு காதையும் பிடித்துத் திருகியவாறு, ” இது இரண்டாவது எச்சரிக்கை நீ கவனமாக இருக்க வேண்டும், தெரிந்ததா?” என்று உரத்த குரலில் அலறினார். கழுதையை மீண்டும் எழுப்பிய நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். நாங்கள் போக வேண்டிய இடத்தை அடைய மூன்று மலைகள் ஏறி இறங்க வேண்டும். இரண்டு மலைகளைப் பெரிய பிரச்னைகள் எதுவுமின்றிக் கடந்து சென்றோம். மூன்றாவது மலையில் பாதி தூரம் ஏறிய போது கழுதை சோர்ந்து விழுந்து விட்டது. என் கணவரால் கோபத்தை அடக்கவே முடியவில்லை. அவர் துப்பாக்கியை எடுத்துக் கழுதையை நோக்கிப் படபடவென்று சுட்டார். கழுதை இறந்து விட்டது. என்னால் சிறிதும் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. ஐயோ, நீங்கள் என்ன செய்து விட்டீர்கள்? அது அறிவில்லாத பிராணி அல்லவா? நீங்கள் செய்தது சரியா? கஷ்டம் என்று என்னை அறியாமல் சொல்லிவிட்டேன். அதைக் கேட்டதும் என் கணவர் என்னை நோக்கி ஓடி வந்தார். என் காதைப் பிடித்துத் திருகியவாறு, இது முதல் எச்சரிக்கை . நீ கவனமாக இருக்க வேண்டும் தெரிந்ததா?” என்றார். கழுதைக்கு ஏற்பட்ட கதி சட்டென்று நினைவுக்கு வந்தது. இதுதான் எங்கள் வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் ” என்று பதிலளித்தார்.

உண்மையில் இந்தப் பொறுமை பயத்தின் காரணமாக ஏற்பட்டதாக இருந்த போதிலும் அதற்கும் ஒரு மகிமை உண்டு. வைரம் மலத்தில் கிடந்தாலும் எடுப்போம். வேண்டாம் என விட்டுவிட மாட்டோம். ஏனெனில் அது விலை மதிப்பான பொருள். இதுபோல பொறுமையின் மகிமையும் விலை மதிக்க முடியாததாகும்.

சொல்லின் தேவதை அக்னி என்று சொல்வார்கள். அக்னியின் இயல்பு வெப்பமும் பிரகாசமும் புகையும் ஆகும். அக்னி சூடும் ஒளியும் தருவதுபோல் நமது ஒவ்வொரு வார்த்தையும் பிறருக்கு உற்சாகத்தையும் அறிவையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறின்றி புகையைப் போல் மனதை அழுக்கடைவதாகச் செய்வதாக இருக்கக் கூடாது.

இன்று நாம் பேசும் வார்த்தைகளைக் கேட்கும்போதே அதன் தேவதை அக்னி என்பது நன்றாகப் புரியும். ஏனெனில் அதிலிருந்து வெளிவருவது தீயும் புகையும் ஆகும். ஆனால் ஞானமும் பிரகாசமும் அதன் அருகில் கூட வரவில்லை என்பதே உண்மை. நமது ஒரு வார்த்தை கேட்பவர் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பிறருக்கு ஆனந்தத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். நாம் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி நம்முடைய ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்க வேண்டும். நம்முடைய வாக்கில் பணிவும் எளிமையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் இன்று நம்முடைய வார்த்தைகளை அலசி ஆராய்ந்து பார்த்தால் கூடப் பணிவைக் காண முடியாது. ” அவனை விட நான் பெரிய ஆளாக வேண்டும் என்ற மனோபாவம்தான் நிறைந்து இருக்கிறது. ஒருவனது பணிவில் தான் சிறப்பு இருக்கிறது என்ற உண்மையை நாம் கவனிப்பது இல்லை. மிகச் சாதாரணமான மனிதனாக இருந்தாலும் பிறர் முன்னால் தன்னைப் பெரியவனாகக் காட்டிக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறான். இதனால் அவர்கள் முன் முட்டாள்கள் ஆகிறோம் என்பதை நாம் அறிவதில்லை.

இராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவருக்கு கர்னலாகப் பதவி உயர்வு கிடைத்தது. புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவரைக் காண ஒருவன் வந்தான். அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவதைக் கண்ட கர்னல் மிகுந்த கர்வத்துடன் போனை எடுத்து,” ஹலோ! ஜனாதிபதி ஒபாமாவா? விசேஷம் ஏதாவது உண்டா? நான் இன்றுதான் பொறுப்பேற்றிருக்கிறேன். நிறையக் கோப்புகளைப் பார்க்க வேண்டும். நான் பின்னர் பேசுகிறேன். மனைவியை விசாரித்ததாகக் கூறுங்கள்.” இப்படி சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு போனைக் கீழே வைத்தார். இவ்வளவு நேரமும் வந்த ஆள் மிகவும் பணிவுடன் அங்கே நின்று கொண்டிருந்தான். கர்னல் வந்தவனைப் பார்த்து, ” உம், உனக்கு என்ன வேண்டும்? என்று கம்பீரமான் குரலில் கேட்டார்.
வந்த மனிதன் மிகவும் பணிவான குரலில், ” மன்னிக்க வேண்டும். நான் தொலைபேசி இணைப்புக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். நேற்று வைத்த புதிய போன் இது. இதுவரை இணைப்புக் கொடுக்க வில்லை.” என்று சொன்னான். இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார்? இதுபோல், தினமும் பலமுறை நாம் முட்டாள்கள் ஆகிறோம். அதை நாம் அறிவதில்லை; அவ்வளவுதான். தனது பெருமையைப் பிறர் முன் வெளிப்படுத்த முயற்சி செய்பவன் பலர் முன்னால் முட்டாள் ஆகிறான்.

நாடு முழுவதும் சொற்பொழிவுகளும் பேருரைகளும் நடக்கும் காலக்கட்டம் இது. ஆன்மிகப் பேருரை, கலாசார விரிவுரை, அரசியல் கூட்டம், சமயச் சொற்பொழிவு, நாத்திகச் சொற்பொழிவு- அதிகம் சொல்வானேன்?! ஒவ்வொருவரும் பேச ஏதாவது ஒரு விஷயம் உள்ளது. உலகில் எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் உரையாற்ற அதிகாரம் இருப்பதாகவே அனைவரும் எண்ணுகின்றனர். இதைச் சொல்லும் போது அம்மாவுக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு சிறுவன், ” எங்கள் ஆசிரியர் எவ்வளவு பெரிய மகான் என்று தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னான். அதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது சிறுவன், ” எந்த விஷயத்தைக் கொடுத்தாலும் அதைப் பற்றி அவர் ஐந்து மணி நேரமாவது உரையாற்றுவார் ” என்றான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு சிறுவன், ” இது என்ன பிரமாதம்! உங்கள் ஆசிரியர் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் அல்லவா அதைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசுவார். எங்கள் அடுத்த வீட்டுக்காரர் இருக்கிறாரே , அவர் எந்த விஷயத்தையும் கொடுக்காமலே பல தினங்கள் பேசிக் கொண்டிருப்பார் ” என்றான். இன்று பலமேடைப் பேச்சுக்களும் இதுபோலத் தான் இருக்கின்றன. உண்மையில் பிரசங்கம் செய்வதில் சிறப்பில்லை; நமது செயல் அதை வெளிப்படுத்துவதில் தான் சிறப்பு உள்ளது. ஆனால் இன்று பெரும்பாலானவை வார்த்தைகளோடு நின்று விடுகின்றன. வாழ்வில் அதை யாரும் செயலில் கொண்டு வருவது இல்லை. இருந்தாலும் நல்ல வார்த்தைக்கும் , நல்ல செயலுக்கும் நிச்சயமாகப் பலன் கிடைக்கும். அவை ஒருநாளும் பொருளற்றவை ஆவதில்லை. இதைச் சொல்லும்போது மகாபாரதத்தின் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த காலம். முதல் பாடம் “பொறுமை” என்பதாகும். ஒரு நாள் குரு சீடர்களை எல்லாம் அழைத்து, அதுவரை கற்பித்த பாடங்களை எல்லாம் ஒப்பிக்குமாறு சொன்னார். ஒவ்வொருவரும் அவரவர் படித்த பாடங்களை ஒப்பித்தனர். தருமரின் முறை வந்தது. ஆனால் அவர் ஒரே ஒரு வரியை மட்டும் சொன்னார். “நீ இவ்வளவு தான் படித்திருக்கிறாயா?” என்று குரு கேட்டார். அதற்கு மிகுந்த தயக்கத்துடன், ” மன்னிக்க வேண்டும். குருவே! நான் முதல் பாடத்தை ஓரளவு படித்தேன். இரண்டாவது பாடத்தை அந்த அளவுகூடப் படிக்க வில்லை” என்று யுதிஷ்டிரர் பதிலளித்தார். இதைக் கேட்ட துரோணரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில், படிப்பு விஷயத்தில் அவர் பிற சீடர்களிடம் வைத்திருந்ததை விட தருமரிடமே அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அப்படியிருக்க மற்றவர்கள் அனைவரும் எல்லா பாடங்களையும் நன்கு படித்து விட்டு ஒப்பித்தபோது தருமர் இரண்டு வரிகளையே படித்திருப்பதாகச் சொல்கிறார். கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாத துரோணர் ஒரு நீண்ட குச்சியை எடுத்து அது ஒடிந்து துண்டுகளாகும் வரை தருமரை அடித்தார். ஆனால் அடிகளைப் பொறுத்துக் கொண்ட தருமர் முகத்தில் புன்னகை மறையவே இல்லை. அதைக் கண்டபோது குருவின் கோபம் மறைந்தது. அவருக்கு வருத்தம் தோன்றியது. அன்போடு அவர், பிள்ளாய் ! நீ ஒரு இளவரசன். நீ நினைத்தால் என்னை சிறையில் அடைக்கலாம். தண்டனை அளிக்கலாம். ஆனால் நீ அப்படி ஒன்றும் செய்யவில்லை. உனக்குச் சிறிதும் கோபம் வரவில்லை. உன்னைப் போல் பொறுமை உள்ளவர்கள் இவ்வுலகில் உண்டோ? ” குழந்தாய். நீ எவ்வளவு உயர்ந்தவன் ” என்று சொன்னார். அப்போது அவர் பார்வையில் யுதிஷ்டிரர் படித்த பாடங்கள் எழுதியிருந்த ஓலைச்சுவடி பட்டது. அதில் முதல் வரி, ” எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையைக் கைவிடக் கூடாது என்றும், இரண்டாவது வரி, ” எப்போதும் உண்மையே பேசவேண்டும்” என்றும் இருந்தன.

அவரது பார்வை மீண்டும் தருமரின் முகத்தில் பதிந்தபோது ஓலைச்சுவடியில் கண்ட வரிகள் தருமரின் கண்களில் பிரகாசிப்பதாகத் தோன்றியது. சீடனின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்ட துரோணரின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர், ” தருமனே, நான் உங்களுக்குக் கற்பிக்கும்போது வெறும் வார்த்தைகளை மட்டும் உச்சரித்து வந்தேன். அனைவரும் கிளிப்பிள்ளைகளைப் போலத் திருப்பிச்சொன்னார்கள். உண்மையில் நீ மட்டுமே அதைச் சரியாகப் படித்திருக்கிறாய். நீ எவ்வளவு உயர்ந்தவன்! இவ்வளவு நாள் கற்பித்தபோதும் இதில் ஒரு வரியைக் கூட என்னால் படிக்க முடியவில்லை. கோபத்தை என்னால் அடக்க முடியவில்லை. பொறுமையைக் கடைபிடிக்க முடியவில்லை” என்றார். பெருகும் கண்ணீருடன் குரு சொன்ன வார்த்தைகளைக் கேட்ட தருமர், ” மன்னிக்கவேண்டும் குருவே! எனக்குத் தங்கள் மீது சிறிது கோபம் தோன்றியது என்றார். அதைக் கேட்டதும் சீடன் இரண்டாவது பாடத்தையும் படித்துவிட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டார். ஏனெனில் சாதாரணமாக ஒருவர் தன்னைப் புகழ்வதைக் கேட்கும்போது, அதில் மயங்காதவர் அபூர்வம். மனதில் கோபம் இருந்தாலும் வெளியில் சொல்லத் தயங்குவர். ஆனால் தருமரோ மனதில் இருந்ததை வெளியிடச் சிறிதும் தயங்கவில்லை.. அதன் பொருள் தருமர் இரண்டாவது பாடத்தையும் படித்துவிட்டார் என்பதாகும். ஒருவன் தான் கற்ற பாடங்களை தனது வாழ்வில் செயல்படுத்தும் போதுதான் அவனது கல்வி முழுமை பெறுகிறது. அவ்விதம் செயல் படுத்த முயல்பவனே உண்மையான சீடன்.

நம்முடைய வாழ்விலும் அவசியமானது பொறுமையாகும். ஏனெனில் வாழ்க்கையின் அஸ்திவாரம் பொறுமையாகும். ஒரு செடியிலுள்ள மொட்டைவிரல்களால் மலரச் செய்தால், அந்தப் பூவின் மணத்தையும் அழகையும் அறிய முடியாது. இயல்பாக மலர அனுமதித்தால் மட்டுமே அதை அறிய முடியும். அதுபோல வாழ்வின் அழகை அனுபவிக்க வேண்டுமெனில் பொறுமை தேவை. வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாகச் செய்ய முயலுபவர்களுக்குத் தேவையான முதல் குணம் பொறுமையாகும்.