ஒவ்வொருவரின் இயல்புக்கு ஏற்பவே குரு உபதேசங்களை வழங்குகிறார். ஒரே சூழ்நிலையில் இருவரிடம், இரு மாறுபட்ட முறையில் உபதேசிக்கக் கூடும். மற்றவருக்கு அளித்த அதே உபதேசத்தை எனக்கு அளிக்காதது ஏன் என்று சீடன் சிந்திப்பது முட்டாள்தனமாகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் சீடனை வழிநடத்துவது எப்படி என்பது குருவுக்கு மிக நன்றாகத் தெரியும். அதனால் குருவை முழுமையாகப் பின்பற்றுவதுதான் சீடன் இலட்சியத்தை அடைவதற்கான எளிய வழி.
இருவர் ஒரு ஆசிரமத்தில் வேலை செய்து வந்தனர். அதில் ஒருவருக்கு புகைபிடிக்க விருப்பம் ஏற்பட்டது. ஆனால் அவரது நண்பர் அவரிடம், “இங்கே புகைபிடிப்பது தவறு” என்றார். முதலாமவர், “புகைபிடிப்பதில் ஒரு தவறுமில்லை . புகைபிடிக்கும் போதும் பிரார்த்திக்கலாம்” என்றார். “அப்படியானால் குருவிடம் கேட்டுப் பார்த்துவிடலாம்” என்று சொல்விட்டு நண்பர் குருவிடம் சென்றார். அவர் திரும்பி வந்து முதலாமவரிடம், “புகைபிடிப்பது தவறு. குறிப்பாக பிரார்த்திக்கும் வேளையில் புகைபிடிப்பது தவறு என்று குரு கூறினார்” என்றார். “நானும் ஒருமுறை கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு முதல் ஆள் குருவைக் காணச் சென்றார். அவர் புகைபிடித்துக்கொண்டு திரும்பி வந்தார்.
“நீ என்ன செய்கிறாய்? புகைபிடிக்காதே என்று குரு கூறவில்லையா?” என்று முதல் ஆள் கேட்டார். “புகைபிடிக்க குரு அனுமதி தந்தார்.” “நீ குருவிடம் என்ன கேட்டாய்?” “நான், “குருவே! புகைபிடிக்கும் போது பிரார்த் திக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு குரு, “அதில் ஒரு தவறுமில்லை. அதுதான் தேவை” என்றார்.”
ஒன்றில், பிரார்த்திக்கும் போதும் மனம் கர்மத்தில் ஈடுபட்டிருக்கிறது. மற்றொன்றிலோ, கர்மம் செய்யும் போதும் மனம் பிரார்த்தனையில் ஆழ்ந்திருக்கிறது.
குருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும். மாறாக, குறிப்பிட்ட கருத்தை மனதில் வைத் துக்கொண்டு கேள்வி கேட்கும் போது, குரு கூறும் பதிலை நமக்கு அனுகூலமாக மாற்ற மனம் முயற்சி செய்யும். அதன் பின்விளைவை பின்னர் அனுபவிக்க நேரிடும். அப்போதுதான் நாம் செய்த தவறு நமக்குப் புரியும். அதற்குள் காலம் கடந்திருக்கும். களங்கமற்ற மனதுடன் குருவிடம் செல்வதும், அவர் கூறுவதைப் புரிந்துகொள்வதும் தான் இவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கான ஒரே வழி.
ஒருவேளை, ஒரே கேள்விக்கு ஒரே பதில் குருவிடமிருந்து கிடைக்காமல் இருக்கக் கூடும். ஒவ்வொருவருக்கும் அவரவரின் மனநிலைக்கு ஏற்ற பதிலை குரு அளிப்பார். பல வருடங்களாக புகைபிடிப்பதை வழக்கமாகக் கொண்டு, அதை விட்டுவிட முடியாத ஒரு மனிதரிடம், சட்டென்று புகைபிடிப்பதை நிறுத்துமாறு குரு கூறாமல் இருக்கலாம். நாளடைவில் புகைபிடிப்பதில் உள்ள ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு வருமாறு அவரிடம் கூறலாம். புகைபிடிக்கும் போதும் பிரார்த்திக்க சம்மதித்ததன் மூலம் அந்த மனிதரின் மனதை புகைபிடிக்கும் போதும் பிரார்த்தனையில் ஈடுபடுத்தவே குரு முயற்சி செய்கிறார். நாளடைவில் பிரார்த்தனை வலிமையடையும் போது, இயல்பாகவே அந்த மனிதருக்கு புகைபிடிப்பதில் ஆர்வம் குறைந்துவிடும். இறுதியில் அவர் புகைபிடிப்பதை அடியோடு விட்டுவிட முடியும். அதேசமயம், போதுமான அளவு மன உறுதி உள்ள ஒருவராக இருந்தால் புகைபிடிப்பதை சட்டென்று நிறுத்திவிடுமாறு குரு உபதேசிக்கலாம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு மாமிச உணவைக் கொடுத்தால் அது ஜீரணமாகாது. வாந்தி எடுக்கும். அதுபோல் ஒவ்வொருவரின் உடல், மன நிலையைப் பார்த்தே குரு உபதேசிக்கிறார். சீடனின் மனநிலைக்கு ஏற்பவே குரு உபதேசம் அளிக்கிறார். இந்த கதையின் மூலம் புகைபிடிக்குமாறு அம்மா கூறவில்லை. ஒருவருக்கு புகைபிடிப்பதில்தான் ஆனந்தம் என்றால், மற்றொருவருக்கு அதன் நாற்றத்தைத் தாங்கவே முடியாது. அப்படியானால் பொருளில் அல்ல ஆனந்தம்; அது நம் உள்ளே இருக்கிறது.
ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் ஒருவனிடம், “இதைவிட நீ திருடுவது நல்லது” என்று குரு கூறலாம்). உண்டு, குடித்து, சோம்பேறியாக வாழ்வதை விட திருடுவது நல்லது என்று சொல்லும் போது, குரு கூறுவதைப் புரிந்துகொள்ளக் கூடிய களங்கமற்ற மனம் இருக்க வேண்டும். சோம்பேறியாக வாழும் தமோ குணமுள்ள ஒருவரிடம், தமோ குணத்தை நீக்கி, ரஜோ குணத்திற்கு முன்னேறவே குரு கூறுகிறார். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக வீணாகப் பொழுதைக் கழிக்கும் தமோகுணக்காரரை விட ரஜோ குணம் உள்ளவர்களால் விரைவாக இலட்சியத்தை அடைய முடியும். தமோ குணத்தை விட ரஜோ குணம் மேல் என்பதுதான் இதன் பொருள்.