டோக்கியோ ஜூலை 25, 2011

டோக்கியோ நகரில் அம்மாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அந்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட  பலர் ஆறுதலையும் அறிவுரையையும் நாடி அம்மாவிடம் வந்திருந்தனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை அம்மாவிடம் கூறிய போது துக்கம் தாளாமல் வாய்விட்டு அழுதனர். அம்மா அவர்களை அணைத்து ஆறுதல் கூறினார். இவர்களது வேதனையையும்  துயரையும் கவனித்த அம்மா பாதிக்கப்பட்ட பகுதியையும் ஏதாவது ஒரு நிவாரண முகாமையும் பார்வையிடத் தீர்மானித்தார்.

டோக்கியோ நிகழ்ச்சி அதிகாலை 5மணிக்கு நிறைவுற்றது. அதற்குப் பிறகு அம்மா அங்கிருந்து  5 கி.மீ தொலைவில் உள்ள டகாஜோ விளையாட்டு  வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நிவாரண முகாமுக்கு விஜயம் செய்தார். அப்பகுதி சுனாமியால் இடம் பெயர்ந்து வாழ நேர்ந்துள்ளவர்களுக்கான நிவாரண முகாமாக விளங்கி வருகிறது. அங்கே சுமார் 200க்கு அதிகமானவர்கள் தட்டிகளால் அமைக்கப்பட்ட சிறு அறைகளில் தற்காலிகமாக வசிக்கின்றனர். அதை அம்மாவிற்குச் சுற்றிக்காட்டினர். அங்கே இருந்தவர்களுக்கு அம்மா பின்வருமாறு ஆறுதல் கூறினார்:

வேதனை மிக்க அனுபவங்களை நீங்கள் சமீபத்தில் பெற்றிருக்கி றீர்கள். அவற்றின் அதிர்ச்சியில் இருந்து  இன்னும் நீங்கள் விடுபடவில்லை. உங்களுக்கு வார்த்தைகள் எதுவும் மன அமைதியைத் தரும் சூழ்நிலை எதுவும் இங்கு     நிலவவில்லை. நீங்கள் அனுபவித்து வரும் துன்பத்தில் பங்கேற்கவே அம்மா இங்கு வந்துள்ளேன். குழந்தைகளே, இறை ஆற்றலில் நம்பிக்கை வைத்து அவரது அருளுக்காகப் பிரார்த்தியுங்கள். “எது நேர்ந்தாலும் மகிழ்வோடு இருப்பேன்; திடமாக இருப்பேன்” என்று தீர்மானம் செய்துகொள்ளுங்கள். தன்னம்பிக்கையும் இறைவன் மீதுள்ள நம்பிக்கையும் இழந்து விடாமல் முன்னேறிச் செல்லுங்கள்.

சில நிமிடங்கள் மௌனமாகத் தியானத்தில் கழிந்தன. அதன் பின் அம்மா சுனாமியால் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையில் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்தார்.

அடுத்ததாக அங்கிருந்தவர்களைத் தனித்தனியாக அரவணைத்து, அதாவது துன்பச் சுமையைத் தமது திருத்தோள்களில் இறக்கி வைக்கச் செய்தார். அவர்களது துயரமானது அம்மாவின் திருமுகத்தில் பிரதிபலித்தது. அவர்களது  கண்கள் கண்ணீர் வடித்ததுபோல அம்மாவின் கண்களும் குளமாயின. அம்மா அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட பொருட்களை வழங்கினார். இவை அந்த முகாமில் அவர்களது வாழ்க்கையை ஓரளவு வசதியாக்கும்.

ஸிசிஹகமா கடற்கரைப் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டதாகும். பசிபிக் பெருங்கடலை ஒட்டிய அந்த இடத்திற்கு  அம்மா  பக்தர்களுடன் சென்று அனைவரையும் இயற்கையில் சாந்தியும்  நல்லிணக்கமும் நிலவுவதற்காகப் பிரார்த்தனை புரியுமாறு சொன்னார். அதன்பின், எங்கும் சாந்தி நிலவுவதற் காக அம்மா ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என 9 முறை கூப்பிய கரங்களுடன் சொல்ல அதை அனைவரையும் பின்தொடர்ந்து  சொன்னார்கள். அடுத்து அம்மா “லோகா: ஸமஸ்தா சுகினோ பவந்து” எனும் சாந்தி மந்திரத்தை மூன்று முறை ஓத, அனைவரும் பின்தொடர்ந்து ஓதினார்கள்.

பிறகு கடல்நீர் தமது திருப்பாதங்களை நனைக்கும் அளவுக்கு முன்னே சென்ற அம்மா, கடல் அன்னைக்கு ஒரு மலர்க்கொத்தைச் சமர்ப்பித்து, தலைகுனிந்து வணங்கினார். நிமிர்ந்த அம்மா தொடுவானத்தைச் சிறிது நேரம் உற்று நோக்கியவாறு நின்றார். பின்னர் அனைவரையும் கடல் அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பிக்கச் சொன்னார். இளஞ்சிவப்பு நிறமலர்களையும் அவற்றுடன் ஒவ்வொருவரும் சாந்திக்காகச் செய்த பிரார்த்தனையும் கடல் அன்னை ஏற்றுக்கொண்டார்.