செப்டம்பர் 27 (பிறந்த தினம்)

அம்மாவின் 60ஆவது திருஅவதார தினமான இன்று, காலை 5 மணி முதல் மஹா கணபதி ஹோமமும், தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தன. காலை 8 மணியளவில் பத்மஸ்ரீ ஷோபனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் அதன் முடிவில், அம்மாவின் மூத்த துறவிச் சீடராகிய சுவாமி அமிர்த சொரூபானந்தபுரியின் உரையும் தொடர்ந்தன.

தமது உரையில் சுவாமிஜி, அம்மாவுடன் தமக்கு 37 ஆண்டுகாலமாகக் கிடைத்த அனுபவங்களும் ஏதோ ஒரு நொடிப்பொழுதில் பௌதீகக் கால வரையறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் நிகழ்வதாகவே தோன்றுகிறது என்றார். அம்மாவுக்கு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் ஒரு சிறிதும் விருப்பம் இல்லை என்றும், பக்தர்களின் பிடிவாதமான வற்புறுத்தலுக்குப் பிறகு அம்மா “எனக்குத் தெரியாது” என்று சொன்னதை சம்மதமாகக் கொண்டு குறைந்த காலக்கெடுவுக்குள் விழா ஏற்பாடுகள் நடந்ததாகவும் சொன்னார், அம்மாவின் அருள் இன்றி நடப்பதற்கு சாமானியமாய் சாத்தியமே இல்லை என்பதற்கு ஓர் உதாரணமாக, இரண்டே வாரங்களில் நிர்மாணிக்கப் பட்ட அந்த பிரும்மாண்டமான விழாப் பந்தலே சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்மா சரியாகக் காலை 9 மணிக்கு பஞ்ச வாத்தியம் முழங்க விழா மேடைக்கு வந்து சேர்ந்தார். உடன் பாத பூஜை துவங்கியது. அம்மாவின் துறவிச் சீடர்கள் அனைவரும் சூழ்ந்திருக்க மூத்த துறவி சுவாமி அமிர்த சொரூபானந்தபுரி அவர்கள் அம்மாவின் 108 நாமாவளி பாராயணத்துடன் பாத பூஜையை செய்தார்.
padapuja-17

தொடர்ந்து அம்மாவின் துறவிச் சீடர்களும், அம்மாவின் பூர்வாசிரமக் குடும்பத்தினரும், விழாவுக்கு வருகை தந்து மேடையில் வீற்றிருந்த முக்கிய பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் அம்மாவுக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

இன்றைய விழாவில் பங்கெடுத்த முக்கிய பிரமுகர்களில் சிலர்: (பல்வேறு மாநில ஆளுநர்களாக இருக்கும்) திரு சங்கரநாராயணன், ரோசைய்யா, அஜிஸ் குரேஷி, பி எல் ஜோஷி, (மத்திய/ மாநில அமைச்சர்களாக இருக்கும்) திரு வயலார் ரவி, ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், ஹரீஷ் ராவத், சசி தரூர், கே வி தாமஸ் மற்றும் பலர், பல்வேறு அரகியல் கட்சிப் பிரமுகர்களான திரு ரமேஷ் உன்னித்தலா, ஜகதம்பிகா பால், ஓ ராஜகோபால் மற்றும் பலர், ஆன்மீக மடங்களைச்சார்ந்த சுவாமி பிரகாசானந்தா (சிவகிரி மடம்), சுவாமி பிரவாணந்த தீர்த்தர் (பன்மனா ஆசிரமம்) போன்ற பலர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துரை, வீடியோ காட்சியாக ஒளிபரப்பப் பட்டது. பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்த்துரை மத்திய அமைச்சர் சசி தரூரால் வாசிக்கப் பெற்றது.
அடுத்து அம்மாவின் பிறந்தநாள் அருளுரை சிறப்பாக நடந்தது.

அமிர்தா சுயசார்புக் கிராமங்கள் திட்டத் துவக்கம்
அடுத்து, விழாவின் முக்கிய பகுதியாக அமிர்தானந்தமயி மடம் இப்பிறந்தநாளை ஒட்டித் தொடங்குகின்ற மாபெரும் தேச நலப் பணியான “101 கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம்” பற்றிய விவரங்கள் அறிவிக்கப் பட்டன. ‘அமிர்தா சுய சார்புக் கிராமங்கள்’ Amrita Self Relient Villages – Amrita seRVe என்ற பெயரில் இயங்கப் போகும் இந்த திட்டத்தின் கீழ், அனைத்திந்திய அளவில் 101 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்கள் எல்லா விதங்களிலும் சுயச் சார்புடன் செயல்படும் விதத்தில் வேண்டிய எல்லா கட்டமைப்பு வசதிகளும் அமிர்தானந்தமயி மடத்தினால் செய்துகொடுக்கப்படும். கிராமப்புற வளர்ச்சியில் மற்ற எல்லா கிராமங்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழும் விதத்தில் வேண்டிய வசதி வாய்ப்புகள் இந்த 101 கிராமங்களில் உண்டாக்கித் தரப்படும்.
இந்தத் திட்டத்தைப் பற்றி அம்மாவைக் கேட்டபோது அம்மா கூறியதாவது: “இந்தியாவின் அடித்தளமே கிராமங்கள் தான்; தேசத்தின் உயிர் நாடி கிராமங்களிலிருந்தே வருகிறது. அவற்றை நன்கு பராமரிப்பது நமது சமுதாயத்தின் பொறுப்பாகும்; உண்மையில் நகரங்களில் வசிப்பவர்களை வாழவைத்துக் கொண்டிருப்பது கிராமங்கள்தான்; தானியங்களும் காய்கறிகளும் பயிர் செய்து நமக்களித்து நம் உயிர்வாழ்வைப் பேணும் கிராமங்களை நாம் உண்மையில் ஒதுக்கி ஓரம்கட்டிக் கொண்டிருக்கிறோம். அதை விடுத்து, முழு மனதோடும் இதயத்தோடும் கிராமங்களைப் பாதுகாத்து அவற்றிற்கு சேவை செய்யும் நேரம் வந்துவிட்டது”

புதிதாக துவங்கப் பெற்ற நலத் திட்டங்கள்
1. ரூபாய் ஐம்பது கோடி உத்தரா கண்ட் மாநில வெள்ள நிவாரண, மறு சீரமைப்புத் திட்டம். இதன் கீழ் கேதார்நாத்தை சுற்றியுள்ள 42 கிராமங்களில் 500 வீடுகள் கட்டித்தரப்படும்; மற்ற அத்தியாவசியக் கட்டடப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

2. ஏற்கனவே இருக்கும் அமிர்த நிதி உதவித் திட்ட விரிவாக்கம். இதன் கீழ் உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை 59000 இலிருந்து 69000 ஆக உயர்த்தப்படும்.
ஏற்கனவே இருக்கும் வித்யாம்ருதம் திட்டத்தின் கீழ் கல்வி உதவி பெறுவோரின் எண்ணிக்கையை விரிவாக்கும் திட்டம். உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை 41000 இலிருந்து 46000 பேராக உயரும்.

3. ரூபாய் 50 கோடி மதிப்புக்கு இலவச சிகிச்சைகளை AIMS மருத்துவ மனையில் இவ்வருடம் மேற்கொள்வதற்கான திட்டம். இதன் கீழ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் போன்ற செலவு கூடுதலான சிகிச்சைகள் வசதியற்றோர் நலனுக்காக இலவசமாக நடத்தப்படும்.

அமிர்த கீர்த்தி விருதுகள் வழங்குதல்
ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்தநாளை ஒட்டி இந்திய பாரம்பரிய ஆன்மீக-தத்துவ இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றிய எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதத்தில் அமிர்த கீர்த்தி விருதுகள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஒருவருக்கு மடம் வழங்கி வருகிறது.

அம்மாவின் இந்த 60 ஆவது பிறந்த தினத்தில் தேசிய அளவிலான அமிர்த கீர்த்தி விருது, ஆங்கில, ஒரியா எழுத்தாளரான பேராசிரியர் மனோஜ் தாஸுக்கு அம்மா விழா மேடையில் வழங்கினார். கடந்த 50 ஆண்டுகளாக பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் வாழ்ந்து தமது இலக்கியப் பணிகளை செய்துவருகிறார்.

அமிர்த கீர்த்தி மாநில அளவிலான விருது, திரு துறவூர் விஸ்வம்பரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வடமொழி, ஆயுர்வேதம், ஜோதிடம் ஆகிய துறைகளிலும், நமது தரிசன நூல்களிலும், இதிஹாஸங்களிலும் மட்டுமன்றி மேற்கத்திய இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர் இவர். மஹாபாரதத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள ‘பாரத தரிசனம்’ என்ற விரிவான ஆய்வுநூல் பெரும் பாராட்டைப் பெற்ற ஒன்றாகும்.

தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து செய்திகள் வழங்கினர். அவர்களுக்கு நன்றியுரை வழங்கப்பட்டது.

அடுத்து வசதியற்ற ஏழைத் தம்பதியருக்குத் திருமண வைபவம் அம்மாவின் முன்னிலையில் மேடையில் நடத்திவைக்கப் பட்டன. மணமக்களுக்கான தாலி, நகைகள் ஆடைகள் போன்ற எல்லா செலவுகளையும் மடமே ஏற்று நத்தியது.

தொடர்ந்து வழக்கம்போல் அம்மா தம்மைத் தரிசிக்க இன்று ஆவலாய் வந்திருக்கும் எல்லா பக்தர்களையும் தனித்தனியே அரவணைத்து தரிசனமளிக்கத் தொடங்கினார்.

தரிசனம் நடைபெறும் போதே மேடையின் மற்றொரு பகுதியில் வழக்கம் போல் புகழ் வாய்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறலாயின.

இரவு முழுவதும் அம்மாவின் தரிசனமும் கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. அம்மாவின் தரிசனம் மறுநாள் பகல் 11 மணி வரை இடையீடின்றி நிகழ்ந்து நிறைவுற்றது. பாமர மக்களின் நலனுக்காக தம்மையே மெழுகு வர்த்திபோல் உருக்கிக்கொண்டு பாடுபடும் அம்மா, தரிசனத்துக்கு வேண்டி ஏங்கி நின்ற கடைசி நபர் வரை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தரிசனம் கொடுத்து முடித்தபிறகே விழா மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.