குழந்தைகளே, நல்ல சிந்தனைகளையும், குணங்களையும் வளர்த்து, மனதைத் தூய்மையுள்ளதாகவும், பரந்ததாகவும் ஆக்குவதுதான் எல்லா ஆன்மிக சாதனைகளின் லட்சியமாகும். இறைகுணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால், இன்று அவை விதை வடிவில் உள்ளன. சாதனையின் மூலம் நாம் அவற்றை வளர்க்கவேண்டும். இறைவனின் விக்கிரகத்தையோ, சித்திரத்தையோ வழிபடும் ஒரு பக்தன், அதில் எல்லாம்வல்ல இறைவனையே தரிசிக்கிறான். அன்பு வடிவினனும், கருணை வடிவினனுமான இறைவனை வணங்கும் பக்தனின் மனதிலும் அந்தக் குணங்கள் நாளடைவில் வளர்கின்றன. இவ்விதமாக, அனைத்திலும் இறைவனைத் தரிசித்து, அன்புசெய்யவும், சேவை செய்யவும் அந்த பக்தனால் இயல்கிறது.

பிரபஞ்சத்தில் சகல உயிரினங்களும் ஒரே சங்கிலியின் கண்ணிகளாகும். அனைவரும் பரஸ்பரம் பிணைக்கப்பட் டிருக்கின்றனர். யாரும் தனியான தீவல்ல. நாம் அறிந்தோ , அறியாமலோ செய்யும் ஒவ்வொரு செயலும் பிறர்மீது செல்லவாக்கு செலுத்துகிறது. இந்த உணர்வுடன் நாம் ஒவ்வொரு செயலையும் செய்யவேண்டும். உலகம் திருந்தவேண்டுமெனில், முதலில் நாம் திருந்தவேண்டும். பிறரிடம் மாற்றம் வந்த பிறகு நாம் மாறலாம் என்று நினைப்பது நடைமுறைக்கு ஒவ்வாது. பிறர் மாறவில்லை என்றாலும், நாம் மாறினால் அவர்களிடமும் மாற்றம் ஏற்படும்.

பரபரப்பு நிறைந்த வாழ்விற்கு இடையில், நாம் பெரும்பாலும் “வாழ்வதற்கே’ மறந்து போகிறோம். தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் பின்னால் ஓடும் ஓட்டத்திற்கு இடையில், இந்த நிமிடத்தில் நிகழ்காலத்தில் வாழவோ, நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை நினைத்துப் பார்க்கவோ நமக்கு இயலாமல் போகிறது. இப்படி நம் வாழ்க்கை இயந்திரத் தனமாகவும், வறண்டதாகவும் ஆகிறது. அம்மாவுக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு முறை ஒருவர், புதிய கார் ஒன்று வாங்கினார். மகிழ்ச்சியுடன் அதை ஓட்டிக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். சட்டென ஒரு பெரிய கல் வந்து காரின் கண்ணாடியில் விழும் சப்தம் கேட்டது. அவர் வண்டியை நிறுத்தினார். பார்த்தபோது காரின் கண்ணாடி சிறிது உடைந்திருந்தது. அதிக விலையுள்ள காரை வாங்கி, செருக்குடன் ஓட்டி வரும்போதுதான் இப்படி நிகழ்ந்தது. அவரால் கோபத்தையும், ஆத்திரத்தையும், வருத்தத்தையும் அடக்க முடியவில்லை , யாராடா என் கார்மீது கல் வீசியது?” என்று கத்தியபடி சுற்றிலும் பார்த்தார். சாலையின் எதிர்புறத்தில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் ஒருவர் விழுந்து கிடக்கிறார். காரின் சொந்தக்காரர் தன்னைக் கோபத்துடன் பார்ப்பதைக் கண்ட சிறுவன் ஓடி அருகில் வந்து, “மன்னிக்கவேண்டும் ஐயா! என் தந்தை என்னை சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். இந்த இடத்திற்கு வந்தபோது, அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்துவிட்டார். வேகமாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால், தந்தை உயிர்பிழைப்பார். இவ்வழியில் சென்ற எல்லா கார்களுக்கும் முன்னால் நான் உதவிக்கரம் நீட்டினேன். அனைவரிடமும் கெஞ்சினேன். வண்டியை நிறுத்தவோ, தந்தையை மருத்துவ- மனைக்குக் கொண்டுசெல்லவோ யாரும் முன்வரவில்லை. காரில்லாமல் என் தந்தையை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாது. வேறு வழி எதுவும் தெரியாத காரணத்தால் நான் இப்படிச் செய்துவிட்டேன். கல்லை வீசினால் நீங்கள் வண்டியை நிறுத்துவீர்கள். நடந்ததை அறியும்போது, உங்களுக்கு என் மீது கருணை தோன்றலாம் அல்லவா என எண்ணினேன்” என்றான். இதைச் சொன்ன அவனது கண்களில் கண்ணீர் பெருகியது. காரின் சொந்தக்காரர் உடனே அவனது தந்தையைத் தூக்கிக் காரில் படுக்கவைத்தார். மருத்துவ- மனைக்குக் கொண்டுசென்றார். சமயத்தில் கொண்டுசென்ற காரணத்தால், அவர் உயிர்பிழைத்தார். இவ்விதமாக, அந்த ஏழைக் குடும்பம் பெரும் ஆபத்திலிருந்து தப்பியது.

காரின் சொந்தக்காரர் தனது காரில் உடைந்த அந்தக் கண்ணாடியை ஒருநாளும் மாற்றவே இல்லை. பரபரப்பான வாழ்விற்கிடையில் பிறரை மறந்துவிடாமல் இருப்பதற்கு இது என்றும் எனக்கு நினைவுறுத்தும் அடையாளமாக இருக்கட்டும்” என்று அவர் நினைத்தார். அவர் மனதில் கருணை தோன்றியதாலும், உடனடியாக விரைந்து செயல்பட்டதாலும், ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது, அதுபோல், நம்முடைய ஒரு நிமிடப் பொறுமையும், சிரத்தையும் எத்தனையோ பேருக்குப் பெரிய வரமாக மாறக்கூடும். இந்த மனோபாவம்தான் சமூகத்தை வாழச்செய்கிறது.

வாழ்வில் நம்மைப் பற்றியும், நமது தேவைகளைக் குறித்தும் மட்டுமே நாம் சிந்திக்கிறோம்; கவனிக்கிறோம். சுற்றிலும் உள்ள உலகத்தைக் குறித்து நாம் சிந்திப்பதில்லை. பிறரு டைய மன வேதனையை அறியவும், அதைச் சிறிதளவாவது பகிர்ந்துகொள்ளவும் நாம் சிறிது நேரத்தைச் செலவிடுவதற்குரிய பரந்த மனப்பான்மை நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால், இந்தப் பூமியில் சொர்க்கத்தை உருவாக்க முடியும். அதற்கு, பிறருக்காக நம் மனதில் சிறிதளவு இடம் ஒதுக்கவேண்டும். அது பொறுமையாகவோ, அன்பாகவோ, கருணையாகவோ இருக்கலாம். கருணையே பிரபஞ்சத்தின் அஸ்திவாரமாகும். கருணையை மனதில் விழிப்புறச் செய்ய முடிந்தால், பிரார்த்தனையும், தியானமும் பயனளித்துவிட்டதாகக் கூறலாம்.