இவ்வருடம் (2018) மே மாதத்தில், எர்ணாகுளத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழுவானது, ஜார்கண்டில் சேர்ந்த 19 வயது உள்ள அமர் சமத் என்ற ஆதிவாசி பையனின் தாடைப் பகுதியில் வளர்ந்திருந்த சுமார் ஐந்து கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். 14 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமர், “எனது முகம் விகாரமாக இருந்த காரணத்தால், யாரும் என்னுடன் பேச கூட தயங்கினர். இது எனக்கு மறுபிறவியாகும். வீட்டிற்குச் சென்ற பிறகு நான் புதிய நண்பர்களுடன் பழகுவேன். வயலில் வேலை செய்வேன். இதற்கு காரணமாக இருந்த AIMS மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்” என்றான். அமரின் முகத்தில் வளர்ந்திருந்த இந்தக் கட்டியால், அவனால் உணவை விழுங்கவோ, பிறருடன் பேச கூட முடியாத நிலை ஏற்பட்டது. டாக்டர் அய்யர், “இக்கட்டியின் காரணத்தால், அமருக்கு பைரா தைராய்டு கட்டியும் இருந்தது. இக்கட்டி இன்னும் சற்று வளர்ந்திருந்தால் அவன் மூச்சுவிடக்கூட கஷ்டப்படும் நிலை வந்திருக்கும். அவன் உடலில் கால்சியம் அதிகமாக இருந்தது.கட்டியால் அவனது இடது கண் முழுவதும் பாதிக்கப்படும் என்று பயந்தோம். ஆனால் கண்பார்வை காப்பாற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அமரின் பைரா தைராய்டு ஹார்மோனும், கால்சியமும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டன” என்கிறார்.