செப்டம்பர் 26 – சிறப்பு நிகழ்ச்சிகள்

60 ஆண்டு நிறைவு காணும் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், அமிர்தபுரியில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் வள்ளிக்காவில் அமைந்துள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம் (பொறியியல் கல்லூரி) வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் துவங்கியது.

விடியற்காலை 5:30 முதல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி, தொடர்ந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணமும், பஞ்சாரி மேள வாத்திய முழக்கமும் நிகழ்ந்தன. தொடர்ந்து, அமிர்தபுரி ஆசிரமத்திலிருந்து, அம்மாவின் பிறந்தநாளுக்கென வந்து சேர்ந்திருக்கும் எல்லா வெளிநாட்டு பக்தர்களும் தத்தமது நாட்டுக் கொடிகளை ஏந்தி விழாப்பந்தலுக்கு ஊர்வலமாக வந்து சேர்ந்தனர். நமது நாட்டுக்கொடியோடு மற்ற எல்லா நாட்டுக்கொடிகளும் விழா அரங்கத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டன.

அடுத்து, ஒரு வரவேற்பு நாட்டிய நிகழ்ச்சி தொடங்கியது. இந்தியாவின் பாரம்பரிய நடனங்களின் தொகுப்பாக நமது கலாசாரம், பண்பாட்டுப் பெருமைகளை விளக்கும் விதத்தில் மனதையும் கண்களையும் கவரும் விதமாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.
சுமார் பத்தரை மணியளவில், அம்மா ஆசிரமத்திலிருந்து விழா மேடைக்கு வந்து சேர்ந்தார். அன்றைய காலை நிகழ்ச்சிகளின் முக்கிய விருந்தினராகப் பங்கேற்றவர், குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி அவர்கள். அவருடன் காலை விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மற்ற முக்கிய பிரமுகர்கள்: சுவாமி விச்வேஷ தீர்த்தர் (உடுப்பி பெஜாவர் மடாதிபதி), ஃபிலிபோஸ் மார் கிறிஸ்டோட்டம் (மார்த்தோமா வலிய மெட்ரொபாலித்தன்), முகம்மது மஸ்தான் காலிஃபா சாஹிப் (நாகூர் தர்கா தலைமைப் பொறுப்பாளர்), ஸ்ரீ பய்யாஜி ஜோஷி (ஆர். எஸ். எஸ். அகில இந்திய தலைமை நிர்வாகி) ஸ்ரீ வெள்ளாப்பள்ளி நடேசன் (ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகத்தின் தலைமை செயலாளர்), ஸ்ரீ P. பரமேஸ்வரன் (விவேகானந்தா கேந்திர தலைமைப் பொறுப்பாளர்), ஸ்ரீ S. குருமூர்த்தி (சுதேசி ஜாக்கிரண் மன்சின் தலைவர்), மற்றும் பல அரசியல், சமூக நலப் பிரமுகர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆன்மீக இயக்கங்களின் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என்று பலரும் அடங்குவர்.

ஸ்ரீ நரேந்திர மோடி உரை:

ஸ்ரீ நரேந்திர மோடி பேசுகையில், தாம் அம்மாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பது, ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ அல்லது ஒரு தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவோ இல்லை, அம்மாவின் ஒரு பக்தனாகத்தான் என்றார். கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி என பல துறைகளிலும் ஒரு அரசாங்கம் உண்மையில் செய்யவேண்டிய பல காரியங்களை மாதா அமிர்தானந்தமயி மடம் செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். நமது இந்தியப் பாரம்பரியத்தில், ரிஷிகளும், முனிவர்களும் எல்லாக் காலங்களிலுமே நமது தேசத்தின் உருவாக்கத்திலும், முன்னேற்றத்திலும், பெரும் பங்கு அளித்துள்ளனர்; ஆனால், “மெக்காலே கல்விமுறையில்” படித்து வளர்ந்தவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் மகாத்மாக்களைக் குறித்துத் தவறான கண்ணோட்டத்தைப் பரப்புகின்றனர் என்றார் அவர். பண்டைய காலத்தில் இருந்தது போல மீண்டும் பாரதம் உலக குருவாக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய திட்டங்கள், கண்டுபிடிப்புகளின் அறிமுகம்
அமிர்தா ஆன்மீக ஆய்வு மையம் துவக்கம்:
அம்மாவின் 60 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, அமிர்த விஸ்வ வித்யாபீடத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பெற்றது இந்த மையம்.

இந்த மையத்தின் நோக்கங்கள்: நமது சனாதன தர்மத்தின் அடித்தளத்தில், ரிஷி, குரு பாரம்பரியத்தில் வந்த மகாத்மாக்கள் காட்டியுள்ள வழியில் அமைந்துள்ள பாரத உயர் கலாசாரம், பாரம்பரியம், ஆன்மீக ஞானம், சாத்திரங்கள், பழக்கவழக்கங்கள் இவற்றில் ஆய்வும் ஆராய்ச்சியும் செய்தல், அதன் மூலம் நாட்டின் ஆன்மீக, சமுதாய, கலாசார முன்னேற்றத்துக்கு அடிகோலுதல், அம்மாவின் ‘அன்பு செய், சேவை செய்’ என்ற உலகளாவிய செய்தியின் அடிப்படையில் சுயநலமற்ற சேவையை கல்வியின் ஒரு அங்கமாகவே கொண்டுவருதல் முதலியன.

இந்த மையத்தின் மேற்பார்வையில் முதுகலைப் பட்டப் படிப்புகளும், முனைவர் பட்டப் படிப்புகளும் அளிக்கப்படும். நமது வேதம், உபநிஷதம், பகவத் கீதை, பத்து தரிசனங்கள் போன்றவற்றில் ஆராய்ச்சி, கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆன்மீகத்தோடு இயைந்துள்ள விஷயங்களைக் குறித்த ஆய்வு, மருத்துவத்துறையில் அலோபதிக்கும் ஆயுர்வேதத்துக்கும் இணைப்பு ஏற்படுத்தக்கூடிய ஆராய்ச்சிகள், அம்மாவின் ஆன்மீக, சமுதாய நலப் பணிகள், அம்மா அருளித்தந்த யோகா பயிற்சிகள் குறித்த ஆய்வுகள் போன்ற பல செயல்பாடுகள் இந்த மையத்தின் திட்டத்தில் அடங்கும்.
அடுத்து, ஆசிரமத்தின் புதிய புத்தக வெளியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அன்றைய தின நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய கண்டுபிடிப்புகள்/ திட்டங்கள் அறிமுகத்திற்குப் பிறகு, வந்திருந்த பக்தர்களுக்கு அம்மா வழக்கம்போல் தனித்தனியே அரவணைத்து மாலை வரை தரிசனம் தரத் தொடங்கினார்.
மேடையின் மற்றொரு பகுதியில் அடுத்தடுத்து கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. குரு அருணா மொஹந்தியின் ஒடிஸ்ஸி நடனம், பண்டிட் நயன் கோஷின் சிதார் வாத்தியம், ஸ்ரீ உமையாள்புரம் சிவராமனின் மிருதங்க தனி ஆவர்த்தனம், கென்யா நாட்டைச்சேர்ந்த எரிக் வாய்னாய்னாயின் ஆப்பிரிக்க ஃப்யூஷன் இசை ஆகியவை நடந்தன.

மாலை/ இரவு நிகழ்ச்சிகள் (26 ஆம் தேதி)
அன்றைய தின மாலை நிகழ்சிகளில் தலைமை விருந்தினராக கேரள மாநில முதல்வர் திரு. உம்மன் சாண்டி கலந்துகொண்டார். அவர் பேசுகையில் அம்மா ஆசிரமத்தோடு தமக்கு சமீபகாலங்களில் கிடைத்துள்ள தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டார். சிரித்த முகத்தோடு ஆயிரக்கணக்கானவர்களை தினம் தினம் தனித்தனியே கண்டு அரவணைத்து அவர்தம் குறைகேட்கும் அம்மாவின் அளப்பெரும் சக்தி தம்மை எப்போதும் வியப்பிலாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்து இடுக்கி நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரமம் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அடுத்து அம்மாவின் மாலை நேர பஜனையும் பிறகு பொதுமக்களுக்கு தரிசனம் தருவதும் தொடர்ந்தது. நள்ளிரவையும் தாண்டித் தொடர்ந்தது அம்மாவின் தரிசனம். தரிசனம் நடக்கையிலேயே உலகப் புகழ் வாய்ந்த கலைஞர்களின் கலா நிகழ்ச்சிகள் விழா மேடையில் நிகழ்ந்தன. பண்டிட் அஜொய் சக்ரவர்த்தியின் இந்துஸ்தானி வாய்பாட்டு, திருமதி மஞ்சு வாரியரின் குச்சுப்புடி நடனம், திரு சிவமணி மற்றும் ஸ்டீபன் தேவாசியின் தாள வாத்திய இசை, ஆகியவை அன்றிரவு நிகழ்ச்சிகளில் முக்கியமானவை.