chandiசெப்டம்பர் 22 – 25 சண்டிகா மஹா யாகம்

அம்மாவின் 60ஆவது திருஅவதார தின வைபவத்தின் ஒரு அங்கமாக, ஸ்ரீ சண்டிகா மகா யாகம் அமிர்தபுரி ஆசிரமத்தில் மிகச் சிறப்பாக 4 நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்களாகவும் வேத விற்பன்னர்களாகவும் உள்ள அனுபவமிக்க ரித்விக்குகளால் இந்த மஹா யாகம் பாரம்பரியச் சிறப்புடன் நடத்தப்பெற்றது.
செப்டெம்பர் 22 ஆம் தேதி காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இந்த யக்ஞம். சுமார் பத்தரை மணியளவில் அம்மா, பஞ்ச வாத்தியம் முழங்க, யானை முன்வர, யக்ஞ சாலைக்கு வருகை தந்து குத்து விளக்கேற்றி, மலர்தூவி யாக நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.

யாகத்தின் கிரமப்படி, சண்டி சப்தசதி பாராயணம், லலிதா சஹஸ்ரநாமம் உட்பட மற்ற பாராயணங்களும் பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்றன.
யாகத்தின் இரண்டாம், மூன்றாம் நாட்களில் சண்டிகா சப்தசதி பாராயணம், நவாவர்ண ஹோமம் மற்றும் பல பாராயணங்களும் விசேஷ பூஜைகளும் யாக நியமப்படி தொடர்ந்து நடைபெற்றன. மூன்றாம் நாள் இரவில் அக்னி ஜனன மஹா பூஜை செய்து யாகத்தீ தொடங்கப் பெற்றது.

4 ஆவது, நிறைவு நாளான 25 செப்டம்பர் அன்று மந்திர பூர்வமாக யாக அக்னியோடு சத சண்டிகா மஹா யக்ஞம் தொடர்ந்தது. காலை சுமார் 10.15 மணியளவில் நாதஸ்வர வாத்தியத்தோடு அம்மா யாக சாலைக்கு வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் பூர்ணாஹுதி நிகழ்த்தப் பெற்றது.
.

chandika11

இந்த சண்டிகா மகா யாகத்தைப் பற்றி தலைமை பூஜாரி விளக்கும்போது, “மனித குலத்துக்கு மட்டுமின்றி, விலங்குகள் தாவரங்களுக்கும் நன்மை தரக்கூடிய விதத்தில் வேண்டப்பெறும் எல்லா பிரார்த்தனைகளும், இந்த யாகத்தின் மூலம் நிறைவேறும்; தேவியை முற்றிலும் சரணடைந்து பிரார்த்திப்பதின் மூலம் கிடைக்கும் பயன் அது; வறட்சியில் தவிக்கும் பிரதேசங்களில் மழை பொழியவும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மழையின் சீற்றத்தைக் தணிக்கவும் இந்த யாகம் வழி கோலும்” என்றார்.
அமிர்தபுரி ஆசிரம வாசிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மஹா யாகத்தைக் கண்டும், வேத, மந்திர பாராயணங்களைச் செவி மடுத்தும், இந்த யாகத்தின் மூலம் சுற்றுப் புறத்தில் உண்டான தெய்வீக அதிர்வுகளை அனுபவித்தும் பெரு மகிழ்வு எய்தினர்.