கேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?

அம்மா: பாரதத்தில் உள்ளவர்களே, ” இந்துக்கள் காட்டுமிராண்டிகள். அவர்களது பக்தியும் காட்டுமிராண்டித்தனமானது. குரங்கையும் யானைத்தலையுள்ள கணபதியையும் வழிபடுகிறார்கள் ” என்று சொல்கிறார்கள். ஆனால் இவற்றிற்குப் பின் உள்ள தத்துவத்தை, அறிவியல் உண்மையை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?. அதை அறிய எத்தனைபேர் முயன்றிருக்கிறார்கள்? அப்படியே அறியவேண்டும் விரும்பினாலும் அதை அறிவதற்குரிய வழி என்ன? இவை அனைத்தும் நாம் மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டிய விஷயங்களாகும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்கே பல வீடுகளில் ஓவியங்களைக் காண்பதுண்டு. ஒருவீட்டில் வரைந்திருக்கும் ஓவியத்தைக் கண்டபோது அது என்னவென்றே புரியவில்லை. நாலைந்து நிறங்களும் ஐந்தாறு கோடுகளும் மட்டுமே அந்த ஓவியத்தில் காணப்பட்டன. பார்ப்பதற்கு, துடைப்பத்தை வண்ணத்தில் தோய்த்து அதனால் வரைந்த படம் போன்று தோன்றும். அதைப்பற்றிக் கேட்டபோதுதான் அதன் விலை ஐந்துலட்சம் டாலர் என்பது தெரிந்தது. அது திருட்டுப் போய்விடாமல் இருப்பதற்காகச் சம்பளத்திற்குக் காவல்காரனை நியமித்து இருக்கிறார்கள். மேலும் அதைக் கண்காணிக்கக் காமிராவும் உண்டு. நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அதைப் பற்றி மணிக்கணக்காக விவரிப்பார்கள். அதை வரைந்த ஓவியரை யாரும் முட்டாள் என்று கூறுவதில்லை. மாறாக அவரைச் சிறந்த கலைஞராக ஏற்றுக்கொள்கிறார்கள். ” எத்தனையோ ஏழைகள் பசியால் வாடும்போது இவ்வளவு விலை கொடுத்து எதற்காக இந்த ஓவியத்தை வாங்கினீர்கள் ” என்று அதன் உரிமையாளரிடம் யாரும் கேட்பதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு அந்த ஓவியத்தின் பொருள் விளங்கவில்லை என்பதால் அதன் மதிப்பு குறைவதில்லை. அதுபோல் இந்து மதத்தின் தெய்வ வடிவங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவத்தைப் புரிந்துகொள்ளும் போதுதான் அதன் மகிமையை அறிய முடியும்.

ஹனுமானை வழிபடவேண்டும் என்று சொல்வதன்மூலமும் கணபதியை வழிபடச் சொல்வதன் மூலமும் நம் முன்னோரின் அறிவும் புத்தியும் அனுபவமும் எவ்வளவு சிறந்து விளங்கின என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பிறநாடுகளின் சொந்தவிஷயத்தைக் குறித்துச் சொல்ல அம்மா விரும்பவில்லை. ஒவ்வொரு நாட்டிற்குச் செல்லும்போதும் அத்தகைய விஷயங்களைக் குறித்து அந்நாட்டவர்கள் பல கேள்விகள் கேட்பதுண்டு. அம்மா ஒன்றும் சொல்வதில்லை. அவ்விஷயங்களைக் குறித்துச் சிந்திக்கும் சுதந்திரம் அவர்க்ளுக்கு உண்டு. அந்நாட்டு மக்கள் தங்களுக்குள் விவாதம் செய்து தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள் அவை. ஒரு விஷயத்தைக் குறித்து இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. பல வருடங்களாக அம்மா அமெரிக்காவுக்குச் சென்று வருகிறேன். இத்தனை வருடங்களில் அந்நாட்டில் பொருள்களுக்கு ஏற்பட்ட விலை ஏற்றத்தை விட பல மடங்கு விலை ஏற்றம் பாரதத்தில் ஏற்பட்டிருக்கிறது.

வெளிநாட்டவர்கள் இங்குள்ளவர்களைப் போல சோம்பேறிகள் அல்ல. அவர்கள் எந்த வேலையையும் செய்ய அவர்கள் தயங்குவதில்லை. அந்நாடுகளில் பாரதத்தில் நிகழ்வதைப் போல மாதத்தில் இருபது நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதில்லை.
( மீதமுள்ள பத்து தினங்களில் வேலை செய்கிறார்களா என்பது கூடச் சந்தேகத்திற்குரிய விஷயமாகும். )

அதே சமயம் பாரதத்தில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் நிலைமையே மாறிவிடும். ஒரு நாளில் 22 மணிநேரம் வேலை செய்யவும் தயங்குவதில்லை. அதை விட அதிகமாக வேலை செய்பவர்களை அம்மாவுக்குத் தெரியும்! 22 மணிநேரம் வேலை செய்து விட்டு வந்து, தானே உணவு சமைத்து சாப்பிட்டு வி்ட்டு கலிபோர்னியா ஆசிரமத்திற்கு வந்து சேவை செய்யும் பாரத மக்கள் இருக்கிறார்கள். பாரதத்திலிருந்து போய்விட்டால் நமக்கு உழைப்பதற்கு எவ்விதமான சோம்பலுமில்லை.

 

ஜப்பானில் தினசரி 12 மணிநேரமாவது வேலை செய்யவில்லை என்றால் மனைவியர் திட்டுவர். சிறிது முன்னதாகவே வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டால், ” என்ன! வேலைக்குப் போய்விட்டு இன்று விரைவாகத் திரும்பிவிட்டீர்களே? ” என்று மனைவியர் கேட்பர். ஆனால் இங்கோ தினசரி 8 மணிநேரம் வேலை செய்கிறார்களா என்பதே சந்தேகம். உணவுக்கும் ஓய்வுக்கும் தேநீர் இடைவேளைக்குப் போக வேலை செய்வதற்கு எவ்வளவு நேரம் கிடைக்கும்! வெளிநாடுகளின் முன்னேற்றத்திற்கு அங்குள்ளவர்களின் உழைப்பே காரணமாகும்.

இங்குள்ளவர்களிடம் அதிக புத்தியும் திறமையும் இருந்தாலும் அதை விட சோம்பேறித்தனம் தலைதூக்கி நிற்கிறது. செய்யும் வேலையையும் எவ்வளவு குறைவாகச் செய்யலாம் என்பது தான் இவர்களது சிந்தனை. அதே சமயம் சம்பளத்தில் சிறிதளவு குறைவு ஏற்படுவதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்பதில்லை. இந்த மனோபாவம் மாறாமல் நாடு எப்படி முன்னேற முடியும்? அப்படியே முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை நிலைநிறுத்தத் தேவையான சக்தியில்லாமல் போகிறது. அம்மா இப்படிக் கூறினாலும் பாரதம் முன்னேற்றத்தின் பாதையில்தான் செல்கிறது. ஆனால் அதை நிலைநிறுத்தக் கூடிய சக்தி குறைந்து விடக் கூடாது. நாம் விழித்து விட்டோம் என்றாலும் படுக்கையிலிருந்து எழவில்லை. விழித்துக் கொண்டது மட்டும் போதாது. எழுந்திருக்க வேண்டும். முனைந்து செயல்படவேண்டும். அப்போதுதான் விழித்ததின் பலன் கிடைக்கும். நாடு முன்னேற்றம் அடையும். பாரதம் பிறநாடுகளுக்கு ஒளிவிளக்காகத் திகழும்.
( நிறைவு)