இன்று பல துறைகளிலும் பாரதத்தின் முன்னேற்றத்தைக் காணும் போது, அது மிக்க எதிர்பார்ப்பளிப்பதாக காணப்படுகிறது. பொருளாதார துறையிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையிலும் பாரதம்  முன்னேறிக்கொண்டிருக்கிறது. ‘மங்கள்யான்’ மற்றும் ‘செவ்வாய் ‘ கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்வெளிக்கோள்  போன்றவை உலக நாடுகளின் பெரு மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது. ஆனால் இங்குள்ள  ஒவ்வொரு ஏழையின் வாழ்வும் மங்களகரமானால் மட்டுமே, பாரதத்தின் வளர்ச்சியை முழுமையடைந்ததாகக் கருதமுடியும். சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாரதமெங்கும்  மடம் 101 கிராமங்களை தத்தெடுத்தது. அவற்றில் பல கிராமங்களின் நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது. சென்ற 100 ஆண்டுகளில் கிராமங்களில் உள்ளவர்களின்  வாழ்க்கைத்தரம் பெரிதாக முன்னேறவில்லை. கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, நமது உடலில் கை கால்கள் மட்டும் வளர்ந்து மற்ற பகுதிகள் வளராமல் இருப்பதற்கு சமமாகும்.

பாரதத்தின் ஆத்மா கிராமங்களில் குடிகொண்டிருக்கிறது

பாரதத்தின் ஆத்மா கிராமங்களில் குடிகொண்டிருக்கிறது  என்பதை மறந்துவிடக்கூடாது. காலத்திற்கு ஏற்றார் போல்,கிராமங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி  பெறுவதோடு பழைய கலாச்சாரம் மற்றும்  நல்லியல்புகளையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இதயத்தில் கருணை பிறப்பெடுக்கும்பொழுதுதான் மனிதன் மனிதனாகிறான். கருணையில்லாதவர்கள் வெறும் மிருகங்களேயாவர்.

கல்வியானது விழிப்புணர்வை  நம்முள் உருவாக்க வேண்டும்

நாம் உடற்பயிற்சி சாலைக்குச் சென்று கைகளின் தசைகளுக்கு மட்டும் பயிற்சி கொடுப்பது போன்றதாக இருக்கிறது  இன்றைய கல்விமுறை. உடலின் சில  தசைகளுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து  மற்ற உறுப்புக்களுக்கு சரியான விகிதத்தில் பயிற்சியளிக்கவில்லையெனில் அவை உருத்திரிந்து விகாரமாகப் போய்விடும். இதுபோல் மனிதனுடைய புத்தியையும் நினைவாற்றலையும் வளர்த்து உற்பத்தித்திறனைப் பெருக்கும் ஒரு எந்திரமாக மாற்ற முற்படுகிறது  இன்றைய கல்விமுறை.

உண்மையில் கல்வியானது சொற்கள்,எண்ணங்கள், செயல்கள்,கண்ணோட்டம் முதலியவற்றை ஒளிமயமான கலாச்சாரம் நிறைந்ததாக ஆக்க உதவ வேண்டும். இந்தப் படைப்பில் உள்ள எல்லா உயிரினங்களுக்கிடையேயுள்ள ஒருங்கிணைப்பைப்  பற்றிய  விழிப்புணர்வை நம்முள் அது  உருவாக்க வேண்டும். ஆனால் இன்று  மனிதர்கள்   ‘ நான் வெற்றிபெற வேண்டும் ‘ என்று மட்டுமே எண்ணுகிறார்கள். ‘நான்,நான்,நான்.’ என்கிற ஒரே மந்திரத்தை மட்டுமே பலரும் உச்சரிக்கிறார்கள். விளைவை மட்டும் மனதில் கருதி செயலாற்றுகிறார்கள். தாங்கள் நினைக்கும் பயனைப்பெறுவதற்காக,என்ன வேண்டுமானாலும் செய்யத்தயாராக இருக்கிறார்கள்.  குற்றங்கள் புரியக்கூட அவர்கள் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட தன்னல மனோபாவமானது, அடுத்தவர்களை எதிரியாகவே கருதச்செய்கிறது. கண்மூடித்தனமான போட்டியுணர்வை ஏற்படுத்தி,எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் செய்கிறது. எனவே மனிதர்களின் முயற்சி நேர்மையற்றதாகவும், முழுமையில்லாததாகவும் இருக்கிறது.

போட்டியுணர்வைக்காட்டிலும் நட்பும் கூட்டுறவும்தான் செயல்களின் தரத்தையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்கும்.  அவ்வியல்புகள் ஒரு நபரை மெல்ல மெல்ல உயர்த்திடும். நீங்கள் தேனீக்களை கவனித்திருக்கக்கூடும். தேனின் அளவு, தரம், புனிதத்தன்மை இவைகளுக்குப்பின்னால் உள்ள இரகசியம் என்ன? தேனீக்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையுணர்வு, நட்பு மற்றும் கூட்டுறவுதான் காரணம். அது மட்டுமல்ல ; தேனீக்கள், வியக்கத்தக்க விழிப்புணர்வோடும் கவனத்தோடும் செயலாற்றுகின்றன