அம்மாவின் 66வது அவதாரத் திருவிழா அருளுரை
27 செப்டம்பர் 2019, அமிர்தபுரி – அமிர்தவர்ஷம் 66

குழந்தைகளே, அனைவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும் இங்கே குழுமியிருப்பதைக் காணும்போது, பல நிறமுள்ள மலர்களால் அழகாகக் கட்டப்பட்ட மனங்கவரும் பூமாலையைப் போல் அம்மாவுக்குத் தோன்றுகிறது. உங்களது இவ்வுள்ளமும், தொண்டு மனப்பான்மையும் மேன்மேலும் வளர்ந்து ; பரந்ததாகி. மக்களுக்குப் பயன்படட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் வேண்டிக்கொள்கிறார்.

இது ஒரு மகிழ்ச்சியின் நிமிடம் என்றாலும், உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் இயற்கைச் சீற்றங்களாலும், கலவரங்களாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கையை நினைக்கும்போது அம்மாவின் இதயம் துன்பமடைகிறது. கடும் வெயிலும், அடைமழையும், இயற்கைச் சீற்றங்களும், தொற்றுநோய்களும் கேரளத்தையும், பிற மாநிலங்களையும் துன்புறுத்துகின்றன. இடையறாத கண்ணீருடன் வாழும் குடும்பங்கள் எத்தனையோ; பெற்றோரையும், உற்றோரையும் இழந்த குழந்தைகள் எத்தனையோ..! பல நாடுகளிலும் தீ விபத்தால் பெருமளவு நாசம் ஏற்படுகிறது. பொதுவாக, குளுமையான தட்பவெப்பநிலை உள்ள பல வெளிநாடுகளில் தற்போது, முன் ஒருபோதும் இல்லாத விதத்தில் வெப்பம் நிலவுகிறது. வேறு சில இடங்களில், அதிகக் குளிர் மக்களை வாட்டுகிறது. இதற்கெல்லாம் மேலாக, எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல், மனித உள்ளங்களில் அதிகரித்து வரும் தீங்கிழைக்கும் இயல்பு பல இடங்களிலும் மிக ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இச்சூழ்நிலை உலகமெங்கும் பரவி இருக்கும்போது, இங்கே மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் யார்? அது, பொருளற்ற வெறும் வார்த்தையாக மாறி விட்டது. நம்மைச் சுற்றிலும் நாம் இன்று, சாயம் பூசப்பட்ட, போலியான மகிழ்ச்சியையே காண்கிறோம். அரிதாரம் பூசிய உலகம் இது. சற்றே சுரண்டிப் பார்த்தால், உள்ளே இருப்பது காமமும், கோபமும், பேராசையும், வெறுப்பும், வேதனையும், சோகமுமே ஆகும். தனது அறையின் மேல்கூரையில் உள்ள ஓட்டையின் மூலம் காணும் ஆகாயத்தைப் பார்த்த ஒரு சிறுவன், “அதோ, அது என் ஆகாயம்” என்று சொல்வான். மனிதனும் அச்சிறுவனைப் போன்றவன் தான். இயற்கையையும், வாழ்வையும் நாம் மிகவும் சிறியதாகக் காண்கிறோம். வாழ்வின் எல்லையற்ற தன்மையைப் புரிந்து கொண்டால் தான், அதற்கு முன்னால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது நமக்குப் புரியும். ‘இயற்கை’ நம் தாய். ‘இயற்கையை அன்னை ‘ என்றே நாம் கூறுகிறோம். கடலைச் சார்ந்து வாழ்பவர்களுக்குக் கடல், அன்னையாகும். காடுகளில் வாழ்பவர்களுக்குக் காடு அன்னை . மலைச்சரிவுகளில் வாழ்பவர்களுக்கு, அந்த மலைகளும், அவற்றோடு சேர்ந்த இயற்கையுமே அன்னை. மனிதனையும், எல்லா உயிரினங்களையும் பேணுவதும், வளர்ப்பதும் இயற்கையே ஆகும். சற்று உயர்வாகச் சிந்தித்தால், பெற்றோரின் சிந்தனையில் தோன்றுவதற்கு முன்பும், பின்னர் தாயின் கருப்பையில் ஒரு கருமுட்டையாக வடிவம் கொள்வதற்கு முன்பும், மரணத்திற்குப் பிறகும் நாம் இயற்கையில் தான் நிலைகொள்கிறோம். இப்படி நோக்கும்போது, நமது தாயும், தந்தையும், எல்லாமுமாக இருப்பது இயற்கையே. அந்த இயற்கை அன்னையின் குழந்தைகளே நாம். அந்தத் தாய்க்கு, குழந்தைகளான நம்மீது அன்பும், கருணையுமே உள்ளது. ஆனால், குழந்தைகளான நாம், இயற்கை அன்னையின் நெஞ்சில் எப்போதும் உதைத்துக் கொண்டே இருக்கிறோம். அன்பே வடிவான அந்த அம்மா இப்போது நோயாளியாக, வலிமை இழந்து காணப்படுகிறார். மனிதகுலத்தைத் தவிர, பிற உயிரினங்கள் யாவும் இயற்கையைப் பாதுகாத்தவாறு தான் வாழ்கின்றன. ஒரு திமிங்கிலத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். வாழ்நாள் முழுவதும் அது கடலின் ஆழத்திலுள்ள ஊட்டச்சத்தை மேலே கொண்டு வந்து அங்குள்ள கடல்பாசி தாவரங்களுக்கு உணவளிக்கிறது. கடலைத் தூய்மையாக்குவதில் கடல்பாசிக்குப் பெரிய பங்கு இருக்கிறது. இறக்கும்போது கூட திமிங்கிலம் இயற்கையைப் பாதுகாக்கிறது. அது எப்படி? அது இறக்கும்போது தனது உடலில் உள்ள மில்லியன் டன் கணக்கிலுள்ள கார்பனைக் கடலின் ஆழத்திற்கு இழுத் துக்கொண்டு செல்லும். ஆனால், நாமோ? இயற்கையை அழிப்பது மட்டுமல்ல; இயற்கைப் பாதுகாப்பிற்கு மிக அவசியமான இதுபோன்ற பிற உயிரினங்களையும் நாம் அழிக்கிறோம். பாற்கடலைக் கடைந்த கதை நமக்குத் தெரியும். வாசுகி கக்கிய நஞ்சை, உலகைக் காப்பதற்காக சிவன் எடுத்து விழுங்கினார். இன்றைய உலகின் நிலையைப் பார்க்கும்போது, இயற்கையை சிவனாகவும், நஞ்சைக் கக்கும் வாசுகியாக மனிதகுலத்தையும் உவமானமாகக் கூறலாம். நாம் இயற்கையிடமிருந்து நமக்குத் தேவையானவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு, நஞ்சை மட்டுமே திருப்பிக் கொடுக்கிறோம். இதுவரை இயற்கை பொறுமையோடு இந்த நஞ்சையெல்லாம் விழுங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது இயற்கையானது, பொறுமையின் எல்லையைக் கடந்துவிட்டதாக அம்மாவுக்குத் தோன்றுகிறது. இயற்கையாகும் சிவன் தாண்டவமாட ஆரம்பித்து விட்டதாகவே தோன்றுகிறது. இன்றைய சமூகத்தில் நான்கு விஷயங்கள் தொற்றுநோயைப் போல் பரவி வருவதைக் காணலாம். 1 நல்லொழுக்கத்தை விட செல்வம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 2 நன்மைகளை விட அழகுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 3 செல்ல வேண்டிய திசை எது என்பதை விட, வேகத்திற்கு அதிக முக்கியத்துவம் கற்பிக்கப்படுகிறது. 4 மனிதர்களை விட இயந்திரங்கள் முதலிடத்தைப் பிடித் துள்ளன.

வாழ்வில், நற்பண்புகளுக்கு உரிய இடத்தை அளிக்காவிடில், நம் வாழ்க்கை கறையான் அரித்த மரம் போல் உலுத்துப்போகும். வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கு இருக்காது. அதனால்தான் ரிஷிகள் அறத்திற்கு மிக முக்கியத்துவம் அளித்தனர். நமக்கும், பிறருக்கும் நன்மை தரும் வகையில் சமூகத்துடன் ஒத்து உறவாடுவதற்குத் தர்ம உணர்வு இன்றியமையாததாகும். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அற உணர்வை பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் அழுதால், உடனே செல் போனை அதன் கையில் கொடுக்கின்றனர். இது தற்காலிகமாக அவர்கள் அழுகையை நிறுத்தும். ஆனால், ஆன்மீக பண்புகளை குழந்தைகளுக்கு புகட்டாவிட்டால் அக்குழந்தைகள் வாழ்நாள் முழுதும் கண்ணீரில் வாடுவர். இப்பண்புகளே, வாழ்க்கையின் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டு வாழும் சக்தியை அவர்களுக்கு அளிக்கிறது.

என் குழந்தைகளின் கண்கள் கருணையால் நனையட்டும். தலைகள் பணிவால் வணங்கட்டும். கைகள் பிறரது. சேவையில் ஈடுபடட்டும். கால்கள் அறநெறிப் பாதையில் செல்லட்டும். காதுகள் துன்பப்படுபவர்களின் துயரைக் கேட் கத் தயாராகட்டும். நாக்கு எப்போதும் கருணை நிறைந்த சொற்களையும், உண்மையையும் பேசட்டும். இப்படியாக, என் குழந்தைகளின் வாழ்வே உலகிற்கு அருளாசியாக மாறட்டும் என்று அம்மா பரமாத்மாவிடம் வேண்டிக்கொள்கிறேன்.