ஒரு கிராம மக்கள் மிகுந்த ஒற்றுமையோடும் அமைதியோடும் வாழ்ந்து வந்தனர். அக்கிராமத்தினர் இவ்விதம் ஒற்றுமையாக வாழ்வதற்கு, அந்தக் கிராமத்தில் சிறந்த உதாரணமாக ஒரு குடும்பம் வாழ்ந்து வந்ததே இதற்குக் காரணமாகும். எந்த வீட்டிலாவது தம்பதியருக்கிடையே சண்டை ஏற்பட்டால், உடனே அவர்களில் ஒருவர், ” அந்த வீட்டிலுள்ள பெண்மணியைப் பார். எவ்வளவு ஒற்றுமையாகத் தனது கணவருடன் வாழ்கிறார்? ஏதாவது சண்டையோ சச்சரவோ அவர்கள் வீட்டில் எப்போதாவது கேட்டதுண்டா? அவர்கள் எவ்வளவு அன்புடன் வாழ்கிறார்கள்? அவரைப் போலப் பொறுமையாக இருக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்வார். இதைக் கேட்டதும் சண்டை நின்று அன்பு நிலவும். இவ்வாறு அந்தக் கிராமம் முழுவதும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வந்தது. அப்படியிருக்க, அந்தத் தம்பதிகளின் 30 – ஆம் திருமணநாள் வந்தது. அதைக் கொண்டாடக் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். மிகவும் சிறப்பாக அந்தநாள் கொண்டாடப் பட்டது. அதைக் கேள்வியுற்ற பத்திரிகை நிருபர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அந்தப் பெண்மணியிடம், ” உங்களைப் பற்றிப் புகழாதவர்கள் யாரும் இந்த கிராமத்தில் இல்லை. கிராமத்தில் உள்ளவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன் உங்கள் கணவர் முன்கோபக்காரர் என்று அறிந்தோம். ஆனால், கல்யாணத்திற்குப் பின் நீங்கள் ஒருமுறை கூட சண்டை போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. அதன் ரகசியம் என்னவென்று சொல்வீர்களா என்று கேட்டார்.

 

 இதைக்கேட்ட மனைவி, இதில் பெரிய இரகசியம் எதுவும் இல்லை. திருமணம் முடிந்த மூன்றாவது நாள் நாங்கள் ஒரு உல்லாசப் பயணம் சென்றோம். எங்களுடன் ஒரு கழுதையையும் கொண்டு சென்றோம். எங்களின் பெட்டி படுக்கைகளையும் உணவுப் பொருட்களையும் அந்தக் கழுதை சுமந்து வந்தது. செல்லும் வழியில் கழுதை கால் இடறி விழுந்தது. என் கணவருக்கு அது சிறிதும் பிடிக்க வில்லை. அவர் ஓடிச் சென்று அந்தக் கழுதையின் காதைப் பிடித்துத் திருகி, இது முதல் எச்சரிக்கை . நீ கவனமாக இருக்க வேண்டும் தெரிந்ததா?” என்றார். கீழே விழுந்த பாரத்தை மீண்டும் கழுதையின் மேல் வைத்து நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். சிறிது தூரம் சென்றதும் வழியிலிருந்த கல் இடறி கழுதை மீண்டும் உருண்டு விழுந்தது. கணவர் கோபத்துடன் அதன் அருகில் சென்று இரு காதையும் பிடித்துத் திருகியவாறு, ” இது இரண்டாவது எச்சரிக்கை நீ கவனமாக இருக்க வேண்டும், தெரிந்ததா?” என்று உரத்த குரலில் அலறினார். கழுதையை மீண்டும் எழுப்பிய நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். நாங்கள் போக வேண்டிய இடத்தை அடைய மூன்று மலைகள் ஏறி இறங்க வேண்டும். இரண்டு மலைகளைப் பெரிய பிரச்னைகள் எதுவுமின்றிக் கடந்து சென்றோம். மூன்றாவது மலையில் பாதி தூரம் ஏறிய போது கழுதை சோர்ந்து விழுந்து விட்டது. என் கணவரால் கோபத்தை அடக்கவே முடியவில்லை. அவர் துப்பாக்கியை எடுத்துக் கழுதையை நோக்கிப் படபடவென்று சுட்டார். கழுதை இறந்து விட்டது. என்னால் சிறிதும் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. ஐயோ, நீங்கள் என்ன செய்து விட்டீர்கள்? அது அறிவில்லாத பிராணி அல்லவா? நீங்கள் செய்தது சரியா? கஷ்டம் என்று என்னை அறியாமல் சொல்லிவிட்டேன். அதைக் கேட்டதும் என் கணவர் என்னை நோக்கி ஓடி வந்தார். என் காதைப் பிடித்துத் திருகியவாறு, இது முதல் எச்சரிக்கை . நீ கவனமாக இருக்க வேண்டும் தெரிந்ததா?” என்றார். கழுதைக்கு ஏற்பட்ட கதி சட்டென்று நினைவுக்கு வந்தது. இதுதான் எங்கள் வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் ” என்று பதிலளித்தார்.

உண்மையில் இந்தப் பொறுமை பயத்தின் காரணமாக ஏற்பட்டதாக இருந்த போதிலும் அதற்கும் ஒரு மகிமை உண்டு. வைரம் மலத்தில் கிடந்தாலும் எடுப்போம். வேண்டாம் என விட்டுவிட மாட்டோம். ஏனெனில் அது விலை மதிப்பான பொருள். இதுபோல பொறுமையின் மகிமையும் விலை மதிக்க முடியாததாகும்.

சொல்லின் தேவதை அக்னி என்று சொல்வார்கள். அக்னியின் இயல்பு வெப்பமும் பிரகாசமும் புகையும் ஆகும். அக்னி சூடும் ஒளியும் தருவதுபோல் நமது ஒவ்வொரு வார்த்தையும் பிறருக்கு உற்சாகத்தையும் அறிவையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறின்றி புகையைப் போல் மனதை அழுக்கடைவதாகச் செய்வதாக இருக்கக் கூடாது.

இன்று நாம் பேசும் வார்த்தைகளைக் கேட்கும்போதே அதன் தேவதை அக்னி என்பது நன்றாகப் புரியும். ஏனெனில் அதிலிருந்து வெளிவருவது தீயும் புகையும் ஆகும். ஆனால் ஞானமும் பிரகாசமும் அதன் அருகில் கூட வரவில்லை என்பதே உண்மை. நமது ஒரு வார்த்தை கேட்பவர் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பிறருக்கு ஆனந்தத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். நாம் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி நம்முடைய ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்க வேண்டும். நம்முடைய வாக்கில் பணிவும் எளிமையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் இன்று நம்முடைய வார்த்தைகளை அலசி ஆராய்ந்து பார்த்தால் கூடப் பணிவைக் காண முடியாது. ” அவனை விட நான் பெரிய ஆளாக வேண்டும் என்ற மனோபாவம்தான் நிறைந்து இருக்கிறது. ஒருவனது பணிவில் தான் சிறப்பு இருக்கிறது என்ற உண்மையை நாம் கவனிப்பது இல்லை. மிகச் சாதாரணமான மனிதனாக இருந்தாலும் பிறர் முன்னால் தன்னைப் பெரியவனாகக் காட்டிக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறான். இதனால் அவர்கள் முன் முட்டாள்கள் ஆகிறோம் என்பதை நாம் அறிவதில்லை.

இராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவருக்கு கர்னலாகப் பதவி உயர்வு கிடைத்தது. புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவரைக் காண ஒருவன் வந்தான். அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவதைக் கண்ட கர்னல் மிகுந்த கர்வத்துடன் போனை எடுத்து,” ஹலோ! ஜனாதிபதி ஒபாமாவா? விசேஷம் ஏதாவது உண்டா? நான் இன்றுதான் பொறுப்பேற்றிருக்கிறேன். நிறையக் கோப்புகளைப் பார்க்க வேண்டும். நான் பின்னர் பேசுகிறேன். மனைவியை விசாரித்ததாகக் கூறுங்கள்.” இப்படி சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு போனைக் கீழே வைத்தார். இவ்வளவு நேரமும் வந்த ஆள் மிகவும் பணிவுடன் அங்கே நின்று கொண்டிருந்தான். கர்னல் வந்தவனைப் பார்த்து, ” உம், உனக்கு என்ன வேண்டும்? என்று கம்பீரமான் குரலில் கேட்டார்.
வந்த மனிதன் மிகவும் பணிவான குரலில், ” மன்னிக்க வேண்டும். நான் தொலைபேசி இணைப்புக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன். நேற்று வைத்த புதிய போன் இது. இதுவரை இணைப்புக் கொடுக்க வில்லை.” என்று சொன்னான். இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார்? இதுபோல், தினமும் பலமுறை நாம் முட்டாள்கள் ஆகிறோம். அதை நாம் அறிவதில்லை; அவ்வளவுதான். தனது பெருமையைப் பிறர் முன் வெளிப்படுத்த முயற்சி செய்பவன் பலர் முன்னால் முட்டாள் ஆகிறான்.