கேள்வி: விக்கிரக ஆராதனையின் (உருவ வழிபாடு) தத்துவம் என்ன?

அம்மா: உண்மையில் இந்துக்கள் விக்கிரகத்தை (கல்லை) வணங்குவதில்லை. எங்கும் நிறைந்திருக்கும் தெய்விக சைதன்யத்தைத்தான் விக்கிரகத்தின் மூலம் வணங்குகின்றனர். தந்தையின் படத்தைக் காணும் மகன் , அதை வரைந்த ஓவியரை நினைப்பதில்லை; தந்தையையே நினைவு கூர்கிறான்.காதலி அளித்த ஒரு பேனாவையோ, கைக்குட்டையையோ காணும்போது காதலன் தனது காதலியை நினைக்கிறானே அன்றி அந்தப் பொருட்களை நினைப்ப தில்லை. அவன் அதற்குப் பதிலாக வேறு எந்தப் பொருட்க ளைக் கொடுப்பதாகக் கூறினாலும் அவற்றைப் பிறருக்குக் கொடுக்க மாட்டான். ஒரு சாதாரண  வாலிபனுக்கு இப்படிப்பட்ட மனோ பாவம் இருக்குமேயானால் இறைவனின் நினைவை மனதில் விழிப் புறச் செய்யும் விக்கிரகம் பக்தனுக்கு எத்தனை விலைமதிப்புள்ளதாக இருக்கும்! விக்கிரகம் பக்தனைப் பொறுத்தவரை வெறும் சிலை அல்ல;சைதன்யம் நிறைந்த தெய்விக உருவமாகும்.

சிலர், ” திருமணம் என்பது வெறும் தாலி கட்டும் நிகழ்ச்சி தானே?” என்று சொல்லக்கூடும். உண்மைதான், வெறும் நூலைத்தான் கழுத்தில் கட்டுகிறார்கள், ஆனால் அந்த நூலுக்கும் அந்த முகூர்த்தத்திற்கும் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறோம்! இல்லற வாழ்வின் அடித்தளத்தை எழுப்பும் முகூர்த்தமாகும். இதேபோல் விக்கிரகத்தின் மதிப்பு வெறும் கல்லின் விலை அல்ல. அது விலைமதிப்பற்றதாகும். பிரபஞ்சத்தின் தலைவனுக்கு நிகரான இடத்தை அதற்கு அளிக்கி றோம். விக்கிரகத்தை வெறும் சிலையாகக் காண்பது அறியாமை யாகும். “இதன் மூலமாக நான் இறைவனையே வணங்குகிறேன்” என்ற சங்கல்பத்துடன் தான் பூஜை செய்கின்றனர்.

எங்கும் நிறைந்த இறை சைதன்யத்தை எந்தவிதமான சின்னத்தின் உதவியும் இன்றி வணங்குவது என்பது சாதாரண மக்களுக்கு சிரமமானதாகும்.பக்தி உணர்வை வளர்க்கவும், மனதை ஒருமுகப்ப டுத்தவும் விக்கிரகம் மிகவும் உதவியாக இருக்கிறது.விக்கிரகத்திற்கு முன்னால் நிற்கும்போது கண்களை மூடிதான் நாம் வணங்குகிறோம். இவ்வாறு மனதை உள்முகமாக்கவும் உள்ளே இருக்கும் சைதன் யத்தை விழிப்படையச் செய்யவும் விக்கிரகம் உதவுகிறது. தங்கத்தை உபயோகித்துத்தான் வளையல்,தோடு,சங்கிலி, மோதிரம் என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.தங்கமே அனைத்து நகைகளுக்கும் ஆதாரம். அதுபோல் அனைத்தின் ஆதாரமாகத் திகழ்பவர் கடவுள்.சிவனாக இருந்தாலும் விஷ்ணுவாக இருந்தாலும் முருகனாக இருந்தாலும் அனைத்திலும் ஒன்றேயான தெய்விக சைதன்யத்தைத் தரிசிக்க வேண்டும். மக்கள் பல கலாசாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தான் இப்படி பலவிதமான தெய்விக உருவங்கள் வடிவமைக்கப்பட்டன. அவரவர்களுக்கு விருப்பமான கடவுள் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

கண்ணாடியில் நம் முகத்தைத் தெளிவாகக் காண வேண்டுமெனில், அதிலுள்ள தூசியையும் பிற அழுக்குகளையும் துடைத்து நீக்க வேண்டும். அதேபோல் நமது மன அழுக்குகளை நீக்கினால் தான்
இறைவனைத் தரிசிக்க முடியும். நமது மனத்தைத் தூய்மைப்ப்டுத்தி ஒருமுகப்படுத்துவதற்கு உதவியாக விக்கிரக வழிபாட்டையும் பிற ஆசாரங்களையும் நம் முன்னோர் ஏற்படுத்தி வைத்தனர். ஸநாதன தர்மத்தில் கடவுளை உள்ளேதான் தேடுகிறோம்; புறத்தில் அல்ல. உள்ளே இறைவனைத் தரிசிக்க முடிந்தால் எங்கும் அவரைக் காண இயலும்.

உண்மையில் இறைவனுக்கு அகமும் புறமும் இல்லை. நமக்கு “நான்”என்ற எண்ணம் இருப்பதால் தான் அகம், புறம் என்று தோன்று கிறது. இப்போது நம் மனம் வெளிமுகமாக இருக்கிறதே அன்றி உள்முகமாக இல்லை. அது பல பொருட்களிலும் அவற்றின் மீதுள்ள பற்றினாலும் பிணைக்கப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட மனதை மீண்டும் நம் கைவசம் கொண்டு வந்து நம்முள்ளே இருக்கும் இறை சக்தியை விழிப்புறச் செய்வதற்காகவே விக்கிரக வழிபாடு ஏற்பட்டுள்ளது.