நாடு முழுவதும் சொற்பொழிவுகளும் பேருரைகளும் நடக்கும் காலக்கட்டம் இது. ஆன்மிகப் பேருரை, கலாசார விரிவுரை, அரசியல் கூட்டம், சமயச் சொற்பொழிவு, நாத்திகச் சொற்பொழிவு- அதிகம் சொல்வானேன்?! ஒவ்வொருவரும் பேச ஏதாவது ஒரு விஷயம் உள்ளது. உலகில் எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் உரையாற்ற அதிகாரம் இருப்பதாகவே அனைவரும் எண்ணுகின்றனர். இதைச் சொல்லும் போது அம்மாவுக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு சிறுவன், ” எங்கள் ஆசிரியர் எவ்வளவு பெரிய மகான் என்று தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னான். அதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது சிறுவன், ” எந்த விஷயத்தைக் கொடுத்தாலும் அதைப் பற்றி அவர் ஐந்து மணி நேரமாவது உரையாற்றுவார் ” என்றான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு சிறுவன், ” இது என்ன பிரமாதம்! உங்கள் ஆசிரியர் ஒரு விஷயத்தைக் கொடுத்தால் அல்லவா அதைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசுவார். எங்கள் அடுத்த வீட்டுக்காரர் இருக்கிறாரே , அவர் எந்த விஷயத்தையும் கொடுக்காமலே பல தினங்கள் பேசிக் கொண்டிருப்பார் ” என்றான். இன்று பலமேடைப் பேச்சுக்களும் இதுபோலத் தான் இருக்கின்றன. உண்மையில் பிரசங்கம் செய்வதில் சிறப்பில்லை; நமது செயல் அதை வெளிப்படுத்துவதில் தான் சிறப்பு உள்ளது. ஆனால் இன்று பெரும்பாலானவை வார்த்தைகளோடு நின்று விடுகின்றன. வாழ்வில் அதை யாரும் செயலில் கொண்டு வருவது இல்லை. இருந்தாலும் நல்ல வார்த்தைக்கும் , நல்ல செயலுக்கும் நிச்சயமாகப் பலன் கிடைக்கும். அவை ஒருநாளும் பொருளற்றவை ஆவதில்லை. இதைச் சொல்லும்போது மகாபாரதத்தின் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

துரோணாச்சாரியார் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த காலம். முதல் பாடம் “பொறுமை” என்பதாகும். ஒரு நாள் குரு சீடர்களை எல்லாம் அழைத்து, அதுவரை கற்பித்த பாடங்களை எல்லாம் ஒப்பிக்குமாறு சொன்னார். ஒவ்வொருவரும் அவரவர் படித்த பாடங்களை ஒப்பித்தனர். தருமரின் முறை வந்தது. ஆனால் அவர் ஒரே ஒரு வரியை மட்டும் சொன்னார். “நீ இவ்வளவு தான் படித்திருக்கிறாயா?” என்று குரு கேட்டார். அதற்கு மிகுந்த தயக்கத்துடன், ” மன்னிக்க வேண்டும். குருவே! நான் முதல் பாடத்தை ஓரளவு படித்தேன். இரண்டாவது பாடத்தை அந்த அளவுகூடப் படிக்க வில்லை” என்று யுதிஷ்டிரர் பதிலளித்தார். இதைக் கேட்ட துரோணரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில், படிப்பு விஷயத்தில் அவர் பிற சீடர்களிடம் வைத்திருந்ததை விட தருமரிடமே அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அப்படியிருக்க மற்றவர்கள் அனைவரும் எல்லா பாடங்களையும் நன்கு படித்து விட்டு ஒப்பித்தபோது தருமர் இரண்டு வரிகளையே படித்திருப்பதாகச் சொல்கிறார். கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாத துரோணர் ஒரு நீண்ட குச்சியை எடுத்து அது ஒடிந்து துண்டுகளாகும் வரை தருமரை அடித்தார். ஆனால் அடிகளைப் பொறுத்துக் கொண்ட தருமர் முகத்தில் புன்னகை மறையவே இல்லை. அதைக் கண்டபோது குருவின் கோபம் மறைந்தது. அவருக்கு வருத்தம் தோன்றியது. அன்போடு அவர், பிள்ளாய் ! நீ ஒரு இளவரசன். நீ நினைத்தால் என்னை சிறையில் அடைக்கலாம். தண்டனை அளிக்கலாம். ஆனால் நீ அப்படி ஒன்றும் செய்யவில்லை. உனக்குச் சிறிதும் கோபம் வரவில்லை. உன்னைப் போல் பொறுமை உள்ளவர்கள் இவ்வுலகில் உண்டோ? ” குழந்தாய். நீ எவ்வளவு உயர்ந்தவன் ” என்று சொன்னார். அப்போது அவர் பார்வையில் யுதிஷ்டிரர் படித்த பாடங்கள் எழுதியிருந்த ஓலைச்சுவடி பட்டது. அதில் முதல் வரி, ” எந்தச் சூழ்நிலையிலும் பொறுமையைக் கைவிடக் கூடாது என்றும், இரண்டாவது வரி, ” எப்போதும் உண்மையே பேசவேண்டும்” என்றும் இருந்தன.

அவரது பார்வை மீண்டும் தருமரின் முகத்தில் பதிந்தபோது ஓலைச்சுவடியில் கண்ட வரிகள் தருமரின் கண்களில் பிரகாசிப்பதாகத் தோன்றியது. சீடனின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்ட துரோணரின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர், ” தருமனே, நான் உங்களுக்குக் கற்பிக்கும்போது வெறும் வார்த்தைகளை மட்டும் உச்சரித்து வந்தேன். அனைவரும் கிளிப்பிள்ளைகளைப் போலத் திருப்பிச்சொன்னார்கள். உண்மையில் நீ மட்டுமே அதைச் சரியாகப் படித்திருக்கிறாய். நீ எவ்வளவு உயர்ந்தவன்! இவ்வளவு நாள் கற்பித்தபோதும் இதில் ஒரு வரியைக் கூட என்னால் படிக்க முடியவில்லை. கோபத்தை என்னால் அடக்க முடியவில்லை. பொறுமையைக் கடைபிடிக்க முடியவில்லை” என்றார். பெருகும் கண்ணீருடன் குரு சொன்ன வார்த்தைகளைக் கேட்ட தருமர், ” மன்னிக்கவேண்டும் குருவே! எனக்குத் தங்கள் மீது சிறிது கோபம் தோன்றியது என்றார். அதைக் கேட்டதும் சீடன் இரண்டாவது பாடத்தையும் படித்துவிட்டார் என்பதை அவர் புரிந்து கொண்டார். ஏனெனில் சாதாரணமாக ஒருவர் தன்னைப் புகழ்வதைக் கேட்கும்போது, அதில் மயங்காதவர் அபூர்வம். மனதில் கோபம் இருந்தாலும் வெளியில் சொல்லத் தயங்குவர். ஆனால் தருமரோ மனதில் இருந்ததை வெளியிடச் சிறிதும் தயங்கவில்லை.. அதன் பொருள் தருமர் இரண்டாவது பாடத்தையும் படித்துவிட்டார் என்பதாகும். ஒருவன் தான் கற்ற பாடங்களை தனது வாழ்வில் செயல்படுத்தும் போதுதான் அவனது கல்வி முழுமை பெறுகிறது. அவ்விதம் செயல் படுத்த முயல்பவனே உண்மையான சீடன்.

நம்முடைய வாழ்விலும் அவசியமானது பொறுமையாகும். ஏனெனில் வாழ்க்கையின் அஸ்திவாரம் பொறுமையாகும். ஒரு செடியிலுள்ள மொட்டைவிரல்களால் மலரச் செய்தால், அந்தப் பூவின் மணத்தையும் அழகையும் அறிய முடியாது. இயல்பாக மலர அனுமதித்தால் மட்டுமே அதை அறிய முடியும். அதுபோல வாழ்வின் அழகை அனுபவிக்க வேண்டுமெனில் பொறுமை தேவை. வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாகச் செய்ய முயலுபவர்களுக்குத் தேவையான முதல் குணம் பொறுமையாகும்.