அன்பும் ஒற்றுமையும்

வண்ணங்களின் இணக்கத்தோடும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போலவே இன்று இங்கே இந்த பூமியில் அதே போன்ற ஒரு வானவில்லைக் காண்பது போல அம்மாவுக்குத் தோன்றுகிறது. அம்மாவின் அன்புக்குழந்தைகள் அன்போடும் ஒற்றுமையோடும் இங்கே ஒன்றாகக் கூடியிருப்பதே அந்தப் பூரண அழகு மிளிரும் வானவில். இதே அன்பும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திட இறைவனின் அருள் என் குழந்தைகளுக்கு கிடைத்திடட்டும்.

படைத்தலைவர்கள்

இன்று நம் நாட்டுக்கும் உலகுக்கும் தேவையாயிருப்பது, அன்பின் சக்தியை தம்முள் விழிப்படையச் செய்து அச்சமற்று தீரர்களாக விளங்கக்கூடிய படைத்தலைவர்களே. படைத்தலைவர்கள் என்றால் அடுத்தவரோடு போரிட்டு வென்று அவர்களது சொத்துக்களையும் நாட்டையும் கவர்ந்து கொள்ளும் வீரர்கள் அல்ல. சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தரம்மிக்க தலைமையைத் தரக்கூடிய படைத்தலைவர்களைத் தான் உலகம் தாகத்தோடு எதிர்பார்த்து நிற்கிறது.

வெறுப்பும் கசப்பும் எதிர்ப்பும் உள்ளடங்கிய கருமேகங்கள் ஆகாயத்தை மூடியுள்ளன. மக்களின் இதயங்களிலோ கொடுமைகள் அனுபவித்த இளம் வயது, இழந்துவிட்ட இளமை, மிதிக்கப்பட்ட பெண்மை, கவனிப்பார் அற்ற முதுமை இவற்றின் சுமைகள் சேர்ந்து அழுத்துகின்றன. இந்த இருளடைந்த கால கட்டத்தில் உலகம் விவேகத்தின் ஒளியையும் மன்னிக்கும் குணமென்னும் குளிர் சாரலையும், உடல்-மனப்புண்களை ஆற்றும் தயையின் ­அன்பு வருடலையும் எதிர் நோக்கி ஏங்கிக் காத்திருக்கிறது.

இன்று அம்மாவின் குழந்தைகளிடையே இங்கு காணும் அன்பு, ஒற்றுமை மற்றும் உத்வேகம் உலகில் சூழ்ந்திருக்கும் அந்த இருளைப் போக்க உதவட்டும்; மற்றவர்களுக்கு ஒர் முன்னுதாரணமாக அமைந்து ஊக்கம் தருமாறும் இவை அமையட்டும் என்று அம்மா பிரார்த்திக்கிறேன்.

இருமை என்பது உலகத்தின் இயல்பு

நமது இதயத்துக்கு வேதனை தரக்கூடிய விஷயங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும்; அதே சமயம் அன்பின் ஒளியும், இரக்கமும் நம்முள் இருக்கத்தான் இருக்கிறது. ஒரு மகாத்மா முன்பு சொன்னதுண்டு “துக்கம் என்பது இருக்கிறது; அதே சமயம் துக்க நிவாரணமும் இருக்கத்தான் செய்கிறது”. இந்தச் செய்தியின் பிற்பகுதிதான் சாரமான உண்மை; அதாவது துக்கம் தற்காலிகமானது; ஆனால் எந்த சாந்தி துக்கத்தையெல்லாம் நீக்குகிறதோ அது நிரந்தரமானது. இந்த அமைதிதான் உலகத்தின் அடி நாதம். இருமை என்பது உலகத்தின் இயல்பு. வெளிச்சம்-இருள், அன்பு-வெறுப்பு, சண்டை-சமாதானம் என்று எதிலும் இருமை உண்டு. இரண்டையுமே வெளிக் கொணரும் சக்தி மனிதர்களுக்கு உண்டு. இதில் முக்கிய கேள்வி என்ன என்றால் “நாம் இந்த இருமைகளில் எந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெளிக்கொணருகிறோம்?” என்பது தான்.

உலகில் இரண்டு வகையான இயல்பு கொண்ட மக்கள் இருக்கிறார்கள். முதல் வகையினர், அடுத்தவர்களை அழுத்தி மிதித்துக் கொண்டு மேலேறி வருபவர்கள். கம்ஸன், துரியோதனன், இராவணன் போன்றவர்கள் இந்த வகையினர். இரண்டாவது வகையினரோ அடுத்தவர்களை உயர்த்துவதன் மூலம் தாம் மேலான உயரங்களை எட்டுபவர்கள். ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணரும் இதற்கு உதாரணங்களாய்த் திகழ்கிறார்கள். அற்பமான குப்பையிலிருந்து மகாத்மாக்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள் அவர்கள். தனது சக்தியையும், வீரத்தையும் தானே அறியாத அனுமான் தன்னை முற்றிலுமாக ஸ்ரீராமரது சேவைக்கு அர்ப்பித்துக் கொண்டதன் மூலம் ஒரு மகாபுருஷராக உருப்பெற்றார். ஒரு அற்ப அணிலையும் கூட பொதுநலச் சேவைக்காகத் தன்னை அற்பணிக்க வைக்க ஸ்ரீராமர் உத்வேகமளித்தார். நம்முள்ளும் அதேபோல சக்தியும், வீரியமும் வெளிப்படாத நிலையில் உறங்கிக் கிடக்கிறது. அதை விழிப்படையச் செய்ய நமக்குத் தேவை திறந்த மனது ஒன்று மட்டுமே.

தொழில்நுட்ப சாதனங்கள்

பொதுவாக ஒரு தேசத்தின் வளர்ச்சியை அளவிட நாம் GDP (Gross domestic product) எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்கிற அளவுக் குறியீட்டை உபயோக்கிறோம், ஆனால் இப்போது உலகம், GDP மூலம் பூரணமான ஒரு கணிப்பு கிட்டுவதில்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டது. பொருளாதார வளர்ச்சி என்பது முன்னேற்றத்தின் ஒரு அம்சம் மட்டுமே. மக்கள் அமைதியையும் திருப்தியையும் அனுபவிக்கவில்லை என்றால் எங்கோ ஏதோ சரியில்லை என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். சாந்தியும், திருப்தியும் அனுபவிக்க பணம் மட்டுமே போதாது. நமக்கு வேண்டியது ஆன்மிகப் பண்பாடும் உலகளாவிய தார்மீக ஒழுக்க நெறிகளும். அவை இல்லையென்றால் நம்முடைய முயற்சிகளெல்லாம் பிணத்துக்கு அலங்காரம் செய்வதைப் போன்றே இருக்கும்.

இன்றைய உலகில் புதிய புதிய கைபேசிகளும், கணினிகளும் மற்ற பல மின்னணு சாதனங்களும் அன்றாடம் விதம் விதமாய் வந்து கொண்டே இருக்கின்றன. கையில் ஒரு தொலைபேசியை வைத்துக் கொண்டே இன்று நம்மால் செய்யக்கூடிய காரியங்கள் பிரமிக்க வைக்கின்றன. இந்த அவசரயுகத்தில் இந்த நவீன சாதனங்களுக்கு உரிய உபயோகம் இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்ப சாதனங்கள் எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; நாம் அவற்றிற்கு அடிமையாகி விடக்கூடாது. துரதிருஷ்ட வசமாக, இன்று நம்மில் பெரும்பாலாரும் கைபேசிக்கும், கணினிக்கும், இணையத்துக்கும் அடிமையாகி இருப்பது தான் உண்மை நிலை. இன்று பல நாடுகளிலும் இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டவர்களுக்கு சிகிச்சை செய்து அவர்களை சாதாரண நிலைக்கு மீட்டுக் கொண்டு வரும் மனநல மருத்துவம் பரவலாகிக் கொண்டிருக்கிறது.

தகவல் தொடர்பு வளரும் அதே வேகத்தில் மன முதிர்ச்சியும் வளருவது அவசியம். இல்லையெனில், நன்மையைவிடத் தீமையே அதிகமாகிறது. இந்த உண்மையைக் கண்கூடாக நிரூபிப்பவர்கள் இன்று நம்மிடையே பலரும் காணக் கிடைக்கிறார்கள். இந்த சாதனங்கள் மூலம் ஒரளவு மகிழ்ச்சி கிட்டக் கூடும் என்றாலும் அந்த மகிழ்ச்சிக்குக் கொடுக்கும் விலை மிக அதிகமே. வெளியுலகத்திலிருந்து உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும் என்பது சாத்தியமில்லை என்பதே உண்மை.

இன்று உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. ஆனாலும் அதில் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் மேம்போக்கானதே. மனிதர்களுக்கிடேயே உள்ள இடைவெளியை இவை குறைத்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் இன்று மனிதர்களின் இதயங்களுக்கிடையே உள்ள இடைவெளி மிகவும் அதிகரித்து விட்டிருக்கிறது. எத்தனையோ விதங்களில் நேரத்தை சேமிக்க இன்று முடிகிறதென்றாலும், முன்காலம் போல ஒய்வெடுத்து வாழ்க்கையை அனுபவிக்க இன்று நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு எல்லாவிதமான விளையாட்டுப் பொருள்களும் இன்று உண்டு; ஆனால் விளையாடத்தான் நேரமில்லை! மன இறுக்கத்திற்கு எத்தனையோ நிவாரண மருந்துகள் இன்று உண்டு; ஆனால் இன்று உலகில் மன இறுக்கமும், மனத்தளர்ச்சியும் பெரும் நோய்களாகப் பரவி வருகின்றன.

பெருமைமிகு கலாசாரப் பாரம்பரியத்தின் வழித்தோன்றல்கள் நாம். ஆனால் காலப்போக்கில் நாம் இன்று அந்த மேம்பட்ட ஒழுக்க நெறிகள் அழுகிப் போய்க் கொண்டிருப்பதைக் காண்கிறோம். நாம் நமது பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமைக் கொள்வோம்; அதே சமயம் அவற்றை நாம் நம் வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் பாடுபடுவது அவசியம். நமது செயல்பாடுகளில் நமது பாரம்பரியத்தின் உயர்நெறிகள் வெளிப்படவில்லை என்றால், அது பாட்டரி தீர்ந்து போன செல்போனைக் கையில் வைத்திருப்பது போலத்தான். அடுத்தவர்களிடம் காட்டிப் பெருமை பீற்றிக் கொள்ளத்தான் முடியுமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை. நன்னெறிகளே நமது அடித்தளம். நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒர் நல்ல அடித்தளம் அவசியம். இல்லையென்றால், தானே ஆட்டம் காணும் ஒர் நடன மேடையைப் போல நமது வாழ்க்கையே நிலையற்ற குலுக்கல் ஆகிவிடும். நம்முள்ளில் நாமே திடமான ஓர் மேடையை அமைத்தல் அவசியம். ஒழுக்க நெறிகளில் வேரூன்றியிருப்பதே அந்த மேடை.

பறவைகள் போல பறக்கவும் மீன் போல நீந்தவும் நாம் கற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் ஒரு மனிதனைப் போல் நடக்கவும் வாழவும் நாம் மறந்துவிட்டோம். இன்று ரூபாயின் மதிப்பு வீழ்ந்து விட்டது. சமுதாய ஒழுக்க நெறிகளும் வீழ்ந்து விட்டன, இயற்கையில் உற்பத்தியாகும் பொருள்களின் தரமும் வீழ்ந்து விட்டது. கல்வியின் தரம் தாழ்ந்து கொண்டேருக்கிறது. நாலாபுறமும் கொழுந்து விட்டெரியும் தீ நம்மைச் சூழ்ந்துள்ளது போலத் தோன்றுகிறது.

நமது சமுதாயம் அடுத்தவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதிலேயே முனைப்பாய் இருக்கிறது. தனது தவறுகளை கண்டுகொண்டு தன்னைத்தானே திருத்திக் கொள்ள நாட்டமில்லை. அடுத்தவர்களைக் குற்றம் காணுவதில் நாம் நீதிபதிகளாக இருக்கிறோம்; நமது குற்றம் குறைகளைப் பொறுத்தவரை ஒரு திறமையான வக்கீலைப் போல நாம் நமது தவறுகளை மறுத்து வாதிக்கிறோம்.

அசுரர்கள் என்பவர்கள் உண்மையில் தமது விவேக புத்தியை இழந்து கீழே விழுந்து விட்ட தேவர்கள் தாம். அடிப்படையில் தெய்வீகத்தின் அம்சமான மனிதனோ இன்று அசுரனைப் போலவே நடந்து கொள்கிறான். பல புராண நிகழ்வுகளில் மட்டுமின்றி இன்று நடைமுறையில் அசுரர்களே மனிதர்களாய்ப் பிறப்பது கண்கூடாகக் காணமுடிகிறது. பெண்களைத் தாயாகவும், தெய்வமாகவும் மதித்துப் போற்றுகின்ற, மனம் திறந்து பேசிப் பரிமாறிக்கொள்ளும் அன்புத் தோழிகளாய்ப் போற்றுகின்ற நமது அழிவற்ற பாரம்பரியப் பெருமை மீது சேற்றை வாரி இறைக்கும் விதத்தில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்வு கூட இல்லாமல் போவதில்லை.

– – (அமிர்தவர்ஷம் 60) – 2013