விழாவின் முக்கிய பகுதியாக அமிர்தானந்தமயி மடம் இப்பிறந்தநாளை ஒட்டித் தொடங்குகின்ற மாபெரும் தேச நலப் பணியான “101 கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம்” பற்றிய விவரங்கள் அறிவிக்கப் பட்டன. ‘அமிர்தா சுய சார்புக் கிராமங்கள்’ Amrita Self Relient Villages – Amrita seRVe என்ற பெயரில் இயங்கப் போகும் இந்த திட்டத்தின் கீழ், அனைத்திந்திய அளவில் 101 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்கள் எல்லா விதங்களிலும் சுயச் சார்புடன் செயல்படும் விதத்தில் வேண்டிய எல்லா கட்டமைப்பு வசதிகளும் அமிர்தானந்தமயி மடத்தினால் செய்துகொடுக்கப்படும். கிராமப்புற வளர்ச்சியில் மற்ற எல்லா கிராமங்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழும் விதத்தில் வேண்டிய வசதி வாய்ப்புகள் இந்த 101 கிராமங்களில் உண்டாக்கித் தரப்படும்.

இந்தத் திட்டத்தைப் பற்றி அம்மாவைக் கேட்டபோது அம்மா கூறியதாவது: “இந்தியாவின் அடித்தளமே கிராமங்கள் தான்; தேசத்தின் உயிர் நாடி கிராமங்களிலிருந்தே வருகிறது. அவற்றை நன்கு பராமரிப்பது நமது சமுதாயத்தின் பொறுப்பாகும்; உண்மையில் நகரங்களில் வசிப்பவர்களை வாழவைத்துக் கொண்டிருப்பது கிராமங்கள்தான்; தானியங்களும் காய்கறிகளும் பயிர் செய்து நமக்களித்து நம் உயிர்வாழ்வைப் பேணும் கிராமங்களை நாம் உண்மையில் ஒதுக்கி ஓரம்கட்டிக் கொண்டிருக்கிறோம். அதை விடுத்து, முழு மனதோடும் இதயத்தோடும் கிராமங்களைப் பாதுகாத்து அவற்றிற்கு சேவை செய்யும் நேரம் வந்துவிட்டது”
ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டை மனதிற் கொண்டு செயல்படும் இத்திட்டம், கீழ்க்கண்ட 9 விஷயங்களில் குறிப்பாக செயலாற்றும்:

1. கட்டமைப்பு மற்றும் வசதிகள்
தத்தெடுத்த கிராமங்களில் ஒவ்வொருவருக்கும் வீடு, பள்ளிக்கூடக் கட்டிடங்கள், தெருவிளக்குகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் சரியான கழிவுநீர் வடிகால் வசதி செய்து கொடுத்தல் அடங்கும்.
2. ஆரோக்கியம், மருத்துவ சேவை
ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை மருத்துவ வசதிகள், அவற்றில் பணி செய்ய, பயிற்சி பெற்ற மருத்துவர்/ பணியாளர்கள்.

3. சக்தி
சுத்தமான, இயற்கை சக்திகளைச் சார்ந்த மின் சக்தி உற்பத்தி மற்றும் உபயோகம் என்பதை அடிப்படையாக வைத்து, சூரிய ஒளி மூலம் தெருவிளக்குகளுக்கு மின் சக்தி வழங்கப்படும். நானோ தொழில்நுட்பத்தில் சக்தி சேமிப்போடு கூடிய குறைந்த செலவு சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி முறை (அமிர்தாவின் ஆராய்ச்சி நிருவனங்களின் ஒரு புதிய கண்டுபிடிப்பு) இங்கே பயன்முறையில் இந்த கிராமங்களுக்குக் கொண்டுவரப்படும்.

4. வாழ்வாதாரத்துக்கு வழிசெய்தல், கைத் தொழில் திறங்களை வளர்த்தல்
இந்த 101 கிராமங்களிலும் கைத்தொழில் பயிற்சி நிருவனங்கள் அமைத்தல், பெண்களின் சுய உதவிக் குழுக்களை (முன்பே உள்ள ‘அமிர்த ஸ்ரீ’ உதவி திட்டதின் கீழ்) அமைத்து தொழில் செய்ய மூலதன வசதி செய்து கொடுத்தல், ஆதரவற்ற பெண்களுக்கு (முன்பே செயலில் உள்ள ‘’அமிர்த நிதி’ பென்ஷன் திட்டத்தின் கீழ்) பென்ஷன் வசதி செய்துகொடுத்தல் முதலியன.

5. இயற்கைப் பேரழிவிலிருந்து தற்காப்பு
சுனாமி, பூகம்பம், புயல் தாக்குதல் போன்ற பல்வேறு இயற்கைச்சீற்றங்களில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு துயர் துடைப்புப் பணிகளில் கடந்த காலத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பழுத்த அனுபவம் பெற்றுள்ள மடம், தத்தெடுக்கும் இந்த 101 கிராமங்களிலும் வருங்காலங்களில் இயற்கைச் சீற்றப் பாதிப்பு எத்தனை தூரம் நிகழ சாத்தியம் என்பதை ஆராய்ந்து கணக்கில் கொண்டு அதற்காக இயன்ற அளவு பாதுகாப்பு கட்டமைப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கும்.

6. பள்ளிக் கல்வி, முதியோர் கல்வி
ஏற்கனவே அமிர்தாவின் நலப்பணிகளின் கீழ் பல்லாயிரக்கணக்கான வசதிகுறைந்த மாணவ மாணவிகளுக்குக் கொடுக்கப்படும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) இந்த 101 கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கும் முதியோர் கல்வி பயில்பவர்களுக்கும் விஸ்தரிக்கும்.
இது தவிர அமிர்தா ஆராய்சி நிருவனங்களின் புதிய கண்டுபிடிப்பான கைக்கணினிப் பலகை மூலம் ஆரம்பக் கல்வி தரும் தொழில் நுட்பம் இந்த கிராமங்களில் பயன்பாட்டில் கொண்டுவரப்படும்.

7. சுற்று சூழல் பாதுகாப்பு/ காடு வளர்ப்பு
ஏற்கனவே அமிர்தா பெருமளவில் நடத்திவரும் மரவளர்ப்புப் பணிகளின் கீழ் இந்த கிராமங்களிலும் காடுவளர்ப்புப் பணிகள் முடுக்கிவிடப்படும்.

8. ஆத்ம சக்தியை மேம்படுத்துதல்
அமிர்தானந்தமயி ஆசிரமத்தின் மூலம் ஏற்கனவே பரவலாகவும் இலவசமாகவும் கற்றுத்தரப் படுகின்ற யோகா முறையான I AM TECHNIQUE (Integreted Amrita Meditation) – ஒருங்கிணைந்த யோக – தியான முறை, இக்கிராம மக்களுக்கும் கற்றுத் தரப்படும். தவிர, போதைப்பொருட்கள், குடிப்பழக்கம், புகையிலை உபயோகம் இவற்றிற்கெதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பெறும்.

9.தகவல் தொடர்பு, கண்காணிப்பு
திட்டமிட்ட பணிகள் செவ்வனே நடைபெறுவதை உறுதிசெய்ய தகவல் தொடர்பும், கண்காணிப்பும் அத்தியாவசியம். ஆகையால் இதற்கு வேண்டி இந்த எல்லா கிராமங்களிலும் அடிப்படியான இணையத் தொடர்பு தரப்பட்டு, அமிர்தாவின் e-Learning உருவாக்கியுள்ள A-VIEW எனும் தொலைக்கல்வித் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒலி-ஒளி வழி தடையற்ற கருத்துப் பரிமாற்றமும், கண்காணிப்பும் நிகழும்.
மேற்கண்ட பல்வேறு அங்கங்களும் விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களால் தனித்தனியாகத் முறைப்படித் தொடங்கிவைக்கப்பட்டன.