செப்டம்பர் 26-ஆம் நாள் நிகழ்ச்சிகளில் அடுத்து முக்கியமாக, அம்மாவின் பல்கலைக் கழகத்தோடு இணைந்தும், தனியாகவும் செயல் பட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் பல்வேறு ஆராய்ச்சி மையங்களிலிருந்து சாதாரண மக்களின் நலம் கருதி உருவாக்கப்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
அவற்றில் முக்கியமான சில பின்வருமாறு:

1)மீநுண் (நானோ) தொழில்நுட்பத்தில் இயங்கும் மின் சேமிப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம்:
தற்போது உபயோகத்தில் உள்ள சூரிய ஒளி மின் உற்பத்திக் கலங்களில் உள்ள ஒரு பெரும் குறைபாடு, மின் உற்பத்தியை சேமித்து வைக்கும் வழிவகையில்லாததாகும். சூரிய வெளிச்சம் உள்ளபோது மட்டுமே மின் உற்பத்தி செய்ய இயலும்.

கொச்சியில் உள்ள அமிர்தா மீநுண் விஞ்ஞான, மூலக்கூறு மருத்துவ ஆராய்ச்சி மையம், அமிர்தபுரியிலுள்ள அமிர்தா பொறியியல் கல்லூரியோடு இணைந்து, நானோ தொழில்நுட்பத்தைக்கொண்டு மேற்கூறிய குறைபாட்டுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது.

மூன்று அங்கங்களையுடையது இந்தக் கண்டுபிடிப்பு: மீநுண் பொருட்களாலான சூரிய ஒளி மின் உற்பத்திக் கலம், மீநுண் மின்தேக்கி மற்றும் இவையிரண்டையும் ஒருங்கிணைக்கும் மின்னியல் சுற்றமைப்பு ஆகியவையாகும். குறைந்த செலவில் பெருமளவில் உற்பத்தி செய்யக்கூடிய தொழில்நுட்பத்திற்கு அடிகோலும் விதமாக அமைந்த மாதிரிக் கலம் தற்போது காட்சிக்கு வைக்கப் பட்டது. கைபேசி, மடிக் கணினி போன்றவற்றின் மின்கலங்களுக்கு மின்சக்தி ஏற்றுவது, இரவில் தெருவிளக்குகளுக்கு ஒளி தருவது போன்றவற்றிற்கு இந்த சூரியஒளி மின்கலம் பெருமளவில் பயன்படும்.

2) திருடனைப் பிடிக்க உதவும் கைபேசிப் பயன்பாட்டு மென்பொருள்:
அமிர்தாவின் மின்வலைக் கல்வி மையம் (E-learning) கண்டுபிடித்துள்ளது இந்த கைபேசிக்கான பயன்பாட்டைக் (MOBILE APP) கொண்டு, (திருட்டு போன்ற) சந்தேகத்திற்கிடமான ஏதோ காரியங்கள் நடக்கும் இடத்தில் இருக்க நேர்ந்த ஒருவர் தமது கைபேசியைக் கொண்டு போலீஸ்/ நண்பர்கள்/ உறவினர்களுக்கு (3 தொடர்பு எண்களுக்கு) தாமிருக்கும் இடத்திலிருந்து உடனடியாக புகைப்படமோ, வீடியோவோ, ஒலிச்செய்தியாகவோ குறுஞ்செய்தியாகவோ நடப்பைப் பதிவு செய்து அனுப்பிவைக்க இயலும். செய்தியைப் பெறுபவர், அந்த ஆபத்தைக் குறித்தும் சம்பவம் நடக்கும் சரியான இடத்தையும் உடனே அறிந்துகொள்ள முடியும்.

3) தனிமனிதப் பாதுகாப்புக்கு உதவும் கருவி:
அமிர்தா இணையப் பாதுகாப்பு மையம் (Amrita Centre for cyber security) வடிவமைத்துள்ள இக்கருவி குறிப்பாகப் பெண்களுக்கு .பெரிதும் உபயோகமாகும். அளவில் சிறிதான, உடம்பில் மறைவாய் அணிந்து கொள்ளக்கூடிய இக்கருவியிலிருந்து ஒரு பொத்தானை ஒரு ஆபத்துக் காலத்தில் அழுத்தினால், அதிலிருந்து அவசரச் செய்தி காவல் நிலையத்துக்கும், உறவினர்க்கும் SMS ஆகவோ, குரல்/ ஒலிச் செய்தியாகவோ உடனே போய்ச்சேரும். பாதிக்கப் பட்டவர் உள்ள இடம் பற்றிய தகவலும் போகும். இதை அணிபவருக்கு உதவியாக இக்கருவியில், மிக அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை பற்றிய தகவல்களும் தானாகவே காணக் கிடைக்கும்.

4) கைக் கணிப் பலகை மூலம் ஆரம்பக் கல்வி
அமிர்தாவின் மேம்பட்ட தொழில்வழிக் கல்வி முறை மையம் (Amrita CREATE) இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஆரம்பப் பள்ளியளவில், குழந்தைகளுக்கு கைக்கணிப் பலகை (Tablet) மூலம் காட்சி-ஒலியோடு சேர்ந்து ஆர்வமாய்ப் பாடம் கற்க உதவும் வகையில் இந்தக் கல்வி மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உபயோகிக்க இணையத் தொடர்பு தேவையில்லை. தொலைதூர, மலைவாழ் குழந்தைகளுக்கும் இக் கல்வி முறை பயன்படும். குறிப்பிட்ட சில மாதிரிப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதைப் பயிற்றுவித்ததில் நல்ல பயன்பாடும், உற்சாகத்தோடு கூடிய ஈடுபாடும் காணக்கிடைத்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் தற்போது இதற்கான பாடங்கள் உருவாகி வருகின்றன.

5) தனிமனித உடல்நலத் தகவல் கையடக்க பதிவேடு :
புதிதாய் ஓர் மருத்துவ மனையில் போய் ஒரு நோயாளி சிகிச்சை செய்துகொள்ள நேரும்போது, அவரது முந்தைய ஆரோக்கிய நிலை, கடந்த காலத்தில் அவருக்கு உடலிலிருந்த பிரச்சனைகள், அதற்காக அவருக்குத் தரப்பட்ட சிகிச்சை விவரங்கள், மருந்து விவரங்கள், மருந்து ஒவ்வாமை போன்ற தகவல்கள், முன்பு எடுக்கப்பட்ட கதிரியக்கப் படங்கள் போன்ற எல்லா விவரங்களும் அந்த நோயாளியின் கையிலேயே ஒரு மின் தகவல் பெட்டகமாக இருக்குமானால், உடனடியாக அத்தகவல்களைக் ஒரு கணினியின் மூலம் கண்டு நோக்கி, பிழையின்றித் தக்க சிகிச்சை அளிக்க மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா? இத்தகைய மிகப் பயனுள்ள ஒரு புதிய கண்டுபிடிப்பைத்தான் அமிர்தா தொழில்நுட்பங்கள் இயக்கம் (Amrita Technologies) இப்போது அறிமுகம் செய்யதுள்ளது.

நோயாளி கையோடு கொண்டுசெல்லகூடிய ஒரு நிரல் திரட்டி (Pen drive/ memory stick)யில் அடங்கியுள்ள ஒரு எளிய மென்பொருளின் உதவி கொண்டு நோயாளிக்கு சிகிச்சை தந்த மருத்துவமனைகளிலிருந்து அவ்வப்போது இந்தத் தகவல்களை அதில் பதிவு செய்து வைத்துக் கொள்ளவேண்டும்; அவ்வளவே.

6) ‘அமிர்த ஸ்பந்தனம்’ – இதய நோயாளிகளின் ECG ஐத் தொடர்ந்து கண்காணிக்கும் கம்பியில்லா அணி கருவி:
கழுத்திலோ, இடுப்பிலோ அணிந்துகொள்ளக் கூடிய இக்கருவி, மருத்துவ மனையில் போய் ECG எடுக்கத் தேவையில்லாது, ஒரு இதய நோயாளியின் இதயத்துடிப்புத் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, தொலைவிலுள்ள மருத்துவருக்கு உடனுக்குடன் அவரது கைபேசிக்குத் தகவல் அனுப்பக்கூடிய திறன் வாய்ந்ததாகும்.

அமிர்தபுரியிலுள்ள அமிர்தா கம்பியில்லா தகவல் தொடர்பு பயன்பாட்டு நிறுவனம் (Amrita Wireless Network Applications) , கொச்சியிலுள்ள அமிர்தா AIMS மருத்துவமனையைச் சார்ந்த இதய மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் இப்பயன் மிக்க உயர் தொழில் நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது.

7) தொலைத் தொடர்பில் தொழில் கற்க ஓர் இணைய வலை வாயில் (Online Portal) :
‘எனது குழுமம்’ (My Sangam) என்ற பெயரில் அமிர்தாவின் அம்மாச்சி ஆய்வுமையம் உருவாகியுள்ள இந்த வலை வாயில் மூலம், தொலைதூரக் கிராமங்களில் உள்ள எளியவர்களுக்கும் ஒலி-ஒளிப் படிப்பின் வாயிலாக கைத்தொழில்கள் கற்கவும், கைத்தொழில் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரவும், கைத்தொழில் உற்பத்திப் பொருள்களுக்கு ஒரு சந்தைத் தொடர்பை ஏற்படுத்தித் தரவும், வேலைவாய்ப்புக்கான தகவல் பரிமாற்றத்துக்கு வழிகோலவும் முடியும்.

இப்போது, அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ள ஒளியிழைத் தொடர்பின் மூலம் ஏராளமான கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணையத் தொடர்பு கிடைத்துள்ளதால், இத்தகைய தொலைதூரக் கல்விமுறை உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இன்று சாத்தியம் ஆகிவிட்டது.

8) இதர கண்டுபிடிப்புகள்:
மீநுண் (நானோ) தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘பாலிமர் வேஃபர்’ உதவியோடு மூளைக் கட்டிக்கு சிகிச்சைத் தீர்வு, மீநுண் விஞ்ஞான, மூலக்கூறு மருத்துவத்தின் வாயிலாக ‘மருந்துக்குக் கட்டுப்படாத’ ரத்தப்புற்று நோய்க்குத் தீர்வு, மாரடைப்பு வந்து சிகிச்சை பெற்றவர்களுக்கு மீண்டும் அடைப்பு வராமல் இருக்க ஒரு நுண்சிகிச்சை முறை, சக்கரநாற்காலியை உபயோகித்தே தீரவேண்டிய பாதிப்புள்ளவர்களுக்கு, அவர்களது கை அசைவைக் கண்காணித்தே தானாய் இயங்கி திசை திரும்பும் சக்கர நாற்காலி – முதலிய கண்டுபிடிப்புகளும் விழாவின் முதல் நாள் (26 செப்டம்பர்) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.