செப்டம்பர் 25 – 26 கருத்தரங்கம் – ‘நமது கிராமங்கள், நமது உலகம் – நாம் எதை வழங்கப் போகிறோம்?

முன்னாள் ஜனாதிபதியும் ஏவுகணைத் தொழில்நுட்ப விஞ்ஞானியுமாகிய டாக்டர் ஏ .பி. ஜே அப்துல் கலாம் அவர்கள் துவைக்கிவைத்த இக்கருத்தரங்கத்தில் கிராமங்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்திலும் உலகின் நலனிலும் பெரிதும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கல்வியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்துகொண்டு மிக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டனர்.
அமிர்தபுரியின் அமிர்த விஸ்வவித்யாபீடத்துப் பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய சில முக்கிய பிரமுகர்கள் பின்வருமாறு:
டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் (இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை), டாக்டர் லேலண்ட் ஹார்ட்வெல் (நோபெல் பரிசுபெற்ற விஞ்ஞானி), டாக்டர் சுரேஷ் சுப்பிரமணி (செயல் குழுத் துணைவேந்தர்,கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்), திரு ரவிகுமார், பொது மேலாளர், தேசிய சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்), ஜி.வாசுதேவ் (தலைவர், விவேகானந்தா கேந்திரம்), ஸ்ரீ சி ஆர் .கே. நாயர் (இணைச் செயலர், கிராமப்புற மேம்பாடு அமைச்சகம்), டாக்டர் ராஜாராம் சர்மா (இணைச் செயலர், NCERT), அமிர்தா பல்கலைக்கழக முனைவர்களான டாக்டர். பிபின் நாயர், டாக்டர் ஜெய் தலைமையுரை ஆற்றிய மிஸ்ரா, டாக்டர் பிரேம் நாயர், பிர. சங்கர சைதன்யா, டாக்டர். பாலகிருஷ்ணன் சங்கர், டாக்டர். மனீஷா சுதீர் மற்றும் பலர்.

டாக்டர் அப்துல் கலாம் தமது தலைமை உரையில், “இந்திய கிராமங்களின் முன்னேற்றத்திற்கு, கிராமப் புற வேலைவாய்ப்பு பெரிதும் மேம்படுவதோடு கூடவே ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியும் நிகழ்வது அவசியம் என்றார். கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் ஒரு இருவழிப் பாதை போல செயல் படவேண்டும்; ஒரு வழியில், நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதி-வாய்ப்புகளும் கிராமங்களிலும் கிட்டவேண்டும். அத்தகைய முன்னேற்றம் தொய்வில்லாமல் நீண்டகாலம் நிகழ்வதை உறுதிசெய்ய வள ஒதுக்கீடுகளும் மற்றொரு பாதை வழியே வந்துகொண்டிருக்க வேண்டும் ” என்றார்.
கேரள கிராம மேம்பாடு குறித்து டாக்டர் கலாம் பேசுகையில், திருவனந்தபுரம் முதல் காசர்கோடுவரை உள்ள எல்லா ஆறுகளையும், உப்பங்கழிகளையும், மனிதன் அமைத்த கால்வாய்களையும் ஓன்றிணைத்து, ஓர் ஒருங்கிணைந்த உள்நாட்டு நீர்வழிப் பாதை அமைப்பதைக் குறித்து அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இத்தகைய ஒரு திட்டத்தில் அம்மாவின் அமிர்தா ஆராய்ச்சி நிலையங்கள் ஒரு பெரும் பங்கு வகிக்க முடியும் என்றார் அவர்.
இந்தக் கருத்தரங்கத்தில் அலசப்பட்ட தலைப்புகள்: கிராமப்புறத் தேவைகளான பொது ஆரோக்கியம், பாதுகாப்பு, விவசாயம், சுய சார்பு, பள்ளிக்கல்வி, ஆசிரியர் பயிற்சி, வேலை வாய்ப்பு, கைத்தொழில் திறன் மேம்பாடு, உயர்தொழில் நுட்பத்தின் உதவியோடு தொழிலறிவு பயிற்றுவித்தல் போன்றவை. மேலும், உலகளாவிய பிரச்சனைகளான நீர்வளம், எரி சக்தி, குப்பை கழிவுகள் முதலியன.
இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக சமூக நலனில் ஆன்மீகத்தின் தாக்கம் மற்றும் தேவை குறித்தும், அதில் அம்மாவின் அளப்பேரும் பங்கைப் பற்றியும் விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடந்தன. இந்தக் ஆய்வரங்கத்தில் அம்மாவின் மூத்தத் துறவிச் சீடர்களான சுவாமி ராமகிருஷ்ணானந்த புரி, சுவாமி அமிர்த கீதானந்த புரி, சுவாமி பிரக்ஞானாம்ருதானந்த புரி, மற்றும் பல மூத்த பிரம்மசாரிகளும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
அம்மாவின் பிறந்த நாள் (27 ஆம் தேதி) அன்று அறிவிக்கப்பட்ட மடத்தின் ஒரு மாபெரும் திட்டமான ‘101 கிராமங்களைத் தத்தெடுத்தல்’ எனும் திட்டத்திற்கு கட்டியம் கூறும் விதத்திலும், அத்திட்டத்தின் பல அம்சங்களுக்கு தக்க வடிவம் கொடுக்கும் விதத்திலும் இந்த சர்வதேசக் கருத்தரங்கம் அமைந்தது எனலாம்.